இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையே!
இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை.
ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த ஃபத்வா ஓர் உதாரணம் என்பதால்… மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.
இது போல பல பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், மார்க்கம் கற்ற பலர் தொடர்ந்து தீர்ப்பளித்து சமூகத்தின் முன்னேற்றத்தை அழித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஒரு வார காலமாக எட்டாம் வகுப்பு வரை பெண்ணுக்கு கல்வி போதுமென்றும், பத்தாம் வகுப்பு வரை கல்வி போதுமென்றும், படிப்பை நிறுத்தி விட்டு மதரஸாவில் சேர்க்கலாம் என்றும், பிரச்சாரம் செய்யத் தொடங்கி உள்ளனர்.
இப்போது தான் தட்டுத் தடுமாறி, கல்வியின் அவசியத்தை உணர்ந்து இஸ்லாமிய மக்கள் தன் பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி வருகிறார்கள். இந்நிலையில் பெண் கல்விக்கு எதிராக இவர்கள் செய்யும் பிரச்சாரத்தை ஒரு சமுதாய பொறுப்பற்ற செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. எல்லாவற்றிலும் மேலாக இது போன்ற செயல்கள் எல்லாமே தன் கடமையிலிருந்து தப்பிக்க முயலும் யுக்தி என்றே சொல்லலாம்.
எப்படி என்று இறுதியில் பார்க்கலாம்.
பெண் கல்வி வேண்டாம் என்பதற்கு இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தீர்வு ஒன்று இருப்பதை மறந்துவிடுகிறார்கள்.
அப்படி என்ன தான் சொல்கிறார்கள்? ஏன் பெண் கல்வி வேண்டாம் என மறுக்கிறார்கள்?
o மாற்று மதத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு ஓடிவிடுகின்றனர். நட்புகளால் தவறான வழிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதனால் பள்ளி படிப்பு வேண்டாம்.
o பள்ளிக்குச் செல்ல வேன் டிரைவருடன் அல்லது ஆட்டோ ஓட்டுனருடன் அனுப்புவதால் அவர்களால் கவரப்பட்டோ அல்லது அவர்களால் தொந்தரவுகளுக்கோ ஆளாகின்றனர்.
o தொலைவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பும் சூழல் நிலவுவதால் பெற்றோர் கண்காணிப்பிலிருந்து தவறி, தவறான வழிக்கு செல்கின்றனர்.
o பள்ளிகளில்..நிர்வாகிகளின் சில்மிஷங்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆகவே பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்போடும் பத்தாம் வகுப்போடும் நிறுத்தி விட்டு மதரஸாவில் சேர்த்து இம்மை மறுமை பயனை பெண் பிள்ளைகளுக்கு கிடைக்க பெற்றோர்கள் வழி வகை செய்ய வேண்டும்.. டாட்….
இவர்கள் முன் வைக்கும் கருத்தை மேலோட்டமாக நாம் பார்த்தால் சரியானதாகவே தோன்றும். ஆனால் தீர்வு…? பெண் பிள்ளைகள் செய்யும் தவறாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் தீமைகளாலும் அவமானமும் துன்பமும் பெற்றோர்களுக்கே என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இத்தகு விஷயங்களுக்கு தீர்வு என்பது பள்ளிப்படிப்பை நிறுத்துவது அல்ல… இதை நாம் நன்கு சிந்தித்தால் விளங்கும். ஆனால் சிந்திக்கும் மனநிலையில் நாம் இல்லை.
முதலாவதாக….பெண் பிள்ளைகள் மாற்று மதத்தினருடன் காதல் வயப்பட்டு ஓடிச் செல்ல யார் முதல் காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும். அதிகப்படியான சுதந்திரம் கொடுத்து, எங்கே செல்கிறாள்? யாரை சந்திக்கிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்பதெல்லாம் கண்காணிக்காமல், மார்க்க கல்வியை விட்டும் இஸ்லாம் கூறும் வாழ்வியல் ஒழுக்க போதனைகளை விட்டும் தடுத்த பெற்றோர்கள் அல்லவா இதற்கு காரணம்? ஆதலால் பெற்றோர்களை ஊர் விட்டு ஒதுக்கி வைத்து விடுவோமா?
