கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் 15 கேள்விகள்!
[வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது?]
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.
குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.
1. சுமார் 1.5 கோடி இரு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 25% சென்னையில் மட்டும் இயக்கப்படுகிறது. 2013 டிசம்பர் ஆய்வறிக்கையின் படி பேருந்தால் 2000 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.19%. சரக்கு லாரிகள் மூலம் சுமார் 3000 பேர் இறந்துள்ளனர். இதர கார், ஜீப், டாக்ஸி மூலமாக 3708 பேர் இறந்துள்ளனர். மூன்று சக்கர வாகனம் மூலம் 415 பேரும், 1.5 கோடிகள் உள்ள இரு சக்கர வாகனம் மூலம் 4467 பேர் இறந்துள்ளனர். ஆக இறப்பு விகிதம் 0.031% மட்டுமே. வாகன விபத்தில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரு சக்கர வாகனம் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவு தான் என அறிய முடிகிறது. இதில் எப்படி இரு சக்கர வாகனம் மீது மட்டுமே குறை சொல்ல முடியும்? மேலும் இரு சக்கர வாகனம் மீது மோதும் கனரக வாகனத்தின் அத்துமீறலை ஏன் கண்டுகொள்ளவில்லை?
2. வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது? டாஸ்மாக்கை யாராலும் நெருங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. குறைந்த பட்சம் டாஸ்மாக் கடை முன் இரு சக்கர வாகனம், ஏன் எந்தவிதமான வாகனமும் நிறுத்த தடை விதிக்க முடியுமா? குடித்து விட்டு வண்டியை ஒட்டி போலீசுக்கு, சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாக உள்ளவர்களில், இந்த நீதிமன்றம் இதுவரை எத்தனைப் பேர் ஓட்டுனர் உரிமத்தை பறித்துள்ளது? ஒரு கையில் மதுவுடன் ஓடிய ஆம்னி பஸ் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை?
3. ஆண்டு 2005 முதல் 2015 மே மாதம் வரை 1.80 லட்சம் ஆட்டோக்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நெரிசலான சாலைக்கு லட்சக்கணக்கான ஆடோக்கள் அனுமதியை நீதிமன்றம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்? அதிலும் ஹெல்மெட் சட்டம் கடுமையாக இருந்த 2010-11ல் மட்டும் 60,000 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு தமிழக சாலையை ஸ்தம்பிக்க வைக்க களமிறக்கப்பட்டுள்ளன.
4. 2000-2013 வரை தமிழக அரசு போக்குவரத்து வாகனங்கள் மூலமாக சுமார் 20,672 கோடிகள் வசூல் செய்துள்ளன. ஆண்டுக்காண்டு வாகனப் பதிவின் மூலமாக, சாலை வரி மூலமாக பல கோடிகள் வருமானம் பார்க்கும் அரசு சாலையின் நெரிசலை கண்டுகொள்ளாமல் வாகனப்போட்டியை ஏற்படுத்துவது பற்றி அரசிடம் நீதிமன்றம் கேள்விகேட்காதது ஏன்? தமிழகத்தில் நடக்கும் வாகனப்பதிவில் 20% சென்னையில் மட்டும் நடக்கிறது.
5. பொதுப்பணித்துறையில் 45% கமிஷன் தொகை போக மீதமுள்ள 55% தொகையில் போடப்பட்ட சாலைகள் ஐந்தே நாளில் அரை மணி நேர மழைக்கு மறைந்து போன சாலை என ‘கின்னஸ்’ சாதனைக்கு அனுப்பும் அளவில் ஊழல் மூலம் போடப்பட்ட தரமற்ற சாலையால் விபத்து விகிதம் கூடும் நிலையில் நீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
6. 1993 முதல் 2013 வரை சுமார் 2 லட்சம் பேர் தமிழக சாலை விபத்தில் இறந்துள்ளனர். மோசமான, குறுகலான சாலை வசதி விபத்தின் எண்ணிக்கை உயர்வதால் புதிய வாகனப் பதிவை நீதிமன்றம் நிறுத்த முடியுமா? இந்தியாவில் அதிகமான கார் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. அதாவது, 100 பேரில் 43 பேர் கார் வைத்துள்ளார்கள். கோவை 9வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பெருகி வரும் கார் கலாசாரத்திற்கு, நீதிமன்றம் என்ன பதில் தர முடியும்?
7. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் போட்டு ஒட்டியும் நெஞ்சில் ஏறி உயிர் பறிக்கும் கனரக வாகனத்தின் வேகத்திற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்ல முடியும்? தலைக்கவசம் போட்டும் விபத்தில் இறந்தால் புல்லெட் ப்ரூப் போட வேண்டிய நிலை வருமா?
8. அதிகமான நபர்களை ஏற்றிச் சென்று போக்குவரத்து விதி மீறும் அரசுப்பேருந்தால் 13% விபத்துக்கள் நடந்துள்ளது. அரசு பேருந்தின் விபத்து தடுப்பு பற்றி நீதிமன்றம் என்ன தீர்ப்பு தரப்போகிறது? போக்குவரத்து விதிப்படி அரசு பேருந்து ஆட்களை ஏற்றிச் செல்கின்றதா? படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் நிலை?
