அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 3
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
இந்நபித்தோழரின் பெயர் ‘அப்துல்லாஹ் அல்பத்லி’ என்பதாம். தந்தையின் பெய்ர் மஸ்ஊத். வம்சாவழியாவது இப்னு மஸ்ஊத் இப்னு காஃபில் இப்னு ஹபீப் இப்னு ஷமஃக் இப்னு மஃக்ஸூம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஃபுதைல் இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிதார் இப்னு அத்னான். மக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (அத்தபக்காதுல் குப்ரா, இப்னு சஅத், பா: 3 பக்: 50, ஸியர் அஃலாமுன் நுபலா நுபலா, பா: 1 பக்: 461)
ஜாஹிலிய்யா காலத்திலேயே தந்தையார் மரணமடைந்து விட்டார். எனினும் தாயார் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, பா: 7 பக்: 103)
தாயாரின் பெயர் உம்மு அப்த்.
வம்சா வழித் தொடராவது – அப்துல்லாஹ் இப்னு உம்மு அப்த் பின்த் வுத் இப்னு ஸிவாஃ இப்னு வலீம் இப்னு சாஹிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு சஅத் இப்னு ஹுதைல். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாய்வழிப்பாட்டியின் பெயர் ஹிந்த் பின்த் அப்த் இப்னு அல்ஹாரிஸ் இப்னு திஹ்ரா இப்னு கிலாப். இவர் பனூ ஜுஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வராவார்.
அபூ அப்துர் ரஹ்மான் என்பது இவர்தம் விளிபெயராம். ‘எனக்கு மகன் பிறக்கும் முன்பாகவே அண்ணலார் எனக்கு அபூ அப்துர்ரஹ்மான் என்னும் விளிபெயரை சூட்டினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அறிவித்தாக அல்கமா கூறுகிறார் கள். (முஸ்தத்ரக் ஹாகிம் 3/313)
அதன்படி பிற்காலத்தில் குழந்தை பிறந்ததும் அதற்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டப்பபட்டது. அதுபோன்றே இவர்தம் தாயோடு தொடர்பு படுத்தி ‘இப்னு உம்மி அப்த்’ எனவும் விளிக் கப்பட்டார்கள். இப்பெயரே புகழ்பெற்று விளங்கியது. (ஸியர் அஃலாமுந் நுபலா, பா: 1 பக்: 462)
குலமும் கோத்திரமும்
பெருமையையும் புகழையும் அடைய வேண்டுமெனில் அதற்கு அரபுலகைப் பொருத்தவரை கவிதையிலும் யாப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். எடுத்தவுடன் நினைத்ததைப் பற்றி அற்புதமான கவிதையை வடிக்க வல்லவரே கோத்திரத்தின் தலைவராகும் தகுதி படைத்தவர் ஆவார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹுதைல் கோத்திரத்தை
சார்ந்தவர், அக்கோத்திரத்தில் பல பெருங்கவிஞர் கள் இருந்தார்கள். பலதரப்பட்ட கவிஞர்களும் இக்கோத்திரத் தின் கவிதைகளை பல்வேறு தொகுப்புகளாக திரட்டியுள்ளார் கள். அவற்றின் ஒவ்வொரு பாடத்தையும் கவனமாகக் கற்கும் அளவுக்கு அத்தொகுப்பு மிகவும் முக்கியத்துவம் பொருந்திய தாக விளங்கியது. அவ்வகையில் இமாம் அஸ்அமீ ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள் இமாம் ஷாஃபஈ அவர்களிடம் ‘அஷ்ஆருல் ஹுதைலிய்யீன்’ பற்றிய பாடத்தைப் பயின்றுள் ளார்கள்.
(காண்க- தத்கிரத்து இமாம் ஷாஃபஈ மற்றும அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களும் அவர்தம் ஃபிக்ஹுவும்) அத்தோடு அரபுலகின் புகழ்பெற்ற கோத்திரமான பனூ லிஹ் யான் கோத்திரமும் ஹுதைல் கோத்திரத்தின் ஒரு கிளையாகவே விளங்கியது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாயாரின் கோத்திரம் அதுவேயாகும். அதேசமயம் அவருடைய தாய்வழிப் பாட்டியின் பெயரோ ஹிந்த் பின்த் அப்தல் ஹாரிஸ் இப்னு ஜுஹ்ரா இப்னு கிலாப் ஆகும். அவர் பனூ ஜுஹ்ரா கோத் திரத்தைச் சேர்ந்தவர். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் உடைய தந்தையார் பிற்காலத்தில் பனூ ஜுஹ்ரா கோத்திரத்தின் அப்த் இப்னு ஹாரிஸ் இப்னு ஜுஹ்ரா உடைய தோழமையுறவு பூண்டார்கள். இதனாலும் அப்துலலாஹ் இப்னு மஸ்ஊதுடைய கோத்திரமான ஹுதைல் கோத்திரம் பனூ ஜுஹ்ராவோடு உறவு பூண்ட கோத்திரமாகவும் விளங்கியது. (தபக்காத் இப்னு சஅத் பா: 3 பக்: 150)
ஆரம்ப நிலைகள்
ஆடுகளையும் செம்மறிகளையும் மேய்ப்பதிலேயே தான் அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் இளமைப் பருவம் முழுக்க கழிந்தது. அரபுலகின் பெரும்பெரும் செல்வந்தர்கள் கண்ணிய வான்கள் யாவருடைய பிள்ளைகளும் வாரிசுகளும் இங்ஙனம் ஆடுகளையும் ஒட்டகைகளையும் மேய்த்துள்ளார்கள். அவர் களைப் பொருத்தவரை இது பொருட்படுத்தக்கூடிய செயலே அல்ல. அவர்களிடம் அதுவொரு பாடசாலை. அப்பாடசாலை யில் மென்மை, சகிப்புத்தன்மை, விசுவாசம், எளிமை போன் றவை கற்பிக்கப்படுகின்றன.
மக்காவில் ஓரிறைக் கோட்பாட்டிற்கான அழைப்பு விடுக்கப் பட்டபோது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் இப்பாட சாலையில் பயின்று கொண்டிருந்தார்கள். உக்பா இப்னு ஆமிர் என்பாருடைய ஆடுகளை அப்போது அவர்கள் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். (அஸதுல் காபா பா: 2 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் பற்றிய குறிப்புகள்)
இஸ்லாமை ஏற்றல்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் இஸ் லாமை ஏற்ற சுவையான நிகழ்வை தாமே சொல்கிறார்கள். ‘சிறு வயதில் உக்பா இப்னு ஆமிருடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். (சின்ன வயது பையன்களை ஆடுகளை மேய்க்க அனுப்புவது அரபுக்களின் குல வழக்கம். அவர்கள் என்னதான் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன்களாக இருந்தாலும் அதையெல்லாம் பார்க்காமல் ஆடுகளை மேய்க்க அனுப்பி விடுவார்கள். ஏனெனில் அதன் மூலமாக சகிப்புத் தன்மையையும் மென்மையையும் பொறுமையையும் கற்றுக் கொள்ள முடியும். ஏறக்குறைய அனைத்து நபிமார்களும் ஆடுகளை மேய்த்துள்ளார்கள்.
அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஆடுகளை மேய்த் துள்ளார்கள். இதனால்தான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆடுகளை மேய்த்துள்ளார்கள்) ஒருமுறை அண்ணலார் வருகை புரிந்தார்கள். அண்ணலாரோடு அபு பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். முஷ்ரிக்கீன்களிடம் இருந்து தப்ப அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள்.
அவர்கள் இருவரும் என்னிடம், ‘சிறுவனே, உன்னிடம் ஆட் டுப் பால் உள்ளதா? குடிக்கக் கிடைக்குமா?’ என வினவினார்கள்.
‘ஆனால், இவை என்னிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப் பட்டுள்ளனவே. நான் உங்களுக்கு குடிக்கக் கொடுக்க இயலாதே’ என்றேன் நான்.
‘கிடாவோடு சேராத பெட்டையாடு ஏதேனும் உன்னிடம் உள் ளதா?’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் வினவினார்கள்.
ஆமென்றேன் நான். அவ்வாறே ஒரு பெட்டை ஆட்டை அவர் களுக்கு அருகில் கொண்டு வந்தேன். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெட்டை யாட்டைக் கட்டினார்கள். அவ்வாட்டின் மடிமீது கைவைத்துத் தடவினார்கள். பின்பு துஆ செய்தார்கள். அவ்வாட்டின் மடிகள் இரண்டும் பாலால் நிரம்பி பெருத்து விட்டன.
அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்குமிங்கும் தேடி குழியுள்ள கற்களாகப் பொறுக்கிக் கொண்டு வந்தார்கள். அக்கற்களில் பாலைக் கறந்தார்கள்.
அப்பாலை அபூ பக்கரும் நானும் குடித்தோம், பிறகு ‘சுருங்கி விடு’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளை இட்டார்கள். அவை சுருங்கி விட்டன.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நான் அண்ணலாருக்கு அருகில் சென்றேன். எனக்கும் அந்த துஆவைக் கற்றுத் தாருங்கள் என்றேன்.
‘நீ கல்வியறிவுள்ள சிறுவனாக இருக்கிறாய்’ என்றார்கள் அண்ணலார்.இந்நிகழ்வு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களு டைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதே நிமிடத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதைப் போலவே நான் அண்ணலாரின் நாவிலிருந்தே எழுபது (70) அத்தியாயங்களை மனனம் செய்து கொண்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபக்காத் இப்னு சஅத், பா: 3 பக்: 150 முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் நூற்பதிவு
இறைநம்பிக்கை உணர்வு
எண்ணிக்கையில் அடங்கும் அளவு ஒரு சிறு கூட்டமாக முஸ் லிம்கள் இருந்த ஒரு தருணத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். மக்காவில் அண்ணல் நபிகளாரைத் தவிர வேறு யாரும் சத்தம்போட்டு குர்ஆனை திலா வத் செய்யவோ வாசிக்கவோ முடியாது. ஆகையால், ஒருமுறை ஸஹாபாக்கள் ஒரு குழுவாக அமர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘இறைவன் மீது சத்தியமாக, உரத்த குரலில் குர்ஆன் ஓதப்படு வதை இதுவரை குறைஷிகள் கேட்டதே இல்லை’ என்பதை எல்லோரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டார்கள். இப்போது கேள்வி என்னவெனில் குறைஷிகள் காதில் படும்படி அவர்களுக்கு முன்னால் சத்தமாக குர்ஆனை ஓதவேண்டும், இதைச் செயவ்து யார்?
‘நான் ஓதுகிறேன்’ என தாமாக முன்வந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
‘இல்லை நீங்கள் இச்செயலைச் செய்ய முடியாது. அது உகந்ததல்ல. குடும்பமும் கோத்திரமும் வலிமையோடு இருக்க வேண்டும். உங்களுக்கு பக்கபலமாக முஷ்ரிக்கீன்களிலேயே ஒரு குழுவினர் முன்வந்து ஆதரிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் குர்ஆனைப் போய் வாசிக்க முடியும். எனவே, நீங்கள் போய் வாசிப்பதெல்லாம் சாத்தியப்படாது’ என மற்ற ஸஹாபாக்கள் யாவரும் கூறிவிட்டார்கள்.
‘இல்லை. நான் போய் குர்ஆனை ஓதியே தீருவேன். என்னை இறைவன் பாதுகாப்பான். என்னை விட்டுவிடுஙகள்’ என்றார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அவ்வாறே மறுநாள் பகலில் குறைஷியர் அனைவரும் ஒன் றாகக் கூடியிருக்கும் தருணத்தில் இந்த இஸ்லாமின் தூதன் ஒரு பக்கமாகப் போய் நின்றுகொண்டான். கேட்போரை ஈர்த்து மதி மயக்கி கதிகலங்கி வைக்கும் உன்னத இறைவேதம் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றவாறு ஓரிறைக் கொள்கையின் உன்னத கீதத்தை இசைக்கத் தொடங்கினார்.வியப்பால் விழிகள் விரிய திகைப்போடு இறைவசனங்களை இறைநிராகரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டேயிரந்தார்கள்.
‘இப்னு உம்மு அப்த் என்ன கூறுகிறான்?’ என தமக்குள்ளாக கேட்டுக் கொண்டார்கள்.
‘முஹம்மது தனக்கேதோ வேதம் இறங்குவதாகப் பிதற்றுகிறாரல்லவா, அதை ஓதிக் கொண்டிருக்கிறான்’ என்று யாரோ ஒருவர் கண்டுபிடித்துக் அவ்வளவுதான் தாமதம், கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட அக்கூட்டம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பாய்ந்தது.
வெறிபிடித்தாற்போன்று அடித்துத் துவைத்தார்கள். முகமெல்லாம் வீங்கிப் புடைத்துவிட்டது.கொளுந்துவிட்டு எரியும் நெருப்பை ஒருசில நீர்த்துளிகள் மே லும் பொங்கி எரியச் செய்து விடுகின்றன. அதுபோல அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் இறைநிராகரிப் பாளர்களின் கோபத்தீயை மேலும் கிளறிவிட்டது.
இறைநிராகரிப்பாளர்கள் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவு தன் ஓட்டத்தை நிறுத்தவேயில்லை.
எடுத்துச்சென்ற பணியை முடித்துவிட்டு குற்றுயிரும்குலை யுயிருமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தோழர்களிடம் திரும்பினார்கள். ‘இதற்காகத்தான் நாங்கள் முதலிலேயே சொன்னோம். போகாதீர்கள் என்று தடுத்தோம்’ என்றார்கள் தோழர்கள்.
‘இன்று இறைவனுடைய எதிரிகளை கீழ்த்தரமாக எண்ணிய தைப் போல வேறு எந்நாளும் எண்ணியதேயில்லை. நீங்கள் விரும்பினால் நாளைக்கும் போய் நான் குர்ஆனை வாசிக்க தயாராகவே இருக்கிறேன்’ என்றார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
‘இல்லையில்லை, இதுவே போதும். அவர்கள் எதனை ஒரு போதும் காது கொடுத்துக் கேட்கவே கூடாது என எண்ணிக் கொண்டிருந்தார்களோ, அதனை நீங்கள் அவர்களிடமே போய் உரத்த குரலில் சொல்லிவிட்டீர்கள்’ என்றார்கள் தோழர்கள். (அஸதுல் காபா, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர் களைப் பற்றிய குறிப்புகள்)
இறைநிராகரிப்பாளர்களுடைய கொடுமைகளும் சித்திர வதைகளும் தொடர்ந்த போதும் முஸ்லிம்களுடைய எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்ட நிராகரிப்பாளர்கள் ஒன்றுதிரண்டு ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களைத் தாக்கவும் அக்கிரமங்களை அதிகரிக்கவும் முனைந்தார்கள். வகைவகையான கொடுமைகளை நாளுக்குநாள் புரியலானார்கள். புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள் இஸ்லாமை கைவிட்டுவிட்டு பழைய சமயத்திற்கே திரும்பிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது.
இவற்றைக் கண்ட இஸ்லாமின் அருட்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
‘புவியெங்கும் பரவிச் செல்லுங்கள். இறைவன் உங்களை ஒருநாள் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பான்’ என அறிவுறுத்தினார்கள்.
‘நாங்கள் எங்குதான் செல்வது?’ என ஸஹாபாக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
தமது திருக்கரத்தை சுட்டிக்காட்டி ‘அங்கே’ என்றார்கள் அண்ணலார். அத்திசை, எத்தியோப்பியா நாடு இருந்த திசை. (உயூ னுல் அஸர்)
எத்தியோப்பியாவை ஆண்ட மன்னர் நஜாஷி என்றழைக்கப்பட்டார். நீதிக்கும் நேர்மைக்கும் அவர் புகழ் பெற்றிருந்தார்.ஸஹாபாக்கள் உறுதிமிக்க திடநெஞ்சினராக இருந்தார்கள். எவ்வளவு கொடிதினும் கொடிய வதைகளைக் கண்டும் அவர் தம் நெஞ்சுறுதி குலையவில்லை. இருந்தபோதிலும் மக்கா பூமியில் அவர்களால் சுதந்திரமாக இறைவனை வணங்கவோ வழி படவோ முடியவில்லை. இதை மனதிற்கொண்டுதான் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தியோப்பியாவுக்கு சென்றுவிடுமாறு கைகாட்டி சுட்டிக் காட்டினார்கள்.
முதன்முதலில் ஹிஜ்ரத் சென்ற குழுவில் பதினொன்று ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தார்கள். முதற்குகுழுவில் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவருடைய துணைவியும் அண்ண லாரின் மகளுமான ருகைய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களும் இடம்பெற் றிருந்தார்கள். அக்குழுவில் இடம் பெற்றிருந்த
நான்கு பெண் மணிகளின் பெயர்களாவன –
(1) ருகைய்யா பின்த் முஹம்மத் நபிய்யுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹா)
(2) ஸஹ்லா பின்த் ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹா (அபூ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவி)
(3) உம்மு ஸலமா பின்த் அபீ உமைய்யா ரழியல்லாஹு அன்ஹா (அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி)
(4) லைலா பின்த் அபீ ஜஸ்மா ரழியல்லாஹு அன்ஹா (ஆமிர் இப்னு ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவி)
குழுவிலிருந்த பதினொன்று ஆண்களின் பெயர்களாவன –
(1) உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு,
(2) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு, ,
(3) ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு,
(4) அபூ ஹுதைஃபா இப்னு உத்பா ரழியல்லாஹு அன்ஹு,
(5) முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு,
(6) அபூ ஸலமா இப்னு அப்துல் அஸத் ரழியல்லாஹு அன்ஹு,
(7) உஸ்மான் இப்னு மழ்வூன் ரழியல்லாஹு அன்ஹு,
(8) ஆமிர் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு,
(9) ஸுஹைல் இப்னு பைழா
(10) அபூ ஸப்ரா இப்னு அபீ ரஹ்ம் அல்ஆமிரி அல்லது ஹாதிப் இப்னு அமருல் ஆமிரி
(11) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு,
எதியோப்பியாவிற்கு முதன்முதலில் சென்ற ஹிஜ்ரத் குழுவின் எண்ணிக்கை அதில் இடம்பெற்றோரின் பெயர்கள் போன்ற வற்றில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆரம்பத்தில் உள்ள ஒன்பது தோழர்களின் பெயர்களை அனைவரும் ஏற் கிறார்கள். எனினும் வாக்கிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி மட்டும் இறுதி மூன்று பெயர்களையும் குறிப்பிடுகிறார். அவ்வாறே அவர் பத்தாம் நபரான அபூ ஸம்ராவிற்குப் பதிலாக கூறப்பட்டுள்ள ஹாதிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஹிஜ்ரத் செய்தவாகவே குறிப்பிடுகிறார்.
அவ்வகையில் அவரிடம் மொத்த எண்ணிக்கை பனிரெண்டாக ஆகிவிடுகின்றது. ஆனால், ஹாஃபிழ் இப்னு ஹஜரோ மொத்த எண்ணிக்கை பதினொன்றே என்கிறார். இப்னு இஸ்ஹாக் ஆண்களின் எண்ணிக்கை பத்து என்றுதான் குறிப்பிடுகிறார் எனவும் சொல்கிறார். அப்தல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது முதல் ஹிஜ்ரத் குழுவில் இடம் பெறவில்லை என வன்மையாக மறுக்கிறார். மாறாக, அவர்கள் மதீனாவிற்குச் சென்ற குழுவில்தான் இடம்பெற்றிருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறார். அவ்வாறே பத்தாம் நபரைப் பற்றிக் கூறும்போது அபூ ஸம்ரா அல்லது ஹாதிப் எனக் குறிப்பிடுகிறார். (ஃபத்ஹுல் பாரி பா: 5 பக்: 189)
ஆயின், இப்னு சஅத் அவர்களோ வாக்கிதீ குறிப்பிடுகின்ற பெயர்களையே பதிவு செய்துள்ளார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய பெரையும் கூறியுள்ளார். (தபக்காத் இப்னு சஅத் பா: 3 பக்: 151)
எத்தியோப்பியாவிற்கு இரண்டு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஹிஜ்ரத் செய்தார்கள் என்னும் தகவலும் தபக்காத்தில் காணப்படுகின்றது. இரண்டாவது ஹிஜ்ரத் என்னவெனில், முதல் ஹிஜ்ரத் செய்து எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் குடியேறியபிறகு அவர்களிடையே நபவி 5ஆம் ஆண்டு ஒரு தகவல் பரவியது. மக்காவிலுள்ள அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் எனும் தகவல். இத்தகவல் அவர்களை எட்டியதும் முஹாஜிரீன்கள் யாவரும் அங்கிருந்து கிளம்பி மக்கா வந்து சேர்ந்தார்கள். இங்கு வந்து பார்த்தால் கிட்டிய தகவல் உண்மையன்று, வதந்தி என்னும் நிலை. (ஃபத்ஹுல் பாரி பா: 7 பக்: 189)
இதைக்கண்ட பலர் உடனடியாக எத்தியோப்பியா திரும்பிச் சென்று விட்டார்கள். சிலர் மட்டும் மக்காவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். ஒருசில நாள்கள் தங்கிய பிறகு மறு படியும் எத்தியோப்பியாவிற்கே திரும்பிச் சென்றுவிட்டார்கள். இம்முறை முன்பைவிடக் கடுமையாக நிராகரிப்பாளர்கள் வதைக்கத் தொடங்கினார்கள். ஆகையால், அண்ணாலார் மறுபடியும் ஹிஜ்ரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். இரண்டாவது ஹிஜ்ரத்தில் முஹாஜிரீன்களின் எண்ணணிக்கை எண்பதாக (80) இருந்தது. (ஃபத்ஹுல் பாரி பா: 7 பக்: 189)
வதந்தி என்ன?