மேலும் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வெளியிடும் கெசட்டை ஆராய்ந்தால் ஓர் உண்மை நிலை புரியும். இஸ்லாத்தை தழுவியதாக வந்த பெண்களில் பாதி பேர் இஸ்லாமிய ஆண்களால் காதல் வயப்பட்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டவர்கள். இங்கே பெண்களுக்கு வழிகேடு என நாம் விதிக்கும் அளவுகோல் காதல் எனில், அதே காதலால் தான் இஸ்லாமிய ஆண்களும் வழி கெட்டு போகிறார்கள். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல, இன்றைய ஆண் பிள்ளைகளும் மாற்று மத பெண்களுடன் காதல் வயப்பட்டும், மது, சிகரெட், அந்நியப் பெண்கள் மீது சில்மிஷம் என சீர்கெட்டு ஒழுங்கீனர்களாக உலாவுவது கண்கூடு. ஆனால் இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.
ஆகவே, சம உரிமை பேணும் மார்க்கமாம் இஸ்லாம் வழிமுறை பேணி , ஆண்களையும் எட்டாம் வகுப்புடன் பள்ளி படிப்பு போதுமென நிறுத்தி மதர்ஸாவில் சேர்த்து தீன் கல்வி புகட்டுவோமா? பாவம் அவர்களும் பெண்களைப் போல் மறுமையின் நன்மையை அள்ளட்டுமே? ஆண்களாய் பிறந்த ஒரே குற்றத்திற்காக வழி கெட்டு போனாலும் பரவாயில்லை என அவர்களை கண்டுக்காமல் விடுவது ஆணினத்திற்கு இழைக்கும் அநீதியல்லவோ? வாருங்கள் இருவரின் தவறை உணர்ந்து இரு தரப்பின் கல்வியையும் மூட்டை கட்டி மதர்ஸாவில் கொண்டு போய் சேர்த்து முட்டாள் சமுதாயத்தை உருவாக்குவோம். மதர்ஸாவில் சேர்வது முட்டாள் தனமா என கேட்கலாம்.. தொடர்ந்து வாசியுங்கள்… இன்றைய மதர்ஸாக்களின் நிலையை பின்னர் சொல்கிறேன்.
அடுத்ததாக ஆட்டோ டிரைவருடனும் வேன் டிரைவருடனும் அனுப்புவது குறித்து..! மூன்று மைல்களுக்கு மேல் மஹரமின்றி வெளியே செல்லக் கூடாது என்று கூறி வருகிறார்கள். இதன் வரையறை குறித்து சில கருத்துக்கள் உண்டு. போகட்டும். இப்போது கேள்விக்கு வரலாம். டிரைவருடன் பெண்ணை அனுப்புவது யார்? பள்ளிக்கு அனுப்ப சரியான ஏற்பாடு செய்து கொடுக்காமல் தன் பொறுப்பை தட்டி கழித்தது யார்? தகப்பன் எனும் தன் கடமையில் இருந்து தவறி வளைகுடாவில் தன் காலத்தை கழித்தவர் தானே..? சரி, அவரை குறை சொல்லவும் முடியாது. பொருளாதார தேவை நிறைவேற்றுவது அவரின் கடமை.
