ஃபிக்ஹு சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், பிக்ஹு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பது மோசடியாகும்
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது :
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (எந்த தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதோ, அந்த) கடமையான தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையும் கிடையாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள் : முஸ்லிம் 1282. அபூதாவூது 1075, திர்மிதி 386, நஸயீ 856, இப்னுமாஜா 1141, அஹ்மத் 9485)
அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹு தொழுகை தொழுது கொண்டிருக்க, ஒருவர் வந்து இரண்டு “ரக்அத்’ (முன் சுன்னத்) தொழுது விட்டு (ஃபர்ளு) தொழுகையில் சேர்ந்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தொழுகையை நிறைவு செய்த பிறகு (அவரை அழைத்து) இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதை கருதி (பள்ளிக்கு) வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா? என்று கேட்டார்கள். (நூற்கள் : முஸ்லிம் 1285, இப்னுமாஜா 1142, அபூதாவூது 1074, நஸாயீ 858, அஹ்மத் 19849)
அப்துல்லாஹ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(சுப்ஹு) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்துகள் (முன் சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரைச் சூழ்ந்து விட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள். (நூற்கள் : புகாரி 663, முஸ்லிம் 1284, நஸாயீ 857, இப்னுமாஜா 1143, அஹ்மத் 21843)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்துகளை நான் தொழவில்லை. எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஃபர்ளு தொழுகையில்) ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து பஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. (அறிவிப்பாளர் : கைஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : இப்னு ஹிப்பான் 2471, திர்மிதீ 387)
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் சுன்னத் தொழுகைகளைத் தொழக்கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஃத்களின் வாயிலாக அறிகிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த அறிவுரைகளை அலட்சியம் செய்துவிட்டு சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது உலமாக்கள் உட்பட பலர் ஃபஜ்ரின் முன் சுன்னத்தைத் தொழுவதைப் பார்க்கிறோம். எந்த ஹதீஃதின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது? ஃபஜ்ரின் ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் முன் சுன்னத்தைத் தொழலாம் என்ற கருத்தில் ஒருவேளை ஹதீஃத் இருந்தாலும் மேற்கண்ட ஹதீஃத்களின் நிலை என்ன? இந்த ஹதீஃத்களை எவ்வாறு புரிந்து கொள்வது?
உலமாக்கள் கவனத்திற்கு,
ஃபிக்ஹு சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், பிக்ஹு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பது மோசடியாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் (பாங்கு சொல்லும்) பணியிலும் (ஜமாஅத் தொழுகையில்) முதல் அணிய(ல் நின்று தொழுவதி)லும் உள்ள நன்மைகளை மக்கள் அறிந்து இருந்தால், அவற்றை அடைவதற்குச் சீட்டுக் குலுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சீட்டு குலுக்கியே தீருவார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ : 615, முஸ்லிம் 746, நஸாயீ 537, முஅத்தா: 269)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையி(ன் துவக்கத்தி)ல் எங்கள் தோள்(புஜம்)களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று) பார்ப்பார்கள். மேலும், அவர்கள் (வரிசையில் முன் பின்னாக நின்று) வேறுபட்டு நிற்காதீர்கள். (அவ்வாறு வேறுபட்டு நின்றால்) உங்களது உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊது அல் அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : முஸ்லிம் 739, நஸாயீ 798, இப்னுமாஜா 966, அஹ்மத் 16482, இப்னு குஸைமா 1542)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழுகையைத் துவங்குவதற்குமுன் மக்களை நோக்கி) உங்கள் வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! வரிசைகளுக்கிடையே (இடைவெளி இல்லாமல்) நெருக்கமாக நில்லுங்கள்! தோள்(புஜம்)களுக்கு சமமாக நில்லுங்கள். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணையாக! ஷைத்தான்கள் தொழுகை வரிசையின் இடைவெளியில் கறுப்பு ஆடுகளைப் போன்று நுழைவதை நான் காண்கிறேன் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அபூதாவூது 571, நஸாயீ 806)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களை காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோளைத் (புஜம்)தமக்கு அருகிலிருப்பவரின் தோளு(புஜம்) டனும், தமது பாதத்தைத் தமக்கு அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு (அந்த அளவுக்கு நெருக்கமாக) நிற்பார். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ : 725)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
உங்களின் (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துங்கள். இல்லையயனில் அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான். (அறிவிப்பாளர் : நுஃமான் பின் பUர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 717)
மேற்கண்ட நபிமொழிகளை முன்வைத்து ஜமாஅத் தொழுகையில் முன் வரிசையின் சிறப்புகளைப் பற்றியும், தொழுகையில் வரிசைகளை இடைவெளி விடாமல் நெருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறும் உலமாக்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் (மிக அதிகமானவர்கள்) முதல் வரிசைக்கு முன்னுரிமை தருவதில்லை. இது ஏன்? முதல் வரிசையில் நின்று அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் உலமாக்களுக்கு வேண்டாமா? ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் உலமாக்கள் இடைவெளி விடாமல் நெருக்கமாக நான் பார்த்தவரை ஒருவர்கூட நிற்பதில்லை ஏன்? உலமாக்களுக்கு ஏதும் விதிவிலக்கு உள்ளதா?
