ஸஹாபாக்களும் சிறப்புகளும்
M U S T R E A D
நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
ஆற்றலும் வல்லமையும் மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதருக்குத் தோள் கொடுக்க இந்த உம்மத்தில் மிகச் சிறந்த சான்றோர்களைத் தேர்ந்தெடுத்தான்.
இஸ்லாமின் அழைப்புப் பணியை அவர்கள் முன்னெடுத்தச் சென்றார்கள். தப்லீக் எனும் அடைக்கலப் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள்.
அருகிலுள்ளவர்கள், தொலைவில் உள்ளவர்கள், தீனைப் பற்றி அறிந்தோர், அறியாதோர் அனைவரிடமும் தப்லீக் எனும் அடைக்கலத்தை கொண்டு போய்ச் சேர்க்கும் பணிக்காக உலகத்தையும் உலக இன்பத்தையும் துறந்தார்கள்.
இன்னல்களும் இடுக்கன்களும் சூழ்ந்த பாதையைத் தமதாக்கிக் கொண்டார்கள். துன்பங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டார்கள்.
பாருலகின் மூலை முடுக்கெல்லாம் இந்நன்னெறியைக் கொண்டுபோய் சேர்க்கும் வரை ஓயவில்லை; ஒதுங்கி நிற்கவில்லை.
காலம் நெடுக, வரலாறு முழுக்க அவர்தம் பணிச் சிறப்பை நம்மால் உணர முடியும். இஸ்லாமின் தரப்பிலிருந்தும் முஸ்லிம்களின் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு உரிய நிறைவான கூலியை அல்லாஹ் நல்கட்டும்.
சஹாபி என்றால் யார்?
சுஹபத் என்பதன் மொழிப் பொருள் தோழமை. சஹாபி என்னும் பதம் யாரைக் குறிக்கும் என்பதற்கு உலமாக்கள் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்கள்.
1. இறைத்தூதரை கண்களால் கண்டு தோழமை கொண்ட முஸ்லிம் சஹாபியாவார் என இமாம் புகாரி குறிப்படுகிறார்.
2. அல்லாஹ்வின் தூதரைக் கண்டு தோழமை கொண்டவர் ஒரு நாளின் ஒரு பொழுதாகினும் சரியே அவர் சஹாபாக்களைச் சேர்ந்தவர் என்கிறார் அலீ இப்னு அல்முதீனி.
3. அல்லாஹ்வின் தூதரோடு ஓராண்டோ, ஈராண்டோ தங்கியிருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதரோடு ஒரு போரிலோ, இரண்டு போர்களிலோ கலந்து கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்டவரையே நாம் சஹாபாக்கள் என வகைப்படுத்துவோம் என்கிறார் ஸஈத் இப்னு அல்முஸய்யிப்.
இறுதியில் கண்ட ஸஈத் அவர்களின் கூற்றை பலர் விமர்சித்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரை கண்டவர் பருவ வயதினராக, இஸ்லாமை ஏற்றவராக, தீனைப் புரிந்துணர்ந்தவராக, மனதால் நம்பி ஏற்றவராக இருந்தால் ஒரு நாளின் ஒரு பொழுது அவர் இறைத்தூதரைக் கண்டிருந்தாலும் அவர் அண்ணலாரின் தோழர்களில் ஒருவராவார் என வாக்கிதி மேற்கண்ட கூற்றை விமர்சிக்கிறார். அதே போல இப்னுல் ஹஜர் அயிகலானீ ஸஈத் உடைய கூற்றுக்கு மாறாக, நிகழ்வுகள் நடந்துள்ளன. சஹாபாக்கள் என நாம் ஏற்றுக் கொண்டுள்ள பலர், ஹஜ்ஜத்துல் விதாவின் போதுதான் அண்ணலாரோடு இருந்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
4. சரியான, அனைவராலும் ஏற்கப்படுகின்ற விளக்கம் யாதெனில், இறைநம்பிக்கை கொண்ட நிலையில் அல்லாஹ்வின் தூதரைச் சந்தித்தவர், இஸ்லாமைப் பின்பற்றிய நிலையில் மரணமடைந்தவர் சஹாபி ஆவார்.
இக்கூற்று இப்னுல் ஹஜர் உடையதாம்.
சஹாபாக்களின் நிலை
சஹாபாக்களுக்கென ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் உயர்ந்ததொரு சிறப்பிடம் இருக்கவே செய்கிறது. அவர்களை நேசிக்காதவரை அவர்களோடு மனப்பொருத்தம் கொள்ளாத வரை எந்தவொரு முஸ்லிமின் இறைநம்பிக்கையும் முழுமையடையாது. அவர்கள் அனைவரையும் அல்லது ஒருவரையாவது விமர்சித்தால், விமர்சிப்பவர் முனாஃபிக் ஆவார். நெஞ்சிலிருந்து ஈமான் பிடுங்கப்பட்டவர் ஆவார். தகுதியையும் அருகதையையும் தொலைத்துவிட்டவர் ஆவார்.
நுண்ணறிவுடையவனும் புகழுக்கு உரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்ட வான்மறை குர்ஆன் பல்வேறு இடங்களில் நபித் தோழர்களின் சிறப்பை நிலைநிறுத்துகின்றது.
வான்மறை குர்ஆன் ஒட்டுமொத்தமாக பொதுவாகவும், ஒரு சிலரை சிறப்பித்தும் பல இடங்களில் பேசுகின்றது.
1. ‘இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 3:110)
இப்னுல் ஜவ்ஸி கூறுகிறார்: இந்த இறைவசனம் நான்கு சாராரை சுட்டுவதாகக் கொள்ளலாம். 1. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் 2. முஹாஜிரீன்கள் 3. ஒட்டுமொத்த நபித் தோழர்கள் 4. முஹம்மதின் உம்மத் முழுவதும். இந்த தகவலை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களிடமிருந்து நாம் பெறுகிறோம். (ஸாதுல் மஸீர் ஃபீ இல்மித் தஃப்சீர், இப்னுல் கய்யிம் ஜவ்ஸி)
2. (இஸ்லாமின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)
இப்னு கசீர் கூறுகிறார்: முஹாஜிரீன்களிலும் அன்சாரிகளிலும் தாபஈன்களிலும் முந்திக் கொண்டோரை குறித்து தனது பொருத்தத்தை அழகுற அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். அருட்கொடைகள் நிரம்பிய நிரந்தர தங்குமிடங்களை தனது திருப்தியின் வெளிப்பாடாக அவர்களுக்கு வழங்கவுள்ளதாகச் சொல்கிறான்.
