தற்காலத்தில் பரவி வரும் பயங்கர பித்அத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், ஆகியவற்றிக்கு முரணான அனைத்தும் பித்அத் என்று வரைவிலக்கணம் கூறப்படும் நிலையில்…
நபியவர்களுக்கு முன்னால் ஒரு யகூதியின் ஜனாசா கொண்டு செல்லப்பட்ட தருணத்தில், ”நான் உயிரோடு இருக்கும்போது ஒரு மனிதன் நரகத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றானே…”
என்று கண்ணீர் வடித்த எம் பெருமானாரின் உள்ளத்தில் இருந்த ”அனைத்து மக்களும் மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள வேண்டுமே” என்ற உயரிய கவலை, இன்றைய முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்து எடுபட்டு,
”எப்படியாவது இவன் நரகவாதியாக ஆகிவிட வேண்டும்” என்ற பயங்கரமான பித்அத் இன்று வளைதளங்கள், ஊடகங்கள், முகநூல் கருத்துக்கள், முகநூல் பின்னூட்டல்கள், நூல்கள், சஞ்சிகைகள், மார்க்க பிரச்சாரங்களில், பரவி வருவதை கண்கூடாக காணக்கூடியாதாக உள்ளது.
இந்த கவலையை சுமந்துதான் மார்க்க பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றோம் என்று கூறும் பல உலமாக்கள், அறிஞர்கள், பொதுமக்கள் கூட தமது நோக்கத்தை மறந்து இயக்க வாதிகளாக மாறி தம் நிலைப்பாட்டுக்கு மாற்றமானவர்களை எல்லாம் நரகவாதி, காபிர், முஷ்ரிக் போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதுடன், அவர்களுக்கு பதுவா செயபவர்களாகவும், அசிங்கமான வார்த்தைகாளால் திட்டி தீர்ப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
நாம் எந்த கொள்கையில், எந்த நிலைப் பாட்டில் இருந்தாலும் எப்படியாவது இந்த உம்மதிலுள்ள ஒவ்வொருவரும் சுவர்க்கம் செல்ல வேண்டும், அதற்காக எவ்வாறு எல்லாம் ஒழுக்கமான, கண்ணியமான முறையில் முயற்சி செய்யலாம் என்ற சிந்தனையில் தஹ்வா பணிகளில் ஈடு பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
ஆனால் இன்று மீடியாக்களில் நடக்கும் சில முறை தவறிய தஹ்வா முறைகளாலும், அணுகு முறையினாலும் அசத்தியத்தில் உள்ளவர்கள் கூட மார்க்கத்தை விட்டும் வெளியாகி விடுவார்களோ என்று என்னும் அளவுக்கு அமைந்திருப்பது கவலைக்குரியதாகும்
உண்மையில் ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் கையை வைத்து கேட்டு பாருங்கள்…நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் எத்தனை பேர் எமது கொள்கைக்கு, நிலைப்பாட்டுக்கு மாற்றமாக உள்ள மற்றவர்களின் நேர் வழிக்காக , அவர்களின் மறுமை வெற்றிக்காக அல்லாஹ்விடம் கண்ணீர் சிந்த துஆ செய்திருக்கின்றோம்?
(இந்த நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கலின் தாயிப் பயணமும், அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இடம் பெற்ற துயரா சம்பவங்களும்,, அதன் பிறகு மலக்குமார்கள் அந்த மக்களை அழிக்கவா என்று வினவிய சமயத்தில் நபியவர்கள் அந்த சமூகத்துக்காக செய்த அழகான பிரார்த்தனையும் ஞாபகப்படுத்த பட வேண்டியது)
o மாற்று கருத்து உள்ளவர்களை பார்த்து சலாம் கூட சொல்லாத நிலையில், மனதினால் அவர்களை வெறுத்த நிலையில் கடுகடுப்பான பார்வையோடு அலைந்து திரிவதை பார்க்கின்றோம்.
o இன்று இயக்க வெறி பிடித்து அவரவர் தன்னை தூய்மையானவனாக ஆக்கி கொண்டு, தன் கருத்துக்கு மாற்றமான அனைவரையும் காழ்ப்புணர்வோடு வஞ்சித்து கொண்டிருப்பதை கண்டு கவலை அடைகின்றோம்.
o மாற்று மதத்தவரை விடவும் கேவலமாக மாற்று கருத்துடைய முஸ்லிம்களோடு எம் இயக்கவாதிகள் நடப்பதை கண்டு கண்ணீர் சிந்துகின்றோம்…
o மார்க்கத்துக்கு முரணானதை தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது, அதே நேரத்தில் தவறு செய்தவன் தண்டனை பெற்று பரிசுத்தவானாக மாற வேண்டும் என்பதே அங்கு பொதிந்துள்ள உள்ரங்கமாக இருப்பதையும் உணர வேண்டும்.
o யாரை கண்டாலும் இவர் சுவனத்துக்கு உரியவனாக மாற வேண்டும் என்ற சிந்தனை நபியின் உயர்ந்த சுன்னாவாக உள்ளதை நபியின் வரலாறை படித்த யாரும் மறுக்க மாட்டார்கள்.
எனவே, கருத்து வேறு பாடுகளுக்கு அப்பால் தாம் எந்த நிலைப்பாடில் இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்களையும் மதிக்க பழகுவோம், சத்தியத்தை உரக்க சொல்வோம், சத்தியத்துக்காக பாடுபடுவோம், மார்க்கத்தை பாதுகாப்போம், மார்க்கத்துக்காக தியாகம் செய்வோம்.
o யா அல்லாஹ் சுன்னத் வல் ஜமாஅத்தின், தரீகாக்களின் தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், அனைத்து தௌஹீத் ஜமாஅத் இயங்கங்களின் தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், ஜமாத்தே இஸ்லாமி அதை சார்ந்த இயக்க தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், தப்லீக் ஜமாஅத் தலைவர்கள் அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும் இன்னும் என்னன்ன இயக்கங்கள் உள்ளதோ அனைத்து தலைவர்கள், அதை பின்பற்றும் முஸ்லிம்கள் மேலும் அனைத்துக்கும் பொதுவாக கலிமாவை மொழிந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் நீ நேர்வழியை காட்டுவாயாக, அனைவரையும் நேரான பாதையில் கொண்டு செல்வாயாக, அனைவரையும் மேலான சுவனத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை கொடுப்பாக, இஸ்லாத்தை ஏற்காத அனைத்து காபிர்களுக்கும் நீ ஹிதாயத்தை கொடுப்பாயாக…
எம் உம்மத்தை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் ஒற்றுமை படுத்துவாயாக ….
-SLyouth Network