பர்மா முஸ்லிம் இனப் படுகொலை
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற ஒரு சில தினங்களில் சாசனம் ஒன்றை வெளியிட்டார்கள். அது மதீனாச் சாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகளில் ஒரு செய்தி என்னவென்றால் “யாரெல்லாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கவில்லையோ அவர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகமாகும்”.
இதன் அடிப்படையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களிடம் பகைமை கொள்ளாத மக்களுடன் முஸ்லிம்கள் சகோதரப் பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவர்களும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து அநீதியைத் தடுக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கும் இதர மக்களுக்குமிடையில் இப்படியொரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இவர்களுக்கிடையே பகைமையையும் மோதல்களையும் ஏற்படுத்தி நீதியை நிலைநாட்டும் சக்தி உலகில் உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
இந்தக் கோணத்திலேயே உலகில் நடக்கும் பல பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக பர்மாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையையும் இந்தக் கோணத்திலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பர்மா என்றழைக்கப்படும் தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நாடு. மருத்துவம், சுகாதாரத்தில் ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ள நாடு. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமை மறுப்பு ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு.
அங்கு சுமார் 130 இன மக்கள் வாழ்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினராக பௌத்தர்களும். சிறுபான்மையினராக முஸ்லிம்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மற்றும் பழங்குடியினரும் வாழ்கின்றனர். பர்மாவில் வாழும் 6 கோடி மக்களில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். இதில் ராக்கினே என்றும் அராகான் என்றும் அழைக்கப்படுகிற மாகாணத்தில்தான் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களே இன்றைக்கு பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டிச் சென்றனர். அதனடிப்படையில் பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் பர்மாவுக்கு வரத் தொடங்கினர்.
முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாக முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர்.
பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்குப் பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (Hmannan Yazawin) எனப்படும் பர்மாவின் அரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேட்டில் புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தைச் சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச் சென்றனர். அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அவர்களை யானை பலம் உடையவர்கள் என்று கூறினர். இதைக் கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம் ஆவார்.
மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே, பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.
ஷ்வே, பியின் சகோதரர்களும் தங்கள் தந்தையின் வழியில் அனவ்ராஹ்தா மன்னரிடத்தில் பணி புரிந்தனர். பின்பு மன்னரின் போர்ப்படையில் போர் வீரர்களாக திகழ்ந்தனர். சீனா பர்மாவின் பாகன் சாம்ராஜ்ஜியத்தை தாக்க முற்படும் பொழுது இந்த சகோதரர்கள் பலம் வாய்ந்த சீன படையையே அஞ்ச வைத்து விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் ஷ்வே, பியின் சகோதரர்கள் புத்த கோயில் கட்டுவதற்கு உதவாததால் மதவெறிபிடித்த அனவ்ரஹதா மன்னன் இச்சகோதரர்கள் இருவரையும் கொன்று வீழ்த்தினான்.
இதற்கு பின்பும் பாகன் சாம்ராஜ்ஜியத்தின் போர்ப் படையில் வீரர்களாக அதிக அளவில் அம்மன்னர்கள் முஸ்லிம்களையே பணியமர்த்தினர். அப்போதைய சட்டத்தின்படி மன்னரின் இனத்தைச் சார்ந்த மற்றொருவன் மன்னரை கொன்று வீழ்த்தினால் அவனே மன்னன் எனும் சட்டம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்ட அரசர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களைத் தவிர்த்து விட்டு, முஸ்லிம்களையே போர் படையின் தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் பணியில் அமர்த்தினர். இருந்த போதிலும் நீதியுடனும் விசுவாசத்துடனும் இருந்த முஸ்லிம்கள் புத்த வழிபாடுகளில் ஈடுபடாத ஒரே காரணத்தால் புத்த மன்னர்கள் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் புத்த மன்னர்களிடத்தில் வேலை செய்ய தொடங்கினர். கி.பி. 1550-1589 வரை ஆண்ட பயின்ட் நாங் எனப்படும் அரசன் முஸ்லிம்கள் தங்கள் உணவிற்காக கால்நடைகளை ஹலால் முறையில் அறுப்பதை தடை செய்தான். மேலும், முஸ்லிம்களின் பண்டிகைகளான ஹஜ் பெருநாள், நோன்பு பெருநாள் ஆகியவற்றை கொண்டாடுவதற்கு தடை விதித்து புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை நிரூபித்தான். இவன் முஸ்லிம்களை கட்டாயமாக புத்த மதத்திற்கு மதம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டான். மறுத்த முஸ்லிம்களுக்கு வழக்கம் போல் மரண தண்டனை வழங்கப்பட்டது.
