ரமலானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள்
ஃபெரோஸ்கான்
ரமலானை அடைந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகிறோமா?
மற்ற மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை தரக் கூடிய இம்மாதத்தின் ஒவ்வொரு விநாடியும் வீணாக்காமல் பயன்படுத்துகிறோமா?
நம்மில் பலர் ரமலானின் ஆரம்பத்தில் இருந்ததை போன்றே ரமலானின் இறுதியிலும் இருக்கிறோம். ஒவ்வொரு ரமலானிலும் “இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது என்னை திருத்தி கொள்வேன்” என்பதே. கடந்து செல்லும் ரமலான்கள் நம்மில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வரும் ரமலான் அதிலிருந்து மாறுபட்டு நம்மை பாதிக்க கூடிய ஒன்றாக மாற நாம் முழுமையாய் ரமலானின் பலனை அடைந்து கொள்ள எளிமையான 15 வழிகளை பட்டியலிட்டுள்ளேன்.
படிப்பதோடு நின்று விடாமல் இன்ஷா அல்லாஹ் அமுல்படுத்தவும் செய்யுங்கள். பட்டியலிடும் விஷயங்கள் மிக அடிப்படையான ஒன்றாக கூட இருக்கலாம். நாம் பெரும்பாலும் அடிப்படைகளில் தானே கோட்டை விடுகிறோம். இல்லையென்றால் நம்முடைய பள்ளிகளில் பஜ்ர் தொழுகைக்கும் ஜும்மாவுக்கும் வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்குமா என்ன?
1. சிதறடிக்கும் செயல்கள் முந்தைய தலைமுறையை விட நம்மை ரமலானின் நோக்கத்தை அடைய விடாமல் தடுக்கும் செயல்கள் ஏராளமாய் உள்ளன. அனுமதிக்கப்பட்ட செயல்களாக இருந்தாலும் ரமலானின் ஒவ்வொரு விநாடியையும் வீணாக்கி விட கூடாது எனும் அடிப்படையில் சில செயல்களிலிருந்து நம்மை விலக்கி கொள்ளவோ அல்லது குறைத்து கொள்ள வோ முயற்சிக்க வேண்டும். (உம்) தொலைக்காட்சி பார்த்தல், பத்திரிகைகள் படித்தல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உபயோகித்தல், தேவையின்றி நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடுதல், தேவைக்கு அதிகமாக உறங்கி காலத்தை கழித்தல்.
2. இறைவனின் கண்காணிப்பு குறித்த உணர்வு அல்லாஹ் நோன்பின் நோக்கத்தை பற்றி சொல்லும் போது தக்வா உடையவர்களாக மாறவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். நோன்பு நோற்கும் போது யார் பார்க்காவிடினும் அல்லாஹ் பார்க்கிறான் எனும் உணர்வால் உண்ணாமல், பருகாமல் இருக்கும் நாம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களையும் இறைவன் கண்காணிக்கிறான் எனும் உணர்வை பெற்று கொள்ள வேண்டும்.
3. அறிவு இஸ்லாத்தை பற்றிய் அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவது. குறிப்பாக ரமலான் மாதத்தின் சிறப்புகள், நோன்பின் சிறப்புகள், நோன்பின் ஏவல் – விலக்கல்கள், கியாமுல் லைல் குறித்த விடயங்களை தெரிந்து கொள்வது ரமலானை முழுமையாய் அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
4. பாவங்களை விட சிறந்த காலம் நம்மில் விட முடியா பாவங்கள் ஏதும் இருந்தால் அதை முழுமையாய் களைவதற்கு சிறந்த தருணம் ரமலானை விட வேறொன்றுமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “யார் பசித்திருந்து தாகித்திருந்து பொய் பேசுவதையும் தீமையான விடயங்களையும் விடவில்லையே அவர் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்கு தேவையில்லை” என்பது நாம் அறிந்த விடயமே. எனவே ரமலானில் புகை பிடிப்பது, தீமையான விஷயங்களை பார்ப்பது, புறம் பேசுதல் போன்ற அனைத்து தீய விடயங்களை ரமலானில் விடுவதன் மூலம் ஒட்டு மொத்தமாக வே அவற்றை நம்மிலிருந்து களைய வேண்டும்.
5. தொழுகை நம்மில் பொதுவாக எல்லோரும் ரமலானின் தொழுவோம் என்றாலும் எல்லா நேரமும் இமாம் ஜமாத்துடன் முறையாக தொழுகைகளை பேண வேண்டும். பர்ளுடன் நிறுத்தி கொள்ளாமல் சுன்னத், நபில் வணக்கங்களையும் பேண வேண்டும். இப்பழக்கத்தை ரமலானுக்கு பிறகும் தொடர வேண்டும். தொழுகை முஃமினின் மிஃராஜ் எனும் அடிப்படையில் அல்லாஹ்வுடன் பேசும் எண்ணத்துடன் ஆர்வத்துடன் செல்ல வேண்டும்.