முஹம்மது இப்னு கஅப் அல்கர்வீ கூறுகிறார்: உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு மனிதனைக் கடந்து சென்றார். அவர் 9:110 வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவரது கையை உமர் பிடித்து, உமக்கு இதைக் கற்பித்தது யார் எனக் கேட்டார். உபை இப்னு கஅப் என்றார் அம்மனிதர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்லும் வரை கையை விட மாட்டேன் எனச் சொன்னவராக உபையிடம் வந்தார் உமர் ரளியல்லாஹு அன்ஹு. இந்த வசனத்தை இப்படி ஓதுமாறு இவருக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா? எனக் கேட்டார். ஆமாம் என்றார் உபை. அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டிருக்கிறீர்களா? என உமர் கேட்டதற்கு, ஆம் என்றார் உபை. அப்படியெனில் நமக்குப் பிறகு யாருமே அடைய முடியாத இடத்திற்கு நாம் உயர்த்தப்பட்டு விட்டோம் என்றார் உமர். அப்போது உபை ஜும்ஆ அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள 3ஆம் வசனத்தை இது மெய்ப்பிக்கின்றது என்றார்.
நபித் தோழர்கள் மீது குரோதம் பாராட்டுவோர், அவர்களைத் திட்டுவோர், அவர்களின் மீது வெறுப்பு கொள்வோர் எத்தகைய பெரும் கேட்டை சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்பதை இந்நிகழ்வு விளக்குகின்றது.
3. ‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப் பவர்கள் நிராகரிப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர் களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களுமாவர். அவர்கள் ருகூவு, ஸுஜூது செய்பவர்களாகவும், அல்லாஹ்வின் அருளையும், திருப்தியையும் தேடுபவர்களாகவும் இருப்பதை நீர் காண்பீர். அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளப்படுகிறார்கள். இது தவ்ராத்தில் காணப்படுகின்ற அவர்களின் தன்மையாகும். மேலும், இன்ஜீலில் அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள உவமை வருமாறு: ஒரு பயிர்; அது முதலில் குருத்தை வெளிப்படுத்தியது. பின்னர் அதை வலுப்படுத்தியது; பின்னர் அது பருத்தது. பிறகு, அது தன்னுடைய தண்டின் மீது செவ்வனே நின்றது. விவசாயிகளை அது மகிழ்விப்பதற்காகவும், அவர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நிராகரிப்பாளர்கள் பொறாமை அடைவதற்காகவும்தான்! இக்குழுவினரில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அல்குர்ஆன் 48:29)
இப்னு கசீர் எழுதுகிறார்: நபித்தோழர்கள் எண்ணத்தால் கலப்பற்றவர்கள். செயல்களை அழகாக்கியவர்கள். அவர்கள் தம்மைப் பார்க்கின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள் – போக்கினாலும் நேர்வழியினாலும்.
இமாம் மாலிக் சொல்கிறார்: சிரியாவை முஸ்லிம்கள் வென்ற போது சஹாபாக்களைக் கண்ட கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்கள் ஹவாரிய்யீன்களை விட மிகச் சிறந்தவர்கள் எனப் புகழ்ந்து கூறினார்கள் என்னும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.
அவர்கள் சொன்னது உண்மையே. அவர்களுடைய புனித வேதங்களில் இறைத்தூதர்களின் தோழர்களைப் பற்றி மிகச் சிறப்பாகவும் உயர்வாகவும் சொல்லப்பட்டிருந்தது. நபித் தோழர்களை சிறப்பித்துப் போற்றுகின்ற பல்வேறு அறிவிப்புகள் நபிமொழிகளிலும் சுன்னாவிலும் காணக்கிடைக்கின்றன.
1. மக்களில் சிறந்தோர் எனது தலைமுறையைச் சார்ந்தோரே. பிறகு அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்த தலைமுறையினர். (புகாரி, கிதாபுர் ரிகாக்)
2. அபூ புர்தா ரளியல்லாஹு அன்ஹு வாயிலாக முஸ்லிமில் பதிவாகியுள்ள தகவல்: அல்லாஹ்வின் தூதரோடு நாங்கள் மஃக்ரிப் தொழுதோம். இஷா வரை இங்கே அமர்ந்திருப்போம் எனப் பேசிக் கொண்டோம். அதே போல் நாங்கள் அங்கே அமர்ந்திருந்தோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியே வந்தார்கள். எதற்காக இங்கேயே அமர்ந்திருக்கிறீர்கள் என விசாரித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே, தங்களோடு நாங்கள் மஃக்ரிப் தொழுதோம். பிறகு தங்களோடு சேர்ந்து இஷா தொழும் வரை இங்கே அமர்ந்திருக்கலாம் எனப் பேசிக் கொண்டோம். அதைக் கேட்ட அண்ணலார் மிகவும் அழகு அல்லது மிகவும் நன்று என்றார்கள். தொடர்ந்து வானை நோக்கி தம் தலையை உயர்த்தினார்கள். அண்ணலார் பெரும்பாலும் வானை நோக்கி தலையை உயர்த்துவது வழக்கம். அதோ விண்மீன்கள் வானின் அடைக்கலங்கள். விண்மீன்கள் அகன்று விட்டால் வாக்களிக்கப்பட்டதை வானம் கொண்டு வந்து விடும். என்னுடைய உம்மத்தின் அடைக்கலங்கள் எனது தோழர்கள். எனது தோழர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து சேர்ந்துவிடும். (முஸ்லிம், 4953)
3. அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்: எனது தோழர்களைத் திட்டாதீர்கள். உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவளித்தாலும் எனது உயிரைக் கைக்கொண்டவன் மீது ஆணையாக, அவர்களில் ஒருவர் இறைவழியில் செலவிட்ட இரு கை அளவையும் எட்ட முடியாது. அதில் பாதியளவையும் எட்ட முடியாது என அண்ணலார் சொன்னார்கள். (புகாரி, 3673 – முஸ்லிம், 4967)
இந்த அறிவிப்புகள் யாவும் இந்த உம்மத்திலேயே அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள்தாம் சிறந்தவர்கள், உள்ளத்தால் தூய்மையானவர்கள் என்பதை பட்டவர்த்தனமாக நமக்கு எடுத்துரைக்கின்றன. இந்த உம்மத் எந்த சிறப்புப் பண்பை தனதாக்கிக் கொண்டிருந்தாலும், அதில் மற்றவர்களைக் காட்டிலும் முன்னிலையில் அவர்கள்தான் நிற்கிறார்கள். காரணம், சொல்லில் எச்சரிக்கையாளர்களாகவும், செயலில் சிறந்தவர்களாகவும் அவர்கள் திகழ்ந்ததே. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் யாராக இருப்பினும் இந்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்றியே தீர வேண்டும்.
ஸஹாபாக்களும் சிறப்புகளும்
நபித்தோழர்கள் பெற்றிருந்த சிறப்புகளுக்கும் இறைவனிடம் அவர்களுக்கு இருந்த மதிப்பிற்கும் என்ன காரணம்? என்பதை, அதனைப் பெற்றுத்தருகின்ற தலையான சூட்சுமம் ஒன்றை இத்தலைப்பில் காண உள்ளோம்.