முதல் முறையாக பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது 17 ஆம் நூற்றாண்டில் தான். முகலாய மன்னரான ஷாஜஹானின் மகன்களான ஷாஹ் ஷூஜாவிற்கும், ஔரங்கசீப்பிற்கும் ஷாஜஹானின் மரணத்திற்குப் பிறகு யார் அடுத்து நாட்டைக் கைப்பற்றுவது எனும் போட்டி நிலவிய போது இதில் ஔரங்கசீப்பிடம் தோற்றுப்போன ஷாஹ் ஷூஜா தன்னுடைய படைகளுடன் தற்போதைய பர்மாவின் அராகன் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். அப்போதைய அராகன் பகுதியின் புத்த அரசராக இருந்த சண்டதுடாமா (கி.பி. 1652-1687) ஷாஹ் ஷூஜா அராகன் பகுதியில் தன் படைகள் மற்றும் குடும்பத்துடன் குடியேற அனுமதித்தார். ஷாஹ் ஷூஜா ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அராகன் அரசனிடம் தன்னிடம் இருக்கும் வெள்ளி மற்றும் தங்கத்தை செலுத்தி கப்பல் வாங்குவதென முடிவெடுத்தார்.
ஆனால், சண்டதுடாமா எனும் அந்த அரசன் ஷாஹ் ஷூஜாவின் மகளை கப்பலுக்கு விலையாக கேட்டான், மேலும், ஷாஹ் ஷூஜாவின் செல்வத்தைப் பார்த்து பேராசை கொண்டான். இதைக் கேட்ட ஷாஹ் ஷூஜா தன்னுடைய படையை வைத்து அராகன் அரசனை அழிக்க முற்பட்டார். பின்பு தோற்றுப்போன அவரும் அவருடைய படை வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பெண்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு உணவளிக்காமல் சாகும் வரை பட்டினி போடும் படி கட்டளையிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அராகன் பகுதிக்கு வந்த அனைத்து இந்திய முஸ்லிம்களையும் கொன்று குவித்தான் சண்டதுடாமா.
புத்த அரசர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும் வன்முறைகளும் ஒவ்வொரு நூற்றாண்டும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போடவ்பயா எனும் புத்த அரசன் மையடு எனும் பகுதியைச் சேர்ந்த நான்கு பர்மா முஸ்லிம் இமாம்களை பன்றி இறைச்சி உண்ணும் படி வற்புறுத்தி அவர்கள் மறுத்த போது அவர்கள் நான்கு பேரையும் கொலைச் செய்து விட்டான்.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொன்பாவுங் வம்சம் பர்மாவை ஆண்டு கொண்டிருந்த போது தன்னுடைய நிலப்பரப்பை விரிவுபடுத்த முடிவு செய்தது. இந்தியாவின் அஸ்ஸாமை ஒட்டியுள்ள அராகன் பகுதியை தங்களுடன் இணைக்க முடிவு செய்தனர். அஸ்ஸாம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்ததால் அஸ்ஸாமிற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று நினைத்தார்கள் ஆங்கிலேயர்கள். இது முதலாம் ஆங்கிலோ – பர்மா போருக்கு (1823-1826) வித்திட்டது. இந்தப் போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் அராகன் பகுதியை இணைத்தனர். அராகன் பகுதி ஆங்கிலேயர்களிடம் வந்தவுடன் ஏராளமான முஸ்லிம்களை அவர்கள் அராகன் பகுதியில் பணியமர்த்தினர். இவர்கள் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம்களுள் ஒரு பெரும் பகுதியாக இன்று வரை இருக்கின்றனர்.
