முஸ்லிம் பெண்களுக்கு – ரமளான் டிப்ஸ்
வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் நிறைய பேர் மற்ற மாதங்களைப் போல இந்த புனித மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகிறார்கள். அல்லாஹ்வின் பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குரிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமளான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1 – இந்த மாதத்தை சிறந்த முறையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணம் போல் தான் வாழ்வு. உறுதி இல்லாமல் ஏனோ தானோ வென்று அந்த மாதத்திற்குள் நுழைந்தால் நாட்கள் சொல்லிக் கொள்ளாமல் அதன் வழியில் பறந்து விடும். அதனால் அந்த நாட்களை எப்படி பயன்படுத்துவது என்ற எண்ணமும் உறுதியும் ரொம்ப அவசியம்.
2 – ரமளான் பிறையை பார்த்தவுடன் முதல் வேலையாக நாமெல்லாம் ஸஹர் உணவிற்கான ஏற்பாட்டில் மள மளவென்று இறங்கி விடுவோம். தேவைதான் ஆனாலும் இந்த ஆண்டிலிருந்து அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் கொள்வோம்.
ரமளான் பிறை தெரிந்ததும் சாப்பாட்டு வேலையை ஒரு, ஒருமணி நேரம் தள்ளி வைத்துவிட்டு எந்த வேலை இருந்தாலும் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ரமளானை வரவேற்கும் முகமாக முதல் வேலையாக குர்ஆனை கையில் எடுப்போம் – பிறை தெரிந்தவுடன் குர்ஆன் நம் கைக்கு வந்து விட வேண்டும் – குர்ஆன் இறங்கி இந்த மாதத்தை சிறப்புற செய்தது மாதிரி குர்ஆன் ஓதி இந்த மாதத்தை நாம் சிறப்புற செய்வோம்.
குறைந்தது 50 வசனங்களையாவது முதன் முதலில் ஓதி அதன் அர்த்தத்தை படித்து விட்டு பிறகு ஸஹர் உணவு வேலைக்கு இறங்குவோம். நீங்கள் இப்படி செய்துப் பாருங்கள் இந்த ஆண்டு ஒரு புது அனுபவத்தையும் மன நிம்மதியையும் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.
3 – இந்த ஆண்டு எப்படியாவது முழு குர்ஆனையும் அர்த்தத்துடன் ஓதி முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள்.
4 – ஸஹர் செய்து விட்டு சுப்ஹ் தொழாமல் படுத்துவிடும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இது பெரும் மன வேதனயான போக்காகும். நடு ஜாமத்தில் வாய்க்கு ருசியாக வயிறு நிறைய உண்டு விட்டு தூங்குவதற்கா இறைவன் நோன்பை கடமையாக்கியுள்ளான்? தயவு செய்து அந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு உணவிற்கு பிறகு ஸஹர் வேலையை முடித்து விட்டு நேரத்துடன் படுத்து விட்டால் (இஷா – மற்றும் இரவுத் தொழுகைக்கு பிறகு டி.வி பார்ப்பதை ரமளானில் கட்டாயம் தவிருங்கள் அது நம் இரவு தூக்கத்தை கெடுத்து நேரத்தை பாழ்படுத்தி நல் அமல் செய்ய முடியாமல் தடுத்துவிடும்) ஸஹர் உணவு நேரத்தில் எழலாம். அல்லது சுட சுட சாப்பிட வேண்டும் என்றால் இன்னும் முன்னமே படுத்துவிட்டு காலையில் 3 மணி வாக்கில் எழுந்து சமைக்கலாம். தூக்கம் கிடைத்து விட்டதால் காலையில் எழுவதற்கு கல கலவென்று இருக்கும் உணவும் சூடாக கிடைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ஹ் தொழுகை தவறாமல் கிடைத்துவிடும்.
5 – ஸஹர் நேரத்தில் டிவியில் ஒளிப்பரப்பப்படுவதற்காக நிறைய இஸ்லாமிய நிகழ்சிகள் தயார் நிலையில் உள்ளன. இரவுத் தொழுகைக்கு பிறகு நேரத்தோடு தூங்கி காலையில் எழுந்தால் சமைத்துக் கொண்டே – அல்லது உணவு உண்டுக் கொண்டே இந்த நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து விடலாம். இந்த வருடம் நிறைய அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். நிகழ்சியை தவறாமல் காணுங்கள். அதில் நமக்கு நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக கிடைக்கும்.