இவ்வுலக மக்களுக்கான இறைவனின் வழிகாட்டுதலான இஸ்லாம் ஒரு பேரியக்கமாகத் திகழுகின்றது. விளம்பரங்கள் வாயிலாக மக்களை ஒன்றுகூட்டி ‘பேரியக்கம்’ என அறிவித்துக் கொள்ளப்படுகின்றதே, அந்தப் பேரியக்கம் அன்று. உன்னதமான குறிக்கோளுக்காக இறைவனின் விருப்பத்திற்குரிய பணியை மேற்கொண்டு இயங்குவதால் அது பேரியக்கம் எனப்படுகின்றது.
ஃகைருல் உம்மத் (சிறந்த சமூகம்) எனவும் உம்மத்தன் வஸதா (நடுநிலை சமூகம்) எனவும் குர் ஆன் இந்த சமூகத்தையே குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிறப்பிக்கப்படுகின்ற இப்பேரியக்கம் செய்கின்ற, இறைவனுக்கு பிரியமான அப்பெரும் பணி என்னவென்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் வாழும் மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் வழங்கியிருக்கிறான். ஊனையும் உணவையும் உறங்கி இளைப்பாற வழியையும் உடுத்தி மகிழ ஆடைஅணிகலன்களையும் உலக வாழ்க்கையை இன்பமாய் கழிக்க இன்னபிற எண்ணற்ற வசதி வாய்ப்புகளையும் இறைவன் வழங்கியிருக்கிறான். இவற்றை எல்லாம் தாண்டி, இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என தெளிவான வாழ்க்கை வழிகாட்டுதலையும் வழங்கியிருக்கிறான். இறப்பிற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு, அதில் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும் செய்த செயல்களைப் பற்றியும் தோண்டி துருவி ஒவ்வொன்றைப் பற்றியும் விசாரணை செய்யப்படும். அங்கே அவ்விசாரணையில் வெற்றிபெற்று மறுமை வாழ்க்கையை ஈட்ட வேண்டுமெனில் இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் உண்டு.
சரியாகச் சொல்வதென்றால், மற்ற மற்ற வசதி வாய்ப்புகளை வழங்கியுள்ளதைக் காட்டிலும் இந்த வழிகாட்டுதலைக் கொடுத்திருப்பதுதான் உண்மையிலேயே இறைவன் நமக்குச் செய்துள்ள பேரருள் ஆகும். மறுமை வெற்றி முழுக்க முழுக்க இதனைச் சார்ந்து இருப்பதுதான் காரணம்.
இறைவன் ‘ரஹ்மான்’ (பொங்கு கருணையாளன்) என்றால் இந்த வழிகாட்டுதலை அவன் வழங்கியாக வேண்டும். அவனுடைய அளவற்ற கருணையை இதுவே வெளிப்படுத்துகின்றது. இதனால்தான் இறைவன் தன் திருமறையில் ‘கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில், நேரிய வழியினைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது’ (அல்குர்ஆன் 16:9) எனக் குறிப்பிட்டுள்ளான்.
கெடுவாய்ப்பாக, உலகத்தில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் இந்த நேரிய இறைவழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. நேரிய வழியை விட கோணலான வழிகள் அவர்களுக்கு விருப்பமாக இருக்கின்றன, அல்லது அவர்களுக்கு இறைவனின் வழிகாட்டுதல் பிடிப்பதில்லை, அல்லது இறைவனை அவர்கள் நம்பியேற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், அல்லது ஒரிறைவனை ஏற்றுக் கொண்டாலும் அவனையும் அவனது கட்டளைகளையும் அலட்சியப் படுத்துகிறார்கள், அல்லது தம்மை யொத்த மற்ற மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள், அல்லது இறைவனின் வழிகாட்டுதலில் தமது அபிலாஷைகளை நுழைத்து அதன் இயல்வடிவை மாற்றிவிட்டிருக்கிறார்கள், அல்லது இறைவனின் வழிகாட்டுதலை விட உலகில் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டுள்ள பல்வேறு கொள்கைகளும் கோட்பாடுகளும் அவர்களது பார்வையில் கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கின்றன, அல்லது இறைவனின் வழிகாட்டுதலில் மனித மனம் விரும்புகின்ற புலனின்பங்களுக்கு தீனியில்லை, அல்லது … இவ்வாறாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆக, மனிதன் இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
இறைவனின் வழிகாட்டுதலை விட்டு விலகி இருக்கும் மனிதர்களிடம் சென்று இறைவனின் வழிகாட்டுதலை மனமொப்பி ஏற்றுக் கொள்ளுங்கள், அதில்தான் உங்களுக்கு வெற்றி இருக்கின்றது என உணர்த்த ஒரு குழு தேவைப்படுகின்றது. இறைவன் இவ்வுலகில் செய்ய விரும்புகின்ற பணி இதுவேயாகும்.
‘இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாமை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்’ (அல்குர்ஆன் 3:85)
நான்கு விநாடிகளே நிலைத்திருக்கின்ற உலக வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்வதைவிட நெடுநாள்கள் நீடித்திருக்கின்ற அழியாப் பெருவாழ்வான மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகமிக முக்கியம். அது இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால்தான் கிடைக்கும். அப்படியாயின் இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்கின்ற மனிதர்களுக்கு இதனை உணர்த்துவதை விட ‘முதன்மைச் செயல்’ ‘முக்கியப் பணி’ வேறு எதுவும் இருக்க இயலாது.
மறுமை வாழ்க்கையில் வெற்றி என்பது மட்டுமன்று, இவ்லக வாழ்க்கையிலும் நிம்மதியையும் அமைதியையும் உத்தரவாதமாகப் பெற்றுத் தருகின்ற வழிமுறை இறைவனின் வழிகாட்டுதலே ஆகும். இறைவனின் வழிகாட்டுதல் ஒன்றைமட்டுமே முழுமையாகப்பின்பற்றி இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டால் அமைதியான வாழ்க்கை கிடைக்கும். இவ்விரண்டையும் அதாவது, முழுமையான கட்டுப்பாடு மற்றும் அமைதியான வாழ்வு ‘இஸ்லாம்’ என்னும் சொல் உணர்த்து கின்றது.
‘எங்களைப் பாருங்கள், எங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்’ ‘எங்களைப் போல் மாறுங்கள்’ என உலக மக்களுக்கு முன்னால் அவர்கள் தங்களையே எடுத்துக்காட்டுகளாய் முன்வைக்கிறார்கள். இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் இதோ, எங்கள் வாழ்க்கையைப் போல உங்களுடைய வாழ்க்கையும் மாறிவிடும் என அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள்.