பின்னர் திருப்தி அடையாத ஆங்கிலேயர்கள் தெற்கு பர்மாவில் உள்ள பர்மா தேக்குகளையும், ரப்பர் மரங்களையும் அடைய வேண்டும் என நினைத்து 1852 இல் இரண்டாம் ஆங்கிலோ – பர்மா போரையும், 1885 இல் மூன்றாம் ஆங்கிலோ – பர்மா போரையும் நிகழ்த்தி முழு பர்மாவையும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 1885 வரை மியான்மர் எனும் பெயரைக் கொண்டிருந்த அந்நாட்டை ஆங்கிலேயர்கள் அப்போது பர்மா என்று மாற்றினர். இப்பொழுது மீண்டும் மியான்மர் என மாற்றப்பட்டு விட்டது. முழு பர்மாவையும் அடைந்தவுடன் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக இணைத்தது ஆங்கிலேய அரசு.
பிரிட்டிஷ் காலனியாக பர்மா இருந்த போது கூலி வேலைக்காரர்களாகவும், சிறு தொழில் செய்வதற்கும் இந்திய முஸ்லிம்கள் பர்மாவில் குடியேறத் தொடங்கினர். 1931 ஆம் ஆண்டில் பர்மாவின் தலைநகரம் ரங்கூனில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தியர்களாக இருந்தனர். அதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இந்தக் காலகட்டங்களில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். ஆனால் அதைச் சீர்குலைக்க இந்தியர் எதிர்ப்புக் கலவரத்தை ஆதிக்க சக்திகள் தோற்றுவித்தன.
1930 செப்டம்பரில் ஒரு நாள். வேலைக்குச் சென்ற பர்மா மக்களை வேலையிலிருந்து விரட்டியடித்தார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்ற பவுத்தர்கள் இந்தியர் எதிர்ப்புக் கலவரத்தைத் தொடங்கி பின்னர் முஸ்லிம் எதிர்ப்புக் கலவரமாகத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
வலிமை மிகுந்த ஆங்கிலேயர்களை எளிதில் விரட்ட முடியாது என்பதை அறிந்த புத்தர்கள் முஸ்லிம்களை துரத்தினால் தனி நாடு கிடைக்கும் என்று 1938 ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்தனர். பர்மா பர்மியர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து 1938 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட பிரச்சாரம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. அதில் 117 பள்ளிவாசல்கள் உட்பட ஏராளமான வீடுகளும் கடைகளும் தரைமட்டமாக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்நிலையில் இலண்டனில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அதில் பர்மா தொடர்பாக கீழ்க்காணும் விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
பர்மாவில் முஸ்லிம்களுக்கு முழு குடியுரிமை கொடுப்பது,
வழிபாட்டுச் சுதந்திரம் கொடுப்பது,
சிறுபான்மையினர் தங்கள் கலாச்சாரத்தைப் பின்பற்றும் சுதந்திரம் கொடுப்பது,
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பராமரிக்க முஸ்லிம்களுக்கு பொது வருவாயில் பங்கு கொடுப்பது,
இந்தியாவிலிருந்து பிரித்து பர்மாவை பிரிட்டிஷ் காலனியின் தனி நாடாக நிர்வகிப்பது ஆகிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.
