அந்த அரேபிய வீரம்!
வரலாற்று புத்தகங்களை படிக்கும்போது சில நிகழ்ச்சிகள் மனதை பற்றிக் கொள்ளும் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த குறிப்பிட்ட சாதனையாளர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் பதிவது இயல்பானது. ஆனால் சில நேரங்களில் வரலாற்று சம்பவங்களில் ஆள் யார் என்றே தெரியாது அந்த பாத்திரத்திற்கு பெயரும் இருக்காது ஆனால் மனதில் பதிந்து விடும் அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சம்பவம் தான் இந்த பதிவு.
புகழ்பெற்ற போர்வீரரும், கவிஞருமான ‘துரைத் இப்னுல்-ஸிம்மா முதுமை அடைந்து இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு முஸ்லிம் காலம் தொடங்கிய பின் வரை வாழ்ந்தவர். இளமைக்காலத்தில் ஒரு நாள் காட்டரபிகள் வழக்க கொள்ளைத் தக்குதலுக்குத் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தார். மொட்டையான ஹிஜாஸ் மலைக் கணவாயின் முகட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது கிழே திறந்த பள்ளத்தாக்கில் ஒரு குதிரை வீரன் கையில் ஈட்டியுடன் ஓட்டகத்தின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்.
ஒட்டகத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். துரைத் தமது ஆட்களில் ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் குதிரை வீரனிடம் விரைந்து சென்று, தக்குதல் கூட்டம் வருவதாகவும், பெண்ணையும் ஒட்டகத்தையும் விட்டு விட்டு ஓடிப்போய் உயிர் பிழைக்குமாறும் உரக்கக் கூறுமாறு சொன்னார். அவ்வாறே அந்த ஆள் தமது குதிரையைச் செலுத்திக் கூவிக்கொண்டு சென்றான்.
குதிரைவீரன் அமைதியாக ஒட்டகக் கயிற்றைப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு, குதிரையைத் திருப்பி, குதிரையில் வருபவனை நோக்கித் தாவிச் சென்று,ஈட்டியை அவன் நேஞ்சில் பாய்ச்சிக் குதிரையிலிருந்து கீழே வீழ்த்தினான். பின் திரும்பிச் சென்று ஒட்டகக்கயிற்றைத் தன் கையில் வாங்கிக்கொள்ள, இருவரும் ஏதும் நடவாதது போல் தொடர்ந்து சென்றார்கள்.
துரைத் கணவாய் வழியே இறங்கித் தமது குதிரையைச் செலுத்திச் சென்றபோது அந்தப் பயணிகள் இருவரும் அவர் பார்வையில் படவில்லை. ஆனால் தாம் அனுப்பிய வீரன் திரும்பி வராததால் மற்றொரு வீரனை அனுப்பினார்.
அவனையும் அந்தக் குதிரைவீரன் முன் போலவே குத்தித் தள்ளினான். மூன்றாவதாக ஒரு வீரனுக்கும் இதே கதி நேர்ந்தது. ஆனால், இந்த முறை குதிரை வீரனின் ஈட்டி எதிரி வீரனின் உடலில் பாய்ந்தபோது ஒடிந்துபோயிற்று. கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் குதிரைவீரன் மீண்டும் பெண் அமர்ந்துள்ள ஒட்டகக்கயிற்றைப் பிடித்துக் கொள்ள அவர்கள் பயணம் தொடர்ந்தது.
அருகருகே அவர்கள் சவாரி செய்தபோது குதிரைவீரன் பின்வரும் கவிதையைப் பெண்ணிடம் கூறினான்:
அமைதியாகச் சவாரிசெய், என் அழகுப் பெண்ணே
பாதுகாப்பாய் பத்திரமாய் அமைதியாய்.
நம்பிக்கை,மற்றும் மலர்ச்சிகொள்
அச்சம் எதுவும் வேண்டாம்.
எதிரியிடமிருந்து நான் ஓட முடியாது
அவன் என் ஆயுதத்தைச் சுவைக்கும் வரை.
என் தாக்குதலின் வேகத்தைக் காண்பான்
யாரும் உனக்கு தீங்கிழைக்க வந்தால்.
மூன்று வீரர்களும் திரும்பி வராததைக் கண்டு வியப்படைந்த துரைத் தாமே குதிரையில் விரைந்தார். மூன்று வீரர்களின் உடல்களையும் வழியில் அடுத்தடுத்துக் கண்டார். தமக்கு முன்னே அந்தக் குதிரைவீரன் ஆயுதமற்றவனாய், நடைவேகத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு,பெண் அமர்ந்துள்ள ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து நடத்திச் செல்வதைக் கண்டார்.
குதிரைவீரன் தன் எதிரியே என்றாலும் அவனது அஞ்சா நெஞ்சம் கண்டு வியப்பு நிறைந்து துரைத் அவனருகே குதிரையைச் செலுத்தினார். ‘வீரனே, உன்னைப் போன்ற ஒருவனுக்கு மரணத்தைத் தரக்கூடாது. ஆனால் என் ஆட்கள் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ நிராயுதபாணியாக இருக்கிறாய். என் ஈட்டியைப் பெற்றுக் கொள், நண்பனே. என் ஆட்கள் உன்னைத் தொடராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்,’ என்று அவர் கூறினார்.
(அக்கால காட்டரபிகள் (பதூயின்கள்) வீரம்,தீரம்,கெளரவம் போன்ற சில பண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதைக் காட்ட,க்ளப் பாஷா தம்முடைய ‘முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்வும் காலநிலையும்’ (த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் முஹம்மத்) என்ற தமது புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி)
source: http://valaiyukam.blogspot.in/