‘எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கிறாரோ, இறை வழிகாட்டுதலின்படிசெயல் புரிகிறாரோ, மேலும், இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன் நான் எனப் பகிரங்கமாக மன்றத்தில் நின்று கூறுகிறாரோ, சொல்லால் அழகியவர் அவரைவிட யார் உள்ளார்?’ (அல்குர்ஆன் 41:33)
உலகிற்கு அருளாய் திகழுகின்ற இப்பெரும்பணியைச் செய்வோர் உயர்தகுதிகள் பலவற்றைப் பெற்றிருக்கவேண்டும் என இறைவன் எதிர்பார்க்கிறான். அவற்றைப் பற்றி தன் அருள்மறையில் பல்வேறு இடங்களில் அவன் கோடிட்டுக்காட்டவும் செய்துள்ளான். அத்தியாயம் ஆலு இம்ரான், அத்தியாயம் முஃமினூன், அத்தியாயம் அல்ஃபுர்க்கான், அத்தியாயம் மஆரிஜ் போன்வற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அத்தகுதிகள் யாவற்றிலும் முதன்மையானது ‘நிறைவான நம்பிக்கை’ ஆகும். இப்பண்பைக் கொண்டோர்தாம் ‘சாதிக்கீன்கள்’ ‘சித்தீக்கீன்கள்’ எனப்படுகிறார்கள். இறைவன் இத்தகையோரிடம் தான் தன் பணியை ஒப்படைக்கிறான். ‘உண்மையில், இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ் வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மை யாளர்கள்!’ (அல்குர்ஆன் 49:15)
இறைவனை ஏற்றுக்கொண்டோம் என முன் வருகின்ற மனிதர்களில் இருந்து இத்தகைய உண்மையாளர்களை வடிகட்டி பிரித்து ஒதுக்குவதற்காகத்தான் இறைவன் பல்வேறு சோதனைகளை அளிக்கிறான்.
‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன?
‘உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தோர் அனைவரையும் நாம் சோதித்திருக்கிறோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!’ (அல்குர்ஆன் 29:2,3)
இறைவன் எதிர்பார்க்கின்ற அந்தத் தகுதிகளும் அருகதைகளும் எங்களிடம் இருக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டுகின்ற நல் ஆன்மாக்கள் வசமே இப்பொறுப்பு, இந்த இஸ்லாமியப் பணி ஒப்படைக்கப் படுகின்றது.
ஆழமாய் உற்றுநோக்கின் இப்பண்புகள் யாவும் அளப்பெரியன, யாவராலும் கைகூடாதன என்பதை உணரலாம். இப்பணியை நிறை வேற்றுவதற்கு இப்பண்புகள் இத்தகுதிகள் யாவும் இருந்தாக வேண்டியது அவசியம் என்றபோதிலும் பணியை நிறைவேற்றத் தொடங்கிய பின்பு, இத்தகுதிகள் அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான சூழ்நிலைகளை இறைவன் ஏற்படுத்துவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இறைவனுடைய அருளும் (ரஹ்மத்) அவனது உதவியும் (நுஸ்ரத்) அவர்களுக்குக் கிடைத்துவிடுகின்றன. ஆகையால் தாம் பெற்றிருக்கும் உன்னத தகுதிகள் யாவற்றையும் பயன்பாட்டில் கொணர்வதற்கான வாய்ப்புகள் (பெரும்பாலும்) அவர்களுக்கு அமைவதில்லை.
இஸ்லாமியப் பாதையில் ஒரு நுட்பமான விஷயம். இறையருள் பெற்றோர்தாம் இதனை உணரவேண்டிய முறைப்படி உணருகிறார்கள்.
நபித்தோழர்கள் அவர்களிலும் சிறப்பாக சொர்க்கச் சான்றிதழ் பெற்றோர் இவ்வனைத்து தகுதிகளையும் அருகதைகளையும் முழுமையாகப் பெற்றிருந்தார்கள். இறைவன் அவர்களைக் கண்டு மனம் மகிழ்ந்தான், அவர்களோடு திருப்தி அடைந்தான். ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறினால் தெளிவாய் விளங்கும் என நம்புகிறோம்.
ஓர் இறைநம்பிக்கையாளர் நிறைவான நம்பிக்கையாளராக இருந்தாக வேண்டியது அவசியம். இறைவனையும் இறைவனின் தூதரையும் முழு மனதோடு நம்பியேற்க வேண்டும். அதில் இம்மியளவும் சந்தேகம் தோன்றலாகாது. இறைவனின் செய்தியை சுமந்துகொண்டு மக்களிடையே செல்பவருக்கு இறைவன் மீதும் இறைவனின் தூதர் மீதும் நம்பிக்கை இல்லாதுபோனால் என்னாவது? இது இறைவனின் செய்தி! என்றவர் அடித்துச் சொல்லவேண்டும், அல்லவா?
இந்த நம்பிக்கையை பெற கால அவகாசத்தை வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ‘உண்மையில், இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ் வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர் கள்!’ (அல்குர்ஆன் 49:15) என்னும் இறைவசனம் இதனையே விளக்குகின்றது. நம்பியேற்றுக் கொண்ட பிறகு, செம்பால் வார்க்கப் பட்ட உறுதிமிக்க சுவரைப்போன்று நிலைத்து நிற்க வேண்டும். சிறு சலனமோ மெல்லிய விரிசலோ அதில் காணப்படவே கூடாது. அந்த நம்பிக்கையை இவர்கள் பெற்றிருந்தார்கள்.
கீழ்வரும் நிகழ்வை உற்றுக் கவனியுங்கள். ஏதோ ‘அந்தக்’ காலத்தில் நடந்த அற்புத நிகழ்ச்சியை நம்புவதை அல்லாஹ்வின் தூதர் சொல்ல வரவில்லை. ‘நம்புவது’ என்றால் என்ன? என்பதை விளக்குகிறார்கள்.
‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஓர் ஆட்டிடையர் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, ‘கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் இதை யார் பாதுகாப்பார்? அந்நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே’ என்றது. (இவ்வாறே) ஒருவர் ஒரு மாட்டின் மீது சுமையை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. ‘நான் இதற்காகப் படைக்கப்படவில்லை. மாறாக, உழுவதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளேன்’ என்றது’ என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹ் தூயவன்’ என வியந்தார்கள். அப்போது அண்ணலார், ‘நானும் அபூ பக்கரும் உமர் இப்னு கத்தாபும் இதை நம்புகிறோம்’ என்றார்கள். (அபூ ஹுரைரா/சஹீஹுல் புகாரி)
அடுத்து, இப்னு துஃக்னா என்னும் அரபுலகத் தலைவர் அபூ பக்கருக்கு அடைக்கலம் கொடுத்த நிகழ்வை எடுத்துக் கொள் ளுங்கள். இஸ்லாமியப் பணியை செய்ய முன்வருவோர் இறை வன்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை இறைவனுடைய பாதுகாப்புதான் உண்மையான பாதுகாப்பு என்பதில் உறுதியை பெற்றிருக்கவேண்டும்.
‘தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப் பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறை வேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கிறான்’ (அல்குர்ஆன் 5:67) என்பதையும்
‘சொல்க: ‘அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்ப வற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாது காவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமை யாய்ச் சார்ந்திருக்க வேண்டும்’ (அல்குர்ஆன் 9:51) என்பதையும் முழு மனதோடு நம்பியிருந்தால் தான் இஸ்லாமியப் பணியை முயன்று செய்ய முடியும்.
