கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம்!
rasminmisc
கண்ணியத்தையும், கௌரவத்தையும் எதிர்பார்க்கும் மனோ நிலை மனிதர்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு.
ஒவ்வொரு மனிதனும் தான் கௌரவமானவனாக வாழ்கின்றேன் என்பதை மற்றவர்கள் மத்தியில் காட்டிக் கொள்வதற்காக பலவிதமான காரியங்களிலும் ஈடுபடுவதைக் கூட கண்கூடாக கண்டு வருகின்றோம்.
கௌரவம், கண்ணியம் என்பவற்றைப் பொருத்தமட்டில் கடையில் வாங்கும் பொருட்களாக இவை இருப்பதுமில்லை, உடையில் காட்டும் அலங்காரமாக இருப்பதுமில்லை. மாறாக நடத்தையில் வெளிபடும் நற்பண்பாகவே கண்ணியம் காணப்படுகின்றது.
கண்ணியமாக வாழவேண்டும் என்று விரும்பும் பலர், அதனை எப்படி பெற்றுக் கொள்வது, அல்லது பெற்றுக் கொண்டதை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதை சரிவர அறியாதவர்களாக இருப்பதே பலரும் கண்ணியமிழப்பதற்கு காரணமாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் தமது கண்ணியத்தைப் பேணி சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்பதே இஸ்லாமிய மார்க்கத்தின் அவாவாகும்.
கண்ணியத்தைப் பற்றியும், கண்ணியத்துக்குறியவரின் பண்புகளில் முக்கியமானது எது என்பது பற்றியும் குறித்த நபி மொழி மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது.
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்ச முடையவரே” என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை” என்றனர். உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி : 3490)
மேற்கண்ட நபி மொழியில் கண்ணியத்துக்குறியர் யார் அவரின் பண்புகள் என்ன என்பது பற்றியெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.
மக்களில் கண்ணியத்திற்குறியவர் யார் என்ற நபித் தோழர்களின் கேள்விக்கு நபியவர்கள் அளித்த முதல் பதில் “இறையச்சமுடையவர்” என்பதாகும். யாருக்கு இறையச்சம் இருக்கின்றதோ அவர் தாம் மனிதர்களில் கண்ணியம் மிக்கவர் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பமாக எடுத்துச் சொல்கின்றார்கள்.
“நாம் அதனைக் கேட்கவில்லை” என்று மக்கள் சொன்னவுடன், “அப்படியானால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளிக்கின்றார்கள். இந்த இரண்டு பதில்களும் ஒன்றுடன் இன்னொன்று இணைந்து போகும் பதில்களாகும். இறையச்சமுடையவர் தாம் கண்ணியத்துக்குறியவர் என்பதும், நபி யூசுப் அவர்கள் தான் கண்ணியத்துக்குறியர் என்பதிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இறையச்சத்தை வெளிப்படுத்தி, கண்ணியம் பேணிய யூசுப் நபியவர்கள் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம் மக்களில் மிகவும் கண்ணியத்திற்குறியவர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டத்தில் ஆழ்ந்த, ஆச்சரியமான இவ்வுலக மக்களுக்குத் தேவையான அடிப்படை செய்தியொன்று அடங்கியுள்ளது.
யாரும் பார்க்காத, எவருக்கும் தெரியாத நேரத்த்தில் ஒரு ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இறைவனின் பயம் மாத்திரம் இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் வழிதவறுவதற்கு நிறைய வாய்ப்புகள் அமையப் பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதற்கு யூசுப் நபியின் சம்பவம் மிகப் பெரும் சான்றாகும்.
அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன் 12:24)
நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அரசனின் மனைவியும் இருக்கும் நேரத்தில் அரசனின் மனைவி யூசுஃப் நபியவர்களை வழிகேட்டிற்கு அழைக்கும் போது தொடர்ந்து அதனை புறக்கனித்த யூசுஃப் நபியவர்கள் இறுதியில் கெட்ட வழியில் செல்ல முனையும் போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றியதாக மேற்கண்ட வசனம் சொல்கின்றது. தவறான பாதையின் பக்கம் யூசுப் நபியவர்கள் செல்வதற்கு முயற்சிக்கும் போது இறைவன் தனது சான்றை நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் அல்லாஹ் அவரை காப்பாற்றினான். இறைவனின் சான்றை அவர் பார்த்திராவிட்டால் தவறியிருப்பார் என்ற இறைவனின் வார்த்தைகள் இதற்கு சான்றாகும். இறைவனால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த அடியார்களில் ஒருவராக யூசுப் நபியவர்கள் இருந்த காரணத்தினால் அவர்களை இறைவன் தனது சான்றுகள் மூலம் தவறாக வழியில் பயணிப்பதை விட்டும் காப்பாற்றினான்.