ஆனால் பர்மாவை தனி நாடாக பிரிப்பது என்பது மட்டுமே கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1938 ஆம் ஆண்டு பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததிலிருந்து விலகி தனி நாடாக செயல்படத் தொடங்கியது. இதன் விளைவாக பர்மாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினர். எனினும் பர்மாவின் பூர்வீக முஸ்லிம்களும், அராகன் (ராக்கினே) மாகாணத்தின் ரோஹிங்கிய முஸ்லிம்களும் மற்றும் சிறிதளவில் இருக்கும் சீன மலாய முஸ்லிம்களும் பர்மாவில் தொடர்ந்து இருக்கத்தொடங்கினர்.
அந்நிலையில் இரண்டாம் உலகப் போர் மூண்டது.
இரண்டாம் உலகப்போர் பர்மாவின் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளை ஜப்பான் கைப்பற்ற முயன்றது. அப்பொழுது ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஜப்பானியர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பன்னூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகினர். அக்காலத்தில் ஜப்பானியர்களின் வேதனைகளைத் தாங்க முடியாமல் சுமார் 22,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவின் எல்லையைக் கடந்து பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காளப் பகுதிக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
1942 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று மின்பியா மற்றும் மரோஹாங் நகரங்களில் வாழ்ந்த சுமார் 5000 முஸ்லிம்களை ராக்கினே மாகாண பவுத்தர்களும் ஜப்பானியர்களும் கொன்று குவித்தனர். பர்மாவில் எவ்வித கலவரமாக இருந்தாலும், எந்த நாடு பர்மாவை கைப்பற்ற முயன்றாலும் அதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பர்மா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பர்மா எனும் பெயர் மியான்மர் என மாற்றப்பட்டது. யு னு என்பவர் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றவுடன் புத்தமதத்தை பர்மாவின் தேசிய மதமாக அறிவித்தார். அத்துடன் முஸ்லிம்கள் எந்த ஒரு விலங்கை அறுக்கவேண்டும் என்றாலும் அரசிடம் அனுமதி பெற்றே அறுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தார். இதன் மூலம் ஹஜ் பெருநாளில் கூட அரசு அனுமதி இல்லாமல் குர்பானி கொடுக்க முடியாது என்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல்,
ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் தூண்டிவிடப்பட்டு இராணுவத்தின் உதவியுடன் கொலைவெறியாட்டம் நடந்து வருகிறது.
1948 முதல் முஸ்லிம்களுக்கெதிராக இராணுவ உதவியுடன் பர்மாவில் நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதல்கள்:
1: மிலிட்டரி ஆபரேசன்- நவம்பர் 1948.
2: பர்மா டெரிடோரியல் ஃபோர்ஸ் ஆபரேசன்-1949-50.
3: மிலிட்டரி ஆபரேசன் செகன்டு எமர்ஜென்சி – மார்ச் 1951-52.
4: மயூ ஆபரேசன்- அக்டோபர் 1952-53.
5: மோனே தோனே ஆபரேசன் – அக்டோபர் 1954.
6: கம்பைண்ட் இமிக்ரேசன் அன்ட் ஆர்மி ஆபரேசன் – ஜனவரி 1955.
7: யூனியன் மிலிட்டரி போலீஸ் ஆபரேசன்- 1955-58.
8: கேப்டன் ஹ்தின் க்யாவ் ஆபரேசன்- 1959.
9: ஷ்வீ க்யீ ஆபரேசன்- அக்டோபர் 1966.
10: க்யீ கன் ஆபரேசன்- அக்டோபர்-டிசம்பர்1966.
11: ந்கசின்கா ஆபரேசன்- 1967-69.
12: ம்யாத் மான் ஆபரேசன்- பிப்ரவரி 1969-71.
13: மேஜர் ஆங் தான் ஆபரேசன்- 1972.
14: சபே ஆபரேசன்- 1973.
15: நாகா மின் கிங் ட்ராகன் ஆபரேசன்- 1978-79.