இந்நம்பிக்கை தம்மிடம் இருக்கின்றது என அபூ பக்கர் நிரூபித்தார். எதிரிகளுக்கு நடுவே தமக்குக் கிடைத்த பாதுகாப்பு அரணை அவர் உதறித் தள்ளினார். எதற்காக? இறைவனின் ஆணை ஏதாவதை நிலைநாட்டவா? இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டம் ஒன்றை செயற்படுத்தவா? இல்லை, நிகரற்ற ஆற்றல் பொருந்தியவன் என தான் மனதார நம்பியேற்றுக் கொண்டுள்ள வல்லமை பொருந்திய ஏக இறைவனின் வாக்கை சப்தமாக சொல்வதற்காக!
அல்லாஹ்வின் வேதத்தை சொல்லாமல் இருந்தால் அடுத்தவனின் பாதுகாப்பு கிடைக்குமா? நான்குநாள்களில் செத்துப்போய் மண்ணோடு மண்ணாக மாறப்போகவுள்ள வெற்று மனிதனின் பாதுகாப்புக்காக இறைவனின் வேதத்தை மௌனமாக வீட்டின் மூலைக்குள் உட்கார்ந்து ஓத அவரால் முடியவில்லை.
வேண்டாம் உன்னுடைய பாதுகாப்பு, அந்த இறைவனின் பாதுகாப்பு ஒன்றே எனக்குப் போதும் – என்பதை அவர் உணர்த்தினார்.
அபூ தாலிப் பள்ளத்தாக்கில் ஓரிறைவனை ஏற்றுக்கொண்டோர் அதிலும் குறிப்பாக பனூ ஹாஷிம் குலத்தோர் அனைவரும் சிறை வைக்கப் பட்டுள்ளார்கள். ஸஅத் இப்னு வக்காஸ், ஹாஷிமி அல்லர். அவருக்கு இந்த சிறை தண்டனை பொருந்தாது. ஆனாலும் அவர் சிறை பட்டார். தாமாக முன்வந்து சிறைத் தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.
அல்லாஹ்வுடைய கட்டளை ஒன்றிக்கு கீழ்படிய முடியாத வாழ்க்கையை விட – அது என்னதான் வசதியான வாழ்க்கையாக இருந்தாலும் – சிறைச்சாலையே மேல் எனத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர் யூஸுஃப் அவர்களுடைய வழிமாதிரி இது.
அரைகுறை அறிவு படைத்தோர், இஸ்லாமிய பேரியக்கத்தின் நுட்பங்களை உணராதோர் இறைத்தூதர் யூஸுஃப் அவர் களையும் விமர்சிக்கிறார்கள். அவராக வாய்விட்டு கேட்டுக் கொண்டதால் தான் பல்லாண்டுகள் சிறையில் வாட நேர்ந்தது எனக்கூச்சப்படாமல் சொல்வோரும் உள்ளனர். சந்தையில் மாடுகள் போல விலைக்கு விற்கப் பட்டு அடிமை வாழ்க்கையை வாழ்ந்து நாறிப்போய் சீரழிவதில் இருந்து இறைவன் யூஸுஃப் அவர்களைப் பாதுகாத்தான். அத்தகைய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா, இல்லையா? அந்நன்றியை அவர்கள் செலுத்தினார்கள். செய்நன்றி அது. அதனால் அவருக்கு எவ் வளவோ கிடைத்தது. மனைவி மக்களோடு வெயில்படாத நிழல் வீட்டில் பசியில்லாமல் வாழுவதை பேரின்பமாகக் கருது வோருக்கு அவை ஒருபோதும் தென்படா!
இந்த நம்பிக்கை இல்லாதுபோனால் என்னவாகும்? உங்களால் இஸ்லாமியப் பணியை, இறைவன் விரும்புகின்ற பணியை ஒருபோதும் செய்ய இயலாது. நம்மிடம் உள்ள யாவற்றையும் செலவு செய்து இறைவனின் வாக்கையும் இறைவனின் வழிகாட்டலையும் இறைத் துதரின் வழிமுறையையும் தூக்கிநிறுத்த வேண்டும். நமக்குக் கிடைக்கின்ற வசதிகளை, உலகியல் இன்பங்களுக்காக ஒருபோதும் இறைகட்டளை யையோ இறைத்தூதரின் ஸுன்னாவையோ பலியிட்டு விடக் கூடாது. மேற்கண்ட நம்பிக்கை வலிமை இல்லாத பட்சத்தில் முஸ்லிம்கள் என தங்களைச் சொல்லிக்கொள்வோர் இஸ்லாமை பேரம் பேச முனைகிறார்கள். அந்த கேவலக்காட்சியை இன்று உலகம் தன் கண்களால் கண்டுகொண்டுள்ளது.
இறைவன் தங்களுக்குக் கொடுத்துள்ள நேரத்தை, உழைப்பாற் றலை, உடல் வலுவை, கல்வியை, அறிவை, மதிக்கூர்மையை, திறமையை, மக்கள் செல்வாக்கை, செல்வத்தை, பேச்சாற்றலை என அனைத்தையும் நபித்தோழர்கள் இறைவனுடைய வாக்கை மேலோங்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்தினார்கள். கைவசம் இருக்கும் கடைசிப் பொருளையும் கொடுக்கத் தயார் என்பதை இறைவனுக்கு உணர்த்தினார்கள். விளைவு? இறைவன் அவர் களைப் பொருந்திக் கொண்டான். ரழியல்லாஹு அன்ஹும்!
எம் பணியை இவர்களால் செய்துமுடிக்க முடியும் என இறைவன் அவர்களை நம்பினான். இவர்களிடம் இருக்கின்றது இப்பணிக்கான திறமைகள், தகுதிகள் யாவும் என இறைவன் தீர்க்கமாக உணர்ந்து கொண்டான்.
அவர்கள் கொடுக்க முன்வந்தார்கள், பெற்றுக் கொண்டார்கள், இன்றளவும் பேசப்படுகிறார்கள்.
சஹாபாக்களைப் போல் மாறுவது உம்மதின் மீது கடமை
பல்வேறு நுட்பங்களின் அடிப்படையில் இறைத்தூதரின் தோழர்களைப் போல் மாறுவது நம் மீது கட்டாயக் கடமையாகும். அவற்றுள் ஒரு சில.
1. அவர்களை நேசிப்பது, அவர்களை மதிப்பது, அவர்களைப் போற்றுவது கடமையாகும்.
2. இந்த உம்மத்திலேயே, சரியாகச் சொல்வதென்றால் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த அணி, சஹாபாக்களின் அணியே. ஆகையால், அவர்கள் உண்மையாளர்கள் என சான்று பகர்வது கடமையாகும்.
3. அவர்கள் மிகச் சரியாக தீனைப் புரிந்திருந்தார்கள் என நம்பி ஏற்பதும் ஸலஃபுகளின் கோட்பாடு சஹாபாக்களைத் தொடர்ந்தே வருகின்றது என்பதை ஏற்பதும் பித்அத்கள், ஃபித்னாக்கள், வழிகேடுகள் போன்ற உம்மத்தில் தோன்றிய எல்லா ஆபத்துகளை விட்டும் அவர்கள் பாதுகாப்பு பெற்றிருந்தார்கள் என நம்பி ஏற்பதும் கடமையாகும்.