6. குர்ஆனுடன் தொடர்பு ரமலானில் குரான் இறக்கப்பட்டதன் காரணமாகவே ரமலானிற்கு இத்தகைய சிறப்பு உள்ளது. மேலும் குரான் இறக்கப்பட்ட இரவே 1000 மாதங்களை விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஜாஹிலிய்யத்தில் கிடந்த மக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனை கொண்டே நேர்வழிபடுத்தினார்கள். எனவே குர் ஆனுடனான தொடர்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முறையாவது குர் ஆனை முழுமையாய் ஓத வேண்டும். குர்ஆன் ஓத தெரியாதவர்கள் குர் ஆனை கற்று கொள்ள வேண்டும்.
7. தர்மம் ரமலானில் வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்ய கூடியவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள் எனும் கூற்றின் மூலம் இம்மாதத்தில் அதிகம் தர்மம் செய்ய முயல வேண்டும். குறிப்பாக ஜகாத் கடமையுள்ளவர்கள் அதை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
8. 30 நோன்புக்கும் அதிகமாக நோன்பிருக்க வேண்டும். 30 நோன்புக்கும் அதிகமாக நோன்பிருக்க முயற்சிக்க வேண்டும். எப்படி என்று வியக்கிறீர்களா? யார் ஒரு நோன்பாளியின் நோன்பு திறக்க உதவுகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு கொடுக்கும் நன்மையை இறைவன் தருகிறான் எனும் ஹதீதை நாம் கேள்விப்பட்டிருப்போம். எனவே குறைந்தது ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் 60 நோன்பின் நன்மை நமக்கு கிடைத்து விடும்.
9. துஆ அல்லாஹ் மறுக்காத மூன்று நபர்களுடைய துஆக்களில் ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவும் ஒன்றாகும். பெரும்பாலும் நம்மில் பலர் அந்நேரத்தை விருந்து கொடுப்பது, பள்ளிவாயிலில் இடம் பிடிப்பது, பேசி கொண்டிருப்பது என வீணடிக்கிறோம். எனவே அந்நேரத்தை வீணாக்காமல் நமக்காக, குடும்பத்திற்காக, உறவுகளுக்காக, சமூகத்துக்காக, போராளிகளுக்காக, நபிமார்களுக்காக என துஆ கேட்க வேண்டும்
10. இரவு தொழுகைகள் கியாமுல் லைல் எனப்படும் இரவு தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த விரைவு தொழுகைகளில் கலந்து கொள்ளாமல் நிதானமாக கிரா அத் ஓதும் அணிவகுப்பு தொழுகைகளில் கலந்து கொள்வதோடு நாமும் அதிகாலை நேரத்தில் தொழ வேண்டும். யார் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடன் ரமலானின் இரவுகளில் நின்று வணங்கினாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற இறைதூதரின் வார்த்தை நம் விஷயத்தில் மெய்யாக வேண்டும்.
11. ஸஹர் உணவு ஸஹ்ரில் அபிவிருத்தி உள்ளது எனும் பெருமானாரின் கூற்றுக்கேற்ப ஸஹ்ரை நிச்சயம் நாம் செய்ய வேண்டும். சிலர் இரவே உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவதை போல் செய்ய கூடாது.
12. மிஸ்வாக் நம்மில் பலர் தக்வா என்று நினைத்து கொண்டு ரமலானில் பல் விளக்காமல், குளிக்காமல் எந்த வேலையும் செய்யாமல் இருப்போம். நோன்பிருக்கும் போது நபி ஸல் பல தடவை மிஸ்வாக் செய்துள்ளார்கள் எனும் ஹதீஸின் அடிப்படையில் ரமலானிலும் சுத்தமாக இருக்க முயல வேண்டும்.
13. இஃதிகாப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாப் வைக்க கூடியவர்களாக இருந்தார்கள். எனவே நாமும் முடிந்த வரை கடைசி பத்து நாட்களோ அல்லது சில நாட்களோ இஃதிகாப் இருக்க முயல வேண்டும்.
14. பிறருக்கு உதவி ரமலானில் பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதிலும் குறை வைத்து விட கூடாது. இறைவனின் அடியார்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதிலும் நம்முடைய பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை குறையின்றி செய்ய வேண்டும்.
15. நமது இல்லத்திலும் ரமதானுடைய சூழல் நாம் முயலும் இத்துணை காரியங்களும் நம்முடைய இல்ல உறுப்பினர்களும் செய்ய கூடியவர்களாக மாறும் வகையில் நம்முடைய இல்ல சூழல்கள் மாற்றப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர் எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீதின் அடிப்படையில் நம்முடைய பொறுப்பில் உள்ள நம் மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் ஆகியோரையும் இவ்வடிப்படையில் வார்த்தெடுக்க முயல வேண்டும். அன்பு சகோதரர்களே, படித்து முடித்தவுடன் இதை எழுதிய என்னையும் உங்கள் பிராத்தனையில் இணைத்து கொள்ளுங்கள். நம்மை மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அல்லாஹ் எழுப்புவானாக.