16: ஷ்வீ ஹிந்தா ஆபரேசன்- ஆகஸ்ட் 1978-80.
17: கலோன் ஆபரேசன்- 1979.
18: ப்யி தயா ஆபரேசன்- ஜூலை 1991-92.
19: நா சா கா ஆபரேசன்- 1992 – 2013.
20: 969 இஸ்லாமிய ஒழிப்பு இயக்கம்- 2012.
21: 969 இஸ்லாமிய ஒழிப்பு இயக்கம்- 2012 இன் தொடர்ச்சி…
2015. இது பி.ஜி.பி. ஆபரேசன் என்றும் அழைக்கப்படுகிறது. இது இராணுவ உதவியுடன் ஆயுதங்கள் ஏந்திச் சென்று முஸ்லிம் குடியிருப்புகளைத் தாக்கி முஸ்லிம்களைக் கொல்லும் நடவடிக்கையாகும்.
இந்த பி.ஜி.பி. ஆபரேசன் எனப்படுகிற இஸ்லாமிய ஒழிப்பு இயக்கம் தான் தற்போது பர்மாவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த முஸ்லிம் இன அழிப்புக் கலவரம் 2012 ஆம் ஆண்டில் நடந்தபோது 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பர்மா முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு மலேசியாவும் இன்னும் சில முஸ்லிம் நாடுகளும் அடைக்கலம் அளித்தன. ஆனால் இப்போது எல்லா நாடுகளும் கை விரித்து விட்டன. இதனால் கப்பலில் மட்டும் சுமார் 800 பர்மிய முஸ்லிம்களும் மேலும் சுமார் 1 லட்சம் பர்மிய முஸ்லிம்களும் போக்கிடமில்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
ஆண்டு தவறாமல் கலவரம் நடத்தி இராணுவத்தின் உதவியுடன் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பது மட்டுமல்லாமல், அங்கு வாழும் முஸ்லிம்களை கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்துகிறது பர்மா அரசு.
2012 ஆம் ஆண்டில் பர்மாவில் முஸ்லிம்களுக்கெதிராக மிகப்பெரிய அளவில் இனப்படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அது குறித்து தகவல் சேகரிக்க ஐ.நா.சபையால் தென்கொரியாவைச் சேர்ந்த யான்கீ லீ (Yanghee Lee) என்ற பெண்மணி அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் பர்மா முஸ்லிம்களின் நிலை குறித்து கீழ்வரும் தகவல்களைக் கூறியுள்ளார்:
o பர்மா முஸ்லிம்களுக்கு எதிராக பர்மா அரசு உருவாக்கியிருக்கும் சட்டங்கள் அனைத்தும் கொடூரமானவை.
o ரோகிங்யா முஸ்லிம்களில் சுமார் 1 லட்சம் மக்கள் அகதிகள் முகாமில் நோயாலும் சத்துக் குறைபாடுகளாலும் மிகவும் கவலைக்கிடமாக வதைபடுகிறார்கள்.
o ரோகிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை. அவர்களுக்கு வெள்ளை அட்டை (white card) அடையாள அட்டையாக வழங்கப்படுகிறது. இந்த அட்டையை அவ்வப்போது ஒப்படைத்து விடக் கட்டளையிடுகிறது பர்மா அரசு.
அவ்வாறு ஒப்படைத்து விட்டவர்களால் வேறு ஊருக்கு பயணிக்க முடியாது, தொழில் நடத்த முடியாது, பள்ளிக்கூடம் செல்ல முடியாது. மருத்துவம் செய்து கொள்ள முடியாது.
o 1823 ஆம் ஆண்டுக்குமுன் தங்கள் முன்னோர்கள் பர்மாவில் இருந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லையென்றால் குடியுரிமை கிடையாது. (நம்மிடம் 8 தலைமுறைக்கு முன்னால் ஆவணம் கேட்டால் என்ன செய்ய முடியும் ?)