வந்த தகவல் அதாவது வதந்தி என்ன என்பதைப் பற்றியும் வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். ஒருதடவை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் கஅபத்துல்லாஹ்வில் அத்தியாயம் அந்நஜ்ம் உடைய கடைசி வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். மக்காவின் இறைநிராகரிப் பாளர்களும் அவ்விடத்தில் குழுமி இருந்தார்கள்.
‘நீங்கள் ”லாத்”தையும் ”உஸ்ஸா”வையும் காணவில்லையா?’ என்ற வசனத்தை ஓதியவாறு அணணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா வசனத்தை ஓதினார்கள். ஸஜ்தா வசனத்தை ஓதியதும் ஸஜ்தாவிற்கு சென்றுவிட்டார்கள். அதற்கு முந்தய வசனத்தில் லாத் உஸ்ஸாவின் பெயர்கள் கூறப்பட்டமை யால் குழுமியிருந்த நிராகரிப்பாளர்களும் அண்ணலாரோடு சேர்ந்து ஸஜ்தாவில் விழுந்துவிட்டார்கள். உடனே மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்களாகி விட்டார்கள் என்னும் தகவல் வதந்தியாகப் பரவிவிட்டது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கிறார்கள்,
‘எத்தியோப்பியாவின் மன்னரான நஜ்ஜாஷியிடம் அடைக்கலம் புகுமாறு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எண்பது (80) நபர்களுக்கு அனுமதி அளித்தார்கள். நான், ஜஅஃபர், அபூ மூஸா, இப்னு ஹிஷாம், அப்துல் லாஹ் இப்னு உர்துஃபா, உஸ்மான் இப்னு மழ்ஊன் போன்றோர் அவர்களும் இருந்தோம். குறைஷியர்கள் (அதுவரை இஸ்லாமை ஏற்காதிருந்த) அமர் இப்னுஅல் ஆஸ் அவர்களையும் அம்மார் இப்னு வலீத் என்பாரையும் எத்தியோப்பியா அனுப்பி வைத் தார்கள்.
மதிப்புமிக்க அன்பளிப்புப் பொருள்களை கையோடு கொண்டு வந்திருந்தார்கள். நஜ்ஜாஷியின் அவைக்கு வந்ததும் அவருக்கு அருகில் சென்று ஸஜ்தா செய்தார்கள். வேகவேகமாக வலப்புறமும் இடப்புறமுமாய் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள். பிறகு அவரிடம்,
‘எங்களுடைய பங்காளி மக்களில் ஒருசிலர் தங்களை நாடி தங்களுடைய நாட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்கள் எங்களுடைய சமயத்தைப் புறக்கணித்து விட்டார்கள்’ என்றார்கள்.
‘அவர்கள் யாவரும் எங்கே?’ என நஜ்ஜாஷி வினவினார்.
‘தங்களுடைய நாட்டில்தாம் அடைக்கலம் புகுந்துள்ளார்கள். அவர்களை அழைத்துவர யாரையேனும் அனுப்பிவையுங்கள்’
அங்ஙனமே நஜ்ஜாஷி எங்களை வரவழைத்தார்.
நாங்கள் அங்குபோய்ச் சேர்ந்தபோது ‘உங்களில் இருந்து ஒரு பிரதிநிதியை முன்னால் அனுப்புங்கள்’ என்றார் மன்னர். முஸ் லிம்கள் அவருடைய பேச்சை ஏற்றுக்கொண்டு ஜஅஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பேசுவதற்காக நியமித்தார்கள்.
ஜஅஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மன்னருக்கு ஸலாம் உரைத்தார்கள். ஆனால், ஸஜ்தா செய்யவில்லை.
‘ஏன் மன்னருக்கு ஸஜ்தா செய்யவில்லை?’ என அவையோர் வினவினார்கள்.
‘நாங்கள் அல்லாஹ் ஓரிறைவனைத் தவிர, வேறு யாருக்கும் ஸஜ்தா செய்வதில்லை’.
‘ஏன் செய்வதில்லை?’ என்றனர் அவையோர்.
‘இறைவன் தனது தூதரை எங்களிடம் அனுப்பியுள்ளான். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யலாகாது என இறைவனின் தூதர் எங்களுக்கு போதித்துள்ளார்கள். தொழு மாறும் ஜகாத் கொடுக்குமாறும் எங்களுக்கு அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்’.
‘இவர்கள் மர்யமின் புதல்வர் ஈஸாவின் விஷயத்தில் உங்களுக்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளார்கள்’ என அம்ரு இப்னுல் ஆஸ் கூறினார்.
‘மர்யமின் புதல்வர் ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்றார்.
‘எங்களுடைய இறைவன் எதைக் கூறுகிறானோ அதனையே நாங்கள் சொல்கிறோம். (ஈஸா) இறைவனின் ரூஹ் ஆகவும் இறைவனின் வார்த்தையாகவும் உள்ளார். (உலகப்பற்று அறவே யில்லாத,) எம்மனிதனராலும் தொடப்படாத, கன்னி மர்யமின் வயிற்றில் இறைவன் அவர்களை பிறக்க வைத்தான்’ என்றார் ஜஅஃபர்.
கீழே கிடந்த தானியம் ஒன்றை நஜ்ஜாஷி மன்னர் பொறுக்கினார்.
‘ஹபஷாவின் அறிஞர் பெருந்தகைகளே! துறவிகளே! ஞானிகளே! நீஙகள் இதைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்? ஜஅஃபர் கூறியதில் எதுவொன்றும் எனக்கு தவறாகப் படவில்லை’ என்றார்
அதன்பின்பு ஜஅஃபரை நோக்கி ‘உங்களுக்கும் உங்களோடு வந்தோருக்கும் நல்வரவை தெரிவிக்கிறேன். ஈஸா அவர்கள் இறைவனின் வார்த்தையாகவும் அவனுடைய தூதராகவும் இருந்தார்கள் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன். இன்ஜீல் வேதத்தில் கூறப்பட்டுள்ள தூதர் சந்தேகமில்லாமல் இவரேதான். இவரைப்பற்றித்தான் ஈஸா அவர்களும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். நீங்கள் இந்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். நான் மட்டும் மன்னனாக இல்லாதிருந்தால் இப்போதே உங்களுடைய இந்தத் தூதரைக் காண்பதற்கு வந்திருப்பேன். அவருடைய காலணிகளைத் துடைத்து சுத்தம் செய்வேன்’ என்றார்.
பிறகு, அந்த இறைநிராகரிப்பாளர்கள் கொண்டுவந்த அன்பளிப்புகளைத் திருப்பி அளித்துவிடுமாறு கட்டளையிட்டார், அவ்வாறே அவ்வன்பளிப்புகள் யாவும் திருப்பி அளிக்கப்பட்டன.இங்கோ முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அத்தோடு அவர்கள் மீது புரியப்படும் கொடுமைகளும் சித்திரவதைகளும் அதிகமாகிக் கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தார்கள்.
இறைவனின் தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொன்று விடுவது என்பதே அம்முடிவு. (நஊதுபல்லாஹ்) அப்போதுதான் முஸ்லிம் களுடைய வளர்ச்சியையும் அவர்களுடைய வேகத்தையும் கட்டுபபடுத்த முடியும் என எண்ணினார்கள்.ஏனெனில் முஸ்லிம்களின் வளரும் வேகத்தையும் எண்ணிக்கையையும் கண்டு அவர்கள் பதற்றமடைந்தார்கள். அவர்களுடைய நிம்மதி குலைந்து போனது. உடனடியாக ஏதேனும் ஒரு முடிவெடுத்து அதை செயற்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும், அப்புறம நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.
இவ்வனைத்து காரணங்களினாலும் அவர்கள் முஸ்லிம்களின் மீதான சித்திரவதைகளையும் அக்கிரமங்களையும் அதிகப்படுத்தினாகள். இவற்றை மனதில்கோண்டே அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமை தங்குதடையில்லாமல் சர்வ சுதந்திரமாக பின்பற்றும் வகையில் மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றுவிடுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தோதான வாய்ப்பும் தக்க தருணமும் வாய்த்த போதெல்லாம் முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து கொண்டே இருந்தார்கள். இறுதியில் அபூ பக்கரோடு அண்ணலாரும் ஹிஜ்ரத் செய்தார்கள்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்கு ஹிஜ்ரத்செய்து புலம் பெயர்ந்து விட்ட செய்தி
எத்தியோப்பியாவிற்கு எட்டியது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்குதாம் இருந்தார்கள். ஆகையால், மதீனாவிற்கு திரும்பும் முயற்சியில் இறங்கினார்கள். நிரந்தரமாக மதீனாவில் தங்கிவிடும் எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பினார்கள்.
மதீனாவிற்கு வந்துசேர்ந்தபோது பத்ரு களத்திற்காக முஸ்லிம்கள் யாவரும் ஆயத்தமாக நின்றிருந்தார்கள். அப்போரில் பஙகேற்றார்கள். சொர்க்கத்திற்காக நற்செய்தியைப் பெற்றுக் கொண்டார்கள்.
எத்தியோப்பியாவில் தங்கியிருந்த மற்ற முஹா ஜிரீன்கள் ஏறக்குறைய முப்பதுக்கும் அதிகமானோர் மக்கா திரும் பினார்கள். (ஃபத்ஹுல் பாரி, பா: 14
இவற்றையெல்லாம் முன்வைத்துப் பார்க்கும்போது அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவனுக்காக இஸ்லாமின் பாதையில் மூன்றுமுறை ஹிஜ்ரத் செய்யும் நற்பேற்றை பெற்றிருந்தார்கள் என விளங்கிக்கொள்ள முடிகின்றது. இதன் காரணமாக அவர்கள் ‘தூ ஹிஜ்ரத்திஸ் ஸலாசா’ எனவும் அழைக் கப்படுகிறார்கள். (அதாவது மூன்று முறை புலம் பெயர்ந்தவர் எனப் பொருள்)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பொன்று புகாரியில் காணப்படுகின்றது.
‘அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்குமபோது நாங்கள் அண்ணலாருக்கு ஸலாம் உரைப்போம், அண்ணலாரும் தொழுதவாறே ஸலாமுக்கு பதில் அளிப்பார்கள். நஜ்ஜாஷி மன்னரிடமிருந்து திரும்பிய பிறகு, அண்ணலாருக்கு ஸலாம் உரைத்தோம்.
ஆனால், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் அளிக்கவில்லை.
‘இறைத்தூதரே! தங்களுக்கு நாங்கள் ஸலாம் உரைத்தோம். தாங்கள் பதிலே கூறவில்லையே’ என நாங்கள் வினவினோம்.
‘தொழுகையை ஈடுபாட்டுடன் தொழவேண்டும்’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் அளித்தார்கள். (அதாவது தொழுகையில் ஈடுபடும் போது வேறு எச்செயலையும் செய்யலாகாது. ஆகையால், இனி தொழும்போது ஸலாம் சொல்லவோ ஸலாமுக்கு பதில் அளிக்கவோ அனுமதியில்லை)
சகோதரத்துவம் – முவாஃகாத்
படைத்த ஏக இறைவனுக்காக தமது உற்றார்-உறவினர்களை விடடுவிட்டு ‘சம்பாதித்த சொத்துகளை எல்லாம் விட்டுவிட்டு முஹாஜிரீன்கள் மதீனாவிற்கு புலம்பெயர்ந்துவந்து விட்டார் கள். ஆகையால், மதீனாவில் வசித்த வந்த அன்சார்களோடு சகோதரத்துவ உறவை அண்ணலார் ஏற்படுத்தினார்கள்.
நபித்தோழர்களான அன்சார்கள் அர்ப்பணிப்பு என்னும் சொல் லுக்கு புதிய பொருளை தம் வாழ்க்கை மையால் வரலாற்றின் பக்கங்களில் எழுதினார்கள். தம்மிடம் இருந்த எல்லா பொருட்களில் இருந்தும் சரிபாதியை தமது புதிய உடன்பிறப்புகளான முஹாஜிரீன்களுக்கு வழங்கி னார்கள் அன்சார்கள். ஒருசில அன்சார்களா தியாகத்தின் உச்சா ணிப்படிகளில் ஏறி நின்றார்கள். தமக்கு இரு இரு மனைவிகள் உள்ளனர் என்றும் அவர்களில் ஒருவரை முஹாஜிரீன்களுக்கு இல்லத்துணைவி யாக வழங்குவதாகவும் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு நல்ல இல்லத்துணையாக இருக்க, எங்களில் ஒரு மனைவியை நாங்கள் தலாக் கூறி மணவிலக்கு செய்து விடுகிறோம். அவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள். ஆயினும் முஹாஜிரீன்கள் எவரும் அதனை ஏற்கவில்லை. (கிதாபுல் புகாரி, பாபு ஆஃகாஉன் நபிய்யு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பைனல் முஹாஜிரீன வல் அன்சார், நகலஹு ஃபத்ஹுல் பாரி பா: 7)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனா திரும்பியபோது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹுக்கும் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். எனவே, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆத் இப்னு ஜபல் அவர்களுடைய இல்லத்தில் தங்கலானார்கள்.
அன்பளிப்பாக ஓர் இல்லம்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்ததும் அவர்களுக்காகவும் அவருடைய தம்பியான உக்பா இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்காகவும் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பூமியை ஒதுக்கிக் கொடுத்தார்கள். அப்பூமி மஸ்ஜிதுந் நபவியின் அருகில் இருந்தது. பனூ ஸஹ்ரா கோத்திரத்தாருக்கும் சில நிலங்களை ஒதுக்கினார்கள். அவையும் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலத்திற்கு அருகிலேயே இருந்தன. அவற்றிற்கிடையே அண்ணலார் எல்லையை வகுத்தார்கள். (தபக்காத் இப்னு சஅத் பா: 3 பக்: 152 உக்பா இப்னு மஸ்ஊத் உடைய அறிவிப்பின்படி)
இஸ்லாமிய வழிபாடுகளிலும் இஸ்லாமியக் கடமைகளிலும் ஜிஹாதிற்கென தனிச்சிறப்பும் தனி அந்தஸ்த்தும் உள்ளது. எல்லா முஸ்லிம்களும் அதனை நன்கு அறிந்துள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவத்தில் சிறியவராகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள். இருந்தபோதிலும் அண்ணலாரோடு அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார்கள்.
பத்ருப்போரில் நடந்த நிகழ்வுகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள். (இவ்வறிவிப்பு தபக்காத்துல் குப்ரா, இப்னு சஅத் பா: 3 பக்: 153 நூலில் பதி வாகியுள்ளது)
‘போர்க்களத்தில் என்னுடைய இருபுறங்களிலும் இரண்டு சின்னஞ்சிறு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அஃப்ராவின் இரண்டு பையன்கள் அவர்கள் இருவரும். ஒருவனின் பெயர் முஆத், இன்னோருவரின் பெயர் முஅவ்வித்.இருவரும் என்னிடம், ‘சிற்றப்பா அவர்களே! அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் யாரென்று உங்களுக்குத் தேரியுமா? அவனை எங்களுக்கு அடையாளம் காட்ட முடியுமா? என விசாரித்தார் கள். (ஃபத்ஹுல் பாரி பா: 7 பக்: 103)
‘என்னருமை மருமக்களே! அதிருக்கட்டும். அவனை எதற்காக தேடுகிறீர்கள்?’
‘அவன் அண்ணல் நபிகளாரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் துன்புறுத்தினான் என பலர் சொல்ல நாங்கள்
கேட்டுள்ளோம். ஆகையால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் மட்டும் அவனைப் பார்த்துவிட்டால் உடனே என் வாளால் அவனைக் கொன்று விடுவேன். அதற்குப்பிறகு, நான் செத்துப் போய்விட்டாலும் பரவாயில்லை’ – என அவர்கள் இருவரும் என்னிடம் இதே கருத்தைக் கூறினார்கள்.
திடீரென்று அவ்வழியாக அபூ ஜஹ்ல் எதைச்சையாக வந்தான்.
‘இதோ இவன்தான் நீங்கள் தேடிக்கொண்டிருந்த அபூ ஜஹ்ல்’ என அவர்களிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் ராஜாளிப் பறவைகளைப் போன்று அவன்மீது பாய்ந்தார்கள். அவனை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார்கள். அவன் செத்துக் கீழே விழுந்தான். (உயூனுல் அஸர், இப்னு சஈத் அன்னாஸ் பா: 1 பக்: 314)
இவர்கள் இருவரும் அஃப்ராவின் மக்கள். போர் முடிந்ததும் அண்ணலார் அபூ ஜஹலைக் கொன்றது யார்? என விசாரித்தார்கள். அபூ ஜஹ்ல் கொலையுண்டு கிடக்கிறான் என கேள்விப்பட்டதும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவனைப் பார்க்கக் கிளம்பினார்கள்.
“நான்போய் இவனைப் பார்த்தபோது அவன் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கீழே கிடந்தான். அவனுடைய இறுதி மூச்சு வெளிவந்து கொண்டிருந்தது. நான் அவனுடைய தாடியைப் பற்றியவாறு,
‘நீதானே அபூ ஜஹ்ல்?’ என்றேன் சொல்லியவாறே என்னுடைய முன்னங்காலை அவனுடைய கழுத்தின் மீது வைத்தேன்” என அப்துல்லாஹ் கூறுகிறார்கள்.
‘ஒருமுறை மக்காவில் அவன் என்னை மிகக்கடுமையாக அடித்து உதைத்து விட்டான்’ என்றும் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (உயூனுல் அஸர் பா: 1 பக்: 314)
‘அல்லாஹ் உன்னை இழிவாக்கிவிட்டான்’ என அவனிடம் சொன்னார்கள்.
‘அல்லாஹ் ஏன் என்னை இழிவாக்குகிறான்? என்னைவிடவும் மதிப்பிலும் மரியாதையிலும் சிறந்த யாரையாவது எந்த சமூகமாவது கொலை செய்துள்ளதா?’ என அவன் கேள்விகளை எழுப்பினான். இதைக்கேட்டதும் அவனுடைய தலையை முண்டத்தில் இருந்து தனியே கொய்து விட்டேன்.
அண்ணலாரிடம் வந்து இதோ இறைவனின் எதிரியுடைய தலை என ஒப்படைத்தேன். அதைக்கண்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியப்புற்றவாறு, ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்றார்கள்.
அப்துல்லாஹ் அவர்கள் இறந்தது அபூ ஜஹ்லேதான் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த வண்ணம் கூறினார்கள். பின்பு, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ்வின் கையைப் பிடித்தவாறு அவன் இறந்துகிடந்த இடத்தைக் காண கிளம்பினார்கள். அவ்விடத்தை அடைந்ததும் அவனுடைய சடலத்திற்கு அருகில் நின்றவாறு அண்ணலார், மூன்று முறைஅல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஅஸ்ஸல் இஸ்லாம வ அஹ்லிஹி கூறினார்கள். (இஸ்லாமிற்கும் இஸ்லாமியர்களுக்கும் கண்ணியத்தை ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்)(இவ்வனைத்து தகவல்களும் ஃபத்ஹுல் பாரி, பா: 7 பக்: 295 உயூனுல் அஸர், பா: 1 பக்: 314 போன்ற நூற்களில் காணலாம்)
இஸ்லாமிற்கென அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்கள். அவற்றுள் இஸ் லாமின் கொடிய எதிரியான அபூ ஜஹ்லுடைய தலையைக் கொய்து அண்ணலாரிடம் கொண்டு வந்து சமர்ப்பித்ததும் ஒன்றாகும்.
மிஷ்காத்தில் ஓர் அறிவிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி சாகும்போது அபூ ஜஹ்ல் ‘வயல்வேலை செய்பவர்களுக்கு பதிலாக வேறு யாராவது என்னை கொன்றிருக்கக் கூடாதா?’ என முணு முணுத்துள்ளான். (மிஷ்காத் பா: 2 தலைப்பு கிஸ்மத்துல் கனாயிம் 352)
இதுபோன்றே அண்ணலாரின் மறைவுக்குப்பிறகு ஹிஜ்ரீ 15ஆம் ஆண்டு சிரியா பேரரசை வெற்றிகொள்வதற்காக நடைபெற்ற ‘யர்மூக்’ போரிலும் அப்துல்லாஹ் கலந்துகொண்டார். (அஸதுல் காபா பா: 3 பக்: 256)
உஹத் போரின்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஹீதாகி விட்டார்கள் என்னும் வதந்தியினால் முஸ்லிம்களிடையே பெரும் குழப்பம் தோன்றியது. அப்போது ஒருசில ஸஹாபாக்கள் தாம் தடுமாறாது நிலைத்து நின்றார்கள், அத்தகையோரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்.
அண்ணலாருக்கு அருகில் சென்று அசையாமல் நின்று அண்ணலாரைப் பாதுகாத்தோரிலும் ஒருவராவார். (ஸவாயித் இப்னு ஹிப்பான்)
‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும் அவர்தம் ஃபிக்ஹுவும்’ என்னும்
ஹுனைன் போரின்போது முஸ்லிம்களிடையே குழப்பமும் தடுமாற்றமும் தோன்றியது. அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு 80 முஸ்லிம்கள்தாம் கொள்கையுறுதியோடு களத்தை விட்டு அகலாமல் திடமாக நின்றார்கள். அவ்வெண்பது நபித்தோழர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்.