ஆனால்..? குடும்ப பொறுப்புக்களை சுமந்து கொண்ட தாய்மார்கள் என்ன செய்கிறார்கள்? காலைக்கும், மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து 8மணிக்கு பிள்ளையை அனுப்பியதோடு தன் கடமை முடிந்து விட்டதாய் எண்ணி பக்கத்து வீட்டில் கதை பேசவோ, சன் டிவி சீரியலில் மூழ்கவோ செய்கிறார்கள். மாலை மகள் வரும் வரை எந்த கவலையும் இருப்பதில்லை இவர்களுக்கு..ஏன் அவர்களே தன் மகளை தன் நேரடி கண்காணிப்பில் அழைத்துச் செல்ல கூடாது.? அல்லது திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவை நியமிக்க கூடாது? ஆக, எங்கே, யார் மூலம் முதல் தவறு நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். தன் கடமைகளை எளிதாக இன்னொரு இடத்திற்கு கடத்திவிட்டு கல்வி மேல் பழி போடுகிறார்கள். யோசிக்க வேண்டாமா.? பெற்றோர்களுக்கு அறிவுரைச் சொல்லாமல் உடனே பெண் கல்வி நோக்கி வருகிறார்கள். அது தான் எளிய தீர்வாக அமைந்துவிட்டது இவர்களுக்கு…
பெண்கள் வயதிற்கு வந்ததும் பள்ளி கூடத்தை தீண்டத்தகாத இடம் போல கருதி படிப்பை நிறுத்தி விடுவதால்..எத்தனை, எத்தனை வருங்கால சாதனைப் பெண்களை இச்சமூகம் இழந்திருக்கும் ? ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா-வின் அறிவை போற்றும் இச்சமூகம் தான், பெண் கல்விக்கு என்று ஒரு குறிப்பிட்ட எல்லை வகுக்கிறது.
ஓர் ஊரில் வருடந்தோறும் 100 மாணவிகள் கல்வி கற்பதாக வைத்துக் கொள்வோம். அதில் எங்கோ எப்போதோ சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும்.. வயலில் இருக்கும் ஒன்றிரண்டு களைகளுக்காக ஒட்டு மொத்த வயலின் விளைச்சலையும் தடுப்போமா? ஒன்றிரண்டு பெண்கள் செய்யும் தவறுகளுக்காக மீதமுள்ள பெண்களின் கல்விக்கு தடை விதிப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியல்லவா?
இருக்கும் பெண்களை எல்லாம் எட்டாம் வகுப்போடும் பத்தாம் வகுப்போடும் நிறுத்தி விடுவதாக வைத்துக் கொள்வோம். வருடந்தோறும் 8ம் வகுப்பு முடித்த 100 ஆலிமாக்களை உருவாக்க முடியும். ஆலிமாக்களை மட்டும் தான் உருவாக்க முடியும். அணுகுண்டு பட்ட இடத்தில் புற்களுக்கு வேலையில்லை என்பது போல் உங்கள் பத்வாக்களால் இஸ்லாமிய பெண்கள் கட்டாயமாக தடம் பதிக்க வேண்டிய துறைகள் பலவற்றுக்கும் வாசல் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டு விடும். அல்லாஹ்விற்கு அஞ்சி சேவை செய்யும் எத்தனையோ பெண்களால் இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களும் பயன் இழப்பர்.
ஓர் உதாரணம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மூலைக்கு மூலை பெண் டாக்டர்கள் உண்டு. ஆனால் பிரசவத்திற்கு இராமநாதபுர செய்யதம்மாள் மருத்துவமனையை மக்கள் மதபேதமின்றி நாடி வருகின்றனரே ஏன்? அல்லாஹ்விற்கு அஞ்சி அவர்கள் தன் சேவையை செய்வதால்… முழுக்க முழுக்க சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, முடியாமல் போனால் மட்டுமே சிசேரியன் செய்வார்கள். இதனை எனக்கு சொன்னது பக்கத்து வீட்டு இந்து மத சகோதரி.
எத்தனையோ கல்லூரி இருந்தும் இஸ்லாமிய கல்லூரியை நோக்கி மக்கள் வருகிறார்களே. ஏன்?
இங்குள்ள நிர்வாகிகள், பெண்களின் ஒழுக்கத்திலும்,உடையிலும் கவனம் செலுத்துவதால்…
பெண்களுக்கென்று தனி இடவசதியும், பெண் இஸ்லாமிய ஆசிரியையும் நியமிப்பதால்…
தன் குழந்தையும் ஒழுக்கத்தை கற்கும் என நம்பி அனுப்புகிறார்கள்.