4. இயன்றவரைக்கும் அவர்களைப் போற்றுவதிலும் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் நடத்தைகளையும் உயிர்ப்பிப்பதிலும் போட்டி போட வேண்டும்.
5. அவர்களை விமர்சிப்போரை, உள்நோக்கத்தோடு அவர்களின் எண்ணங்களைச் சுரண்டுவோரை அவர்களைக் கொண்டு புகழடைய எண்ணுவோரை தடுத்து நிறுத்த வேண்டும்.
6. வளரும் உள்ளங்களில் அவர்கள் மீதான அன்பை விதைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களைப் போன்றே மாறுவார்கள். உள்ளங்களில் இருந்து அவர்களுடைய மதிப்பு ஒருபோதும் சரிய அனுமதிக்கக் கூடாது.
அண்ணலாரோடு கொண்ட தோழமைக்கு உண்மையாகத் திகழ்ந்த இஸ்லாமின் பாதையில் தம்மிடமிருந்த யாவற்றையும் செலவளித்த சஹாபாக்களைப் போல மாறுவதும், அவர்களைப் போற்றுவதும் அவர்களைச் சிறப்பிப்பதில் சேரும். அவர்கள் யாவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இந்நூலில் நாம் சொர்க்கத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டவர்களை குறித்து பார்க்கப் போகிறோம். தன்னுடைய தூதரின் தோழர்களாக மக்களில் மிகச் சிறந்தோரை இறைவன் தேர்ந் தெடுத்தான். அவர்களுடைய பண்புகளும் சிந்தனைகளும் வேறு பட்டிருந்தன. அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர்களாக, அர்ப்பணிப்பால் ஓங்கியவர்களாக, நம்பிக்கையால் நிறைந்தவர்களாக, பண்புகளால் ஒளிர்ந்தவர்களாக திகழ்ந்த ஒரு சிலரை சொர்க்கத்திற்கு உரியோர் என தன் தூதரின் வாய்மொழியால் சான்றிதழ் வாசிக்கச் செய்தான். அவர்கள் பத்து பேர்.
1. அபூ பக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு
2. உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு
3. உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு
4. அலீ இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு
5. அபூ உபைதா இப்னு ஜர்ரஹ் ரழியல்லாஹு அன்ஹு
6. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு
7. ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு
8. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு
9. ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு
10. ஸஈத் இப்னு ஸைத்.
இஸ்லாமிய வரலாற்றில் இவர்களின் வாழ்வு அடங்கிய பக்கங்கள் பொன்னெழுத்துகளால் மின்னுகின்றன. கலப்பற்ற எண்ணம் நிறைந்த நம்பிக்கையோடு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். தன்னுடைய மார்க்கத்திற்கும் உம்மத்திற்கும் ஓர் இறைநம்பிக்கையாளர் எந்த அளவிற்குப் பணியாற்ற முடியுமோ அந்த அளவு மிகச் சிறப்பாகவும் சீராகவும் அழகாகவும் பணியாற்றி முடித்தார்கள்.
இந்தப் பதின்மரின் வரலாற்று நிகழ்வுகளை, தூய வாழ்க்கையை, பண்புநலன்களை, பரிசுத்த குணங்களை, போற்றத்தக்க ஒழுக்கங்களை, புகழ வேண்டிய சிறப்புகளை இந்நூல் சொற்களில் வடித்துத் தருகின்றது.
இதை உரைகல்லாகக் கொண்டு ஒவ்வொருவரும் தன்னுடைய ஆளுமையைப் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். வெந்ததைத் தின்று வாழுகின்ற வீணான மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்த உரிமையாளன், கண்ணியம் பொருந்திய தன் தூதருக்கு வஹியாக அனுப்பி வைத்த இறைச் செய்தி வழியாக அருட்கொடைகள் நிறைந்த சொர்க்கத்திற்கு உரியோர் என்னும் நற்செய்தி இவர்களுக்குக் கிடைத்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அப்துர் ரஹ்மான் இப்னு அஃக்னயி வழியாக அபூதாவூதில் பதிவாகியுள்ள தகவல்: அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் அலீ அவர்களைப் பற்றி கண்டபடி பேசலானார். அங்கே அமர்ந்திருந்த ஸஈத் இப்னு ஸைத் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். பத்து பேர் சொர்க்கத்திற்கு உரியவர்கள். இறைவனின் தூதர் சொர்க்கத்தில் இருப்பார். அபூ பக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஜுபைர் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் இப்னு மாலிக் (அதாவது ஸஅத் இப்னு அபீவக்காஸ்) சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். நான் நினைத்தால் பத்தாவது நபரையும் சொல்ல முடியும் என்றார்கள். அங்கு அமர்ந்திருந்தோர் யார் அவர் என வினவினார்கள். அதற்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்தார். மறுபடியும் யார் அவர் என மக்கள் கேட்டபோது, ஸஈத் இப்னு ஸைத் என்றார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு வாயிலாக அஹ்மதிலும், திர்மிதியிலும் பதிவாகியுள்ள தகவல்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அபூ பக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஜுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் சொர்க்கத்தில் இருப்பார். ஸஈத் சொர்க்கத்தில் இருப்பார். அபூ உபைதா இப்னு ஜர்ரஹ் சொர்க்கத்தில் இருப்பார்.
மக்கா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே இந்த நற்செய்தி உரைக்கப்பட்டு விட்டது என்பதையும் அறிவிப்புகள் உணர்த்து கின்றன. ஸஈத் இப்னு ஸைத் அறிவிக்கும் தகவல் முஸ்னத் அஹமதில் பதிவாகியுள்ளது. அலீ சொர்க்கவாசிகளுள் ஒருவர் என நான் சாட்சியம் அளிக்கிறேன் என்றார் ஸஈத். அவர்கள் யாரோ? அவர்கள் ஒன்பது பேர். நீங்கள் நாடினால் பத்தாவது நபிரையும் என்னால் சொல்ல முடியும் என அவர் தொடர்ந்தார்.
ஒரு முறை ஹிரா மலை ஆட்டம் கண்டபோது அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஹிராவே அசையாதிரு. நபியைத் தவிர, சித்தீக்கைத் தவிர, ஷஹிதைத் தவிர வேறு யாரும் உன் மீது நிற்கவில்லை. அப்போது அங்கே அண்ணலாருடன் அபூ பக்கர், உமர், அலீ, உஸ்மான், தல்ஹா, ஜுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் ஆகியோரோடு நானும் இருந்தேன்.
இதே அறிவிப்பு ஸஈது அல்லாமல் உஸ்மான் இப்னு அஃப்பான், (ஸுனன் திர்மிதி, கிதாபுல் மனாகிப்) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (தாரீக் திமிஷ்க்), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (தாரீக் திமிஷ்க்), அப்துல்லாஹ் இப்னு உமர் (தாரீக் திமிஷ்க்), அபூஹுரைரா (முஸ்லிம் – சஹாபாக்களின் சிறப்புகள்), புரைதா அயிலமி (முஸ்னத் அஹ்மத் – அன்சாரிகளின் பதிவுகள்) ஆகியோர் வழியாகவும் பதிவாகியுள்ளது.