‘நாங்கள் அவ்வெண்பது பேரில் ஒருவராக இருந்தோம், களத்தில் நிலைத்து நின்றோம். என்னவானாலும் சரி, என குன்றாமல் நின்றிருந்தோம்’ என அவர்கள் கூறுவது வழக்கம்.
ஒரு கோவேறுக் கழுதையில் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் நின்று கீழே குனிந்தார்கள். என்னவென நான் விசாரித்தேன்.
‘ஒருபடி மண்ணை அள்ளித்தா’ என்றார்கள் அண்ணலார். அவ்விதமே நான் ஒரு படி மண்ணை எடுத்துக் கொடுத்தேன். அதனை இறை நிராகரிப்பாளர்களை நோக்கி வீசினார்கள். அவர்களுடைய பார்வைகளை அது நிறைத்துவிட்டது.
அதன்பிறகு, ‘முஹாஜிரீன்களும் அன்சார்களும் எங்குள்ளார்கள்?’ என என்னிடம் விசாரித்தார்கள்.அவர்கள் அனைவரும் அங்கிருக்கிறார்கள் என்றேன். அவர்கள் யாவரையும் இங்கு கூப்பிடுங்கள் என்றார்கள். அவ்வாறே பெருங்குரலெடுத்து அவர்களை நான் கூப்பிட்டேன்.
கைகளில் வாட்களை ஏந்தியவர்களாக அவர்கள் அனைவரும் வந்து குவிந்தார்கள். திடுமென இறைநிராகரிப்பாளர்கள் மீது பாய்ந்தார்கள். தாக்குப் பிடிக்க இயலாமல் இறை நிராகரிப்பாளர்கள் வெருண்டோடினார்கள். அவர்களுடைய கைகளிலிருந்த வாட்கள் மேகப்பொதிகளிடையே மின்னுகின்ற மின்னலைப் போன்று மின்னிக் கொண்டிருந்தன. இந்தத் தருணம்தான் இறை நிராகரிப்பாளர்களுடைய வெற்றியை தோல்வியாக மாற்றிவிட்டது. (முஸ்னத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் நூலைப் பார்வையிடுக. பா: 6 பக்: 159)
ஹுனைன் போருக்கு முன்பாக நடந்த ஹுதைபிய்யா உடன் படிக்கையிலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வை அவர்களே தம் வாயால் விவரிக்கிறார்கள்.
‘ஹுதைபிய்யாவிலிருந்து நாங்கள் திரும்பிக் கொண்டிருந்த போது எங்களது எஜமானரான அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் சரளைக் கல் பூமியில் கூடாரமடித்தார்கள். ஏறக்குறைய அனைவரும் களைத்துப் போயிருந்தார்கள். நாங்கள் தூங்க முற்பட்டபோது ‘அதிகாலை வரை நமக்குப் பாதுகாப்பாக காவலுக்கு யார் இருப்பது? வைகறைப் பொழுதில் நம்மை தொழுகைக்காக எழச்செய்வது யார்?’ என விசாரித்தார்கள்.
‘நான் இப்பொறுப்பை ஏற்கிறேன். நான் தங்களை எழுப்பி விடுவேன்’ என பிலால் ரழியல்லாஹு அன்ஹு முன்வந்தார்கள். ‘ஜாக்கிரதை நீங்களும் தூங்கிவிடப் போகிறீர்கள்’ என்றார்கள். அண்ணலார்.
முழுப் படையினரும் தூங்கிவிட்டார்கள். பிலாலும் மிகவும் களைத்துப் போயிருந்தார். ஆகையால், அவரும் தன்னையறியாமல் தூங்கி விடடார்.கடைசியில் ஆதவன் விழித்துவிட்டான். இங்கே அனைவரும் தூங்கிக் கொண்டுள்ளார்கள். அலறியடித்துக் கொண்டு அனைவரும் எழுந்தார்கள். அண்ணணலாரும் எழுந்தார்கள்.ஜமாஅத்தோடு தொழ நிற்குமாறு அண்ணலார் ஆணையிட்டார்கள். அவ்வண்ணமே நாங்கள் ஜமாஅத்தாக அத்தொழுகையை நிறைவேற்றினோம்.
இதற்கிடையில் அண்ணலாரின் ஒட்டகம் காணாமல் போய் விட்டது. அதைத் தேடிக்கொண்டு நான் கிளம்பினேன். ஒருவழியாக அதைப் பிடித்துக்கொண்டு வந்தேன். அதன்மீது சந்தோஷமாக அண்ணலார் பயணித்தார்கள். வழியில் அண்ணலாருக்கு வஹி இறக்கியருளப்படத் தொடங்கியது. வஹி இறங்கும்பாது அண்ணலார் மிகவும் பாரமாக உணர்வார்கள். அவர்களால் அதன் சுமையைத் தாங்க முடியாது. வேதனையின் சுவடுகளைப் பார்த்தே வஹி இறங்கிக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம்.
நாங்கள் புறப்பட்டுச் செல்கையில் அண்ணலாரின் ஒட்டகம் பின்தங்கி விட்டது. பொதுவாக அனைவருக்கும் முன்னதாக அண்ணலாரின் ஒட்டகம் செல்வதுதான் வழக்கம். திரும்பிப் பார்த்தால் அண்ணலார் தமது திருமுகத்தை துணியில் மூடிக் கொண்டிருந்தார்கள். வஹி இறங்கிக் கொண்டுள்ளது என நாங்கள் புரிந்து காண்டோம்,.
அண்ணலாருக்கு அருகில் நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணலாருக்கு வஹியின் வேதனை மிகவும் குறைந்து விட்டிருந்தது. வஹி இறங்கிய தகவலை எங்களுக்கு அண்ணலார் தந்தார்கள். வஹியின் இறைமறை வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.
நீதிபதிப் பொறுப்பு
ஹிஜ்ரீ 20ஆம் ஆண்டு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபாவின் நீதிபதியாக நியமனம் ஆனார்கள். நீதி வழங்கும் பொறுப்போடு களஞ்சியப் பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சமயத்தைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பும் அவர் வசமே இருந்தது. நியமனப் பத்திரத்தில் கீழ்வரும் சொற்கள் இடம் பெற்றிருந்தன.
فأني بعثت إليكم عمار بن ياسر أميرًا وابن مسعود
معلمًا ووزيرًا، وإنهما لمن النجباء من أصحاب محمد، من أهل
بدر، فاسمعوا لهما وأطيعوا، واقتدوا بهما
‘அம்மார் இப்னு யாஸிரை உங்களுடைய ஆளுனராகவும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை அமைச்சராகவும் கற்பிப்பவராகவும் நியமித்து அனுப்பியுள்ளேன். பைத்துல்மால் பொதுநிதிப் பொறுப்பையும் அப்துல்லாஹ்விடம் அளித்துள்ளேன். இவர்களிருவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நெருங்கிய, மதிப்பு மிக்க தோழர்களாவார். அத்தோடு பத்ருப் போரில் கலந்துகொண்டோருமாவர். ஸமிஃனா வஅதஃனா என்னும் அடிப்படையில் இவர்களுக்கு கீழ்ப்படிந்து கட்டுப்படுவீராக, சொல்லப் போனால் என்னை விடவும் இப்னு உம்மு அப்துக்கு (அதாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுக்கு) முக்கியத்துவம் அளித்து உங்களிடம் அனுப்பியுள்ளேன்”
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தம்முடைய பொறுப்புகளை சீராகவும் சிறப்பாகவும் நிறைவேற்றினார்கள். இந்நெடுங்காலத்தில் பல் வேறு அரசியல் மாற்றங்கள் அரங்கேறின.
இரண்டாம் கலீஃபா மரணமடைந்தார்கள். மூன்றாம் கலீஃபா பொறுப்பேற்றார்கள். அதன்பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக கூஃபாவில் ஒருவர்பின் ஒருவராக பல ஆளுனர்கள் மாற்றப்பட்டார்கள். ஆயினும் தம்முடைய பொறுப்பை இயன்ற மட்டிலும் சீராகவும் நீதி நேர்மையோடும் நிறைவேற்றி வந்தார்கள். யாருக்கும் அவர்மீது எத்தகைய ஆட்சேபணையும் எழவேயில்லை.
இயல்பாக அமைந்திருந்த கருணை, மென்மை, இணங்கிப் போகும் தன்மை, கரிசனம், மன்னிக்கும் தயாளம், சகிப்புத் தன்மை, கண்டுங்காணாத போக்கு, குற்றங்களை மறைக்கும் குணம் போன்றவை அவருடைய இயற்கைப் பண்புகளாக வாய்த்திருந்தன. ஆயினும் ஒரு விஷயத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஒருவருடைய குற்றம் நீதிமன்றத்தில் ஊர் ஜிதப்படுத்தப்பட்டுவிட்டால் அதற்கப்புறம், மென்மைக்கோ கரிசனத்திற்கோ மன்னிப்பிற்கோ எள்ளளவும் இடமில்லை என்பதே அந்த இப்படிப்பட்ட நடத்தை ஆட்சியாளர்களையும் ஆட்சிக்கடி வாளத்தை இயக்குபவர்களையும் மட்டுமல்லாது குடிமக்களையும் ஆட்டங்காணச் செய்துவிடும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆகையால், தம்முடைய இயற்கையான பண்புகளை எல்லாம் தூக்கித்தூர வைத்துவிட்டு நீதி வழங்கும் விஷயத்தில் கண்டிப்போடு நடந்து கொண்டார்கள்.
ஒரு மனிதர் நீதிமன்றத்தில் வந்து, தன்னுடைய மருமகன் குடித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். அவரைப்பிடித்துக் கொண்டு வந்து மன்றத்தில் நிறுத்தினார்கள். அவனை கசையால் அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். தன்னுடைய தமையன்மகன் கசையடிபட்டு வேதனையால் கதறுவதைக் காண சகியாத அவர் தன்னுடைய முறையீட்டைத் திரும்பிப் பெற்றுக் கொள்வதாகவும் அவனை விட்டுவிடும்படியும் சொல்லலானார்.
‘நீ மிகவும் கேடுகெட்ட சிற்றப்பாவாக உள்ளாயே, நீயே குற்றஞ் சுமத்தினாய். இப்போது இறையாணை நிறைவேற்றப்படும் போது
தள்ளுபடி செய்யுமாறு கோருகிறாயே, அது இயலாத காரியம். முதன்முதலில் இஸ்லாமிய ஆட்சியில் ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அண்ணல் நபிகளார் திருட்டுக் குற்றத்திற்காக, அப்பெண்ணின் கையைத் துண்டித்துவிடும்படி கட்டளையிட்டார்கள்.
அப்போது அண்ணலார் ‘நீங்கள் சமயோசிதமாக நடந்து கொண்டிருக்கக் கூடாதா? குற்றத்தை மறைத்து விட்டிருக்கக் கூடாதா? இறைவன் உங்களை மன்னித்து அருள் வதை நீங்கள் விரும்பவில்லையா?’ என வினவினார்கள்.
சில சமயங்களில் குற்றங்களின் நிலை மற்றும் குற்றவாளி களின் சூழல் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு பல்வேறு வித மான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்நுட்பத்தை அப் துல்லாஹ் இப்ன மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
ஒருமுறை அவர்களிடம் முஸைலமா பொய்யனுடைய ஆதரவாளர்கள் ஒருசிலர் இன்னும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவனையே இறைத்தூதராக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என கூறப்பட்டது. ஒருசில காவலர்களை அனுப்பி அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டு வரச் சொன்னார்கள். அனைவரையும் தவ்பா செய்யவைத்து அனுப்பி விட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு தலைவராக இருந்த இப்னு நவ்ஹா என்பாருக்கு மரண தண்டயை விதித்தார்கள்.இதனை மக்கள் ஆட்சேபணைக் கண்களோடு பார்த்தார்கள்.
‘முஸைலமாவின் தூதர்களாக இரண்டுபேர் அண்ணலா ரிடம் வந்தார்கள். ஒருவர் பெயர் இப்னு நவாஹா. இன்னொருவரின் பெயர் இப்னு அஸால். ‘நீங்கள் முஸைலமா இறைவனின் தூதர் என்பதை நம்புகிறீர் களா?’ என அண்ணலார் வினவினார்கள். ஆமென்றார்கள் அவர்கள் இருவரும்.
‘நீங்கள் மட்டும் தூதர்களாக இல்லாதிருந்தால் உங்களை நான் கொன்றிருப்பேன்’ என்றார்கள் அண்ணலார்.
ஆகையால், அவன் இன்றுவரை தன்னுடைய தவறான அசத்தியக் கொள்கையிலிருந்து மனம் திருந்தவில்லை என்கையில் அண்ணலாரின் விருப்பத்தை நிறைவேற்றுவது அவசியமாகின்றது’ என அவ்வாட்சேபணைக்கு பதில் அளித்தார்கள்.
உஸ்மான் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் குழப்பங்கள், சதியாலோசனைகள், சூழ்ச்சிகள், மறைமுகத் திட்டங்கள் போன்வற்றின் மைய இடமாக கூஃபா ஆகிவிட்டது. அமைதியின்மை நிலவியது. நீதி வழங்கும் பொறுப்பில் இருந்ததால் அப்துல்லாஹ் அவர்களுக்கும் அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது. உக்பா இப்னு வலீத் உடைய ஆட்சிக்காலம் அது. ஒரு சூனியக் காரனைப் பிடித்துக்கொண்டு வந்து அவையில் நிறுத்தினார்கள். ஆளுனருக்கு முன்னால் அவன் தன்னுடைய திறமைகளையும் வித்தைகளையும் காண்பித்து வாதாடிக் கொண்டிருந்தான். வழக்கு முடிவதற்கு முன்பாகவே மன்றத்திற்கு வெளியில் ஜுன்துப் என்பார் அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டார்.
அரசாங்கத்தின் அலுவல்களில் வேண்டுமென்றே மூக்கை நுழைக்கும் செயல் இது. ஆகையால், இதனை அப்படியே விட் டுவிட முடியாது. அந்நபரைக் கைது செய்து மன்றத்தில் நிறுத்தி னார்கள். என்ன செய்வது? என ஆலோசனை கேட்டு கலீஃபா விடம் ஓலை அனுப்பப்பட்டது.சாதாரணமாக கண்டித்து அவனை விட்டுவிடுங்கள். அதே சமயம் இவைபோன்ற நடவடிக்கைகளில் இறங்கலாகாது என அழுத்தந்திருத்தமாக மக்களிடம் வலியுறுத்துங்கள் என அங்கி ருந்து மறுவோலை வந்து சேர்ந்தது. அதன்படியே இப்னு மஸ் ஊத் செயல்பட்டார்கள்.
கூஃபா நகர மக்களை ஒன்றுதிரட்டி, ‘சகோதரர்களே! வெறுமனே சந்தேகத்தின் அடிப்படையிலும் யூகத்தின் அடிப்படையிலும் செயல்படாதீர்கள். நீதிவழங்கும் பொறுப்பை நீங்கள் உங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்ளாதீர்கள். குற்றவாளிகளுக்கும் தவறிழைப்போருக்கும் தண்டனை வழங்குவது எங்களுடைய பணி.
எங்களுடைய கடமைகளில் நீங்கள் தலையிடா தீர்கள்’ என உரை நிகழ்த்தினார்கள். (தபரீயின் வரலாற்று நூல் பக்: 2845)
அதே ஆண்டு கூஃபாவின் ஆளுனரான உக்பா இப்னு வலீத் மீது மதுவருந்தும் குற்றம் சுமத்தப்பட்டது. ‘அவர் தனிமையில் இருக்கும்போது யாருமறியாமல் குடிக்கிறார்’ என மக்கள் அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமே கூறினார்கள்.
‘உளவறிவது என்னுடைய பணியல்ல. ஒருவர் மறைந்து யாருக்கும் தெரியாமல் ஒரு செயலை செய்கிறார் என்றால், அதனை திரையகற்றி ஊருக்கு அம்பலப்படுத்துவது நல்லதல்ல’ என்றார்கள்.இதுபற்றி கேள்விப்பட்ட உக்பா, கடும் கோபமடைந்தார். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கூப்பிட்டு அனுப்பினார். ‘குழப்பம் விளைவிப்போருக்கு இப்படித்தான் பதில் அளிப்பதா? யாருக்கும் தெரியாமல் அப்படியென்ன மறைவாக நான் செய்துவிட்டேன்? ஒருவரைப் பற்றி சந்தேகம் தோன்றினால் அவரைப்பற்றி நீங்கள் சொன்னபடி பதிலைச் சொல்லியிருக்கலாம். என்னைப் பற்றி அப்படிப்பட்ட பதிலைச் சொல்ல வேண்டிய அவசியமென்ன? என்றெல்லாம் அதிருப்தியோடு வினாக்களை எழுப்பினார். இருவருக்கும் இடையில் வாதம் வலுத்துக்கொண்டே சென்றது. ஒருவருக்கொருவர் மனங்கசந்த நிலையில் எழுந்து போனார்கள். (தபரீயின் வரலாறு நூல் பக்: 2845)
கருவூலப் பொறுப்பாளர்
நீதிப்பொறுப்போடு கருவூலப் பொறுப்பு அதாவது பைத்துல்மால் என்னும் பொது நிதிப் பொறுப்பையும் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வகித்தார்கள். பேரும் புகழும் பெற்ற, சீரும் சிறப்புங்கொண்ட நகரமாக கூஃபா விளங்கியதால் அதனுடைய பொதுநிதிக் கருவூலமும் பெருமதிப்பு உடையதாய் திகழ்ந்தது. ஏராளமான அளவிடமுடியாத பெருஞ்செல்வம் குவிந்து கிடந்தது.
பல்லாயிரக்கணக்கானோருக்கு ஊதியங்கள் இங்கிருந்துதான் வினியோகிக்கப் பட்டன. ராணுவப் பாசறையாக திகழ்ந்ததால் ஆயிரக் கணக்கான வீரர்களுக்கு ஊதியங்களும் சம்பளப்பணமும் வினியோகமாயின. குராஸான், ஆர்மீனியா, துர்க்கிஸ்தான் போன்ற இடங்களுக்கு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றுக்கான செலவுகள் இங்கிருந்துதான் செய்யப்பட வேண்டும்.இப்படிப்பட்ட பல்துறை மதிப்புடைய சிக்கலான இத்துறை யை சீராக, திறம்பட நிர்வகித்தமை இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நிர்வாகத்திறனையும் மதி நுட்பத்தையும் ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்ட வல்லதாய் திகழ்கின்றது. கணிதத் துறையில் அவர்களுக்கிருந்த அபார ஆற்றலை வெளிப்படுத்து கின்றது.
தனிப்பட்ட வாழ்க்கையில் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உலகப்பற்று இல்லாதவராகவும் எத்தேவையும் இல்லாதவராக வும் திகழ்ந்தார்கள். அதேசமயம் உம்மத்தின் நிதியைப் பாதுகாப்பதில் மிகவும் கடின சுபாவம் உடையவராக திகழ்ந்தார்கள். பொதுநிதியைப் பொருத்தமட்டில் ஆளுனர், மாகாணப் பொறுப்பாளர் என யாராக இருந்தாலும் கடுமையாக நடந்து கொண்டார்கள். எத்தகைய சலுகையையும் காட்டத் தயாராக இல்லை.
ஒருமுறை பைத்துல்மால் பொதுநிதியில் இருந்து கூஃபாவின் பொறுப்பாளராக இருந்த ஸஅத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடன் வாங்கினார்கள். கெடு முடிந்து பலகாலம் சென்ற பின்பும் அக்கறையின்றி அலட்சியமாக இருந்தார்கள். பொதுநிதியின் பொறுப்பாளராக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தபடியால் கடுமையாக அதுகுறித்து சஅதிடம் வினவலானார்கள். ஒரு தடவை வாக்குவாதம் முற்றிவிட்டது. ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சினமடைந்து தன் கையிலிருந்த கைத் தடியைத் தூக்கி தூர வீசினார்கள். தம்மிரு கைகளையும் வானின் பக்கம் உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்யலானார்கள்.
ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பிரார்த்தனை மிகவும் புகழ் பெற்றது. அவர் இறைவனிடம் எதைக் கோரினாலும் அப்பிரார்த் தனை ஏற்கப்படும்.ஆகையால், பயந்துபோன இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘இதோ பாருங்கள், எனக்கெதிராக பிரார்த்தனை செய்து விடா தீர்கள்’ என்றார்கள்.
‘இறைவனின் பயம் மட்டும் இல்லாதிருந்தால் உங்களுக் கெதிராக கண்டிப்பாக பிரார்த்தனை புரிந்திருப்பேன்’ என ஸஅத் பதிலளித்தார்கள். ஸஅதுடைய மனப்போக்கையும் இத்தகைய நடத்தையையும் கண்ட இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனடியாக அங்கிருந்து அகன்றார்கள். முழு
நிகழ்வையும் ஒருவரி விடாமல் எழுதி மதீனாவிற்கு அனுப்பினார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தார்கள். உடனடியாக ஸஅதை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி அவ்விடத்தில் வலீத் இப்னு உக்பாவை அமர்த்தினார்கள். அப்துல்லாஹ்வும் தப்பவில்லை. ஒரு சிறிது காலம் அவரும் தமது பொறுப்பை விட்டு விலகி இருக்க நேர்ந்தது. (தாரீக்குத் தபரீ பக்: 2911)
பதவி விலக்கம்
உஸ்மான் அவர்களுடைய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதி யில் பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கின. பல்வேறு சதிச் செயல்கள் அரங்கேறின. அவற்றின் விளைவாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் பதவி விலக நேர்ந்தது. திடீரென அப்துல்லாஹ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள். அப்துல்லாஹ் பதவியில் இருந்து விலக்கப்பட்டு விட்டார்கள் என்னும் செய்தி கூஃபா நகரையே கலக்கியது. அறிஞர்கள் யாவரும் மிகவும் வருத்தமடைந்தார்கள். மாணவர்கள், சான் றோர் பெருமக்கள், சார்பாளர்கள், நகர மக்கள் என அனைவரும் இவ்வுத்தரவை நீக்கக்கோரி முறையிட்டார்கள். தாங்கள் கூஃபா வை விட்டு செல்லவேண்டாம் என அப்துல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டார்கள். அதற்காக தங்கள்மீது ஏதேனும் நட வடிக்கை எடுக்கப்பட்டால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்து கிறோம் என்றெல்லாம் உணர்ச்சிப் பெருக்கில் கூறினார்கள்.