இந்த துறைகளில் முஸ்லிம் பெண்களே இல்லை என்ற நிலையை கற்பனை செய்து பாருங்கள்!
ஜமாத்தினர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் எல்லாம் தரமற்று இருக்க… பெண்களால் நிர்வகிக்கப்படும் கீழக்கரை, அதிராம்பட்டிணம் மகளிர் கல்லூரிகளின் உச்ச தரத்தை பார்த்தேனும் உங்கள் கருத்துக்களை பரிசீலனை செய்யுங்கள்..
பெற்றோர்கள் தரப்பில் செய்ய வேண்டியவை :
o யாரோ ஒருவருடன் பள்ளிக்கு அனுப்புவதை விடுத்து நேரடியாக பெற்றோரோ அல்லது அவர்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட மணமுடிக்கத் தகாத உறவினர்கள் மூலமாகவோ பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
o பெண் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் நட்புவட்டம் குறித்தும் செயல்பாடு குறித்தும் நுனிவிரலில் துல்லிய தகவல் பெற்றிருக்க வேண்டும். தான் கண்காணிக்கப்படுகிறோம் என தெரியவரும் பெண்கள் குற்றம் செய்வது குறையும். அதே நேரம் ஹிட்லராக அல்லாமல் பாசமாகவும் தோழியாகவும் இருங்கள்.
o தொலை தூரங்களுக்கு மேற்கல்வி படிக்க வைக்கும் சூழல் நிலவினால் பல்லை கடித்துக்கொண்டு மூன்று வருடங்களுக்கு அக்கல்லூரி அருகிலேயே வீடு எடுத்து நேரடி கண்காணிப்பில் கல்லூரிக்கு அனுப்புங்கள். ஹாஸ்ட்டல் பீஸ், சாப்பாடு செலவு, இதர செலவுகள் என பார்த்தால் எல்லாம் சரியாத்தான் வரும். மாற்று மத பெற்றோர்கள் இவ்விஷயத்தில் நமக்கு வழிகாட்டி. தன்னால் முடியாத போதும் வீடு வாடகைக்கு பிடித்து பாட்டி தாத்தா கண்காணிப்பில் விடுகின்றனர். தன் பெண்ணுக்கு தேவையான கண்காணிப்பும் கிடைக்கிறது, ஒழுக்க போதனையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் கல்விக்கும் ஒழுக்கத்திற்கான ஏற்பாடுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நமக்கெல்லாம் ஓர் பாடம்.
o இன்றைய கல்வி முறை பெண்களின் திருமண வயதையும் மீறி கல்வி தொடர வைப்பதாக உள்ளது மறுப்பதற்கில்லை. திருமண உணர்வை கட்டுபடுத்தும் பெண்கள் தவறான வழிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. இஸ்லாமும் அதனால் தான் பெண் திருமணத்தை விரைவுபடுத்தச் சொல்கிறது. ஆனால் திருமணத்தால் கல்வி தடைபடும் சூழலும் நிலவுவதால் திருமணம் செய்யவிருக்கும் ஆண்களின் ஒத்துழைப்பும் தேவை. திருமணம் முடித்த பின்னும் கல்வி தொடரச் செய்ய பேருதவி புரிய வேண்டும்.
o இன்றைய மேற்கத்திய கல்வி முறை மார்க்க கல்வியை போதிப்பதில்லை என்ற கருத்தும் உண்மையே. அதற்காக கல்வியை தடை செய்வது அதை விட மிகப்பெரும் அபத்தம். பெற்றோர்களே நேரடியாக கற்றுக்கொடுக்கலாம், “ஓததெரியாதவங்களாக இருக்கோமே” என பல பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. தமிழிலும் புத்தகங்கள் வந்துவிட்டன. கல்வி தேட வயது வரம்பு தேவையில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் உங்கள் மார்க்க அறிவை மேம்படுத்த சில மணி நேரங்கள் ஒதுக்கினால் ஓர் வீட்டிற்கு ஓர் தாய் ஆலிமா தயார்.. ஆக பெற்றோர்களும் கற்றுக்கொடுக்கலாம், பகுதி நேர மதர்ஸா கல்விக்கும் அனுப்பலாம்.
