தொடரும் காஃபிர் ஃபத்வா! கேள்விக்குறியாகும் ஆலிம்களின் தக்வா!
“ஃகிலாஃபத் ராஷிதா” (நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சி) காலத்தின் இறுதி கால கட்டத்தில் தான் இந்த குழுவினர் தோன்றினார்கள். இவர்கள் “ஃகவாரிஜ்” என அறியப்பட்டனர்.
இந்த குழுவினர் எல்லா விஷயங்களிலும் தீவிரமான கருத்துக்களை கொண்டிருந்தனர். ஒவ்வொரு பாவத்திற்கும், சின்ன சின்ன தவறுக்கும் மக்களை “காஃபிர்” (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்று தீர்ப்பளிப்பது அவர்களின் நடைமுறை. இதற்கு எதிர்வினையாக உலமா (மார்க்க அறிஞர்கள்) க்கிடையில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
இறுதியாக எவர் “கிப்லா” (தொழுகையில் மக்காவை நோக்குதல்) வை முன்னோக்குகின்றாரோ ,அவர் “காஃபிர்” என கருதப்படமாட்டார். என ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டது.
இமாம் அபூ ஜஃபர் அத்தஹாவி (மறைவு 321ஹி) தமது சமகால அறிஞர்களின் இந்த கருத்தாக்கத்தை இவ்வாறு விவரிக்கின்றார். எவர், தான் செய்த பாவம் சரியானது, ஹலாலானது(அனுமதிக்கப்படது) என்று முழுதாக நம்பிக்கை கொண்டு நிலைத்து நிற்கின்றாரோ அதுவரை “நாங்கள் கிப்லாவை முன்னோக்கும் எவரையும் அவர்களைப்பற்றி “காஃபிர்கள்” (இறை நிராகரிப்பாளர்கள்) என்று மார்க்கத்தீர்ப்பு வழங்குவதில்லை.(நூல்: ஷரஹ் அஃகீதா தஹாவியா,261/1).
உலமா பெருமக்களின் இந்த ஏகோபித்த கருத்தாக்கம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த “தக்ஃபீர்” (‘ காஃபிர்’ என தீர்ப்பு வழங்குதல்) தொடர்ந்து வருகிறது.
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு மாற்றமான “காஃபிர்” என தீர்ப்பு வழங்குதல் என்ற நிலைப்பாடு அன்றைய உலமா பெருமக்கள் எடுத்தது அடிப்படையிலேயே தவறானது. அவர்கள் பொதுவான “தக்ஃபீரை” அனுமதிக்கவில்லை ஆனால் நிபந்தனையுடன் கூடிய “குஃப்ர்” தீர்ப்பை அனுமதித்தனர்.
இந்த நிலைப்பாடும் அடிப்படையிலேயே தவறானது. இதனால் தான் “குஃப்ர்” தீர்ப்பின் கதவு காலங்காலமாக திறந்தே உள்ளது. உண்மையில் பார்க்கப் போனால் ஒருவரை “காஃபிர்” என தீர்ப்பு வழங்குவது என்பது முற்றிலும் தவறானது என்பதை உலமா முற்றிலும் நிராகரித்து விட்டனர். தவிர மக்களுக்கு எடுத்துக்கூறவும் மறந்துவிட்டனர். இந்த நடைமுறை இஸ்லாத்திற்கு மாற்றமானது என்பதையும் மறைத்து விட்டனர்.
எந்த ஒரு ஆலிம் அல்லது முஃப்திக்கு எவரையாவது “காஃபிர் ” என்று தீர்ப்பு வழங்குவதற்கான உரிமை இல்லை, இது ஷரீஅத்திற்கு புறம்பானது என எவரும் எடுத்து கூறவில்லை.
ஒருவரை ” காஃபிர் ” என தீர்ப்பளிப்பது நபி தோழர்களின் நடைமுறையும் இல்லை. இந்த நடைமுறை அடுத்தடுத்த காலகட்டங்களில் இஸ்லாத்தில் நுழைந்தது.
அன்றைய கால அறிஞர்கள், இந்த நடைமுறை இஸ்லாமிய நடைமுறை அல்ல என்றும் இது “பித்அத்” எனப்படும் நூதன அனுஷ்டானமும் ஆகும் என்று ஏகோபித்த குரலில் அறிவித்து விளக்கி இருந்து இருக்க வேண்டும். ஆனால அவ்வாறு நடக்கவில்லை.
இறை நம்பிக்கை கொண்டோர் மக்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். மக்களை “காஃபிர் ” என முத்திரை குத்தி விலக்குபவர்களாக இருக்கக்கூடாது. ஏனெனில் தன்னைத்தவிர சுற்றியுள்ள அனைவரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கும் “மத்ஊ” ஆவார்கள். மக்களின் நடைமுறையை கொண்டு அவர்கள் மீது தீர்ப்பு கூறுவதற்கு பதில் அவர்களின் தவறுகளை விளக்கி இறை கட்டளைகளை எடுத்துகாட்டி நேர்வழி யின் பால் அழைப்பவர்களாக இருக்க வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயத்தின் கடமை “தப்லீஃக்” (பரப்புரை) ஐ அடிப்படையாக்ககொண்டு இருக்க வேண்டும். “தக்ஃபீரை” (இஸ்லாத்தை விட்டு விட்டவர்) என்ற கருத்தின அடிப்படையில் அமையக்கூடாது.
ஒருவர் இஸ்லாமிற்கு மாற்றமானவர், வெளியேறியவர் என்று அறிவிக்கும் உரிமை அல்லாஹ் வுக்கு மட்டுமே உரித்தானது. மனிதர் களுக்கு இந்த உரிமை இல்லை.”தப்லீக் ” எனப்படும் இந்த அழைப்புப்பணி, பிரச்சாரப்பணி பலன் தர வில்லையெனில் ஒரு “முஃமின்” (இறை நம்பிக்கையாளன்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பொறுப்பை அவனிடமே சமர்ப்பித்து விட்டு விலகி விட வேண்டும்.
391. ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார். Book : 8
392. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார். Book :8
393. ‘ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?’ எனநான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு’ என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்” என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார் (புகாரி)
. மௌலானா வஹீதுத்தீன் கான், (அர் ரிஸாலா, மார்ச் இதழ் 2015)
தமிழில்: ஜஃபர் ரஹ்மானி