6 – சுப்ஹூக்கு பிறகு அடுத்த தூக்கம் தூங்க வேண்டி இருப்பதால் எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். இல்லையெனில் அவை தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை நம் உடம்பில் உருவாக்கி விடும்.
7 – சுப்ஹூக்கு பிறகு வேறு எதுவும் வேலை இல்லை என்றால் ளுஹர் தொழுகை வரைக்கூட தூங்கலாம். குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்தால் நேரத்துடன் எழ வேண்டி இருக்கும். அதனால் நேரக் கட்டுப்பாடு என்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களை பொருத்தவரை ரொம்பவும் அவசியம்.
8 – ளுஹர் தொழுகையில் உங்கள் வீட்டு சூழ்நிலையை கவனியுங்கள். நோன்பு வைத்துக் கொண்டு கணவரோ – சகோதரர்களோ – மகன்களோ தொழப் போகாமல் இருந்தால் அவர்களுக்கு தொழுகையை ஞாபகமூட்டி பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். உங்களோடு சேர்த்து வீட்டிலிருக்கும் மற்றப் பெண்களையும் தொழ தூண்டுங்கள்.
9 – ளுஹரிலிருந்து அஸர் தொழுகை வரை ஓய்வுக்குரிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் ஒரு பகுதியை குர்ஆனுக்காக ஒதுக்கலாம் – ஒதுக்க வேண்டும். தமிழ் அர்த்தத்தைப் படித்து சிந்திப்பதான் வாயிலாக அல்லாஹ் நம்முடன் பேசும் அந்த அற்புதத்தை காணலாம். சில வசனங்களை உங்கள் கணவர்களிடம் காட்டி அதன் விளக்கத்தைக் கேளுங்கள். இந்த சிறு தூண்டுதலின் வழியாக கணவர்களுக்கும் குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும். நல்லக் கணவர்களுக்கு உண்மையில் நீங்கள் கேட்கும் வசனங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் வெளியில் செல்லும் வேலைகளில் யாரிடமாவது கேட்பார்கள். நன்மைக்கான இந்த ஞாபக மூட்டலின் மூலம் வெளியிலிருக்கும் பலரும் கூட பயன் பெறும் வாய்ப்புள்ளது.
10 – அஸர் தொழுகைக்குப் பின் நோன்பு திறக்கும் ஆவலில் சமையலில் இறங்கி விடுவோம். நீண்ட நேரம் காலி வயிறாக இருந்து விட்டு மீண்டும் சாப்பிடுவதால் கடின உணவையும் எண்ணெய் வஸ்துக்களையும் நோன்பு திறக்கும் போது தவிர்க்கலாம். போண்டா, பஜ்ஜி, வடை என்று எண்ணெய் வஸ்த்துக்களே நம் வீடுகளில் நிறைய செய்து சாப்பிடுவோம். இவற்றை நோன்பு திறந்து நேரம் கழித்து சாப்பிடலாம்.