‘அமீருக்கு கீழ்ப்படுவது என்மீது கடமையாகும். அவ்வாறு நான் கீழ்ப்பட மறுத்தால் அதனாலேயே ஏதேனும் குழப்பம் தோன்றிவிடக் கூடும்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களை சமாதானப் படுத்தினார்கள். தம்முடைய பொறுப்பிலிருந்து விலகி உம்ரா செய்யும் எண்ணம் கொண்டு ஹிஜாஸை நோக்கி கிளம்பினார்கள். (அல் இசாபா)அபூதர் கிஃபாரி அவர்களின் இறப்பும் அடக்கமும்ஹிஜாஸை நோக்கி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவின் பாதையில் இடையில் ரப்தா என்றொரு இடம் இருந்தது. அந்த இடத்தில்தான் அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறப்பெய்தினார்கள். அவருடைய இறப்பை குறித்த நிகழ்வொன்று தபரியின் வரலாற்று நூலில் பதிவாகியுள்ளது.
ஹிஜ்ரீ 29 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் 8 ஆம் நாள் அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு இறக்கும் தருவாயில் இருந்தார்கள். தம்முடைய மகளை கூப்பிட்டு ‘மகளே ஏதேனும் பயணக் குழு இவ்வழியாக கடந்து செல்கின்றதா? எனப் பார்’ என்றார்கள். ‘இல்லை, அப்படி எக்குழுவினரும் கண்களுக்கு தட்டுப் படவில்லை’ என்று அவர் சொன்னபோது, சற்று நேரம் கழித்து மறுபடியும் போய் பார்க்குமாறு சொன்னார்கள். பிறகு தம்முடைய மகளிடம் ‘மகளே நம்முடைய வீட்டில் இருக்கும் ஆட்டை அறுத்து உணவை சமை’ என்றார்கள்.
அதேபோன்று அவரும் ஆட்டை அறுத்து உணவை தயார் செய்தார்கள். ‘என்னுடைய மரணத்திற்குப் பிறகு இந்த வழியாக ஒரு பயணக்குழு செல்லும். அவர் கள்தாம் என்னை அடக்கம் செய்வார்கள். அவர்களிடம் இந்த உணவை அருந்துவதற்கு முன்னால் கிளம்பிச் செல்லக் கூடாது என கண்டிப்பாக சொல்லிவிடு’ என்றார்கள். உணவு தயாரான பிறகு மறுபடியும் தம்முடைய மகளிடம் வெளியே போய் யாரேனும் போகிறார்களா? என பார்க்குமாறு சொன்னார்கள். மகள் வெளியே சென்று பார்க்கும் போது தொலைவில் யாரோ சென்று கொண்டிருப்பது போல் தந்தையிடம் திரும்பி வந்து ‘என் அருமை தந்தையே தூரத்தில் ஒரு பயணக்குழு வந்து கொண்டுள்ளது’ என தெரியப்படுத்தி னார்கள். ‘என் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்பிவிடு’ என அபூதர் சொல்ல அவ்வாறே
بسم الله وبالله وعلي ملت رسول الله صلي الله عليه وسلم
என அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டு பிரிந்து சென்று விட்டது. அதைக் கண்டு கொண்டிருந்த அவருடைய மகள் வெளியே வந்து நின்று கொண்டாள்.
அவ்வழிப் பாதையில் செல்லும் பயணக் குழு அவ்விடத்தை அடைந்த போது ‘இறைவன் தங்கள் மீது கருணை புரியட்டும் உள்ளே வந்து அபூதரை சந்தித்து விட்டுச் செல்லுங்கள்’ என அழைத்தார். அவரைக் கண்டவுடன் பயணக் குழுவினர் நின்றார்கள். எங்கே அபூதர் என விசாரித்தார்கள்.
‘அதோ, அங்கே அவர்கள் தங்கியிருந்தார்கள். சற்று நேரத்திற்கு முன்தான் அவருடைய உயிர் பிரிந்தது. ஆகையால், தாங்கள் வந்து கஃபனிட்டு அவரை அடக்கம் செய்யுங்கள்’ என்றார்கள். அப்பயணக் குழுவினர் ‘எங்கள் தந்தையும் தாயும் அபூதருக்கு அர்ப்பணமாகட்டும்’ எனச் சொல்லியவர்களாக வேகவேகமாக வாக னங்களிலிருந்து இறங்கினார்கள்.
அப்பயணக் குழுவின் தலைவராக அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் ரளியல்லாஹு அன்ஹு இருந்தார். கூஃபாவிலிருந்து மக்காவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அபூதர் கிஃபாரி மரணமடைந்து விட் டார் என்பதை கண்டதும் அவருடைய உடலை கட்டிப் பிடித்துக் கொண்டு அழலானார்.
صدق رسول الله صلي الله عليه وسلم يموت وحده ويبعث وحده
‘அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உண்மையே சொன்னார்கள். அபூதர் தனியாளாக இறப்பார் தனி ஆளாக எழுப்பப்படுவார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போது சொன்னார்கள்’.
அபூதரை குளிப்பாட்டினார்கள். கஃபனிட்டார்கள். ஜனாஸா தொழுகையை தொழ வைத்தார்கள். பிறகு, அவரை அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு மறு படியும் பயணிக்க ஆயத்தமான போது அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ‘என்னுடைய தந்தை இறக்கும் தருவாயில் சில விஷயங்களை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். தங்களுக்கு அவர் ஸலாம் உரைத்திருக்கிறார், தங்களுக்காக உணவைத் தயாரித்து வைத்திருக்கிறார். அதனை நீங்கள் அருந்திய பிறகே புறப்பட வேண்டும் என கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்’ என தெரிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அதனை ஏற்றுக் கொண்டார்கள். உணவை அருந்தி உடனடியாக பயணத்தை தொடர்ந் தார்கள். அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் அங்கு தனியாக இருக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டார்கள்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அபூதர் கிஃபாரியின் கோத்திரத்தாரிடம் சென்று அவருடைய மகளை ஒப்படைத்தார்கள். அதன் பின்பு உம்ராவை முடித்துக் கொண்டு மதீனாவிற்கு திரும்பி வந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விடுவதற்காக கூடவே வந்த மற்ற சகோதரர்களோ கூஃபாவிற்கு திரும்பிச் சென்றார்கள். (அத்தபரி பாகம்-3 பக்கம்-354)
நோயுறுதலும் இறப்பெய்தலும்
ஹிஜ்ரீ 32 ஆம் ஆண்டு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர் களின் வயது அறுபதை நெருங்கியது. ஒரு மனிதர் அப்துல் லாஹ்வை சந்தித்தார். ‘இறைவன் தங்களை சந்திக்காமல் இருக்கு மாறு என்னை செய்திடக் கூடாது’ என்றார். ‘நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். உயர்ந்ததோர் மிம்பரில் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீற்றிருக்கிறார்கள். அண்ணலாருக்கு முன்னால் தாங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் ‘இப்னு மஸ்ஊத், எனக்கு பிறகு தங்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டிருக்கும் என்னிடத்தில் விரைந்து வந்து விடுங்கள்’ என தங்களைப் பார்த்து அண்ணலார் சொல்கிறார்கள்’.
இதைக் கேட்டதும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ‘நீங்கள் மெய்யான கனவையே கண்டிருக்கிறீர்கள்’ என்றார்கள். ‘என்னுடைய ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகுதான் நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வீர்கள்’ என மேலும் சொன்னார்கள்.
ஒரு சில நாட்களுக்குள் இந்த கனவு நனவாக மாறியது. அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊத் நோயுற்றார்கள். கடும் நோயுற்றார்கள். இயல்பு நிலை திரும்பாதோ என மக்கள் சந்தேகப்பட்டார்கள். அமீருல் முஃமினீன் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு இயாதத் செய்வதற்காக- நலம் விசாரிப்பதற்காக கடைசி தருணங்களில் கிளம்பி வந்தார்கள். இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றது,
உஸ்மான்- தங்களுக்கு உடல்நிலை எப்படி இருக்கின்றது? என்ன நோய் தாக்கியிருக்கின்றது?
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – குற்றங்கள் என்னை தாக்கியிருக்கின்றன.
உஸ்மான்- தாங்கள் என்ன விரும்புகிறீர்கள்?
அப்துல்லாஹ்- இறைவனின் ரஹ்மத்தை.
உஸ்மான்- தங்களுக்காக மருத்துவர்களை வரவழைக்கட்டுமா?
அப்துல்லாஹ்- மருத்துவர்தான் என்னை நோயுறச் செய்திருக்கிறான்.
உஸ்மான்- தங்கள் மகள்களுக்கு ஏதேனும் உதவி புரியலாமா?
அப்துல்லாஹ்- என்னுடைய மகள்கள் தேவையுடையவரா கவும் வறிய
நிலையில் ஆகிவிடுவார்கள் என்றும் நீங்கள் அஞ்சுகிறீர்களா? ஒவ்வொரு இரவும் அத்தியாயம் வாக்கிஆவை ஓத அவர்களுக்கு நான் பழக்கப்படுத்தியிருக்கிறேன். ‘இரவு நேரத் தில் வாக்கிஆவை ஓதுபவருக்கு ஒரு போதும் வறுமை தீண்டாது’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். (அஸதுல் கஃபா பாகம்-3 பக்கம்-357)
இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருக்கும் நிலையிலேயே அப்துல்லாஹ் அவர்களின் உயிர் பிரிந்தது என யாரும் இந்த உரையாடலைக் கொண்டு கருதிக் கொள்ளக் கூடாது. இறப்பதற்கு முன்பாக இருவருக்கும் இடையிலான மனஸ்தாபம் நீங்கி இருவரும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டார்கள் என்னும் செய்தி தபக்காத் இப்னு ஸஅத் நூலில் பதிவாகியுள்ளது. இடையிலிருந்த சிற்சில கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கி விட்டன. (தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-3 பக்கம்-160)
தம்முடைய மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்து கொண்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் அவருடைய மகனான அப்துல்லாஹ் இப்னு ஜுபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் வரவழைத்தார் கள். தம்முடைய சொத்து பத்துகளை பற்றியும் தம்மீதான பொறுப்புகளைப் பற்றியும் தம்முடைய மகள்களுக்கு சேர வேண்டிய விஷயங்களையும் தம்முடைய கஃபன் தஃபன் போன்றவற்றை பற்றியும் விரிவாக உபதேசங்களை செய்தார்கள். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சில காலம் வாழ்ந்த அவர்கள் ஹிஜ்ரீ 32 ஆம் ஆண்டு வீணான இவ்வுலகை விட்டு விட்டு மேலான அவ்வுலகை நோக்கி பயணமானார்கள். (இன்னாலில்லாஹி..)
ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளின்படி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஜனாஸா தொழுகையை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு தொழ வைத்தார்கள். நபித்தோழர் உஸ்மான் இப்னு மழ்ஊன் கபுறுக்கு அருகே ஜன்னத்துல் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டார்கள். (தபக்காத் இப்னு ஸஅத் இப்னு மஸ்ஊதின் உபதேசம் பற்றிய குறிப்புகள் பக்கம்-159)
இரண்டு மகன்கள் அப்துர் ரஹ்மான், அபூ உபைதா மற்றும் பல பெண் மக்கள். மனைவியின் பெயர் ஜைனப் ஸகஃபீ ஆகும். ஒரு பேரர் இருந்தார். அவருடைய பெயர் காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் ஆகும்.
நபிமொழி அறிவிப்புகள்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடமிருந்து பலரும் நபிமொழிகளை அறிவித்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தோர் அப்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், அபூ உபைதா, அப்துல்லாஹ் இப்னு உத்பா மஸ்ஊத், உத்பா இப்னு மஸ்ஊத் (அப்துல்லாஹ்வின் சகோதரரர்) ஜைனப் ஸகஃபீ ஆகியோர் ஆவர்.
சஹாபாக்களில் அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு, அபூ ராபிஃ ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஷுரைஹ் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஹு ஜைஃபா ரழியல்லாஹு அன்ஹு, அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, அபூ துஃபைல் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஹு றைறா ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு அப் பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி யல்லாஹு அன்ஹு, இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல் லாஹு அன்ஹு ஆகியோர்.
தாபியீன்களில் அல்கமா ரஹ்மதுல்லாஹி அலைஹி, அபுல் அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, மஸ்ரூக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ரபீஃ இப்னு ஃகஸீம், ஷுரைஹ் அல்காழி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அபூ வாயில் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஜைத் இப்னு வஹப் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஜர் இப்னு ஹபஷ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அபூ அமர் அஸைபானி ரஹ்மதுல்லாஹி அலைஹி, உபைதா இப்னு அமர் அஸ்லமானி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அமர் இப்னு மைமூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா ரஹ்மதுல் லாஹி அலைஹி, அபூ உஸ்மான் அந்நஹதி ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஹரத் இப்னு ஸுவைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ரபஈ இப்னு ஹிராஷ் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் ஆவர். ( அல் இஸாபா பாகம்-2 பக்கம்-369)
புகாரியிலும் முஸ்லிமிலும் ஒரு சேர அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுடைய 64 நபி மொழிகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் புகாரியில் தனித்து 21 நபிமொழிகளும் முஸ்லிமில் 35 நபிமொழிகளும் பதிவாகியுள்ளன.
சிறப்புகளும் பண்புநலன்களும்
அறிவாலும் கல்வியாலும் சிறந்து விளங்கிய சஹாபாக்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவார். அவர் இமாமாக மதிக்கப்படுகிறார்கள். அறியாமைக் காலத்தில் உத்பா இப்னு முஐத் என்னும் குறைஷித் தலைவரின் ஆடுகளை அப்துல்லாஹ் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் அனைவரும் அதனை நன்றாக அறிவீர்கள்.அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றலையும் கொஞ்சம் பாருங்கள். ஆடு, மாடுகளை பாலைவனத்தில் மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இறைநம்பிக்கையாளரை தன்னுடைய அறிவுக் கலாசாலையில் இறைவன் கொண்டு வந்து சேர்த்தான். அறிவையும் கல்வியையும் அள்ளி அள்ளி வழங்கினான். கல்வி வானில் பிரகாசித்து மின்னும் நட்சத்திரமாக அவர்கள் மாறினார்கள், ஒளி வீசும் சுடராக வழிகட்டினார்கள்.
அப்துல்லாஹ் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்வியின் மீது தீரா வேட்கை கொண்டிருந்தார்கள். இஸ்லாமை ஏற்றபோது அண்ணலாருக்கு முன்னால் ஆஜராகி ‘இறைவனின் தூதரே! என் அறிவு பெருக வேண்டும்’ என பிரார்த்திக்குமாறு கோரினார்கள். அக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
انك غلام معلم
‘கற்றுக் கொடுக்கப்பட்ட சிறுவன் நீ’ என்றார்கள்.
இந்த தீராத வேட்கை தணியாத தாகத்தின் காரணமாகத்தான் அப்துல்லாஹ் அவர்கள் எந்நேரமும் அண்ணலாரோடு இருந் தார்கள். வீட்டிலிருக்கும் போதும் பள்ளியில் அமர்ந்திருக்கும் போதும் வெளியில் பயணிக்கும் போதும் எல்லா தருணங் களிலும் அண்ணலாருக்கு பணிவிடை செய்வதற்காக எப்போதும் ஆயத்தமாக இருந்தார்கள்.
எந்நேரமும் கூடவே இருந்தாலும் வேட்கை தீரவில்லை. அண்ணலார் தம் இல்லத்திற்குள் சென்று விட்டால் அப்துல்லாஹ்வும் கூடவே செல்ல
முடியாதல்லவா? அந்த தருணங்களில் தம்முடைய தாயாரை அண்ணலாரின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டில் நடைபெறுகின்ற விஷயங்களை தாயார் குறிப்பெடுத்துக் கொண்டு வருவார்கள். (முஸ்னத் அஹ்மத் பக்கம்-
இறைத்தூதரின் பணிவிடையும் தோழமையும்
இறைத்தூதரின் தனிப்பட்ட பணிவிடைகளை செய்வோரில் ஒருவராக அப்துல்லாஹ் இருந்தார்கள். மிஸ்வாக்கை எடுத்து வைப்பது, காலணிகளை கொணருவது, பயணிக்கும் போது சேணம், சிவிகை போன்றவற்றை தயாரிப்பது, கைத்தடியை எடுத்துக் கொண்டு செல்வது போன்ற பணிகளை அப்துல்லாஹ் செய்து வந்தார்கள். இந்த பணிகளோடு அண்ணலாரை இணை பிரியாமல் எப்போதும் கூடவே உடன் இருந்து வருவார்கள். (முஸ்தத்ரக் பாகம்-3 பக்கம்-316)
இறைத்தூதர் தனித்திருக்கும் போதும் அப்துல்லாஹ் உடனிருப்பார்கள். அனுமதியின்றி தனிமையில் போய் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள். இறைத்தூதர் அவர்களுடைய வாழ்வைக் குறித்த பல இரகசிய விஷயங்களை அறிந்திருந்தார்கள். இதன் காரணமாகத்தான் சஹாபாக்கள் அண்ணலாரின் தனிப்பட்ட பணிவிடைகளுக்காக மிஸ்வாக் கொணருவது ஒழு செய்ய தண்ணீர் வைப்பது போன்ற தனிப்பட்ட பணிகளுக்காக அப்துல்லாஹ்வை நியமித்திருந்தார்கள். (தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-1 அத்தியாயம்-3 பக்கம்-
‘நாங்கள் எமனிலிருந்து வந்தோம் ஒரு சில நாட்கள் மதீனாவில் தங்கியிருந்தோம். அண்ணலாரின் அவையில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களை அடிக்கடி கண்டோம் அண்ணலாரின் குடும்பத்தில் ஒருவரோ என்றுதான் பலகாலம் நினைத்து வந்தோம்’ என அபூ மூஸா அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
எந்நேரமும் அண்ணலாரின் பணிவிடையில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் அண்ணலாரின் நெருங்கிய தோழமை அப்துல் லாஹ் அவர்களுக்குக் கிட்டியது அந்த தோழமையின் மூலமாக பல்வேறு விஷயங்களை அறிகின்ற, புரிகின்ற கேட்கின்ற, பின்பற்றுகின்ற நல்வாய்ப்பையும்
குர்ஆனோடு நெருக்கம்
இறைமறை குர்ஆன் தான் இஸ்லாமின் மூல ஆதாரம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் மிகப்பெரிய குர்ஆனிய அறிஞராக திகழ்ந்தார்கள். அல்லாஹ்வின் வஹியை மக்களுக்கு அறிவித்த உதடுகளிலிருந்து நேரடியாக கேட்டு அறுபது அத்தியாயங்களை தாம் மனப்பாடம் செய்து கொண்டதாக அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள். (புகாரி)
குர்ஆனின் எந்த இடமாக இருந்தாலும் எப்போது இறக்கப்பட்டது? எத்தகைய பின்னணியில் இறக்கப்பட்டது? எத்தகைய சூழ்நிலையில் இறக்கப்பட்டது? யாரைக் குறித்து இறக்கப்பட்டது? என்பது போன்றன தமக்கு தெரியும் என அப்துல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.
‘ஒருவருக்கு என்னை விட குர்ஆனைப் பற்றி தெரியும் என்பது எனக்கு தெரிய வந்தால் பயணம் செய்தாவது நான் போய் அவரை சந்திப்பேன்’
‘மற்றவர்களை விட நான் குர்ஆனை அறிவில் மிகைத்தவன் என்பது எல்லா சஹாபாக்களுக்கும் தெரியும். குர்ஆனிய அறிவு அதிகமாக இருக்கின்றது எனச் சொல்கிறேனே அல்லாமல் மற்றவர்களை விட சிறந்தவன் என நான் சொல்லவில்லை’ என ஒரு முறை அவையில் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்.
அந்த அவையில் ஸகீஃப் என்பாம் அமர்ந்திருந்தார். அதன் பிறகு தாம் பல்வேறு நபித் தோழர்களின் அவையில் கலந்து கொண்டதாகவும் அவர்களில் எவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களுடைய கூற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
‘ஒரு நாள் நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் சில நபித்தோழர்களோடு அபூ அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வீட்டில் அமர்ந்திருந்தோம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கிளம்புவதற்காக எத்தனித்தார்கள். அதைக் கண்ட அபூ மஸ்ஊத் அவர்களை நோக்கி கைகாட்டிய வாறு ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு இவரைவிட மிகச் சிறந்த குர்ஆனிய அறிஞர் யாவரும் இல்லை’ என்றார்கள்.
‘எப்படி இருக்க முடியும்?’ என்றார்கள் அபூ மூஸா அஷ்அரி.
