மீன் வயிற்றில் இருந்த நபி!
”மேலும், யூனுஸும் நிச்சயமாக ரஸூல்மார்களில்- அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்”. (37:139)
நபி யூனூஸ் பின் மத்தா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (யோனா – jonah) கி.மு எட்டாம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பட்டார்கள்.
சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். அனாலும் அவரது சமூகம் அவரை நிராகரித்துவிட்டது.
இதனால் மனம் வெறுத்துப் போன யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரைவிட்டும் வெளியேறி விட்டார்கள். அல்லாஹுவின் ஆணையின்றி வெளியேறுவது குற்றம் என்பதை உணராமலேயே அங்கே பயனளிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்றுவிட்டார்.
எனவே அல்லாஹ் அவரைத் தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான்.
இறுதியில் அக்கப்பலிலிருந்து யாரேனும் ஒருவர் இறங்கினால் மாத்திரமே மற்றவர்கள் அனைவரும் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டனர். அதில் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயர் வரவே, அவர் வீசி எறியப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விழுங்கும்படி, ஒரு மீனுக்குக் கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைப்பிடித்தான். இதன் பிறகு தான் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தான் அல்லாஹுவின் ஆணையின்றி ஊரை விட்டு வெளியேறியது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்ந்தார்கள். அல்லாஹுவிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அணியாக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன் என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள். பிறகு அல்லாஹ் அவரை மன்னித்து மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றினான்.
மீன் வயிற்றினுள் நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்….
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது – (அல்குர்ஆன் 37:140)
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் – இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்). (அல்குர்ஆன் 37:141)
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. (அல்குர்ஆன் 37:142)
மீன் வயிற்றினுள் இறைவனைத் துதித்தார்….
”லாஇலாஹ இல்லா அந்த ஸுப்ஹானாக இன்னி குந்து மினல்லாளிமீன்”
இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார. எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 21:87)
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். (அல்குர்ஆன் 21:88)
மீன் வயிற்றினுள் இறைவனைத் துதிசெய்திராவிடில்…..
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து – தஸ்பீஹு செய்து – கொண்டிராவிட்டால் – (அல்குர்ஆன் 37:143)
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். (அல்குர்ஆன் 37:144)
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம். (அல்குர்ஆன் 37:145)
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம். (அல்குர்ஆன் 37:146)
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தின் மாற்றம்….
இதற்குள் நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாய மக்கள் அல்லாஹுவின் வேதனை தங்கள் மீது வரப்போவதை உணர்தார்கள். வேதனையின் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மனம் திருந்தி, வருந்தி அல்லாஹுவிடம் கதறி அழுது பாவமன்னிப்புத் தேடினர். இவர்களது பாவமன்னிப்பை ஏற்றுகொண்ட அல்லாஹ் அவர்களை மன்னித்து இழிவுப்படுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினான்.
தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். (அல்குர்ஆன் 10:98)
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு நபியாக யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்…
நபி யூனூஸ்(அலை) அவர்களையும், அவரது சமூக மக்களையும் மன்னித்து அல்லாஹ் மீண்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு நபியாக யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பிவைத்தான்.
அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுஅப்பினோம். (அல்குர்ஆன் 37:147)
அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம். (அல்குர்ஆன் 37:148)
மீனுடையவரைப் போன்று ஆகிவிடவேண்டாம் என்ற இறைவனின் கட்டளை…?
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் தனது சமூக மக்களிடம் கோபம் கொண்டு இறைவனின் அனுமதி இல்லாமலேயே ஊரைவிட்டு வெளியேறியது போன்று நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நடந்துவிடக் கூடாது என பின்வருமாறு அறிவுறுத்துகிறான்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது: (அல்குர்ஆன் 68:48)
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார் (அல்குர்ஆன் 68:49)
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் – நல்லவர்களில் நின்றும் ஆக்கினான். (அல்குர்ஆன் 68:50)
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்வருமாறு கூறினார்கள்…
நான் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம். புஹாரி
இத்துடன் நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரலாறு நிறைவு பெறுகின்றது இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம்.