இஸ்லாம் உலகின் தலைசிறந்த ஜனநாயகத் தத்துவம்
திருமாவளவன்
இஸ்லாம் உலகின் தலைசிறந்த ஜனநாயகத் தத்துவம். ஒவ்வொரு மனிதனும் ஆணவம் இல்லாமல் அகந்தை இல்லாமல் மனிதநேயத்தோடு வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறி.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் தோன்றிய மகத்தான மானுடத்தின் அற்புதம் நபிகள் நாயகம். மனிதன் எப்படி பக்குவப்பட வேண்டும், ஒழுங்கு பட வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்பது பற்றி எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் தோன்றி பரப்புரை செய்து இருக்கிறார்கள். கெளதம புத்தர், இயேசு பெருமான் போன்ற மகான்களின் வரிசையில் நபிகள் நாயகம் மகத்தான ஒரு மனிதர்.
ஆனால் அந்த மகான்களிடமிருந்து இவர் மாறுபடுகிறார் அவர்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறியை வழங்கினார்கள். வழிகாட்டினார்கள். என்றாலும் அந்தத் தத்துவத்தில் ஒரு ஜனநாயகப்பூர்வமான, காலம் காலமாகத் தொடர்ந்து வலுவாக மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய சிறந்த ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளை வழிமுறைகளை, வகுத்தளித்தவர் நமது நபிகள் நாயகம்.
உருவ வழிபாடு, அருவ வழிபாடு என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இறைவழிபாட்டில் நடைமுறையில் இருக்கிற முறைகள். அருப வழிபாடு என்பது பல மதங்களால் பின்பற்றக் கூடியது என்றாலும்கூட இஸ்லாத்தில் அது மிகவும் இறுக்கமாகவும் வலுவாகவும் பின்பற்றப்படுகிறது. உருவம் கூடாது என்று தனிமனிதனின் ஆணவத்தை, அகந்தையை அழிப்பதற்கான உத்தியாகவே நபிகள் நாயகம் கையாண்டிருக்கிறார். இறைவனுக்கு உருவம் கொடுப்பது, தனிமனித துதிக்கு வழிகாட்டுவதாக அமைந்து விடுகிறது. எந்த இறைவனைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு தூதர் வருகிறாரோ அந்தத் தூதருக்கே உருவ வழிபாட்டைச் செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.
இயேசு பெருமானுக்கு உருவம் கெளதம புத்தருக்கு உருவம். இவர்கள் இறைவனின் தூதர்களாக மக்களால் அறியப்பட்டாலும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று நம்புகிற காரணத்தால் இந்தத் தூதர்களுக்கும் உருவம் இருக்கும். அதன் மூலம் அதைப் பின்பற்றக் கூடிய அல்லது மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பரப்பக் கூடிய பின்னால் வருகிற மதகுருமார்கள், மடாதிபதிகள் தங்களை முன்னிறுத்தி தங்களுக்கான உருவத்தை உயர்த்திப் பிடித்து மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டு வருகிற நிலையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மதம் என்பது மூலதனமாக வளர்ச்சி பெற்று அந்த மதத்தை வழிநடத்தக் கூடிய மதகுருமார்கள், மடாதிபதிகள் தாங்களே இறைவனின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு நிலை பிற்காலத்தில் வளர்ந்து விடுகிறது. இதைக் காலச்சுவடுகளில் நம்மால் காண முடிகிறது.
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நபிகள் நாயகம் அவர்க:ள் இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது என்று மக்களுக்கு வழிகாட்டியதோடு தம்முடைய உருவத்தை எந்தச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த விரும்பவில்லை. தம்முடைய உருவப் படத்தையோ சிலைகளையோ மக்களுக்கு ஒரு வடிவமாக அடையாளமாக உயர்த்திப் பிடிப்பது தம்மை இறைவனால் அனுப்பப்பட்ட ஆளுமைமிக்க, என்னை வழிபட்டால் அது கடவுளை வழிபட்டது போல் ஆகும் என்கிற வகையில் எப்போதும் மக்களைத் தவறாக வழிநடத்தவில்லை.
சாதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிறுத்துவது இயற்கை. தன்னுடைய உருவத்தையும் வடிவத்தையும் திரும்பத் திரும்ப மக்களின் கண் முன்னால் நிறுத்தி அவர்களின் நெஞ்சத்தில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். தலைவர்களாக இருப்பவர்கள் அது அரசியல் தளமாக இருந்தாலும் மதத் தளமாக இருந்தாலும் அந்தத் தளங்களில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் பார்க்கிறோம். 100க்கு 99 % அப்படித்தான்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் தம்மை எந்தச் சூழலிலும் எந்த வகையிலும் அடையாளப்படுத்துவதற்கு, முன்னிறுத்துவதற்கு அவர் விரும்பவில்லை என்பது அடிப்படை கொள்கையிலிருந்து வழிதவறி விடக் கூடாது, திசை மாறக் கூடாது என்பதுதான். தமக்குப் பின்னால் வருபவர்கள் உருவ வழிபாட்டை உயர்த்திப் பிடித்தால் தமது வழிபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அடிப்படை நோக்கத்தைச் சிதைத்து விடக் கூடும். ஆகவே இறைவனுக்கு உருவம் இல்லை; வடிவம் இல்லை என்கிற அந்த கோட்பாட்டை மிக அழுத்தமாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சொன்னவர் நபிகள் நாயகம்.
இதில் மிகச் சிறந்த ஜனநாயகத் தத்துவத்தை மானுடத்தின் அற்புதத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த 1400 வருடங்களில் பலரையும் மறந்தும் நாயகத்தின் திருவுருவப் படத்தையோ திருவுருவச் சிலையையோ உலகத்தில் எந்த நாட்டிலும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு எத்தனிக்கவில்லை; முயலவில்லை என்பது அவருடைய சிறந்த ஆளுமையை. அவருடைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. அந்த அளவுக்கு அதில் அவர் ஓர் உறுதியான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார்.
ஒரு மனிதனை வணங்குவதின் மூலம் அகந்தை உள்ளவனாக ஆணவம் மிக்கவனாக மாறுகிறான். அதனால் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அவன் அரசனாக இருந்தாலும் சரி; தற்போதைய காலத்தில் இருக்கிற முதலமைச்சர், பிரதமராக இருந்தாலும் சரி, தனிமனிதர் வழிபாடு என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைத்தனத்தை வளர்ப்பதற்கும் வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. ஆகவே ஆண்டாம் அடிமை யாரும் இல்லை என்கிற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் தனிமனித வழிபாடு என்பது கூடாது. எனவே மனிதனை வழிபடுவது என்பது இந்த மானுடத்தை சிதைக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. மன்னர்கள் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இறைவன் என்றால் கடவுளையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். கோயில் என்றால் கடவுள் இருக்கிற இடத்தையும் குறிக்கும். அரசன் இருக்கிற இடத்தையும் குறிக்கும். ஆகவே மன்னம் வேறு அல்ல; இறைவன் வேறு அல்ல என்று எண்ணக் கூடிய அளவுக்குத் தனிமனித ஆதிக்கம் இந்த மண்ணுலகில் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது ஆகவே ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வழிபட விரும்புகிறான் அல்லது வழிபட வைக்கப்படுகின்றான் என்ற நிலை வருகின்றபோது அங்கு இயல்பாகவே அடிமைத்தனம் வந்து விடுகிறது.
ஆகவே தான் மனிதனை வணங்கக் கூடாது இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனும் உருவமற்றவன்; அவனுக்கு எந்த வடிவமும் இல்லை என்ற கோட்பாட்டை இந்த உலகுக்கு வழங்கி, அதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லாமல், தளர்வுக்கும் இடமில்லாமல் திசை மாறுவதற்கோ வழி தவறுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் ஓர் இறுக்கமான கோட்பாட்டை இந்த உலகிற்கு வழங்கியவர்தான் நமது நாயகம். அவர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
அவருடைய வாழ்க்கை முறை என்பது மிகச் சிறந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை. எளியவர்களை மதிப்பது, எளியவனாகவே வாழ்வது, கடைசி மனிதர்களோடு உறவாடுவது, கடைசி மனிதர்களின் விடுதலைக்காக உழைப்பது, இவற்றுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி தலைவராக நபிகள் நாயகம் விளங்கி இருக்கிறார்.
source: http://valaiyukam.blogspot.in/