இதுவே நபி வழி! இதுவே நபி வழி! இதுவே நபி வழி!
ஹளரத் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்;
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்கு தண்ணீர் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலை கறந்தோம். பிறகு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, பாலில் கலந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடப்பக்கத்திலும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலப்பக்கத்திலும் இருந்தனர்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இதோ அபூபக்கர் (அவருக்கு மீதியுள்ள பாலை கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (இடப்பக்கத்தில் இருந்த) அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்த கிராமவாசிக்கு கொடுத்தார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
மேலும் “(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்), வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்), வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)” என்றும் கூறினார்கள்.
(இறுதியில்) அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இதுவே நபி வழியாகும், இதுவே நபி வழியாகும், இதுவே நபி வழியாகும்” என்று சொன்னார்கள்; நூல்: முஸ்லிம் 4129)
ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் அவரை (ஹுதைபாவை) சந்தித்து கைகொடுப்பதற்காக அவரை நோக்கி வந்த போது, அவர் சொன்னார், ‘நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கிறேன்”. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ‘ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்” (நூல்: நூல்: அபூதாவூது)
உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழுவி உலூச் செய்து பிறகு உறங்குக என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு நூல்: அபூதாவூது)
குளிப்புக் கடமையான நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்க எண்ணும் போது தொழுகைக்காக செய்வது போல் உலூச் செய்து கொள்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) (இந்த ஹதீஸ் சுஹ்ரீ வழியாக வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது. இதில், ‘குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பினால் கைகள் இரண்டையும் கழுவிக் கொள்ள வேண்டும்” என்பது கூடுதலாக உள்ளது. – நூல்: அபூதாவூது)
குதைப் பின் அல்ஹரித் ரளியல்லாஹு அன்ஹு வர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். (குளிப்புக் கடமையான) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போது குளிப்பார்கள்? இரவின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா?
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் குளிப்பார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பத்தில் தொழுதார்களா? அல்லது இறுதியில் தொழுதார்களா?
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அதற்கு நான் அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன்.
மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்களா? அல்லது சப்தமின்றி ஓதுவார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள். சிலவேளை அவர்கள் சப்தத்துடனும் சிலவேளை சப்தமின்றியும் ஓதுவார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். (நூல்: அபூதாவூது)
வசதியிருந்தும் – அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக – மிகஉயர்தர ஆடைகளை அணியாமல் தவிர்ந்து கொண்டவரை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு மத்தியில் அழைத்து, முஃமின்கள் அணியும் சொர்க்கத்து ஆடைகளில் அவர் விரும்பியதை அணிந்து கொள்ள அனுமதியளிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : திர்மிதீ 2405, அஹ்மத், ஹாகிம்)