சொர்க்கத்திற்கு நற்சான்று உரைக்கப்பட்ட இவர்கள் இஸ்லாமை ஏற்பதில் முந்திக் கொண்டவர்கள், முஹாஜிரீன்கள், முஜாஹிதீன்கள், பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள், பைஅத்துர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்கள், அண்ணலாரு டன் அனைத்து நிகழ்வுகளிலும் இடம்பெற்றவர்கள், தம் உடை மைகளையும் உயிரையும் செலவளித்தவர்கள், உலகையும், செல்வத்தையும், ஊரையும், உறவையும் துச்சமாக மதித்து இறை வனின் திருமுகத்தைப் பெரிதாக எண்ணியவர்கள் வாழ் நாள் முழுக்க இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள்.
இவர்தம் உயர் தரத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ஸஈத் இப்னு ஜுபைர் சொல்வார்: அபூ பக்கர், உமர், உஸ்மான், அலீ, ஸஈத், தல்ஹா, ஜுபைர், ஸஅத், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஈத் இப்னு ஸைத் ஆகியோர் அல்லாஹ்வின் தூதரின் பார்வையில் ஒரே தரமானவர்கள். போர்க் களத்தில் அல்லாஹ்வின் தூதருக்கு முன்னால் நின்று போரிடுவார்கள். பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் நின்று தொழுவார்கள். முஹாஜிரீன்களிலும் அன்சாரிகளிலும் இவர்களுக்கு நிகராக எவரும் கிடையாது. இருப்போர், இறந்தோர் அனைவரிலும். (தாரீக் திமிஷ்க்)
இந்த பத்து பேர் அல்லாமல் வேறு பலரைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் சொர்க்கவாசிகள் என்னும் நற்சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த பத்து பேரை சிறப்பித்து வரிசைப்படுத்தி இறைத்தூதர் கூறியுள்ள காரணத்தினால் சொர்க்கத்திற்கு உரிய பதின்மர் என்னும் பெயரால் இஸ்லாமிய வரலாறு தொடர்ந்து இவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது.
எடுத்துக்காட்டாக, பத்ருப் போரில் கலந்து கொண்டோர் அனைவரும் சொர்க்கவாசிகள் என்னும் அறிவிப்பு புகாரியிலும் முஸ்லிமிலும் காணப்படுகின்றது. ஹாதிப் இப்னு அபீ பல்தா நிகழ்வில் இதனை நாம் கண்கூடாகக் காணலாம்.
அதே போன்று பைஅத்துர் ரிழ்வானில் பங்கேற்றவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என அறிவிப்புகள் தெரிவிக்கின் றன. உண்மையாளரும் உண்மையே பேசுபவருமான இறை வனின் திருத்தூதர் தமக்கு அருளப்படுகின்ற வஹியைத் தவிர வேறு எதனையும் உரைக்க மாட்டார் என்பதற்கு வான்மறை குர்ஆனே சாட்சியம் பகர்கின்றது. (அல்குர்ஆன் 53:2)
மரத்தின் கீழாக நின்று பைஅத் செய்த எவரும் நரகில் நுழைய மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டதாக ஜாபர் அறிவிக்கிறார். (அபூதாவூத்)
ஹுதைஃபா அறிவிக்கிறார்: ஹசனும் ஹுசைனும் சொர்க்க வாசிகளின் இளைஞரணித் தலைவர்கள் என அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள். (திர்மிதி)
சொர்க்கத்தில் சிறகடித்துப் பறக்கும் நிலையில் ஜாஃபரை தான் கண்டதாக அண்ணலார் சொன்னார்கள். (அபூஹுரைரா, இப்னு ஹிப்பான்)
அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் – சொர்க்கத்தில் என்னை நுழையக் கண்டேன். அங்கே பார்த்தால் ருமைஸா இருக்கிறார். அபூ தல்ஹாவின் மனைவி. யாருடைய காலடி ஓசையோ கேட்கிறது. யாரவர்? அவர்தான் பிலால். அங்கே ஒரு மாளிகை இருக்கிறது. அதன் முற்றத்தில இளம் பெண் ஒருத்தி இருக்கிறாள். யாருடையது இது? இது உமருடையது. உள்ளே நுழையலாம் என எண்ணினேன். உமரின் ரோஷத்தை நினைத்து நின்றுவிட்டேன்.
என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல் லாஹ்வின் தூதரே, தங்களிடமா நான் ரோஷப்படுவேன் என்றார் உமர். (புகாரி – சஹாபாக்களின் சிறப்புகள்) (ருமைஸா – உம்மு ஸுலைம் இப்னுத் மில்ஹான், அனஸ் இப்னு மாலிக்கின் தாயார், விருந்தாளிக்கு இரவில் உணவு கொடுத்தவர்)
இப்படி மேற்கண்ட பதின்மர் அல்லாமல் வேறு பலரும் இந்தக் பட்டயத்தைப் பெற்றிருக்கிறார்கள். அல்லாஹ்வுக்கும் அல் லாஹ்வுடைய நன்னெறிக்கும் உதவியாளர்களாகவும் நெருக்க மானவர்களாகவும் இவர்கள் திகழ்ந்திருப்பது ஒரு முக்கிய காரணம்.
தனிச் சிறப்புக்கும் முன்னுரிமைக்கும் காரணங்கள்
தனது படைப்பினங்களில் ஒரு சிலவற்றுக்கு ஏனையவற்றை விட இறைவன் தனது நுட்பத்தின், ஞானத்தின் விளைவாக முன்னுரிமை அளிக்கின்றான். (அல்குர்ஆன் 28:68)
இறைவனுடைய இந்தத் தனிச் சிறப்புக்கும் முன்னுரிமைக்கும் இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. (அல் ஃபயில் ஃபல் மிலல் வல் அஹ்வாஹ் வன் நிகல் இப்னு ஹஸம்)
எந்தச் செயலும் செய்யாமல் எந்தத் தகுதியும் இல்லாமல் இறைவனே சிறப்பை வழங்குவது. செயல்களின் தகுதியின் பாரபட்சத்தினால் சிறப்பை அடைவது. செயலைச் சாராமல் கிடைக்கும் சிறப்பு உயர்திணைப் பொருட்களில் மட்டுமல்லா மல், அஃறிணைப் பொருட்களுக்கும் உயிரற்ற பொருட்களுக் கும் பொருந்தும்.