o முஸ்லிம் மக்கள்தொகை பெருகுவதை தடுக்க கருத்தடைச் சட்டம்.
o ஒரு முஸ்லிம் பெண் 3 ஆண்டுக்கு ஒரு முறைதான் பிள்ளை பெற வேண்டும்.
o முஸ்லிம் கடைகளில் யாரும் வரவு செலவு வைத்துக் கொள்ளக் கூடாது. புதிய கடைகள் திறக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை. முஸ்லிம் கடைகளுக்கு அரசாங்க ஆதரவு கிடையாது.
o முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை இல்லை, குடிமக்களுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகையும் முஸ்லிம்களுக்கு இல்லை. அகதிகள் நிலை தான்.
ஐ. நா. சபையால் அனுப்பி வைக்கப்பட்ட ‘யான்கீ லீ’ என்பவரின் அறிக்கையில் மேற்கண்ட செய்திகள் இடம் பெற்றதைக் கண்டு பர்மா அரசு கூட பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஆனால் ’பர்மாவின் பின் லேடன்’ என்று தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுவதாகக் கூறும் ’அசின் விராத்’ பொங்கி எழுந்தார்.
“Ms Lee she should have sex with Muslim Rohingya minority if she liked them so much” .“Don’t assume you are a respectable person, just because you have a position in the UN,” he said. “In our country, you are just a whore.”
-என்று மிகவும் கடுமையான வாசகங்களால் விமர்சித்தார்.
இவரின் இந்த கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து டைம் ஆங்கில இதழ் இவரைப்பற்றி ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் இந்த நபரைப் பற்றியும் இவரது 969 என்ற இயக்கம் மற்றும் அதன் கொடிய திட்டங்கள், அதன் பின்னணி நோக்கம் ஆகியவை பற்றி எழுதி இருந்தது. அதனைத் தொடர்ந்து பர்மாவின் பிரதமர் தென் சேன் தலையிட்டு, “டைம் இதழ் ஊடக தர்மத்தை இழந்து ஒருதலை பட்சமாக உள்ளது, அசின் விராத் எங்களின் பாதுகாவலர், புனிதமானவர், எங்கள் அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டி, அவரை விமர்சிக்க டைம் இதழுக்கு தகுதியில்லை” எனப் பேட்டியளித்தார்,
இதன் மூலம் அசின் விராத்தும் அவரது இயக்கமும் அரசாங்க ஆதரவுடன்தான் முஸ்லிம்களைக் கருவறுக்கிறார்கள் என்ற உண்மை பச்சையாக அம்பலமானது.
அசின் விராத் என்ற இந்த நபர் 14 ஆம் வயதில் பள்ளிப் படிப்பைத் துறந்து புத்த துறவியானார். சிறு வயதில் இருந்தே முஸ்லிம் வெறுப்பைக் கொண்டிருந்தார்.
2001 ஆம் ஆண்டு 969 என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 2003 ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் 8 ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மிக இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்து பிரச்சாரம் செய்து வருவதுடன் அவரது இயக்கத்தினருக்கு ஆயுதப்பயிற்சியும் அளித்து வருகிறார். இவை எல்லாமே பிரதமர் தென் சேன் னின் ஆதரவு மற்றும் உதவியுடன்தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
969 என்பதன் விரிவாக்கம்:
9 – புத்தரின் ஒன்பது சிறப்பம்சங்கள்.
6 – புத்த சாஸ்திரத்தின் ஆறு சிறப்புக்கள்.
9 – பௌத்தர்களின் ஒன்பது சிறப்பம்சங்கள் என்பதை தாங்கி நிற்கிறது.
969 இயக்கத்தின் முதன்மை குறிக்கோள் முஸ்லிம்களின் வியாபாரத் தலங்களைக் கொள்ளையடித்து விட்டு தீ வைத்துக் கொளுத்துவது.
முஸ்லிம்களின் வீடுகளைக் கொள்ளையடிப்பது.