‘இவர் அண்ணலாரின் அவையில் அமர்ந்திருப்பார். நாங்கள் எல்லாம் எங்கோ இருப்போம். நாங்கள் எல்லாம் செல்ல முடியாத இடங்களுக்கு கூட நுழைவதற்கு இவர் அனுமதியை பெற்றிருந்தார்’ என மேலும் சொன்னார்கள்.
‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களோடு நான் நெருங்கிப் பழக தொடங்கினேன். அவருடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவராக ஆகிவிட்டேன். எங்கே இருந்து என்றால் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனை நான்கு நபர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். முதல் நபராக இப்னு உம்மு அப்து அவர்களின் பெயரைச் சொன்னார்கள். அன்றிலிருந்து நான் அவருடைய நெருங்கிய நண்பராக ஆகி விட்டேன்’ என அப்துல்லாஹ் இப்னு உமர் தெரியப்படுத்துகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் இறப்பெய்திய போது அபூ மஸ்ஊத் அவர்களும் அபூ மூஸா அஷ்அரி அவர்களும் தமக்கிடையே உரையாடிக் கொண்டார்கள். ‘அப்துல்லாஹ் தமக்குப்பிறகு தமக்கு நிகராக யாரையேனும் விட்டுச் சென்றுள்ளாரா?’ என வினவினார் ஒருவர்.
‘இல்லை! அவருக்கு இணையாக யாரும் இல்லை மக்களிடையிலும் தனிமையிலும் அண்ணலாரோடு இருந்து வந்தார். எங்களைப் பொருத்தவரை அது இயலாத காரியம்’ என்றார் மற்றொருவர். அதாவது அபூ மூஸா அஷ்அரி. (முஸ்லிம் அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களுடைய சிறப்புகள்)
அண்ணலாரின் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் நூல் ஒன்றும் அப்துல்லாஹ்விடம் இருந்தது. பெரு மதிப்போடும் மரியாதையோடும் அச்சத்தோடும் அதை அவர்கள் பாதுகாத் தார்கள். அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆனைத் தவிர மற்றவற்றை எல்லாம் அழித்து விடுமாறு அமீருல் முஃமினீன் உஸ்மான் ஆணையிட்ட போது, வேண்டா விருப்போடு வேறு வழியில்லாமல் அந்த உத்தரவை அவர்கள் நிறைவேற்றினார்கள்.
குர்ஆனை தொகுக்கும் பணி ஜைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களுக்கு அதற்கான அனுபவம் இல்லை என்கின்ற கருத்து அப்துல்லாஹ்விடம் இருந்தது. ஒரு முறை அவர் உரையாற்றுகையில் வஹி இறக்கப்பட்ட இறைத்தூதரின் வாயிலிருந்து கேட்டு கேட்டே எழுபதிற்கும் மேற்பட்ட அத்தியாயங்களை மனப் பாடம் செய்து கெண்டேன் என தெரிவித்ததாக ஸகீர் இப்னு ஸலமா அறிவிக்கிறார். அச்சமயத்தில் ஜைத் இப்னு ஸாபித் சிறுவனாக இருந்தார்கள். சிறுவர்களோடு வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள், என்றும் அப்துல்லாஹ் சொன்னார்கள். (அஸதுல் காபா பாகம்-3 பக்கம்-259)
குர்ஆனிய அறிவிலும் குர்ஆனிய கல்வியும் அப்துல்லாஹ் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கான சான்றிதழை அண்ணலார் கொடுத்திருக்கிறார்கள். குர்ஆனை நான்கு நபர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஸாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகியோரே அந்நால்வர் (புகாரி)
குர்ஆன் விரிவுரை
குர்ஆனுக்கான விரிவுரையையும் விளக்கத்தையும் கொடுப்பதில் நிகரற்றவர்களாக இருந்தார்கள். தகுந்த தருணங்களில் பொருத்தமான இறைவசனங்களை அழகோடு எடுத்து ஓதுவார்கள். ஒரு முறை அவையில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது ஒரு நபிமொழியைப் பற்றி, பொய் சத்தியம் செய்து முஸ்லிம்களின் பொருளை உடமையை அபகரித்துக் கொண்டவனின் மீது இறைவன் இறுதித் தீர்ப்பு நாளன்று கடும் கோபம் கொண்டவனாக இருப்பான். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் காலத்திற்கேற்ற ஓர் வசனத்தை ஓதினார்கள்.
إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي
الْآخِرَةِ
“இறைவனோடு செய்து கொண்ட உடன்படிக்கையையும் தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விட்டவர்களுக்கு இறுதி நாளன்று மறுமையில் எந்த பங்கும் கிடைக்காது”. (அல்குர்ஆன் 3:77) (முஸ்னத் அஹ்மத் பாகம்-1 புகாரி)
அதே போன்று தம்முடைய பாடசாலையில் கற்பிக்கும் போது ஒரு நிகழ்வை எடுத்துச் சொன்னார்கள். குற்றங்களிலேயே மிகப் பெரிய குற்றம் எது என அண்ணலாரிடம் ஒரு முறை வினவப்பட்டது. அண்ணலார் ‘ஷிர்க்’ என்றார்கள். அடுத்து ‘குழந்தைகளை கொல்வது’ என்றார்கள். அதனை அடுத்து ‘அண்டை வீட்டுக்காரரின் மனைவியுடன் முறைகேடாக நடந்து கொள்வது’. இந்த நபிமொழியை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய உதடுகளில் இருந்து ஒரு இறைவசனம் புறப்பட்டது.
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي
حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا
“அவர்கள் எத்தகையோர் என்றால் இறைவனோடு வேறு எதனையும் இணையாக்கமாட்டார்கள். அழைக்க மாட்டார்கள். இறைவன் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றி கொலை செய்யமாட்டார்கள். பாலியல் முறைகேடுகளில் இறங்க மாட்டார்கள். எவன் இப்படி செய்கிறானோ அவன் மிகப் பெரிய தீயதை கெடுதியை சந்திப்பான்” (அல்குர்ஆன் 25-73) (முஸ்னத் அஹ்மத் பாகம்-1)
நபிமொழி நூற்களிலும் குர்ஆன் விரிவுரை நூற்களிலும் அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கொடுத்த விளக்கங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினால் அதுவே ஒரு தனித் தொகுப்பாக உருவாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுய அறிவின் படி விளக்கம் தருதல்
தம்முடைய சுய அறிவை பயன்படுத்தி குர்ஆனுக்கு விளக்கம் தருவதையும் ஒப்பிட்டு ஆராய்ந்து குர்ஆனுக்கு உரை அளிப்பதையும் உலமாக்கள் கூடாச் செயலாக காணுகிறார்கள். யாரேனும் ஒருவர் இப்படி செய்வதை கண்டு விட்டால் அப்துல்லாஹ் அவர்களுக்கு கடும் சினம் வந்துவிடும். ஒருமுறை அப்துல்லாஹ்விடம் ஒரு மனிதர் வந்தார்.
‘அங்கே ஒரு பள்ளிவாசலில்
فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ ﴿١٠﴾ (44:10)
வானில் பயங்கரமான புகை கொண்டு வரப்படும் போது என்னும் இறை வசனத்திற்கு (44:10) தம் மனம் போன போக்கில் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் கியாமத் நாளன்று பயங்கரமான புகை மண்டலம் தோன்றும் அதை சுவாசிக்கும் மக்கள் ஜலதோஷம் சளி இது போன்ற இன்னபிற கடுமையான நோயால் அவதிப்படுவார்கள் எனச் சொல்கிறார்’ என தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் ‘புத்திசாலி என்றால் தெரிந்ததை சொல்ல வேண்டும். இல்லையென்றால் பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். அல்லாஹு அஃலம் எனச் சொல்லவிட்டு சும்மா இருந்து விட வேண்டும். இந்த வசனம் எப்போது இறக்கி அருளப்பட்டது தெரியுமா? குறைஷிகள் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்தார்கள். அதனால் அரபு நாடு முழுக்க பஞ்சம் பட்டினி சூழ்ந்து கொண்டது. வானை அண்ணாந்து மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். பலவீனத்தின் காரணமாகவும் இயலாமையின் காரணமாகவும் மண்ணிலிருந்து விண் வரைக்கும் பார்க்கும் பொருள் எல்லாம் புகை மண்டலமாகவே அவர்களுக்கு காட்சியளித்தன. அப்போது இறைவன் இதை விடக் கடுமையாக இருக்கும், அந்த நாள் வெகு விரைவில் வர உள்ளது என எசச்ரித்தான். அது எந்த நாள் தெரியுமா? அது பத்ருப் போர் நடந்த நாள்’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத் புகாரி)
கிராஅத்தில் அசாதாரணமான அபார ஆற்றலை பெற்றிருந்தார்கள். ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது நமக்கு இது விளங்க வருகின்றது. இப்னு உம்மு அப்துடைய கிராஅத்தை பின்பற்றுங்கள் என கட்டளையிடப் பட்டிருந்தது.
ஒருமுறை தொழுகையில் அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். மானுடர் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரோடு பள்ளி வாசலுக்குள் வருகை புரிந்தார்கள். அழகிய குரல், இனிய தொனி, இடைநிற்காத போக்கு போன்றவற்றை கண்ட அண் ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ‘கேளுங்கள் கிடைக்கும். கேளுங்கள் கிடைக்கும்’ எனச் சொல்லலானார்கள். ‘குர்ஆன் எப்படி அருளப்பட்டதோ அவ்வொழுங் கிலேயே குர்ஆனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் ஓத வேண்டும் என ஆசைப்படுபவர்கள் இப்னு உம்மு அப்துடைய கிராஅத்தைப் பின்பற்றுங்கள்’ என்றார்கள். மறு நாள் அபூ பக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு இந்த நற்செய்தியை இந்த அழகிய அறிவிப்பை அப்துல்லாஹ்விடம் சொல்வதற்காக சென்றார்கள். போனவர் அப்துல்லாஹ்விடம் ‘நேற்றிரவு இறைவனிடம் என்ன கேட்டீர்?’ என விசாரித்தார்கள்.
‘என்றும் சலனத்திற்கு உட்படாத உறுதி மிக்க இறைநம்பிக்கையை எனக்கு தா, என்றென்றும் அழியாத அருட்கொடையை எனக்கு தா, உயர்ந்த சொர்க்கத்தில் எந்நேரமும் இறைத்தூதரை அணுகி இருக்கும் வாய்ப்பைத் தா’ என நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்’ என்றார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (முஸ்னத் அஹ்மத்)
குர்ஆனை ஓதுவதில் ஈடுபாடும் அளவற்ற இன்பத்தை கண்டார்கள். தனிமையில் இருக்கும் போது குர்ஆனை வாசிப்பதிலேயே இன்பம் கொண்டார்கள்.
ஒரு சில சமயங்களில் இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்துல்லாஹ்வை குர்ஆனை ஓதச் சொல்வார்கள். அதனை அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு முறை அத்தியாயம் அந்நிஸாவை ஓதுமாறு சொன்னார்கள். ‘நான் அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு நான் குர்ஆனை ஓது வதா?’ என தயங்கினேன் ‘மற்றவர்கள் ஓத குர்ஆனை நான் கேட்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஓது’ என்றார்கள். நான் ஓதத் தொடங்கினேன்
فَكَيْفَ إِذَا جِئْنَا مِن كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَىٰ هَـٰؤُلَاءِ شَهِيدًا அல்குர்ஆன் 4-41
“நபியே ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்களையும் சாட்சியுடன் நாம் கொண்டு வரும் போது, இவர்களுக்கு சாட்சியாக உம்மையும் கொண்டு வருவோம். அப்போது எப்படி இருக்கும்” (அல்குர்ஆன் 4-41) என்னும் இறை வசனத்தை நான் அடைந்த போது விம்மும் ஒலி கேட்டது. தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த் தால், அண்ணலார் அழுது கொண்டிருந்தார்கள் என அப்துல் லாஹ் சொல்கிறார்கள். (புகாரி)
அச்சமும் எச்சரிக்கையும்
இறைத்தூதரோடு நெருங்கிய தோழமையை தனிமையிலும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்ததால் இறைத்தூதரை குறித்த பல விஷயங்கள் விரிவாக அப்துல்லாஹ்வுக்கு தெரிந்திருந்தன. ஆனால், அவற்றை அவர்கள் அறிவிக்கவே இல்லை. மிகவும் எச்சரிக்கையை கையாண்டார்கள். இப்னு மஸ்ஊத் அவர்களோடு ஓராண்டு காலம் தங்கியிருந்ததாக அபூ உமர் ஷைபானி அறிவிக்கிறார். ஆனால், கால ரஸூல் என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவே மாட்டார்கள்.
ஒரு முறை ஒரு நபிமொழியை அறிவிக்க தொடங்கினார்கள். அவர்களுடைய உள்ளம் ஆடத் தொடங்கியது. நரம்புத் தளர்ச்சி வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஆகிவிட்ட.து அவருடைய நிலைமை.
‘இப்படித்தான் சொன்னார்கள். அல்ல, இப்படி சொன்னார்கள். அல்ல, அல்ல, இதைப்போன்ற வார்த்தையை, அல்ல, இதைப் போன்ற இன்னொரு வார்த்தையை அண்ண லார் பயன்படுத்தினார்கள்’ என்றெல்லாம் அவருடைய நாவு குழறத் தொடங்கியது, என அபூ உமர் ஷைபானி சொல்கிறார்கள். (தத்கிரதுல் ஹூஃபாஸ் பாகம்-1 பக்கம்-14)
ஓராண்டு காலம் முழுவதும் அப்துல்லாஹ்வோடு இருந்தேன் என அமர் இப்னு மைமூன் சொல்கிறார்கள். அவர்களோடு தங்கினேன். வருவதும் போவதுமாக இருந்தேன். இறைத்தூத ரோடு இணைத்து எந்த விஷயத்தையும் அவர்கள் சொல்ல நான் கண்டதே இல்லை.
ஒரு முறை நபிமொழியை சொல்லிக் கொண்டிருந்த போது எதேச்சையாக தற்செயலாக கால ரஹூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்கின்ற சொற்றொடர் அவர்களுடைய வாயிலிருந்து வந்து விட்டது. அவ்வளவுதான் அவர்களுடைய உடம்பு நடுங்கத் தொடங்கியது. பயத்தின் காரணமாக, பதற்றத்தின் காரணமாக அவருடைய உடம்பு வியர்க்கத் தொடங்கியது, என்கிறார்கள். (இப்னு ஸஅத் பாகம்-1 அத்தியாயம்-3 பக்கம்-
எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுரை
எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு தம்முடைய அனைத்து மாணாக்கர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். ‘இறைத்தூதரைப் பற்றி ஏதாவது சொல்வதாக இருந்தால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். உலக மக்களிலேயே மிகவும் பயபக்தி உடையவர்களாகவும் இறையச்சமுடையவர்களாகவும் பேணுதல் உடையவர்களாகவும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழ்ந்தார்கள். மிகச் சிறந்த வழிகாட்டுதலை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்றிருந்தார்கள். மறந்து விடாதீர்கள்’. (முஸ்னத் அஹ்மத் பாகம்-1)
நபிமொழிகளை அதிகம் அறிவித்தல்
ஆனால், இவற்றையெல்லாம் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்த எந்த நபிமொழியையும் அவர் அறிவிக்கவே இல்லை என நாம் நினைத்து விடக் கூடாது. இஸ்லாமை கற்பிக்க வேண்டிய இஸ்லாமிய ஷரீஅத்தை போதிக்க வேண்டிய மானுடர் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய போதனைகளையும் அறவுரைகளையும் உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு அப்துல்லாஹ் அவர்கள் மீது இருந்தது. அச்சத்தையும் எச்சரிக்கை உணர்வையும் கொண்டிருந்த போதிலும் நபி மொழி நூற்களில் அவர்களுடைய அறிவிப்புகள் பரவலாக காணப்படு வதற்கு இது ஒன்றுதான் காரணம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு 843 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார்கள். அவற்றை புகாரியும் முஸ்லிமிலும் 64 நபிமொழிகள் வருகின்றன. அஃதன்றி புகாரியில் 23 நபி மொழிகளும் முஸ்லிமில் 35 நபிமொழிகளும் காணப்படுகின்றன. (தஹ்ஜீபுல் கமால்)
நபிமொழிகள் குறித்த பேரார்வம்
நபிமொழிகளை கற்பதிலும் கற்பிப்பதிலும் அந்நிகழ்வுகள் குறித்து பேசுவதிலும் உரையாடுவதிலும் பேரார்வத்தை கொண்டிருந்தார்கள். தம்முடைய மாணவர்களின் இல்லங்களையும் தம்முடைய தோழர்களின் இல்லங்களையும் தேடிச்செல்வார்கள். வெகு நேரம் அமர்ந்திருந்தது இறைத்தூதரின் காலத்து நிகழ்வுகளை குறித்து கலந்துரையாடுவார்கள்.
‘கூஃபாவில் என்னுடைய தங்குமிடத்தில் நண்பகல் நேரத்தில் நான் தனித்திருந்தேன். திடீரென்று கதவை தட்டும் ஓசையும் அஸ்ஸலாமு அலைக்கும் என்னும் உரத்த சப்தமும் கேட்டது. ஸலாமுக்கு பதில் உரைத்தவாறே, கதவைத் திறந்து வெளியே சென்று பார்த்தால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் நின்று கொண்டிருந்ததார்கள்.
‘அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே சந்திப்பதற்கு உகந்த நேரமா இது?’ என நான் ஆச்சரிப்பட்டேன். அதற்கு அவர்கள் ‘சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. பொழுது ஏறிவிட்டது. இப்போதுதான் அவகாசம் கிடைத்தது. யாரையாவது சந்தித்து இறைத்தூதரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம் என தோன்றியது. ஆகையால், நான் தாமதிக்காமல் கிளம்பி வந்து விட்டேன்’ எனச்சொல்லியவாறு அமர்ந்து விட்டார் வெகு நேரம் நபிமொழிகளைப் பற்றியும் இறைத்தூரைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம் என வாபலா அஸதி தெரிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)
அறிவிக்கும் ஒழுங்கு
நபிமொழிகளை அறிவிக்கும்போது பணிவோடும் மதிப்பச்சத்தோடும் பவ்யத்தோடும் தாழ்மை உணர்வோடும் சொற்களை ஒவ்வொன்றாக உதிர்ப்பார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் அமர்ந்து இறைத்தூதரின் வாயிலிருந்து வார்த்தைகளை நேரடியாக நாம் கேட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலைமையை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.
ஒரு நாள் அவர்கள் நெடும் நீண்டதொரு நபிமொழியை அறி வித்தார்கள். இறுதி தீர்ப்புநாள், சொர்க்கம், இறை நம்பிக்கையாளர்கள், இறைநம்பிக்கையாளர்களோடு சுப்ஹான ரப்புல் இஜ்ஜத் வல்லோனின் கேள்வி பதில் விசாரணை போன்ற நிகழ்வுகள் பலவற்றை அந்நபிமொழி உள்ளடக்கியுள்ளது. நபிமொழிகளை அறிவித்து முடிக்கும் போது புன்முறுவல் பூத்தார்கள்.
‘நான் ஏன் இப்போது சிரிக்கிறேன் என்பதைக் கேட்க உங்க ளுக்கு தோன்றலாம்’ என்றார்கள்.
‘ஆம் எதற்காக சிரித்தீர்கள்?’ என மக்களுக்கு கேட்டார்கள்.
‘அதற்கு இந்த இடத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புன்முறுவல் பூத்தார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள்.
நபித்தோழர்களிலேயே ஃபிக்ஹு என்னும் மார்க்க சட்டக்கலையை தோற்றுவித்தவர்களாக வளர்த்தவர்களாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கருதப்படுகிறார்கள். ஹனஃபி மத்ஹப் ஃபிக்ஹு முழுக்க முழுக்க அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களை அடித்தளமாகக் கொண்டே எழுப்பப்பட்டுள்ளது.
கூஃபாவின் காஜியாக அப்துல்லாஹ் நியமிக்கப்பட்டார்கள். கூஃபா நகரை மையமாகக் கொண்டே தீனை பரப்பும் பணியில் ஈடுபட்டார்கள். ஆகையால், கூஃபாவில் அவர்களுக்கு என ஒரு வட்டம் உருவானது. தாம் அங்கு நிர்மாணித்த பாடசாலையில் முஸ்லிம்களுடைய பிரச்சனைகளுக்கு முஸ்லிம்களின் சிக்கல் களுக்கு தீர்வையும் ஆலோசனைகளையும் தம்முடைய இஜ்தி ஹாதின் மூலமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இப்படியாக இராக் மாகாணம் முழுக்க அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையே பின்பற்றியது. அந்த பாடசாலையில் பெரும் பெரும் கல்வி இயலாளர்கள் உருவாகி வெளிச் சென்றார்கள். அப்துல்லாஹ்விடம் பயின்ற மீப்பெரும் அறிஞர்களாக அல்கமா மற்றும் அஸ்வத் போன்றோரை குறிப்பிடலாம். இவ்விருவரும் ஃபிக்ஹுத் துறையில் தலை சிறந்து விளங்கினார்கள். அதன் பிறகு இப்ராஹிம் நகஈ கூஃபாவின் பாடசாலைக்கு வலிமை சேர்த்தார். விரிவாக்கினார் ஃபகீஹுல் இராக்- இராக் கின் மார்க்க நிபுணர் என பெயரெடுத்தார்.
