ஓ கஃபாவே!
முஹம்மது சிராஜுத்தீன், கிளியனூர்
உனக்குத்தான் எத்தனை சிறப்பு. உலகின் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையின்போது உன்னை நோக்கியே தொழுகின்றனர். நிற இன பேதமின்றி ஏழை பணக்காரன் பேதமின்றி உன்னை நோக்கி வருகின்றனர்.
நீ வல்ல இறைவனால் அபய பூமி என்றும் அறிவிக்கப்பட்டாய்.அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் நீ இன்றளவும் அபயபூமியாகவே இருக்கிறாய். 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் நீ இருந்து வருகிறாய்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஹஸ்வா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக நீ அமைந்திருக்கும் மக்காவை நோக்கி, ”நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின்அதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 3860).
மக்காவை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இச்சொற்கள், உன் சிறப்பை மேலும் அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து உன்னை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான்.
இங்கு என்னால் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. உனக்கு ஏன் இத்தனை சிறப்பு. படைத்த இறைவனே உன்னை நேரடியாக பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன?
உண்மையை சொல்வதென்றால் நீ கற்களால் கட்டப்பட்ட ஒரு சாதாரண கட்டிடம். எந்த ஒரு பொறியாளருடைய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படாத ஒரு சதுர வடிவிலான கட்டிடம். இன்னும் உன்னைச்சுற்றி பலநூறு மாடிகள் கொண்ட அழகான கட்டிடங்கள் இருக்க உனக்கு மட்டும் உலக மக்கள் அனைவரும் உன்னை நோக்கி தொழுவதினாலா? அனைத்து மக்களை நீ அரவணைத்துக்கொள்வதினாலா? நீ அபயமளிக்கப்பட்ட பூமி என்பதினாலா? நிச்சயம் இவை மட்டுமே உன் சிறப்புக்கு காரணமாக இந்த கேள்விக்கு விடைதேடி நான் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு வரலாற்று பயணம் மேற்கொள்கிறேன்.
இப்பொழுது நீ இருக்கும் அதே இடம் ஆனால் அது யாருமில்லா பாலைவனம். மனிதர்கள் வாழ தகுதியற்ற பாலைவனம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே நீ கட்டப்பட்டுவிட்டாய் என்றபோதினும் உனக்கு இப்பொழுது இருக்கும் சிறப்பு அப்பொழுது இல்லை. ஒருவர் தன் மனைவி மற்றும் பிறந்து சிறிது நாட்களேயான தன் குழந்தையுடன் நீ இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். பல ஆண்டு குழந்தை பாக்கியமில்லாமல் இறைவனிடம் வேண்டி பெற்ற குழந்தை அது.
இறைவனிடத்தில் இருந்து செய்தி இல்லை கட்டளை. உன் மனைவியையும் குழந்தையையும் யாருமே வாழாத வாழமுடியாத இந்த பாலைவனத்தில் விட்டுச் செல். எந்த ஆண் மகனுக்கும் செய்ய இயலாத ஒரு செயல். ஆனால் வேறு வழியில்லை இறைவனின் கட்டளை ஆயிற்றே. அவர் அவ்வாறே செய்கிறார். பின் இறைவனிடம் பின்வருமாறு துஆ செய்கிறார்.
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக!
(பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.இறைவனின் கட்டளை என்பதால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மனைவி ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் இதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொள்கிறார். யாருமே வாழமுடியாத இடமாக இருந்தால் என்ன, பாதுகாப்பளிப்பது இறைவன் அல்லவா. ஆனால் அவ்வளவு எளிது அல்லவே பாலைவனத்தில் வாழ்வது. தன் சிறு குழந்தைக்கு தண்ணீர் தாகம், அழ ஆரம்பித்துவிட்டது.
பெற்ற தாய் துடியாய் துடிக்கிறார். இந்த பாலைவனத்தில் நான் தண்ணீருக்கு எங்கே செல்வேன். அதோ தென்படுகிறது தண்ணீர் ஓடுகிறார் அது காணல் நீர் என்பதை அறியாமல். ஸஃபா என்னும் குன்றிலிருந்து மர்வா என்னும் குன்றுவரை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏழுமுறை.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உதவி புரிந்தான்.
ஆம் அல்லாஹ்வின் உதவி ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்தேவிட்டது. பாறைகள் நிறைந்த தண்ணீருக்கு வழியே இல்லாத பாலைவனத்தில் நீரூற்றை ஓடச் செய்தான் வல்ல இறைவன். ஜம்ஜம் என்னும் இந்த நீரூற்று மக்கள் குடியேறும் இடமாக சிறிது சிறிதாக மாற ஆனால் சோதனை மட்டும் முடிந்தபாடில்லை. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீண்டும் இறைவனிடமிருந்து சோதனை,தன் மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவனுக்காக நரபலி கொடுக்குமாறு கட்டளை.
அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஷைத்தான் எவ்வளவோ இதை தடுக்க முயற்ச்சி எடுத்தும் பயனில்லை. கல்லால் அடிவாங்கியது மட்டுமே மிச்சம்.வானவரின் தூதர் ஜிப்ரையில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான்.
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் “இப்ராஹீமே!” என அழைத்து, உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி,”நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்).ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.(அல்குர்ஆன் 37:103,104,105,106,107)
மேலும் வல்ல இறைவன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாராட்டி மக்களின் இமாமாகவும் (தலைவராகவும்) ஆக்கினான்.இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் சேர்ந்து கஃபாவாகிய உன் அடித்தளத்தை உயர்த்தி “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”என இறைவனிடம் துஆ மூலம் வேண்டினார்கள். வேண்டுகோள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது.
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் – அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.” (அல்குர்ஆன் 2:125,126)
இதை பின்வரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தை மேலும் உறுதி படுத்துகின்றன.
“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை”
காலங்கள் உருண்டோடின உன்னை ஓர் இறை கொள்கைக்காக கட்டிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்திருந்தால் துடித்து போயிருப்பார். ஆம் ஓர் இறை வழிபாட்டிற்காக கட்டப்பட்ட உன்னுள் பல சிலைகள் கடவுள் என்னும் பெயரால். கொடுமையிலும் கொடுமை யாதெனில் உன்னை வல்ல இறைவனுக்காக கட்டிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கடவுளின் சிலையாய் மற்ற சிலைகளுடன் நின்றுகொண்டிருந்தார்.
சத்தியத்தை எடுத்துச்சொல்ல ஓர் இறை கொள்கையை நிலைநாட்ட உனது மக்கமா நகரிலேயே உதித்தார் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். உண்மையை உறக்க சொன்னதற்காக ஊரைவிட்டே விரட்டப்பட்டார். சோர்ந்துவிடவில்லை பெரும்படையுடன் நீ இருக்கும் மக்கா நகரை வெற்றியும் கண்டார். உன்னிடத்திலே இருந்த அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தினார்.நீ எதற்காக கட்டப்பட்டாயோ அதனை நிறைவேற்றினார்.
ஆனாலும் அதுவரை முஸ்லிம்கள் உன்னைவிடுத்து பைத்துல் முகத்தஸையே கிப்லாவாக முன்னோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ உன்னை கிப்லாவின் திசையாக நோக்கி இறைவனை வணங்க ஆசை.முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசையல்லவா, நிறைவேறாமல் இருக்குமா?
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.(அல்குர்ஆன் 2:144)
ஆக இந்த மாபெரும் வரலாற்று பயணத்தின் மூலம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகம் மற்றும் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசையுமே கஃபாவாகிய உன் சிறப்புக்கு காரணம் என்பதை அறிந்துகொண்டேன்.
“வரலாறு தெரியாத சமுதாயம் நிலைக்காது” என்று சொல்லுவார்கள். இவ்வுலகில நீ இருக்கும்வரை உன்னை நோக்கி மக்கள் வருவது நிற்கும்வரை இஸ்லாமிய வரலாறு அழியாது இஸ்லாமும் அழியாது என்பதை நிச்சயம் நான் அறிவேன்.
உன்னைப்போல சிறப்பு பெறவேண்டும் என எனக்குள்ளும் ஓர் ஆசை. ஆனால் என்னால் நிச்சயம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தது போலெல்லாம் இறைவனுக்காக தியாகம் செய்திடமுடியாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வை நேசித்தார்கள். நானோ சுவர்க்கம் வேண்டும் என்பதற்காகவும் நரகம் வேண்டாம் என்பதற்காகவும் அல்லாஹ்வை நேசிக்கின்றேன்.ஆகையால் ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னந்தனியாக பாலைவனத்திலே ஓடியது போல அதே இடத்தில் குளிர்சாதன வசதியுடன் மக்களுடன் மக்களாக கையில் தண்ணீரையும் ஏந்திக்கொண்டு ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் ஓடியது போல ஓடி நடிக்கிறேன். இறைவனுக்காக என் பிள்ளையை பழிகொடுக்க மாட்டேன் என தெரிந்தும். யா அல்லாஹ் நீ ஆட்டை குர்பானி கொடுக்க சொன்னாய். இல்லையெனில் நான் என் மகனை உனக்கு குர்பானி கொடுத்திருப்பேன் என்பதாக நடித்து ஆட்டை பழியிடுகிறேன்.மேலும் அதிகம் அதிகம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுகின்றேன்.
இப்படியெல்லாம் செய்தாலாவது வல்ல இறைவன் என் துஆவை ஏற்றுக்கொள்ள மாட்டானா என்றும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பாவியாகிய நானும் சுவனம் செல்லவேண்டும் என ஆசை கொண்டுவிடமாட்டார்களா என்றும் கனா காண்கின்றேன்.
– முஹம்மது சிராஜுத்தீன்