இதே நிலையில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் தப்பித்து விடலாம் என்பதை யாரும் உறுதியாகக் கூற முடியாது. இது நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவன் வழங்கிய சிறப்புச் சலுகையாகும். அழகும், செல்வாக்கும் மிக்க அரசனின் மனைவியே தன்னை தனது உடல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக அழைத்த போது இறைவனுக்கு பயந்த ஒரே காரணத்தினால் அதனை விட்டும் தவிர்ந்து தனது கற்பையும், கண்ணியத்தையும் காப்பாற்றிய இறைத் தூதர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களில் கண்ணியம் மிக்கவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. மனிதன் விபச்சாரத்தின் பங்கை அடைந்தே தீருவான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
மேற்கண்ட ஹதீஸில் மனிதன் என்று மொழி பெயர்த்த வார்த்தைக்கு அரபி மூலத்தில் இப்னு ஆதம் (ஆதமுடைய மகன்) என்ற வார்த்தை உள்ளது. இது ஆதி முதல் அந்தம் வரை உள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்குரிய சொல்லாகும். நபிமார்களிடம் பெரும்பாவமாகக் கூறப்படும் விபச்சாரம் போன்ற பெரும் தவறுகள் ஒரு போதும் நிகழாது. உள்ளத்தில் சலனம் ஏற்படுவது போன்ற நிலைகளுக்கு அவர்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
மார்க்க அடிப்படையில் உள்ளத்தில் ஒரு தவறை நினைத்தால் அது குற்றமாகாது. மாறாக அந்தத் தவறைச் செய்தால் தான் அது பாவமாகக் கருதப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்கல் ஊசலாடும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெலிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2528)
இது நபியவர்களின் உம்மத்திற்கு மட்டுமல்ல. இதற்கு முந்தைய சமுதாயத்திற்கும் இது தான் மார்க்க அடிப்படையாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (வானவர்கலிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகலிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7501)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறையச்சத்தின் காரணமாக விபரச்சாரத்தினை விட்டும் விலகியமைக்காக அவருக்கு நன்மை எழுதப்பட்டதே தவிர தீமையாக அது பதிவு செய்யப்பட்டிருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இறையச்சத்துடன் தான் வாழ்கின்றோம் என்று வெறும் வார்த்தையால் கூறுவதையே பெரிய தியாகமாக நினைக்கும் இக்காலத்தில் பாவம் செய்வதற்கு தனிமையான சந்தர்ப்பம் கிடைத்தும், அழகும், செல்வாக்கும் மிக்க அரசனின் மனைவியே அதற்கு அழைத்தும் இறைவனுக்கு பயந்த ஒரே காரணத்திற்காக குறித்த தீமையை விட்டும் விலகிய நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களில் கண்ணியம் மிக்கவர்கள் என்று நபியவர்கள் கூறிய வார்த்தையின் ஆழத்தை குறித் சம்பவத்தை சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்.
கண்ணியத்திற்கு உறியவர்களாகவே வாழ்வதற்கு என்ன வழி? மனிதர்களில் கண்ணியத்திற்குறியவர்களாக யூசுஃப் நபியவர்கள் இருந்ததைப் போல், நாமும் நமது கண்ணியத்தை பாதுகாப்பதற்கும், விபரச்சாரத்தை விட்டும் விலகியிருப்பதற்கும் இஸ்லாம் மிகத் தெளிவான வழிகாட்டல்களை நமக்கு வழங்கியுள்ளது. மனிதர்களாக இருப்பவர்களுக்கு மனதில் சலனம் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று அந்த சலனம் நம்மை வழிகேட்டின் பக்கம் அழைத்து செல்லாமல், நேர்வழியில் நிலைபெற செய்ய வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டிய முறைப்படி திருமணத்தின் மூலம் நமது ஆசைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள் ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில் அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2718)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்த நேரத்தில் கூட தமது மனைவியிடம் சென்று தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியின் மூலம் நாம் அறிந்து கொள்கின்றோம். தீய ஆசைகளுக்கு உடன்பட்டு, கண்ணியத்தை இழப்பதை விட, ஆசைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்ளும் திருமணத்தின் மூலம் நமது கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதே இம்மை மறுமை வாழ்வின் வெற்றிக்கு வழியாகும் என்பதை நாம் அத்தனை பேரும் புரிந்து நடப்பதின் மூலம் மனிதர்களில் கண்ணியமிக்கவர்களாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கும் அருள் புரிவானாக!
source: http://rasminmisc.com/alaippu-feb-ganniyam/#sthash.Xh6YXgo9.dpuf