11 – இது நோன்பு மாதம் என்பதால் மிஸ்கீன்கள் நம் வீடுகளுக்கு தவறாமல் வரும் வாய்ப்புள்ளது. அப்படி வரும் மிஸ்கீன்களின் உள்ளத்தில் என்ன நம்பிக்கை இருக்கும் தெரியுமா..? ‘இது புனிதமான ரமளான் மாதம் அதனால் நமக்கு நிறைய தர்மம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கையை பல-பல வீடுகளில் பொய்பித்து விடுகிறார்கள். வீடு தேடி வரும் ஏழைகள் மீது எரிந்து விழுவார்கள். முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பி விடுவார்கள். வீடு வீடாக கையேந்தும் அந்த ஏழைகளின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதையெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை. நாம் கொடுக்கும் தர்மத்தால் நம் வீட்டில் கடன் சுமை ஏறிப்போய் விடாது. இது நன்மையை வாரி வழங்கும் மாதம் என்பதால் நாம் வழங்கும் தர்மங்களால் பல நூறு மடங்கு அல்லாஹ்விடம் நமக்கு வெகுமதி காத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ரமளான் மாதம் வந்து விட்டால் நமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வரித்துக் கட்டிக் கொண்டு நன்மையை செய்ய இறங்கி விடுவார்கள். வேகமாக வீசும் காற்றை விட அவர்களின் தர்மமும் நற் செயல்களும் துரிதமாக இருக்கும் என்றெல்லாம் அவர்களின் தோழர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியாவிட்டாலும் கூட நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும் – செய்யும் பக்குவத்தை இந்த ரமளான் முதல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
12 – ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் மிக முக்கியமான ஒரு இரவு நம்மையெல்லாம் சந்திக்க இருக்கின்றது. அந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கிறான். நம்மால் பள்ளிகளில் சென்று இரவுத் தங்கி அந்த இரவைப் பெற முடியாவிட்டாலும் நம் வீடுகளில் இருந்து அந்த இரவை எதிர்பார்க்கலாம். கடைசி பத்து நாட்களின் இரவு வேலைகளில் நீண்ட நேரம் தொழுவது – அல்லாஹ்வை திக்ர் செய்வது – குர்ஆன் ஓதுவது – அவனிடம் கையேந்தி நம் தேவைகளை முறையிட்டு மறக்காமல் முஸ்லிம் சமுதாய நலனுக்காகவும் நமது மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். அடுத்த வருட ரமளானட வரை வாழ்வோம் என்பது உறுதி இல்லை என்பதால் இந்த வருட லைலத்துல் கத்ரை அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.
13 – ‘பெருநாள்’ நமக்கெல்லாம் மகிழ்சிகரமான நாள். புது உடைகளை உடுத்துவதில் உள்ளம் குதூகளிக்கும். அதற்காக பல ஜவுளிக் கடைகளை ஏறி இறங்கி பல மணி நேரத்தை செலவிட்டு புடவை எடுப்போம். மனதிற்கு பிடித்தமாதிரி புடவை அமைந்து விட்டால் பூரிப்பு இன்னும் அதிகரிக்கும்.
அன்றைய தினம் நம் இல்லங்களில் தாய் – தந்தை – அண்ணன் – தம்பி – அக்காள் – தங்கை – கணவர் – குழந்தைகள் என்று எல்லோரும் புது ஆடை உடுத்தி மகிழ்சிக் கடலில் மூழ்கி இருக்கும் போது எத்துனையோ ஏழைகள் இதற்கு வழியில்லாமல் சோகத்துடனும் மன சுமைகளுடனும் தம் வீடுகளில் அடைந்து கிடப்பார்கள். அந்த சந்தோஷமான நாளை வெளியில் சென்று அவர்களால் கொண்டாட முடியாது.
இருக்கும் மொத்த ஏழைகளுக்கும் நம்மால் உடை எடுத்துக் கொடுக்க முடியாது – (பொருளாதார வசதி இருந்தால் நம் பெண்களில் பலர் நிறைய செய்வார்கள்) அதனால் நாம் உடை எடுக்கும் போது புடவையின் விலையை கொஞ்சம் குறைத்து ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண்களுக்கு இரண்டு புடவை எடுத்துக் கொடுக்கலாம். நம் புது ஆடை உடுத்தும் அதே வேலையில் அந்த பெண்களும் நம் மூலம் புது சேலை உடுத்துவார்கள். அன்றைய தினம் முழுவதும் அவர்களின் எண்ணமெல்லாம் நீங்கள் தான் இருப்பீர்கள். அந்த ஏழைகளின் சந்தோஷத்தில் அல்லாஹ்வின் சந்தோஷம் கிடைக்காதா…
14 – நம்மில் நிறையப் பெண்கள் தொடர்ந்து தவறவிடும் – ஆனால் தவற விடக் கூடாத – தொழுகை பெருநாள் தொழுகை. இந்த ஆண்டு அதை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஆண்டுக்கொரு முறை மட்டும் தொழும் தொழுகையாகும் அது.
இந்த புனித ரமளானை அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்தில் நாமெல்லாம் அமைத்துக் கொள்ள உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் எனக்காக நீங்களும் பிரார்த்தியுங்கள்.
-ஜுபைதா
source: http://tamilmuslimway.blogspot.in/2011/07/blog-post_9100.html