இப்ராஹிம் நகஈ அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களுடைய ஃபத்வாக்களின் மிகப் பெரும் தொகுப்பு ஒன்று இருந்தது. அந்த தொகுப்பு முழுவதும் அவருக்கு மனனமாக இருந்தது. அதை இப்ராஹிம் நகஈ இடமிருந்து ஹம்மாத் பெற் றுக் கொண்டார்கள். ஹம்மாதிடமிருந்து அத்தொகுப்பு இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து சேர்ந்தது. தம்முடைய அறிவாளும் மதி நுட்பத்தாலும் அதற்கு ஒரு புதிய வடிவை இமாமவர்கள் வழங்கினார்கள். இன்று முஸ்லிம் உலகில் பெரும் பகுதி அவர்களுடைய அறிவெனும் அடை மழையால் பயனுற்றுக் கொண்டுள்ளது.
ஃபிக்ஹின் அடிப்படை நியதிகள்
இஸ்லாமிய ஃபிக்ஹு மார்க்க சட்டத்துறை நான்கு விஷ யங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. குர்ஆன், ஹதீஸ், இஜ்மா மற்றும் கியாஸ். இந்நான்கு தூண்கள் தாம் ஃபிக்ஹின் அடிப்படை நியதிகளாக திகழுகின்றன. இந்நான்கின் கடைசி இரண்டு அண்ணல் நபி களார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்குப் பிறகு இனம் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இறைத்தூதரின் காலத்தின் போது வஹி என்னும் நேரடி இறைத் தொடர்பு இருந்தமையால் இஜ்மா மற்றும் கியாஸ் தேவைப் படவில்லை.
இஜ்மாவை செயல் வடிவில் முதன் முதலில் பயன்படுத்திய பெருமை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும். கொள்கை அளவில் அதை நிலை நாட்டிய பெருமை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே போய்ச் சேருகின்றது. அவர்கள் அதனை சிறந்த செயலாக கருதினார்கள்.
‘இறைவனுக்கு அடிபணியும் முஸ்லிம்கள் எதை அழகாகக் காண்கிறார்களோ, அதுவே இறைவனிடத்திலும் அழகானது. அவர்கள் எதனை தீயதாக காண்கிறார்களோ, அது அல்லாஹ் விடத்திலும் தீயதே!’ (முஸ்னத் அஹ்மத் பாகம்-1)
இஜ்மாவின் உயிரோட்டம் இதுவே ஆகும்.
ஃபிக்ஹின் அடிப்படை நியதிகளுள் நான்காம் நியதி கியாஸ் ஆகும். குர்ஆன் ஹதீஸ் மற்றும் ஒரு சார்புத் துறையாகவே இது காட்சி தருகின்றது. ஃபிக்ஹு கலையை விரிவாக பரப்புவதிலும் புதிய புதிய சிக்கலான பிரச்சனைகளின் முடிச்சுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றது.
இறைவேதம் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் எல்லா சார்பு அம்சங்களும் விளக்கமாக விவரிக்கப்படவில்லை என்பது தெளிவான விஷயம். அது சாத்தியமும் இல்லை. ஆகையால், ஒன்றை ஒன்று ஒத்த இரு பிரச்சனைகளில் காணப்படும் அடிப்படை அம்சத்தை கண்டறிந்து அதனை மையமாகக் கொண்டு தீர்வுகள் அறிவிக்கப்படாத பிரச்சனை களில் சரியான முறையான தீர்வை இனம் கண்டறிய வேண்டும். ஃபகீஹ் (மார்க்க சட்ட நிபுணர்) அல்லது முஜ்தஹித் (குர்ஆன் நபி மொழிகளை ஆய்ந்து தீர்வுகளை கண்டறிபவர்) ஆகியோர் மீதான அடிப்படைக் கடமையாக இது திகழுகின்றது.
குர்ஆன் ஹதீஸை ஆராய்ந்து இஜ்திஹாத் செய்து சார்பு அம்சங் களை அலசி ஆராய்ந்து அணுகிப் பார்த்து நுணுக்கமாக ஆய்வுக் கண்ணோட்டத்திற்கு உட்படுத்தி தீர்வுகளை கண்டறி வது போன்றவற்றில் உண்மையிலேயே அவருக்கு இருக்கின்ற ஆற்றலும் புலமையும் இங்குதான் வெளியாகின்றன.
செயல் வடிவில் ஷரீஆவின் கியாஸ் உத்தியை பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கான விசாலமான பாதையை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அதனைச் சார்ந்த பல்வேறு விதிமுறைகளை இயற்றினார்கள். இன்றளவும் அவை நிலைத்து நின்று ஃபிக்ஹு துறையின் மைல்கற்களாக திகழுகின்றன.
அவர்கள் தீர்வை கண்டறிந்த ஒரு சில கியாஸ் அடிப்படையிலான பிரச்சனைகளை இங்கு பதிவு செய்கிறோம். அவர்தம் அலசி ஆராயும் ஆராய்ச்சித்திறன், பிரச்சனைகளின் பின்புலனைக் கண்டறியும் மதிநுட்பம் போன்றவை இவற்றின் மூலமாக உணரப்படும்.
ஹஜ் மற்றும் உம்ராவில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. ஒருவர் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்து கொண்டார். கடமையை நிறைவேற்ற விடாமல் பகைவர்கள் குறுக்கிடுகிறார்கள். ஹஜ்ஜின் முழு கிரியைகளையும் அல்லது உம்ராவின் முழு கிரியைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவர் குர்பானியை மட்டும் கொடுத்து விட்டு இஹ்ராமை அவிழ்த்து விடலாம். பிறகு பிற்காலத்தில் தருணம் வாய்க்கும் போது தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக் கையின் போது இவ்வாறே நடந்து கொண்டார்கள். ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிர்ப்பந்தம், ஹஜ் கிரியைகளை நிறை வேற்றத் தடை என்பனவற்றை இப்பிரச்சனையின் ஆணிவேராக அடையாளம் கண்டார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கடும் நோய் உடையவர்கள் அல்லது ஹஜ் கிரியைகளை நிறை வேற்ற இயலாமல் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் போன்றவர் களுக்கும் இதே விதிமுறைதான் என்றார்கள்.
ஒரு மனிதர் அவரிடம் வந்து இப்பிரச்சனையை எழுப்பினார். உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டேன். ஆனால், தற்செயலாக என்னை பாம்பு தீண்டிவிட்டது. விஷக்கடியால் உம்ராவிற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன். நான் என்ன செய்வது?
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் அதற்கு பதிலாக ‘குர்பானி பிராணியை அனுப்பி வைத்து விட்டு, இஹ்ராமை கலைந்து கொள்ளலாம். பிறகு, வாய்ப்பு கிடைக்கும் போது உம்ராவை நிறைவேற்றலாம்’ என பதில் அளித்தார்கள். (முஅத்தா இமாம் முஹம்மது பக்கம்-232)
இந்த ஒப்பீட்டாய்வில் இரண்டு அடிப்படை நியதிகள் வெளிப் படுகின்றன.
(1) இரண்டிற்கும் இடையிலான அடிப்படை காரணம் கண்டறியப்பட வேண்டும். அவ்வடிப்படை காரணமே இரண்டிற்கு மான முடிவை தீர்மானிக்கும்.
(2) காரணம் குறிப்பிட்ட வரையறைக்குள் உட்பட்டிருந்தாலும் அதனால் பெறப்படுகின்ற கட்டளை அல்லது சட்டம் பொதுவானதாகவே இருக்கும்.
இல்முல் ஃபராயிழ் எனப்படும் சொத்துரிமைச் சட்டங்களில் ஒரு நடைமுறை என்னவென்றால், இறந்து போனவருக்கு எந்தளவு நெருங்கிய சொந்தம் இருக்கின்றதோ அந்த நெருக்கத்தின் அடிப்படையில் பாகம் அதிகமாக கிடைக்கும். முன்னுரிமை வழங்கப்படும்.
ஒரே தாய்-தந்தைக்குப் பிறந்த சகோதரர் ஒரே தந்தைக்கு பிறந்த சகோதரரை விட ஒரே தாய்க்கு பிறந்த சகோதரரை விட முன்னுரிமை பெறுவார். ஏனென்றால், முதலாமவர் விஷயத்தில் தாயும் தந்தையும் ஒன்றாக இருக்கிறார்கள். தந்தை வழியிலும் அவர் சகோதரராகிறார் தாய் வழியிலும் அவர் சகோதரராகிறார். ஆனால், இரண்டாமவர், ஒன்று ஒரே தந்தைக்கு பிறந்தவராக இருப்பார் அல்லது ஒரே தாய்க்கு பிறந்தவராக இருப்பார். நெருக்கம் என்னும் அடிப்படையில் ஒருபடி அவர் விலகி நிற்கிறார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்நியதியை கண்டறிந்து இதன் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கினார்கள்.
உதாரணமாக, ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு ஜைத், பகர் என்று சிற்றப்பா உறவு முறை சகோதரர்கள் இருவர் இருக்கிறார்கள். இந்த இருவரில் பகர் சிற்றப்பாவின் மகன் ஆனால், ஜைத்தோ சிற்றப்பாவின் மகன் என்பதோடு ஒரே தாய்க்கும் பிறந்தவர். இறந்து போனவரின் தாயும் ஜைத்துடைய தாயும் ஒருவரே.
மேற்கண்ட நியதியின் அடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் பகரைவிட ஜைத்திற்கு முன்னுரிமை அளித்தார்கள். பாகத்தை அதிகமாக பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால், அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த பெரும்பாலான உலமாக்கள் சகோதரர் என்னும் உறவு முறையை மட்டும் காணுகிறார்களே ஒழிய, இந்த பாகுபாட்டை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. (அத்தவ்ழீஹு வத் தல்வீஹு)
மேற்கண்ட கியாஸ் சிக்கல்கள் அல்லாமல் இஸ்லாமிய ஃபிக்ஹு தொடர்பான ஏராளமான இக்கட்டான சிக்கல்கள் பலவும் இப்னு மஸ்ஊத் அவர்களுடைய இஜ்திஹாத் திறமை யினால் விடுவிக்கப் பட்டுள்ளன. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவது, பிரச்சனைகளின் பரவலான நோக்கை கருத்தில் கொள்வது போன்றவற்றில் அசாதாரமான அபாரமான ஆற்றலை இப்னு மஸ்ஊத் கொண்டிருந்தார்கள்.
ஷரிஆவின் அடிப்படை அம்சங்களில் நாஸிஃக் (தள்ளுபடி செய்வது) மன்ஸுஃக் (தள்ளுபடி செய்யப்பட்டது) முவக்கத் (காலவரையறை கொண்டது) முஅப்பத் (காலவரையறை அற்றது) போன்றவற்றை சரியாகவும் முறையாகவும் இனங் கண்டு தீர்வுகளை கண்டறிவார்கள்.
ஒரு பிரச்சனை ஒருமுறை அவரிடம் வந்தது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அவள் இருக்க வேண்டிய இத்தா காலம் எவ்வளவு? ஏனெனில் வான் மறை குர்ஆனில் இத்தா தொடர்பான பல்வேறு கட்டளைகள் காணப்படுகின்றன. அத்தியாயம் பகராவில் பொதுக் கட்டளை குறிப்பிடப்பட்டுள்ளது
“உங்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுடைய மனைவிகள் தங்களை நான்கு மாதங்கள் பத்து தினங்கள் தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்” (வசனம் 234)
அதே போன்று அத்தியாயம் அந்நிஸாவில் கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண்களுக்கான இத்தா குறிப்பிடப் பட்டுள்ளது.
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا ﴿٤﴾ அல்குர்ஆன் 65:4)
“கர்ப்பிணிப் பெண்களை பொருத்தவரைக்கும் அவர்களுடைய பிரசவம் நடைபெறும் காலம் வரை இத்தாவாகும்” (அல்குர்ஆன் 65:4)
இந்த இரண்டு விஷயங்களையும் முன்னிறுத்தி, எந்த காலம் அதிகமாக இருக்கின்றதோ அந்த காலம்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கான இத்தா காலம் என அலி ரழியல்லாஹு அன்ஹு கருதினார்கள். அந்நிலையில்தான் இரு வசனங்களையும் ஒன்றிணைக்க முடியும் என்றார்கள். ஆனால், கர்ப்பிணிப் பெண்களைப் பொருத்தவரைக்கும் அத்தி யாயம் அல்பகராவின் கட்டளையை அத்தியாயம் அந்நிஸாவின் கட்டளை தள்ளுபடி செய்து விட்டது என்றார்கள் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு. குழந்தை பிறந்து விட்டால் அவளுடைய இத்தா காலம் முடிவடைந்து விடும் என்றார்கள். அத்தியாயம் பகராவிற்கு பிறகு தான் அத்தியாயம் நிஸா இறக்கியருளப்பட்டது. அதற்காக முபாஹழாவும் செய்யத் தயார் என்றார்கள். (அத்தவ்ழீஹ் வத்தல்பீஹ்)
இதே போன்று ஓர் இமாமை பின்தொடர்ந்து தொழுபவர் அத்தியாயம் ஃபாத்திஹாவை ஓத வேண்டுமா தேவையில் லையா? என்பதும் ஒரு பிரச்சனை. இன்றுவரைக்கும் ஹனஃபி மத்ஹபை பின்பற்றுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இது ஒரு பெரும் பிரச்சனையாகவே நிலவி வருகின்றது. இன்று வரைக்கும் அதற்கான சரியான தீர்வு கண்டறியப்பட வில்லை. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் காலத்திலேயே இந்த பிரச்சனை தோன்றிவிட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக ஃபத்வாவை வழங்குமாறு ஒரு மனிதர் கோரினார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள்
‘மௌனமாக நில். தொழுகையில் ஈடுபடு. இமாமே உனக்கு போதுமானவர்’ என்றார். (முஅத்தா இமாம் முஹம்மது பாகம் 1 பக்கம்-96)
இந்தப் பிரச்சனையில் மூன்று அடிப்படை ஆதாரங்களை கொண்டு தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. தம்மை எதிர்ப் போருக்கு முன்னால் இம்மூன்றைத்தான் இன்றளவும் அஹ்னாஃப்கள் சமர்ப்பிக்கிறார்கள்.
(1) குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்தி கேளுங்கள். மௌனத்தை கடைப்பிடியுங்கள். (அல்குர்ஆன் 7:204)
(2) பின்தொடர்ந்து தொழுவோர் கிராஅத் ஓதுவதால் தொழுகையில் உள ஈடுபாடு குறைந்து விடுகின்றது.
(3) ‘இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதால் இமாம் ஓது கின்ற கிராஅத்தே போதுமானதாகும்’ என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸுனன் இப்னு மாஜா)
ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு ஒரு சகோதரியும் ஒரு மகளும் ஒரு மகள் வயிற்றுப் பேத்தியும் இருக்கிறார்கள். சொத்து எங்ஙனம் பாகம் பிரிக்கப்பட வேண்டும்? என்றொரு வழக்கு அபூ மூஸா அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. சகோதரிக்கும் மகளுக்கும் சரிபாதியாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் மகள் வயிற்று பேத்திக்கு எதுவும் கிடைக்காது என அவர்கள் தீர்ப்பு எழுதினார்கள்.
இதே பிரச்சனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடமும் எழுப்பப்பட்டது. ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீர்ப்பை விட அபூ மூஸாவின் தீர்ப்புக்கு நான் முக்கியத்துவம் கொடுத்தால் வழி கேடனாக ஆகிவிடுவேன். தீர்ப்பு என்னவென்றால், மகளுக்கு சரிபாதி பங்கு கொடுக்கப்பட வேண்டும். மூன்றில் இருபாகங்களை நிறைவு படுத்தும் விதத்தில் ஆறில் ஒரு பாகத்தை மகள் வயிற்று பேத்திக்கு கொடுக்க வேண்டும். எஞ்சிய பாகத்தை சகோதரிக்கு கொடுக்க வேண்டும்’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத் பாகம்-
இந்த விஷயத்தை கேள்விப் பட்ட அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இவ்வளவு பெரிய மார்க்க மேதை நம்மி டையே இருக்கும் போது அவரிடம் சென்று விஷயங்களை தீர்க்காமல் என்னிடம் விஷயங்களை கொண்டு வராதீர்கள். அதற் கான தேவை இல்லை’ எனச் சொல்லி விட்டார்கள். இன்றுவரை எல்லா முஸ்லிம்களாலும் இந்த ஃபத்வாதான் நடைமுறைப் படுத்தப் படுகின்றது.
இப்னு மஸ்ஊத் அவர்களைப் பற்றி நபித்தோழர்கள்
அறிவார்ந்த வல்லாண்மை, இஜ்திஹாத் பேராற்றல் போன்ற அரும் பெரும் பண்புகளால் மற்ற எல்லா நபித்தோழர்களை விட இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சிறந்து விளங்கினார்கள். அவர்களைப் பார்க்கும் போது உமரவர்களுக்கு பெருமகிழ்ச்சி கிடைக்கும். ன்ஹனு ஜீஜவ் னஜஜீழ (அறிவால் எப்படி நிரப்பப் பட்டுள்ளார்?) என்பார்கள். (முஸ்தத்ரக் ஹாக்கிம் மனாகிப் தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-1 அத்தியாயம்-3 பக்கம்-110)
ஒரு முறை கூஃபாவாசிகளில் ஒரு சிலர் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்தார்கள். சந்தித்தவர்கள் அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊதின் தக்வா, பண்பு நலன், அறிவாற்றல் போன்றவற்றை வாயார புகழ்ந்தார்கள். ‘நீங்கள் மனப்பூர்வ மாகத்தான் இவற்றை சொல்கிறீர்களா?’ என அலி கேள்வி எழுப் பினார்கள். வந்தவர்கள் ‘ஆம்’ என பதில் அளித்தார்கள்.
‘இப்னு மஸ்ஊத் அவர்களை நீங்கள் எந்தளவுக்கு புகழ்ந்தீர்களோ பாராட்டினீர்களோ அதை விட அதிக தகுதி உடையவராகவே அவரை நான் காண்கிறேன்’ என்றார்கள். (தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-3 பக்கம்-110)
‘ஒரு மனிதர் தன்னுடைய இல்லத் துணைவியின் பாலை அருந்திவிட்டால் அவருடைய நிலை என்ன?’ என ஒரு முறை அபூ மூஸா அஷ்அரி அவர்களிடம் ஒரு மனிதர் கேள்வி எழுப்பி னார். அவள் அவனுக்கு ஹராமாகி விடுவார் எனச் சொல்லி விட்டார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கே இருந்தார்கள். ‘தாங்கள் என்ன இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்?’ என உடனடியாக குறுக்கிட்டார்கள்.
‘பால் குடி உறவு என்பது ஈராண்டுகள் வரை தான்’. இதைக் கேள்விப்பட்டவுடன் அபூ மூஸாவிற்கு சந்தோஷம் மிகைத்து விட்டது. ‘மக்களைப் பார்த்து நம்மிடையே இப்படிப் பட்ட மாண்புடைய அறிஞர் பெருந்தகைகள் இருக்கும் போது என்னிடம் வந்து எதற்காக கேட்கிறீர்கள்?’ என்றார். (முஅத்தா இமாம் மாலிக் பக்கம்-223)
ஒரு மனிதர் கரண்டைக் காலுக்கும் கீழாக தன்னுடைய உடையை உடுத்தியிருந்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘கீழாடையை உயர்த்திக் கட்டு’ என்றார்கள். ‘அபூ அப்துல்லாஹ் அவர்களே நீங்களும் தான் அவ்வாறு அணிந்திருக்கிறீர்கள். நீங்களும் உயர்த்திக் கட்டுங்கள்’ என அவர் பதிலளித்தார்.
‘நானும் நீங்களும் ஒன்றல்ல. என்னுடைய கால்கள் மிகவும் மெல்லியவை’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கூறிவிட்டு சென்று விட்டார்கள். இந்த வாக்குவாதம் உமரவர்களின் காதை எட்டியது. அவர் அந்த மனிதரை வரவழைத்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் போன்ற ஒரு மனிதருக்கு முன்னால் நின்று, நாக்கில் பல்லைப் போட்டு பேசிய குற்றத்திற்காக அவருக்கு கசையடிகள் வழங்கப் பட்டன. (அல் இசாபா பாகம்-1 பக்கம்-130)
அறியா விஷயங்களில் கருத்து கூறாமை
அவருடைய அறிவும் ஆற்றலும் புலைமையும் நிகரற்று விளங் கின ஒரு பக்கம். இன்னொரு பக்கம் எச்சரிக்கையும் பேணுதலும் மிக அதிகமாக காணப்பட்டன.