பெற்றோர்களே கவனியுங்கள் !
உங்கள் சௌகரியத்திற்காக உங்கள் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்களா? உங்கள் கடமை குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அசட்டைத்தனத்திற்காக பெண்களின் உரிமையை பறித்துவிடாதீர்கள்.
ஆண்களின் தரப்பிலான இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டியவை :
கரையானிற்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் அறியாத்தனம் மிக மிக குறையானது என்பதை உணர்ந்து சரியான தீர்வை நோக்கி பயணியுங்கள். வட்டி ஹராம் என்றாலும் நிர்ப்பந்தம் காரணமாக அதில் பணபரிமாற்றம் செய்வதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்கிறோம். நம்மை பள்ளி வாசலில் அனுமதிக்கவில்லை என்பதற்காக மறுமை நலனுக்காகவும் அல்லாஹ்விற்காகவும் அஞ்சி தனி பள்ளிவாசல் கட்டுகிறோம். இப்படியாக மாற்று ஏற்பாடு இல்லாத போது ஹராமை வேண்டா வெறுப்பாய் ஏற்கும் நாம் , தவறான வழிகாட்டலின் போது இறைவனின் உவப்பைப் பெற மாற்று ஏற்பாடாக தனி பள்ளி அமைத்து தீர்வு காண முயலும் நாம் , பெண் என்ற ஒரே காரணத்திற்காக தீர்வுகள் இருந்தும் செய்யாது விடுவது சரியா?
பெண் குழந்தைகளைப் பற்றி பேசுபவர்கள், தற்கால ஆண்கள் தாம் மணமுடிக்கும் பெண்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதையும், தகுந்த இடத்தில் வேலைக்கு செல்வதை ஊக்குவிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண் மீதான விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக எளிதான, அதே சமயம் அழிவுக்கான தீர்ப்பை முன்வைப்பதை விடுத்து தொலை நோக்கு பார்வையுடனும், பின் விளைவுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாய் செயல்படும் போக்குடனும், இஸ்லாமிய முன்னேற்றத்திற்காக தர்க்க ரீதியான தீர்வுகளை முன் வைக்கும் பக்குவத்துடனும் செயல்பட வேண்டும்.
என்னென்ன செய்யலாம் ?
o பெற்றோர்கள் முதலில் மார்க்க அறிவை வளர்க்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கலாம். இன்றைய முஸ்லிம் பெற்றோர்கள் புர்கா போடுவது மட்டுமே பெண்களின் சட்டம் என நினைக்கின்றனர். மனதை சுத்தப்படுத்தாமல் உடலை மறைத்து விடுவதால் என்ன பயன் ? பல நாள் சுத்தம் செய்யாத உடலை எவ்வளவு நறுமணம் கொண்டு மறைத்தாலும் அதன் உண்மையான மணம் வெளிப்பட்டு மற்றோரின் முகச்சுளிப்புக்கு ஆளாக்கி நம்மை தலைகுனியச் செய்வது போலவே அபாயகரமான முறை தான் இது. முதலில் இஸ்லாம் கூறும் பெண் வளர்ப்பை பெற்றோர்களுக்கு போதிக்க வேண்டும்.
o நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். சிறுமிகள் மட்டுமா வழிதவறுகின்றனர்? பக்குவம் பெற்ற நடுத்தர வயது பெண்கள் வழி கெடுவதில்லையா? ஆக காரணி என்பது கல்வி அல்ல.. பெண்களிடையே இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. அதை விட மேலாக இஸ்லாமியர்களுடனான தொடர்பு இல்லாமல் இருப்பது. ஆக ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்களிடையே தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எப்படி? தெருவிற்குத் தெரு பள்ளிவாசல் ஏற்படுத்த முடிந்த நம்மால் ஊருக்கு ஒன்று வீதம் பெண்களுக்கு தனிப் பள்ளி உருவாக்கி கொடுக்க முடியவில்லை. பள்ளிவாசலை பிரம்மாண்டமாய், விசாலமாய் கட்ட முடிந்த நம்மால் அதில் சிறு பகுதியை பெண்களுக்காக ஒதுக்க முடிவதில்லை. இப்படி மார்க்க வாசனையே நுகர வைக்க முடியாமல் தடுத்து வைத்திருப்பது நாம் செய்த முதல் பெரிய தவறு.