முஸ்லிம் பெண்களை மணமுடித்து பௌத்தர்களாக மாற்றுவது. மற்றும் பர்மாவை ஒரு முஸ்லிம் கூட இல்லாத பிரதேசமாக மாற்றுவது ஆகியவையாகும்.
இப்படிப்பட்ட நாசகார கொள்கைகளைக் கொண்ட இந்த இயக்கமும் இந்த இயக்கத்தை ஆதரிக்கும் தென்சேன்னின் அரசும் பர்மாவில் முஸ்லிம்களை நரவேட்டையாடி வருகின்றன. கடந்த ஏப்ரல் இறுதி வாரத்தில் அராகன் (ராகினே) மாகாண அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது.
அதில் இஸ்லாமிய மதரீதியான அடையாளங்களை வெளியே காட்டக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிவாசலில் பாங்கு சொல்வது, ஜமாஅத்தாக தொழுகை நடத்துவது, தொப்பி, ஹிஜாப் அணிவது, தாடி வைப்பது முதலான அம்சங்கள் தடை செய்யப்பட்டன. இதனால் அராகன் மாகாண முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்கினார்கள்.
அவ்வாறு வெளியேறுபவர்கள் தங்களின் சொந்த உடைமைகளை எடுத்துச் செல்வதைக் கூட சகித்துக் கொள்ள முடியாத பவுத்த கொடுங்கோலர்கள் உடைமைகளைப் பறித்தும் கொள்ளையடித்தும் வெளியேற்றுகின்றனர். அகதிகளாக வெளியேறும் முஸ்லிம்களுக்கு எந்த நாடும் அடைக்கலம் அளிக்க முன் வராமல் நிராகரித்துள்ளன. இதனால் இந்த விவகாரம் தற்போது உலகச் சமூகத்தின் பேசு பொருளாகி இருக்கிறது.
இது இனி ஐ.நா. வின் கண்டனம், அமெரிக்கா கண்டனம், முஸ்லிம் நாடுகள் உதவி என்பதோடு ’வழக்கம் போல முடிவுக்கு’ வரும். எனினும் இதற்கெல்லாம் உண்மையான பின்னணி என்ன என்பதை அறிய வேண்டும். வெறும் புத்த மதவெறி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பர்மா, லாவொஸ், தாய்லாந்து, வங்க தேசம்…முதலான நாடுகளில் தங்களின் நிழல் ஆதிக்கத்தை நிலை நாட்ட அமெரிக்காவும் சீனாவும் முயலுகின்றன. பர்மாவின் அராகன் மாகாணத்தில் நீண்டு செல்லும் சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் மண்டலத்தில் தனது செல்வாக்கை நிறுவ அமெரிக்கா முயலுகிறது. சீனா அதை உயிர்ப்பலி கொடுத்து தடுக்கிறது என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அதாவது பர்மா சுதந்திரம் பெற்ற பிறகே தொடர்ச்சியான கலவரங்களைச் சந்தித்துள்ளது. இதை ஏகாதிபத்திய நிழல் அரசியல் மோதல்கள் என்று மொழி பெயர்க்கலாம்.
ஆம். ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் ஒரு சமூக கூட்டணியை முஸ்லிம்களால்தான் உருவாக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே முஸ்லிம்களை துன்பக் கடலில் மூழ்கடிக்கிறார்கள்.
எனினும் முஸ்லிம்கள் மீண்டெழுவார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்காத மக்களை இணைத்து நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் ஒரு சமூக கூட்டணியை உருவாக்கி வெற்றி காண்பார்கள்! ஏனெனில், ஈமானிய உணர்வு உள்ளவரை அவர்களை யாராலும் முற்றாக ஒழித்து விட முடியாது! இதற்கு 13 நூற்றாண்டு கால பர்மாவின் வரலாறே சாட்சி!
source: http://www.samooganeethi.org/