அறியா விஷயங்களில் அவசரப்பட்டு கருத்துக் கூறுவதை முற் றிலும் தவிர்த்துக் கொண்டார்கள். தம்முடைய மாணவர் களிடமும் இதனை வலியுறுத்திக் கூறுவார்கள். ‘எதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லையோ அதைப்பற்றி ஒன்றும் சொல் லாதீர்கள் நான் இவ்வாறு நினைக்கிறேன், என்னுடைய கருத்து இது, நான் இவ்வாறு எண்ணுகிறேன் என்றெல்லாம் இழுத்துக் கொண்டிருக்காதீர்கள். எனக்கு தெரியாது என பட்டவர்த்தன மாக சொல்லிவிடுங்கள்’ என்பார். (அஃலாமுல் முஃமினீன்)
அவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்க மாணவர் மஸ்ரூக் ஆவார். அவர் சொல்கிறார், ‘விரைவில் ஒரு காலம் வரும். அக்காலத்தில் அறிஞர்கள் இருக்கமாட்டார்கள். அறி விலிகளை தங்கள் வழிகாட்டிகளாக மக்கள் ஆக்கிக் கொள்வார்கள். எல்லா விஷயங்களிலும் தம்முடைய கருத்துக்களை அவர்கள் சொல்வார்கள். தங்கள் அறிவை பயன்படுத்தி ஒப்பீடு செய்வார்கள்’ என ஒரு முறை வருத்தத்தோடும் மனம் வெதும்பிய விசனத்தோடும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிட்டார்கள்’. (அஃலாமுல் முஃமினீன் பக்கம்-64)
ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. திருமணத்தின் போது மஹர் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அப்பெண்ணுக்கு மஹம் கொடுக்கப்பட வேண்டுமா கூடாதா? கொடுக் கப்பட வேண்டுமென்றால் எவ்வளவு தீர்மானிக்கப்பட வேண்டும்? என ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதைப்பற்றி அவர்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. ஆகையால், கேள்வி கேட்டவர் கள் பலமுறை வலியுறுத்தி கேட்டபோதும் தொடர்ந்து கேட்ட போதும் பதில் அளிக்காமல் ஒரு மாத காலம் வரை மௌனம் காத்தார்கள். மறுபடி மறுபடி தீர்வை கோரி வினவப்பட்டபோது ‘நிகரான மஹரும் சொத்துரிமையும் வழங்கப்பட வேண்டும்’ என்றார்கள். (அந்தஸ்த்திலும் தகுதியிலும் அப்பெண்ணை ஒத்த இன்னொரு பெண்ணுக்கு பொதுவாக என்ன மஹர் கொடுக்கப் படுகின்றதோ அதேயளவு மஹர்) அவர் இத்தாவும் இருக்க வேண்டும் என்றார்கள்.
‘இந்த தீர்வு சரியாக இருந்தால் இறைவனின் புறத்திலிருந்து வந்ததாக கருதிக் கொள்ளுங்கள். இந்த தீர்ப்பு தவறாக இருந்தால் தவறு என்னுடையதே. ஷைத்தானின் தரப்பலிருந்து வந்திருக்கின்றது என நினைத்துக் கொள்ளுங்கள்’ என மேலும் சொன்னார்கள்.
‘இறைவனும் இறைவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்லீஸிலிருந்து பரிசுத்தமானவர்கள்’ என்றார்கள்.
தீர்ப்பு வழங்கும்போது அங்கு குழுமியிருந்த மக்களில் இரண்டு நபித்தோழர்களும் இருந்தார்கள். ஜர்ராஹ் ரழியல்லாஹு அன்ஹு, அபூ ஸினான் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரே அவ்விருவர். அவ்விருவரும் எழுந்து நின்று, ‘பரூஃ பின்த் வாஸிக் என்னும் பெண் மணியின் பிரச்சனையில் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதே போன்ற தீர்ப்பைதான் வழங்கினார்கள் என நாங்கள் சத்தியம் செய்து சாட்சி அளிக்கிறோம்’ என்றார்கள். இதை கேள்விப் பட்டவுடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அளவற்ற சந்தோஷம் ஏற்பட்டது.
அந்தப் பெண்மணியின் அந்தஸ்த்திலும் தரத்திலும் சமமான பெண்களுக்கு என்ன மஹர் நிர்ணயிக்கப்படுகின்றதோ அதே மஹர்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். இறந்தவரின் சொத்தி லிருந்து மஹர் தொகை கொடுக்கப்பட்ட பிறகு மனைவிக்கான சொத்துரிமையும் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் அவர் வழங்கிய தீர்ப்பு (அபூதாவுத்)
ஃபத்வாவை திரும்பப் பெறுதல்
ஃபத்வாவை கொடுத்ததற்குப் பிறகு வேறு கருத்துகள் மனதில் தோன்றினால் உடனடியாக ஃபத்வாவை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். ஒருவர் ஒரு பெண்ணை திருமண முடித்தார். அந்த பெண்ணை தொட்டும் பார்க்கவில்லை. இந்நிலையில் அந்தப் பெண்ணின் தாயை திருமணம் முடித்துக் கொள்ளலாமா? என கூஃபாவில் இருந்தபோது ஒரு மனிதர் கேள்வி எழுப்பினார். ஆம், கூடும் என இப்னு மஸ்ஊத் பதிலளித்தார்கள். மதீனா திரும்பியதற்குப் பிறகு தன்னுடைய தீர்ப்பு தவறு என தெரிந்து ரபீஆ (மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த மகள்) மகள் களை தவிர மற்ற அனைத்து வடிவங்களிலும் கூடாது எனத் தெரிந்து போயிற்று. ஆகையால், அவர் மறுபடியும் கூஃபாவிற்கு திரும்பிச் சென்றார். தன்னிடம் கேள்வி கேட்ட நபரை தேடிப் பிடித்தார். தன்னுடைய தீர்ப்பு தவறு என எடுத்துரைத்து அந்த திருமணத்தை செல்லாததாக ஆக்கினார். (முஅத்தா இமாம் மாலிக் பக்கம்-193)
சக தோழர்களோடு பயனுருதல்
தனக்கு தெரியாத பிரச்சனைகளில் தம் சமகாலத்தில் வசித்த அறிஞர் பெருமக்களை அணுகி விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதை அவர்கள் தவறாகவே கருதவில்லை. கௌரவ குறைச்சலாகவும் எண்ணவில்லை. ஒரு முறை தம்முடைய மனைவியிடமிருந்து ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினார். ஒரு நிபந்தனை பேசப்பட்டது. அப்பெண்ணை விற்பதாக இருந்தால் அந்தத் தொகையை தம் மனைவிற்கே கொடுத்து விட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. தாம் செய்த இந்த வியாபாரம் சரியா, என்று அவருக்கே சந்தேகம் எழுந்தது. உமர் அவர்களிடம் சென்று இதைப் பற்றி விசாரித்தார்.
‘நிபந்தனையின் அடிப்படையில் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டால் அந்த வியாபாரம் முழு மையடையாது. ஆகையால், இத்தகைய வியாபாரத்தின் பக்கமே செல்லாதீர்கள். நிபந்தனை விதிக்கப்பட்டால் முழுமையான உரிமை கிடைக்காது’ என தெரியப்படுத்தினார்கள். (முஅத்தா இமாம் முஹம்மது)
நபித்தோழர்களில் முஜ்தஹிதாக அறியப்படும் அனைவரும் தமக்கிடையே கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நிகழ்திக் கொண்டார்கள் என இமாம் முஹம்மது அவர்கள் தம்முடைய கிதாபுல் அஃதாத் நூலில் அறிவிக்கிறார்கள்.
அலி அவர்களும் உபை இப்னு கஅப் அவர்களும் கலந்துரை யாடுவார்கள். அலி அவர்கள் உபை இப்னு கஅபோடும் அபூ மூஸாவோடும் கலந்துரையாடுவார்கள். உமரவர்களும் ஜைத் அவர்களும் இப்னு மஸ்ஊத் அவர்களும் கலந்துரையாடுவார்கள் என்கிறார்கள். உமரும் ஜைத் இப்னு ஸாபித் அவர்களும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஆகிய மூவரும் தமக்கிடையே கலந்துரையாடலை நிகழ்த்துவார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் பயனுறுவார்கள் என இமாம் ஸபயி தெரிவிக்கிறார்கள். ஆகையால், தான் இம்மூவரின் கருத்துக்களும் ஒரே போன்று காணப்படுகின்றன என்கிறார்கள்.
அறிஞர்களின் மீது பெருமதிப்பு
அறிஞர்பெருந்தகைகளை அளவுக்கதிகமாக மதித்தார்கள். அளவுக்கதிகமாக நேசித்தார்கள். அரபுலகைச் சேர்ந்த அனைவர்களின் அறிவை ஒரு தட்டிலும் உமரவர்களின் அறிவை மறு தட்டிலும் வைத்தால் உமரவர்களின் தட்டுதான் கீழ் நோக்கி இருக்கும் என உமரவர்களைப் பற்றி அவர்கள் சொல்வார்கள்.
‘உமரவர்களோடு ஒருமணி நேரம் அமர்ந்திருந்தால் ஓராண்டு முழுக்க நின்று வழிபடுவதை விட சிறந்ததாக உணர்கிறேன்’ என அடிக்கடி அவர் சொல்வது வழக்கம். (அல்இஸ்தீ ஆப், உமரவர்களை குறித்த நினைவுகள்)
‘குர்ஆனின் மிகச் சிறந்த உரை ஆசிரியராக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் திகழுகிறார்கள். இறைத்தூதரின் காலத்தில் சிறிய வயதுடையவராக அவர் இருந்திராமல் எங்களைப் போன்ற வயதுடையவராக அவர் இருந்திருந்தால் அவருக்கு நிகராக யாருமே இருந்திருக்க முடியாது’ என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களைப் பற்றி சொல்வார்கள். (தத்கிரதுல் ஹுஃப்பாழ் பாகம்-1 பக்கம்-35)
அல்கமா என்பார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் மாணவர். தம்முடைய அறிவுக் கூர்மை, மதிநுட்பம், விரிவான அறிவுப் புலமை போன்றவற்றால் மாணவர்களிலேயே மிகச் சிறந்து விளங்கினார்கள்.
‘அல்கமாவின் அறிவுப் பரப்பை விட என்னுடைய அறிவிப் பரப்பு விசாலமானது அல்ல’ என அவர் களைப்பற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் குறிப் பிடுவார்கள். (தஹ்ஜீபுத் தஹ்ஜீப் பாகம்-8 பக்கம்-308)
கிலாஃபத்திற்கான கண்ணியம்
கிலாஃபத் பொறுப்பில் அமர்வோரை மதிப்போடும் மரி யாதையோடும் காண்பார்கள். கண்ணியப் படுத்துவார்கள். பொறுப்பிலிருக்கும் கலீஃபா கடந்த கால சுன்னத் வழி முறைக்கு மாற்றமாக ஏதேனும் ஒரு செயலை செய்தாலோ உத்தரவை பிறப்பித்தாலோ செயல் வடிவில் அதற்கு மாறு செய்ய மாட்டார். எதிர்த்துச் செயல்படும் போது உம்மத்தில் பிளவும் பிரச்சனையும் தோன்றும் என பயப்பட்டார்கள்.
ஒரு முறை ஹஜ்ஜின் போது, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு மினாவில் இரண்டு ரகஅத் தொழுவதற்கு பதிலாக நான்கு ரகஅத்துகளை தொழுதார்கள். இதைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கேள்விப் பட்டபோது, மிகவும் வருத்தத்தோடு ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இரண்டு ரகஅத்தான் தொழுதிருக்கிறேன். அபூ பக்கரோடும் உமரோடும் இரண்டு ரகஅத்துகளைத்தான் தொழுதிருக்கிறேன். இப்போது இது என்ன புரட்சி ஏற்பட்டு விட்டது?’ என்றார்கள். (புகாரி)
ஆனால், இப்படிச் சொன்னார்களே ஒழிய, நான்கு ரகஅத் அவர்களோடு சேர்ந்து தொழுதார்கள். மக்கள் ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்திப் பார்த்தபோது, ‘கலீஃபாவின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டுமல்லா?’ என்றார்கள். (முஸ்னத் அஃழம் பக்கம்-86)
கல்வியும் கற்பித்தலும்
கூஃபா மாநகரில் ஹதீஸ், ஃபிக்ஹு மற்றும் குர்ஆனை முறைப்படி கற்பிக்கும் பணியில் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு ஈடுபட்டார்கள். அவர்களுடைய பாடசாலைகளில் மாணவர்கள் திரள் திரளாக குழுமுவார்கள். அவர்களுள் அல்கமா, அஸ்வத், மஸ்ரூஹ், உபைதா, ஹாரிஸ், காழி ஷுரைஹ் மற்றும் அபூ வாயில் போன்றோர் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்கள் யாவரிலும் சிறப்பாக அல்கமா, இப்னு மஸ்ஊத் அவர்களின் தனிப்பட்ட மாணவராக திகழ்ந்தார். என்றும் அவர் ஆசிரியருடனேயே இருப்பார். ஆசிரியரின் நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் அப்படிக்கு அப்படியே பின்பற்றினார். அல்கமாவைப் பார்த்தால் இப்னு மஸ்ஊத் அவர்களைப் பார்த்ததைப் போல என மக்கள் பேசிக் கொள்வார்கள். எங்காவது பயணம் கிளம்பிச் சொன்றாலும் மாணவர்களில் ஒரு சிலர் கூடவே பயணிப்பார்கள். அல்கமாவும் கூடவே செல்வார். அல்கமா செல்ல இயலவில்லை என் றால் யாரேனும் ஒரு தோழரை அனுப்பி வைப்பார். நொடி நேரமும் நகராது ஆசிரியருக்கு அருகிலேயே இரு என உப தேசிப்பார்.
‘ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ஹஜ்ஜிற்காக கிளம்பினார்கள். ஆசிரியரோடு செல்லுமாறு அல்கமா என்னை பணித்தார். ஆசிரியரை விட்டு அகலாமல் எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆசிரியரிடம் எந்த விஷயங்களை கற்றுக் கொண்டாலும் திரும்பி வந்தவுடன் தெரியப்படுத்த வேண்டும் எனவும் சொன்னார்’ என அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் அறிவிக்கிறார். (முஸ்னத் அஹ்மத்)
ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் பரந்து விரிந்த பாடசாலையை கண்ட கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு ‘அபூ அப்துர் ரஹ்மானே! தங்களைப் போலவே தங்கள் மாணவர் களும் கிராஅத் செய்வார்களா?’ என்றார்.
‘தாங்கள் விரும்பினால் இவர்களில் யாரேனும் ஒருவரை ஓதச் சொல்கிறேன்’
‘சொல்லுங்களேன், பார்ப்போம்’ என்றார் கப்பாப்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அல்கமாவை ஏறிட்டு நோக்கினார்கள். ஐம்பது வசனங்கள் கொண்ட ஓர் அத்தியாயத்தை அல்கமா ஓதினார்கள். என்ன கருதுகிறீர்கள் என்னும் பொருள்பட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்தார்கள். கப்பாப் வாயார, மனதார அவரைப் பாராட்டினார்கள்.
ஆதரவாளர்களின் கூட்டம்
மாணவர்கள் அல்லாமல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பாசமும் பெரு மதிப்பும் கொண்ட ஆதரவாளர்களும் பெருந்திரளாக பாட சாலையில் குவிவார்கள். ‘நாங்கள் பள்ளிவாசலுக்கு வெளியே உட்கார்ந்தவாறு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு எப்போது வீட்டை விட்டு வெளியே வருவார் என காத்துக் கொண்டிருப்போம்’ என ஷபீஃ சொல்கிறார். (முஸ்னத் அஹ்மத்)
‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். அவர்களுடைய உரையாடலைக் கொண்டு பயன்பெறுவோம். ஒரு முறை அதே போன்று அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் ‘அஸ்ஸலாமு யா அபூ அப்துர்ரஹ்மான்’ என சொல்லியவாறு அவ்வழியாக விரைந்து கடந்து சென்று விட்டார். அதைக் கண்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸதகல்லாஹு வரஸூலஹு “இறைவனும் அவன் தூதரும் உண்மையே சொன்னார்கள்” என்றார்கள். இதைச் சொன்னவாறு வீட்டிற்குள் சென்று விட்டார்கள். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியமாக இருந்தது. அப்துல்லாஹ் அவர்கள் வெளியே வந்ததும் யாரேனும் ஒருவர் இதைப் பற்றி கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என எங்களுக்குள் முடிவும் செய்து கொண்டோம்.
நான்தான் விசாரிப்பேன் என நான் முன் வந்தேன். அதே போன்று ஆசிரியர் அவர்கள் வெளியே வந்ததும், அதைப் பற்றி விசாரித் தேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள், ‘இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு காலம் வரும் அப்போது குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் ஸலாம் சொல்லப்படும்; வியாபாரம் தொழில் பெருகி விடும்; உறவினர் களோடு நன்னடத்தை மேற்கொள்ளப்படாது; பொய் சாட்சி அளிக்கப்படும். சத்தியம் மறைக்கப்படும். இவையெல்லாம் இறுதித் தீர்ப்புநாளின் அடையாளங்கள் என சொல்லியிருக்கி றார்கள் என்றார்கள்’ இதனை தாரீக் இப்னு ஷிஹாப் அறிவிக்கிறார். (முஸ்னத் அஹ்மத்)
சொற்பொழிவுகளும் முறைகளும்
சொல்லாற்றல் மிகைத்தவர்களாக திகழ்ந்தார்கள். சண்ட மாருதம் போல சொற்பொழிவாற்றுவார்கள். நிற்காது கொட்டும் அடைமழையைப் போல சொற்களைக் கொட்டுவார்கள். தகுந்த வார்த்தைகளை தக்க இடத்தில் பயன்படுத்தி சொல்லவந்த கருத்தை சில சொற்களுக்குள் சொல்லி விடுவது அவர்களின் வழக்கம். அவர்கள் பெற்றிருந்த தனித்திறமையும்.
ஒருமுறை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் சுருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் பேசச் சொன்னார்கள். இவ்விருவரும் ஒருவர் பின் ஒருவராக சுருக்க மான அளவில் தம்முடைய உரைகளை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் எழுந்து நின்றார்கள்.
இறைவனையும் இறைத் தூதரையும் போற்றினார்கள். அதன் பின்பு, ‘சகோதரர்களே! அல்லாஹ் நம்முடைய அதிபதியாவான். இஸ்லாம் நம்முடைய நன்னெறியாகும். வழிமுறையாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சுட்டிக் காட்டியவாறு இவர் நம்முடைய தூதராவார். இறைவனும் இறைத்தூதரும் எதை நமக்கு சிறந்தது என கருதுகிறார் களோ அதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம். அஸ்ஸலாமு அலைக்கும்’.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சுருக்கமான உரையை பெரிதும் பாராட்டினார்கள். இப்னு உம்மு அப்து உண்மையைச் சொல்லிவிட்டார் என்றார்கள். (தத்கிரதுல் ஹுஃப்பாழ் பாகம்-3 பக்கம்-13)
தம்முடைய உரைகளில் ஓரிறைக் கோட்பாடு, ஜமாஅத் தோடான தொழுகை இறையச்சம் போன்றவற்றை பொதுவாக குறிப்பிடுவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் வழக்கம். பல்வேறு உதாரணங்கள் கூறி சொல்ல வந்ததை விளக்குவார்கள். ஒருமுறை அவர் சொன்னார்கள், ஒரு மனிதர் தம்முடைய வாழ்வில் தவ்ஹீதை தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. நான் செத்த பிறகு என்னுடைய உடலை எரித்து அந்த சாம்பலை திருகையில் வைத்து அறைத்து கடலில் கலந்து விடுங்கள் என இறக்கும் தருவாயில் உபதேசம் செய்தார். அதே போன்று மக்கள் அதனை செய்தார்கள். இறைவன், அவருடைய ஆன்மாவிடம் ஏன் உன்னுடைய இறந்த சடலத்துடன் இங்ஙனம் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தாய்? என விசாரித்தான். உன் மீது உள்ள பயத்தினாலும் அச்சத்தினாலும்தான் என அந்த மனிதர் பதில் அளித்தார். இந்த சொற்களை கேட்டு இறை கருணை பொங்கி எழுந்தது. மகத்தான மன்னிப்பை அவர் பெற்றுக்கொண்டார். (முஸ்னத் அஹ்மத்)
இறையச்சம்தான் எல்லா நற்செயல்களுக்கும் உயிரோட்ட மாக திகழுகின்றது என்பதை சுட்டிக் கட்டுவதற்காகத்தான் இந்த உருவகக் கதையை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் சொன்னார்கள். அதிகமாக உரை நிகழ்த்துவதை தவிர்த்துக் கொள்ளல்ஒரே அடியாக உரையாடுவதும் தொடர்ந்து நிகழ்த்துவதும் தாக்கம் ஏற்படுத்தாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார் கள். என்னதான் மக்கள் வேண்டி விரும்ப கேட்டுக் கொண்டாலும், உரை நிகழ்த்த மாட்டார்கள். மிகவும் குறைவாகத்தான் உரை மேடையின் மீது ஏறுவார்கள். சொல்ல வேண்டியதை எளிய வார்த்தைகளில் சுருக்கமாக, அதே சமயம் கேட்போர் உள் ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வீரியமிக்க சொற்களில் சொல்வார்கள். நெடுநேரம் பேசுவார் என ஒருபோதும் மக்கள் எண்ண மாட்டார்கள்.
ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் உரையை கேட்பதற்காக ஏராளமான மக்கள் கூட்டமாக ஒன்று திரண்டிருந்திருந்தார்கள். யஜீத் இப்னு முஆவியா நகஈ ஆசிரியரிடம் சென்று தகவலைச் சொன்னார். வெகு நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ‘தோழர்களே! நீங்கள் நெடுநேரமாக என்னுடைய உரையை கேட்க காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், நெடு நேரம் நீண்ட நேரம் பேசி உங்களை களைப்படையச் செய்துவிடக் கூடாது என நான் கருதியதால் வெளியே வரவில்லை. எங்களுக்கு சிரமம் தரக்கூடாது என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல நாட்கள் இடைவெளி விட்ட பிறகே உரை நிகழ்த்துவார்கள்’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
எந்நேரமும் மாணவர்கள் அணுகி பெற்றுக் கொள்ளலாம். கல்விச் செல்வத்தை அடைந்து கொள்ளலாம் என்பதற்கு ஏற்ப அந்த களஞ்சியம் திறந்தே வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சூரிய உதயத்திற்கு பிறகு பிரச்சனைகளை எடுத்துரைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள நேரம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஒரு நாள் நாங்கள் சுபுஹ் தொழுது விட்டு இப்னு மஸ்ஊத் ரழியல் லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் இறைநினைவில் ஈடுபட்டிருந்தார்கள்.