o பெண்களும் தன் போதனை கேட்க அவர்களின் வசதிக்காக தனி நாளை ஒதுக்கி கொடுத்த நபிகளாரின் வழி வந்த நாம் ஜும்மா உரைகள் கேட்கும் வாய்ப்புகளை கூட ஏற்படுத்தி தர முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒதுக்கி வைப்பதாலையே நம் சமூகம் விட்டு அவர்கள் ஒதுங்குகிறார்கள் என்ற நிதர்சனத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
o இன்றைய நம்மூர்களில் ஜமாத் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மதரஸாக்களாகட்டும், குர்ஆன் ஓத தெரிந்த பெண்களால் மாலை நேர டியூசன் போல் அமைக்கப்படும் மதரஸாக்களாகட்டும்.. அரபி எழுத்துக்களை கற்று குர்ஆனை ஓத வைக்கவும், ஐந்து கலிமாக்களை மனனம் செய்வதையே தலையாய பணியாக செய்கிறார்கள். குர்ஆன் முடித்த மாணவனிடம் ஃபஜ்ர்க்கு எத்தனை ரக்அத் என கேளுங்கள்.. இன்றைய மதரஸாக்களின் தரம் புரியும். மார்க்கத்தையே முழுமையாக போதிக்கத் தவறும் இந்த அமைப்புகளாலா உலக கல்வியை போதிக்க முடியும் ? முதலில் இவற்றை சரி செய்து ஒழுக்கத்தையும் மார்க்க சட்டத்தையும் போதிக்கும் இடமாக மாற்ற வேண்டும்.
o உலகக் கல்வியை கற்றுக் கொண்டே மார்க்கக் கல்வியை மாலையில் கற்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். உலக கல்வியுடன் சேர்த்து மார்க்கக்கல்வியும் போதிக்க வைக்க வேண்டும். பெண்களுக்கு போதிக்க தனி இடம், தனி ஆலிமா உருவாக்கி தர வேண்டும். இவை அசர் தொடங்கி இஷா வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு பேட்ஜ்களாக வைத்து வசதிபட்ட நேரத்தில் வகுப்பில் கலந்துக்கொள்ளும் படி செய்ய வேண்டும். இவ்வசதி இல்லாததால் தான் பள்ளி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். அல்லது வயதுக்கு வந்ததும் மதரஸாவுக்கு அனுப்புவதை நிறுத்தி விடுகின்றனர்.
o ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிகூடங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். அவை இல்லாத ஊரில் பெண்களுக்கான மார்க்ககல்வி +உலகக் கல்வி போதிக்கும் புதிய பள்ளிகூடங்கள் ஏற்படுத்தி அவை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் குறைந்த கட்டண வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
o கீழக்கரை, அதிராம் பட்டிணம் போன்ற ஊர்களில் இருக்கும் இஸ்லாமிய கல்வியை சேர்த்து போதிக்கும் மகளிர் கல்லூரிகளை போல் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலாவது அமைக்க வழிசெய்து நம் பெண்களை அக் கல்லூரிகளில் பயில வைக்க வேண்டும்.
o இஸ்லாமிய நூலகங்கள் அமைத்து பெண்களும் பயன்படுத்தும் வண்ணம் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு வகையிலும் இஸ்லாமிய பெண்களின் மார்க்க அறிவை மேம்படுத்தி இறையச்சத்தை அதிகமாக்க வேண்டும்.
o விடுமுறை நாட்களில் வாரந்தோறும் பயான்கள் பெண்களுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்கள் பயான் என்றதும் பழைய மாவையே அரைக்காமல் நாட்டு நடப்பையும் போதித்து , இன்றைய இளைய தலைமுறையினர் செய்யும் தவறுகளால் விளையும் தீமைகளையும் எச்சரிக்கைகளாக கூறப்பட வேண்டும்.