9. 50 கி.மீ.க்கு மேல் வேகமாச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நீதிமன்றம் ஏன் தடை செய்ய முன்வரவில்லை? அதிவேக பைக்குகள் தயாரிக்கும் பத்து நிறுவனத்தை நீதிமன்றம் 50 கி.மீ.க்கு மட்டுமே வாகனத்தை வடிவமைத்து வேக கட்டுப்பாடு கொண்டு வர சட்டம் இயற்ற முடியுமா? மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக அதிரடி உத்தரவிட முடியுமா?
10. இரு சக்கர வாகனத்திற்கு அடுத்தபடியாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் வருகின்றன. நின்ற லாரி மீது மோதிய வாகனம் என்ற மரணச் செய்தி தினமும் வருகிறது. குடும்பம் குடும்பமாக விபத்தில் கொல்லப்படும் அவலத்திற்கு என்ன தீர்வு?
11. போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் ஊர்வலம் போன்ற இரு நூறு கார்களில் பவனி வரும் அரசியல்வாதிகளை நீதிமன்றம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அவர்களை முறைப்படுத்த முடியுமா? செயற்கையான வாகன நெரிசலை ஏற்படுத்தி விட்டு நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்வது ஏன்?
12. பைக்கின் வேகத்தை இஷ்டப்படி வாகன நிறுவனம் வடிவமைக்கும், ஷேர் ஆட்டோ எட்டு போட்டு ஓடும், தரமற்ற சாலையை அரசு போடும், நடுரோட்டில் மாடுகள் ஓடும், குடி போதையில் தனியார் பேருந்து ஓடும், ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுவோரை மட்டும் நீதிமன்றம் ஹெல்மெட் போட உட்படுத்தும். உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க ஹெல்மெட் என்றால், சாலையின் பாதுகாப்பிற்கு என்ன சட்டம்? பல்வேறு அடிப்படையான காரணிகளை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே குறி வைப்பது ஏன்?
13. தரமில்லாத, நெரிசலான, பாதுகாப்பு குறைவான சாலையில், நாம் வண்டி ஓட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் நம் ஆயுளை எப்படி தீர்மானிக்க முடியும்? விபத்து ஏற்பட்டால் தலைக்கு மட்டும் ஹெல்மெட் உத்தரவாதம் என்றால் பிற உறுப்புகளில் அடிபட்டு செத்துபோக நேர்ந்தால்?
14. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் 25% விபத்தில் இறக்கின்றனர் என்றால், மீதமுள்ள 75% விபத்து பிற வாகனங்களால ஏற்படுவதற்கு நீதிமன்றம் என்ன பாதுகாப்பு கவசம் அளிக்க முடியும். கொத்துக் கொத்தாய் செத்துப்போகும் பஸ் பயணிகள் பாதுகாப்பு பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காதது ஏன்? ஆக, விபத்து நேர்வதற்கு அசுர வேகம், அலட்சியம், குடிபோதை, தரமற்ற சாலையே காரணம்.
15. தேசிய குற்றப் புலனாய்வு (NCRB) அறிக்கையின் படி சென்ற வருடம் இந்தியாவில் 11,571 பாதசாரிகள் விபத்தில் இறந்துள்ளனர். பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கவசம் போடச் சொல்ல முடியும்? நகர் எல்லைக்குள் மட்டுமே விபத்து விகிதம் அதிகம் என்பதால் அரசு, நீதிமன்றம் பொதுமக்கள் உயிர் காக்க நகரில் இடங்களை கையகப்படுத்தி சாலை விரிவாக்கத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
தலைக்கவசம் உயிர் காக்கும்(?) என்று சொல்வது நியாயமாக இருந்தாலும், விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைக்கவசம் மூலம் உயிருக்கு தீர்வு என்று சொல்வது, தட்டு நிறைய விஷமுள்ள சாப்பாடு சாப்பிட வைத்து பக்கத்தில் 108 வண்டியை நிறுத்திய கதை தான், நம் தலைக்கவசம் உத்தரவு என்றால் மிகையாகாது. தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு அபராதம் போட ஜீப்பில் வரும் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை, எஸ்.ஐ. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதை யார் தான் சொல்ல முடியும்?
இதற்கு முன் இதேபோல ஹெல்மெட் சட்டம் போட்டபோது கூட விபத்துக்கள், சாவுகள் குறையவில்லை எனபதே உண்மை. இவ்வளவு வருடமாக ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுத்தும் விபத்து குறையாமல் இருக்க காரணம் வாகன நெரிசல், வேகமே. ஹெல்மெட் போட்டதால் விபத்து குறைவு என்பதை விட, அபராத வசூல் வேட்டையில் போலீஸ் பணியில் சிறப்புடன் களம் இறங்கியதால் வாகன நெரிசல் இல்லாமல் விபத்துக்கள் குறைந்தது என்பதே உண்மை.
வாகன நெருக்கம் (டென்சிட்டி) இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக புனே, மும்பை உள்ளது. சென்னையை விட பல மடங்கு பெரிய நகரங்களான டெல்லி, மும்பையில் வாகன நெருக்கம் குறைவு. சென்னையை விட டெல்லியில் வாகனத்தின் மடங்கு இரு மடங்கு அதிகம். ஆனால், வாகன நெரிசல் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கு விடுதலை கொடுக்காமல் விபத்தை தடுப்பதற்கு தேவையான தரமான நெரிசலற்ற சாலை வசதி, வாகன பெருக்கத் தடை, குடிபோதை கலாசார ஒழிப்பு, அதிவேக வாகனத் தடை, கண்ணைப்பறிக்கும் ஹெட் லைட்டுகள் தடை என விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பதையே நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எஸ்.அசோக்