அடுத்து,
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் நற்பண்புகள் உடையவர்கள்தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்களும் மறுமை நாளில் எனக்கு மிகவும் அருகில் இருப்பவர்களுமாவர். (அதே நேரத்தில்) உங்களில் தொண தொணவென்று பேசும் பழக்கமுடையோரும் (வாய்க்கு வந்தபடியெல்லாம்) உளறிக் கொட்டுவோரும் (செயற்கையாக) நீட்டி முழக்குவோரும்தான் எனக்கு மிகவும் வெறுப்பானவர்களும் மறுமை நாளில் என்னிடமிருந்து வெகு தொலைவில் தள்ளி இருப்போரும் ஆவர் என்று கூறினார்கள். அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! தொணதொணவென்று பேசும் பழக்கமுடையோரையும் வாய்க்கு வந்தபடியெல்லாம்) உளறிக் கொட்டுவோரையும் நாங்கள் அறிந்து உள்ளோம். அது யார் நீட்டி முழக்குவோர்? என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்பெருமை உள்ளோர் தான் (அவர்கள்) என விடையளித்தார்கள். (நூல் : திர்மிதி 1841)
அபூவாயில் கீக் பின் ஸலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :
எங்களுக்கு அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையில் சுருக்கமாகவும், செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது அபுல்யாக்களானே! செறிவுடன் சுருக்கமாக பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு (அம்மார்) அவர்கள், தொழுகையை நீட்டி உரையை சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். சில பயான்களில் சூன்யம் உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (நூல் : முஸ்லிம் : 1577)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
வெட்கமும், குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்; கெட்ட வார்த்தையும், அதிக மான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். (அறிவிப்பாளர் : அபூஉமாமாரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல் : திர்மிதி : 1950)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
மாடு அசைப் போடுவதைப் போன்று மனிதர்களில் வலிந்து (எதுகை மோனையோடு) பேசக் கூடியப் பேச்சாளன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். (நூல் : திர்மிதி 2780)
மேற்கண்ட நபிமொழி மிக நீளமாக உரை நிகழ்த்துவதைத் தடை செய்யும் விதமாக அமைந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசில சந்தர்ப்பங்களில் மட்டுமே நீண்ட உரையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் இன்று உலமாக்கள் எப்போது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் மணிக்கணக்கில் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? தொழுகையை நீட்டி உரையை சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளமாகும் என்ற ஹதீஃதின்படி இன்றுள்ள பேச்சாளர்கள் எல்லோரும் அறிஞர்கள்தானா?
மிக நீண்ட உரைகளை நிகழ்த்தி உலமாக்களின் பயான்களுக்கு காலம் முழுவதும் மக்கள் அனைவரும் தலையாட்ட வேண்டும் என்பதுதான் உலமாக்களின் விருப்பமா? சுருக்கமான உரைகள்தான் ஒருவரது மனதில் பதியும். அத்தகைய உரைகளிலிருந்து தான் படிப்பினை பெற முடியும் என்பதை திர்மிதி ஹதீஃத் எண் 1943 உணர்த்தவில்லையா? நீட்டி முழக்குவதால் தற்பெருமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதை பற்றி அறிஞர்கள் அஞ்சாமல் இருப்பது ஏன்? உரை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முன்மாதிரி இல்லையா?
S. முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165