o பள்ளிக்கூடத்திற்கு தடை போட்டால் தான் ஆலிமா பட்டம் பெற முடியும் என்ற நிலையை மாற்றி பகுதி நேர கோர்ஸ்கள் மூலம் ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணையும் ஆலிமாக்களாக்கலாம். எட்டாம் வகுப்பு படித்த ஆலிமாவை விட இன்சினியரிங் முடித்த ஆலிமாவால் இன்னும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும் அல்லவா.? நம்மை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சிகளை புரிந்துக்கொள்ள முடியுமல்லவா.? உலக அரசியலை அறிந்து தக்க விழிப்புணர்வை உருவாக்கும் அல்லவா..?
o மாற்று மத ஆண்களின் வேன்களில் அனுப்புவதால் கவர்ந்திழுக்கும் அச்சம் நிலவினால் அதற்குரிய மாற்று ஏற்பாட்டையும் செய்து கொடுக்கலாமே.. ஊரில் எத்தனையோ இஸ்லாமிய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களைக் கொண்டு ஜமாத் நிர்வாகத்தினர் வாகன வசதிகளை ஏற்படுத்தி அதற்குரிய தொகையை பெற்றோர்களிடம் வசூலிக்கலாம்.
இப்படி எத்தனையோ வழி இருந்தும் கண்டுக் கொள்ளாமல் எளிதாக பெண் குழந்தைகளின் கல்வியில் கை வைக்கிறோம். இது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் ?
பெண்களுக்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட பெண்களின் நிர்வாகிகளே! எங்கள் உரிமையை பறிக்க அனுப்பப்பட்டவர்கள் இல்லை நீங்கள்! நிர்வாகம் என்பது நேர்த்தியாய் நடத்தப்பட வேண்டியது, உங்கள் கீழ் இருப்பவர்களை அடிமைகளாக பாவிப்பதற்காக எம் அதிபதி உங்களுக்கு அப்பொறுப்பை வழங்கவில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் இருந்து தவறினால் படைத்தவனிடம் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். எங்கள் உரிமையை பாதிக்காத வகையில் எங்களை வழி நடத்துவதே உங்கள் கடமை. அல்லாஹ் கொடுத்த பணியை நேர்த்தியாக செய்து முடிப்பதை விடுத்து உங்கள் சௌகரியத்திற்காக இலகுவாக்க முயற்சிக்கிறீர்கள். மறுமை வெற்றி எளிதாக கிட்டும் என்ற நம்பிக்கையா?
உங்களுக்குரிய பணிகளை முதலில் செய்யுங்கள்…. பள்ளிப்படிப்பை கை விட்டால் தான் ஒழுக்கம் மலரும் என்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையும் பிரச்சாரங்களையும் கைவிடுங்கள். கல்வியறிவு இல்லாத எம் பாட்டிகளால் தான் எம் தந்தைகளை பாலைவன அனலில் கொதிக்க வைத்தோம். கல்வி விழிப்புணர்வு இல்லாத எம் தாய்மார்களால் தான் எம் சகோதரர்களை வளைகுடாக்களின் வளர்ச்சிக்கு தாரை வார்த்துக்கொடுத்தோம். கல்வியறிவை மறுத்ததன் காரணமாகத் தான் கணவனால் கை விடப்பட்ட எம் சகோதரிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளினோம். கல்வி தடை செய்ததால் பீடி சுற்றும் தொழிலுக்கு எம் இளைய சமுதாயத்தை கொத்தடிமைகளாக்கினோம்.
அறிவுரை சொல்வது எளிது. அதன் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு இங்கே இருக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. இனியாவது உணர்ச்சி வசப்படுதலில் கொட்டும் பிரயோசனமற்ற ஃபத்வாக்களை விடுங்கள்… பெண்கள் அவர்களின் உரிமையை பெறட்டும்.
உங்கள் சகோதரி
ஆமினா.