சூரியன் உதயமானவுடன் ஒரு மனிதர் சொன்னார். இரவு முழுக்க நான் முஃபஸ்ஸல் அத்தியாயத்தை முழுக்க ஓதினேன். அதைக் கேட்ட அப்துல்லாஹ் அவர்கள் ‘கவிதை வாசிப்பதை போல கடகடவென ஒதினாயோ?’ என்றார்கள்.
‘நாங்கள் குர்ஆனை ஓதுபவர்களை கண்டிருக்கிறோம். குர் ஆனை கற்றுக் கொடுத்தவர் எங்ஙனம் ஓதினார்? என்பதும் எனக்கு நினைவில் இருக்கின்றது, அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி குர்ஆன் ஓதுவார்கள் தெரியுமா? பத்து முஃபஸ்ஸல் அத்தியாயங்களைத்தான் ஓதுவார்கள். அதல்லாமல் அம்ம பகுதியில் இருந்து இரண்டு அத்தியாயங்களை ஓதுவார்கள்’ என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவடுகளை அடியொற்றி நடந்த காரணத்தால் சுன்னத்துகளை அப்படிக்கு அப்படியே பின்பற்ற வேண்டும் என்னும் பேரார்வத்தால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சமூகத்தில் மிகச் சிறந்த பண்புகள் வாய்க்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார்கள்.
நாங்கள் ஹுதைஃபா அவர்களின் அவையில் ஆஜரானோம். நற்பண்புகளிலும் வழிகாட்டுதலிலும் அண்ணலாருக்கு மிகவும் நெருக்கமாக காட்சியளிப்பவரை சுட்டிக்காட்டுங்கள் என கூறினோம். அப்படிப்பட்டவரை அணுகி நாங்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்ள உள்ளோம் என எங்கள் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தினோம். அதற்கு ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை நற்பண்புகளை பழக்க வழக்கங்களை நடவடிக்கைகளை மற்ற யாவரையும் விட இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு முன்னிலையில் நின்று கடைப்பிடிக்கிறார்கள். இறைவனின் தூதரோடு நெருக்கமாக மற்றவர்களை விட அண்மித்து திகழும் சிறப்பும் பேரும் இப்னு மஸ்ஊத் மட்டுமே பெற்றிருந்தார் என்பதை இறைத்தூதரின் தோழர்கள் அனைவரும் அறிவார்கள்’. இந்நிகழ்வை அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் அறிவிக்கிறார். (ஜாமிஃ திர்மதி. மனாகிப் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு)
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபாவிற்கு பயணமானார்கள். அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர் களுடைய நெருங்கிய தோழர்கள் சந்திக்க வந்தார்கள். அவர்களை சோதிப்பதற்காக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விசாரித்தார்கள்.
அனைவரும் ஒரே குரலில் அவரைப் பாராட்டி ‘அமீருல் முஃமினீன் அவர்களே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட சிறந்த இறையச்சம் கொண்டோரை பேணுதலானவரை மென் நடத்தை மிக்க வரை மிகச் சிறந்த சான்றோரை நாங்கள் கண்டே இல்லை’ என்றார்கள்.
‘நானும் அப்படித்தான் கருதுகிறேன். நீங்கள் சொன்னதை விட ஒரே ஒரு விஷயத்தை கூடுதலாக கருதுகிறேன். அது என்ன வென்றால், அவர்கள் குர்ஆனை கற்றார்கள். ஹலாலை ஹலால் என்றும் ஹராமை ஹராம் என்றும் உரைத்தார்கள். மார்க்க ஞானம் மிக்க ஃபகீஹாகவும் சுன்னத் வழிமுறையின் அறிஞராகவும் திகழ்கிறார்கள்’ என்றார்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். (தபக்காத் இப்னு ஸஅத்)
ஒரு முறை தன்னுடைய தோழரான உமைர் என்பாரை சந்திப் பதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சென்றார்கள். எதேச்சையாக அவர் அப்போது இல்லை. அவருடைய மனைவிக்கு ஸலாம் சொன்னார்கள். தாகம் தீர்க்க ஏதேனும் பானம் தருமாறு கோரினார்கள்.
எதேச்சையாக விருந்தா ளிக்கு கொடுப்பதற்கு பானம் எதுவும் வீட்டில் இல்லை. தன்னுடைய பணிப்பெண்ணை பக்கத்து வீட்டிற்கு அவர் அனுப்பினார். நெடு நேரமாகியும் அப்பணிப் பெண் திரும்பி வரவில்லை. உமைரின் மனைவி கோபத்தில் பணிப்பெண்ணை திட்டத் தொடங்கினார்கள்.
அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அதைக் கேட்டு அங்கிருந்து திரும்பி மறு நாள் உமைரோடு சந்திப்பு நிகழ்ந்தது. ‘ஏன் அதற்குள்ளாக தாங்கள் திரும்பிவிட்டீர்கள்?’ என அவர் விசாரித்தார். ‘பணிப் பெண் திரும்பிவர தாமதமானது தங்களுடைய மனைவி அவளை திட்டத் தொடங்கினார். இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபிமொழி ஒன்று நினைவிற்கு வந்தது ‘யாரையேனும் திட்டினால் சபித்தால் சபிக்கப்பட்டவர் குற்றமற்றவராக இருந்தால் அந்த சாபம் திட்டியவருக்கே திரும்பி வந்து சேரும்’ ஆகையால், ஒரு வேளை அந்தப் பணிப்பெண் குற்றம் இழைக்கவில்லை என்றால் இந்த சாபம் திரும்பி வந்து விடுமல்லவா? என பயந்து தான் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்’ என்றார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு. (முஸ்னத் அஹ்மத்)
ஒரு முறை ஒரு மனிதரிடம் இருந்து ஒரு பணிப்பெண்ணை விலைக்கு வாங்கினார்கள். ஆனால், தொகையை செலுத்துவதற்கு முன்பாக விற்றவர் எங்கோ சென்றுவிட்டார். ஓராண்டு வரைக்கும் அவரை தேடிக் கொண்டே இருந்தார்கள். அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், தகவல் எதுவும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அந்த பணத்தை அவருடைய பெயரில் சதகா செய்து விட்டார்கள். ‘அந்த மனிதர் திரும்பி வந்தால் அவருக்கு நான் தொகையை செலுத்தி விடுவேன். அப்போது இந்த சதகா என்னுடைய சதகாவாக ஆகிவிடும்’ என்றார்கள்.
‘இறைத்தூதர்களின் தோழர்களோடு கூடியிருக்கும் தோழமை கொள்ளும் வாய்ப்பை நான் அதிகம் பெற்றேன். ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர் கள் மற்றவர்களை விட உலகப் பற்றில்லாதவர்களாக மறுமையை தேடும் இன்பம் மிகைத்தவர்களாக காணப்பட்டார்கள்’ என தமீம் இப்னு ஹராம் சொல்கிறார்கள். (அல் இசாபா தத்கிரதுல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்)
ஈராண்டுகள் அவருக்கான ஊதியத்தை உஸ்மான் ரழியல் லாஹு அன்ஹு தடை செய்தார்கள். மரணத் தருவாயின் போது அவர்களுடைய பிள்ளைகளுக்காக ஊதியத்தைத் தொடர நினைத்தார்கள். ஆனால், அதன் மீது பற்றோ ஆர்வமோ கொள்ளாத அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அதனை நிராகரித்து விட்டார்கள்.
‘என்னுடைய பிள்ளைகள் வறுமையில் வாடுவார்கள். நெருக் கடியில் சிக்கித் தவிப்பார்கள் என்றெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. தினந்தோறும் இரவு நேரத்தில் வாகிஆ அத்தியாயத்தை படிக்க அவர்களுக்கு நான் கற்பித்து கொடுத் துள்ளேன். இரவு நேரத்தில் வாகிஆவை படிப்பவன் ஒருபோதும் வறுமையில் சிக்கிக் கொள்ளமாட்டான் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருப்பதை நான் கேட்டுள்ளேன்’ என்றார்கள். (அஸதுல் காஃபா)
விருந்தோம்புவதில் அளவற்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். கூஃபா மாநகரில் மவ்ழஉர் ரமாதா என்னும் வீட்டை விருந்தாளிகளை உபசரிப்பதற்கென்றே காலி செய்து வைத்திருந் தார்கள். (தாரீகுத் தபரி)
இரவு நேரத்தில் ஊரெல்லாம் உறங்கிக் கிடக்கும் போது அப் துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து அமர்ந்து மெல்லிய குரலில் காலைவரை குர்ஆனை திலாவத் செய்திருப்பார்கள் என உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். (அஸதுல் காஃபா தத்கிரத்துல் இப்னு மஸ்ஊத்)
ரமழான் மாதத்தின் கடைசி பத்து இரவு முழுவதையும் லைலத் துல் கத்ரு இரவுக்கான தேடுதலில் கழிப்பார்கள். ‘ரமழான் மாதத் தின் காலைப் பொழுதில் அப்துல்லாஹ் அவர்களை காணச் சென்றேன். வீட்டின் மேற்கூரையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். இறைவனும் இறைத்தூதரும் உண்மையே சொல்லியிருக்கிறார்கள் என்றார்கள்.
அது என்ன உண்மை? என நான் விசாரித்தேன்.
ரமழான் மாதத்தில் கடைசி பத்துகளில் லைலதுல் கத்ரு தோன் றும் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ‘அதற்கான அடையாளம் என்னவென்றால், அந்நாள் விடியும் போது சூரியன் உதயமாகும். சூரியன் உதயமாகும் போது கதிர்கள் வெளிப்படாது என்றார்கள்’ நான் அதனை இன்று என் கண்களால் கண்டு கொண்டுள்ளேன்’ என்றார். இந்நிகழ்வை அபூ அஃரப் அறிவிக்கிறார். (முஸ்னத் அஹ்மத்)
வீட்டினர் அனைவரும் விடிகாலையில் எழுந்து இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். விடிந்த பிறகு சூரியன் உதயமாகும் வரை இறைநினைவில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஈடு பட்டிருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் சுபுஹ் தொழுது விட்டு, அப்துல்லாஹ் அவர்களின் வீட்டை அடைந்து கதவை தட்டினோம். ஸலாம் உரைத்தோம். உள்ளே நுழைவதற்கான அனுமதியைக் கோரினோம். ஆனால், பதில் ஏதும் வராததால் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தோம். இதற்கிடையில் பணிப்பெண் ஒருத்தி வந்து ‘உள்ளே ஏன் வரவில்லை?’ என்றாள். நாங்கள் உள்ளே சென்றோம். ஆசிரியர் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்கள்.
‘அனுமதி கிடைத்த பிறகும் உள்ளே வராமல் ஏன் வெளியே நின்றீர்கள்?’
‘வீட்டில் யாரேனும் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுந்ததால் உள்ளே நுழைய வில்லை’ என்றோம் நாங்கள்.
‘உம்மு இப்னு அப்துடைய வாரிசுகள் அலட்சியமாக இருப் பார்கள் என சந்தேகம் கொண்டிருக்கிறீர்களா?’ இதைச் சொல்லிவிட்டு மறுபடியும் அவர்கள் தஸ்பீஹ் செய்யவதில் ஈடுபட்டார்கள். சூரியன் உதயமாகும் நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக பணிப்பெண்ணை வெளியே அனுப்பினார்கள். அவள் வெளியே சென்று சூரியன் இன்னும் உதயமாகவில்லை என்றாள். மறுபடியும் தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டார்கள். மறுபடியும் பணிப்பெண்ணை வெளியே அனுப்பினார்கள். அவள் திரும்பி வந்து சூரியன் உதயமாகி விட்டது என்றாள்.
பிறகு ஒரு துஆவையும் அவள் சொன்னாள், இன்றைய நாள் எங்கள் பாவங்களை மன்னித்த இறைவனுக்கு நன்றி என்னும் பொருள்பட ஒரு துஆ’ இந்நிகழ்வை அபூவாயில் அறிவிக்கிறார்.
எங்கள் குற்றங்களுக்கு பதிலாக எங்களை அழிக்காமல் விட்டு விட்ட நன்றி என்னும் பொருள்பட அந்த துஆ அமைந்திருந்தது என இன்னொரு அறிவிப்பாளரான மெஹ்ரி சொல்கிறார். (ஸஹீஹுல் முஸ்லிம்)
மிக அதிகமாக தொழுவார்கள். தாம் ஒரு நாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மிகச் சிறந்த செயல் எது என்பதை கேட்டதாகவும் அதற்கு நேரம் வந்தவுடன் தொழுவது என பதில் உதிர்த்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து என்ன? என்றேன். பெற்றோர்களோடு நன்முறையில் நடந்து கொள்வது என்றார்கள். அதற்குப் பிறகு என நான் கேள்வி எழுப்பிய போது இறைவனின் பாதையில் ஜிஹாத் செய்வது என்றார்கள். அதன்பிறகு மறுபடியும் எதனையும் கேட்காது நான் அமைதியாகிவிட்டேன். நான் மறுபடியும் கேட்டிருந்தால் மறுபடியும் அண்ணலார் அதற்கு பதில் சொல்லியிருப்பார்கள். (புகாரி)
இதன்படி அவர்கள் கடமையான தொழுகைகளை நேரம் வந்தவுடன் தொழுது விடுவார்கள். ஒரு முறை கூஃபாவில் ஆளுனராக இருந்த வலீத் இப்னு உக்பா தொழ வர தாமதமாகி விட்டது. அவருக்காக காத்துக் கொண்டிருக்காமல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்ரழியல்லாஹு அன்ஹு தொழத் தொடங்கிவிட்டார்கள். வலீதுக்கு கடுமையாக கோபம் வந்து விட்டது. ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்றார். ‘அமீருல் முஃமினீனுடைய ஆணை இருக்கின்றதா? இல்லை நீங்களாகவே செய்து விட்டீர்களா?’ என்றெல்லாம் கேட்கலானார்.
அதற்கு, ’அமீருல் முஃமினீனின் ஆணையும் இல்லை. நானாக இதைச் செய்யவும் இல்லை. மாறாக, நீங்கள் உங்கள் பணியை செய்து கொண்டே இருக்க மக்கள் உங்களுக்காக காத்துக் கிடப்பது அல்லாஹ்வுக்கு பிடிக்க வில்லை’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ரமழான் மாதத்தை தவிர வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கட் கிழமையும் வியாழக் கிழமையும் நோன்பு நோற்பார்கள். ஆஷுரா நோன்பையும் தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். இருந்தாலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்தை தவிர வேறு எந்த ஃபகீஹும் குறைந்த நோன்பு வைப்பதை நான் கண்டதில்லை என அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் சொல்கிறார்.
அதைப் பற்றி ஒருமுறை கேள்வியும் எழுப்பப்பட்டது. தாங்கள் ஏன் மிகவும் குறைவாக நோன்பு நோற்கிறீர்கள்?
அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நான் நோன்பை விட தொழுகைக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். நோன்பு வைத்தால் பலவீனத்தின் காரணமாக என்னால் தொழ இயலாமல் போய் விடுகின்றது’ என்றார்கள். (தபக்காத் இப்னு ஸஅத்)
இறை அச்சத்திலும் மறுமை பற்றிய பயத்திலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும். செத்த பிறகு நான் எழுப்பப் படாமலேயே சென்று விடக் கூடாதா? மக்கி மண்ணோடு ஆகி விடக்கூடாதா? என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்கள். (தபக் காத் இப்னு ஸஅத்)
குடும்ப வாழ்க்கை
மனைவி மக்களை வெகுவாக நேசித்தார்கள். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னால் சப்தமாக கனைப்பார்கள். இல்லையென்றால் வேறு ஏதேனும் சொல்வார்கள். தமது வருகையை வீட்டார்க்கு உணர்த்துவார்கள். அவருடைய இல்லத் துணைவியான ஜைனப் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள், ‘ஒரு முறை கனைத்தவாறு அப்துல்லாஹ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது வயதான பெண்மணி ஒருவள் என்னுடைய கைகளில் எனக்கு தாவீஸை கட்டிக் கொண்ருந்தாள். நான் பயத்தில் அதை கட்டிலுக்கு கீழாக மறைத்து விட்டேன். அப்துல்லாஹ் என் அருகே வந்து அமர்ந்தார்கள். என் கழுத்தைப் பார்த்து, ‘இது என்ன கயிறு?’ என விசாரித்தார்கள். ‘தாவீஸ்’ என்றேன் நான். அதனை அறுத்து வெளியே எறிந்து ‘அப்துல்லாஹ்வின் குடும்பம் ஷிர்க்கை விட்டு தூய்மையானது. தாவீஸ் கட்டுவது, முடிச்சுகள் போடுவது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்’ என அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டுள்ளேன்’ என்றார்கள்.
‘தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்னுடைய கண்கள் பொங்கி வந்ததால் நான் ஒரு யஹூதிப் பெண்மணியிடம் சென்று தாவீஸ் வாங்கி வருவேன். அதன் மூலமாக எனக்கு நிவாரணம் கிடைக்கும்’ என நான் எடுத்துச் சொன்னேன்.
‘இதெல்லாம் ஷைத்தானின் செயல்கள் இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு துஆவை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், அந்த துஆவே இதற்கு போதும்.
‘பயத்தை பீதியை அகற்று மக்களின் இறைவா! நிவாரணம் வழங்கு நீயே நிவாரணம் வழங்கக் கூடியவன். உன்னுடைய நிவாரணம் அன்றி வேறு எந்த நிவாரணமும் இல்லை. உன்னுடைய நிவாரணம் எப்படிப்பட்டது என்றால் எத்தகைய நோயையும் அது விட்டு வைப்பதில்லை’.
மிகவும் எளிமையான ஆடைகளையே பூணுவார்கள். விரலில் ஒரு இரும்பு மோதிரத்தை போட்டிருப்பார்கள். (தபக்காத் இப்னு ஸஅத்) முத்திரை இடுவதற்கு அந்த மோதிரம் பயன்படும்.
உண்பதிலும் பெரிதாக அக்கறை செலுத்த மாட்டார்கள். பொது வாக நபீஸ் எனப்படும் பேரீச்சம் பழசாற்றை அருந்துவார்கள். ஒரு முறை அல்கமா, அவர்களிடம் ‘இறைவன் தங்களுக்கு அருள் புரியட்டும் உம்மத்தின் வழிகாட்டியாகவும் முன்னோடி யாகவும் இருக்கின்ற தாங்கள் நபீதை அருந்துகிறீர்களே’ என்றார்கள்.
‘அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபீஸ் அருந்துவதை நான் பார்த்துள்ளேன்’ என்றார்கள். ’அதை நான் காணவில்லை என்றால் ண்டிப்பாக அருந்த மாட்டேன்’ என்றார்கள். (முஸ்னத் அஃஜம்)
பைத்துல்மாலிலிருந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர் களுக்கு வருடந்தோறும் 5,000 திர்ஹம்கள் மதிப்பூதியம் கிடைத்து வந்தது. அவர்கள் இறப்பதற்கு ஈராண்டுகள் முன்பாக மூன்றாவது கலீஃபாவின் உத்தரவின் பேரில் அது தடைசெய்யப்பட்டது. ஆனால், ஜுபைர் அவர்கள் அதற்காக பரிந்துரை செய்தார்கள். அவருக்காக இல்லை என்றாலும் அவர்களுடைய பிள்ளைகளுக்காக அதனை தொடருமாறு கேட்டுக் கொண்டார்கள். இப்படியாக அவருடைய வாரிசுதாரருக்கு ஒரே அடியாக பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் கிடைத்தன. இஃதல்லாமல் அவர்கள் ஏறக்குறைய தொன்னூறு ஆயிரம் திர்ஹமை ரொக்கமாக விட்டுச் சென்றார்கள். (தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-2 பக்கம்-113)
பலவீனமான உடல்வாகு. உயரத்தில் குறைந்தவர்கள். கோதுமை நிறம். காதுமடல்கள்வரை நீண்டு தொங்கும் மென்மையான அழகிய கேசம். அதை மிக அழகாக அலங்கரித்துக் கொள்வார்கள். ஒரு முடியும் தனியாக பிரிந்து காணப்படாது.
முழங்காலும் கெண்டைக் காலும் மிகவும் ஒல்லியாக காட்சி யளிக்கும். ஆகையால், பெரும் பாலும் பிறர் பார்வையில் படாமல் முழுமையாக மறைத்தே வைப்பார்கள்.
ஒரு முறை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக மிஸ்வாக் குச்சியை உடைப்பதற்காக மரத்தின் மீது ஏறினார்கள். அப்போது ஆடைகள் அகன்று விட்டன. அவர்களுடைய ஒல்லிக் கால்களை கண்டு மக்கள் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். அதைக் கண்ட அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘இந்த ஒல்லிக் கால்களை கண்டு நீங்கள் சிரிக்கிறீர்கள். ஆனால், இறுதித் தீர்ப்பு நாளன்று எடைபோடப் படுகையில் உஹது மலையை விட இது பாரமானதாக இருக்கும்’ என்றார்கள். (தபக்காத் இப்னு ஸஅத் பாகம்-3 பக்கம்-113)
– சையத் அப்துர் ரஹ்மான் உமரி