உதாரணமாக, படைப்புகளிலேயே தொடக்க நாள் முதற் கொண்டு வானவர்கள் சிறந்த படைப்பினமாகத் திகழ்கிறார்கள். உயர்திணை படைப்புகளான மனிதர்களிலும் ஜின்களிலும் இறைத்தூதர்கள் சிறப்பு பெற்று விளங்குகிறார்கள். உலகிலுள்ள ஊர்கள் யாவற்றிலும் மக்காவும், மக்காவை அடுத்து மதீனாவும் சிறப்படைந்துள்ளன. இவ்விடங்களில் பள்ளிவாசல்கள் சிறப்பு பெற்றவை; கற்களில் ஹஜருல் அஸ்வத் சிறப்பு பெற்றது. மாதங்களில் ரமளானும், நாட்களிலும், வெள்ளியும், அரஃபாவும், பத்தாம் நாளும் சிறப்பு பெற்றவை. இரவுகளில் லைலத்துல் கத்ரும் உபரித் தொழுகைகளை விட கடமைத் தொழுகையும், கடமைத் தொழுகைகளிலும் மாலைத் தொழுகையும் வைகறைத் தொழுகையும் சிறப்பு பெற்றன. திக்ருகளில் ஒரு சில மற்றவற்றை விட மேலோங்கி நிற்கின்றன. இப்படி செயல் சாராமல் சிறப்புப் பெற்ற விஷயங்கள் பல உண்டு.
செயலால் சிறப்படைவது உயர்திணையாக வானவர், மனிதர், ஜின்கள் போன்றவற்றிற்கு மட்டும்தான் பொருந்தும். இவற்றினுள்ளும் பல வகைகள் உள்ளன.
1. நற்பேறால் கிடைக்கும் சிறப்பு
-அதாவது வழிபாட்டை அதிகப்படுத்துவதால், ஜிஹாதில் முனைப்பு காட்டுவதால் இறைவழியில் மிகுதியாக செலவு செய்வதால் இதுபோன்ற ஏனைய செயல்களில் பிற மக்களை விட முந்திச் செல்வதால் கிடைக்கும் சிறப்பு.
உதாரணமாக, அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் இரண்டு நபிர்கள் ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் ஷஹிதானார். மற்றவர் ஓராண்டு கழித்து இறந்து போனார். போர்க் களத்தில் அல்ல; நோயுற்று படுக்கையில். தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் இருவரையும் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு கனவில் கண்டார். படுக்கையில் இயற்கையாக மரணம் அடைந்தவர் ஷஹிதை விட சிறப்பான அந்தஸ்தில் இருந்தார். விடிந்ததும் மக்களிடம் தல்ஹா இதைச் சொன்னார். மக்கள் எல்லாம் மிகவும் வியப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. அல்லாஹ்வின் தூதர், இதில் வியப்படைய என்ன இருக்கிறது? மக்கள், அல்லாஹ்வின் தூதரே இருவரில் ஒருவர் ஜிஹாதில் வேகமாக ஈடுபட்டவர். ஷஹிதாக மரணமடைந்தவர். அப்படியிருக்கையில் மற்றவர் அவரை விட முன்பாக சொர்க்கத்திற்குள் நுழைவதென்றால் எப்படி? என மறுபடியும் தங்களின் வியப்பை வெளிப்படுத்தினார்கள்.
அதைக் கேட்ட அண்ணலார் இவருக்குப் பிறகும் ஓராண்டு காலம் அவர் வாழ்ந்தாரல்லவா?
ஆமாம்.
அப்படியென்றால் ரமளான் மாதத்தைப் பெற்றிருப்பார். நோன்புகள் நோற்றிருப்பார். 1700 ரகஅத்துகளை அவர் தொழுதிருப்பார்.
கண்டிப்பாக, அல்லாஹ்வின் தூதரே.
இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அளவு வேறுபாடு உள்ளதே என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
செயல்களில் காணப்படும் பாரபட்சம் அதற்கு ஈடான தகுதியைப் பெற்றுத் தருவதிலும் வேறுபடுகின்றது.
2. தன்மையையும் இயல்பையும் பொருத்து கிடைக்கும் சிறப்பு
– அதாவது செயல்களில் இஃக்லாஸும் ஈடுபாடும் காணப்படுவது.
இரண்டு நபிர்கள் ஒரே செயலைச் செய்கிறார்கள். ஒருவர், சரியாகவும் முறையாகவும் செம்மையாகவும் செய்கிறார். குறைவு வைக்கவில்லை, கூட்டவும் செய்யவில்லை. மற்றவரோ, சில சமயங்களில் சில சமயங்களில் அளவைக் குறைத்துவிடுகின்றார். அதை முறைப்படி செய்வதில் குறை வைத்து விடுகிறார். சில சமயங்களில் கட்டாயமாகப் பேணுவதை விட்டு விடுகிறார். அதே போல் ஒருவர் பெரும் பாவங்களை விட்டு தன் செயல்கள் யாவற்றையும் பாதுகாக்கிறார். இன்னும் ஒருவர் சில சமயங்களில் பெரும் பாவங்களுக்குப் பக்கத்தில் போய் வந்துவிடுகிறார். இவ்விருவருக்கான தகுதிகளும் அருகதைகளும் இவர்தம் செயல்களின் தன்மைக்கு ஏற்பவே கிடைக்கும்.
3. காலத்தால் வேறுபடுவது
வான்மறை குர்ஆனில் இறைவன் குறிப்படுகிறான்
‘நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பதற்கு என்னதான் காரணம்? உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் உரிமையோ அல்லாஹ்விற்கே உரிய தாகும். உங்களில் எவர் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே, அதற்குப் பின்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்கு சமமாக மாட்டார். அத்தகையவர்களின் அந்தஸ்து, பின்னர் செலவு செய்தவர்களை விடவும், அறப்போர் புரிந்தவர்களைவிடவும் உயர்ந்ததாகும். ஆயினும், அல்லாஹ் இரு சாராருக்கும் நல் வாக்குறுதியினை அளித்திருக்கிறான். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாயிருக் கிறான். (அல்குர்ஆன் 57:10)
அனஸ் அறிவிக்கிறார்: ஒரு முறை காலித் இப்னு வலீதுக்கும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் இடையே பேச்சு முற்றிவிட்டது. காலித் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டார். இது விஷயம் அண்ணலாரின் காதுகளுக்கு எட்டிய போது, என்னையும் என்னுடைய சஹாபாக்களையும் விட்டு விடுங்கள்; ஒன்றும் சொல்லாதீர்கள். என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! உஹது மலையளவு அல்லது அதைப் போன்ற வேறு ஒரு மலை அளவு தங்கத்தை நீங்கள் செலவு செய்தாலும் அவர்களுடைய செயல்களுக்கு இணையானதை நீங்கள் அடைய முடியாது என்றார்கள். (முஸ்னது அஹ்மத்)
4. இடத்தால் வேறுபடுவது
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்: என்னுடைய இந்தப் பள்ளிவாசலில் தொழுவது மயிஜிதுல் ஹராமைத் தவிர மற்ற எந்தப் பள்ளிவாசலில் தொழுவதைக் காட்டிலும் 1000 மடங்கு மேலானது.
5. சேர்க்கையினால் கிடைக்கும் சிறப்பு
அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் நின்று தொழுது, அல்லாஹ்வின் தூதரோடு இணைந்து ஜிஹாத் செய்வது, அல்லாஹ்வின் தூதரோடு தஅவா செய்வது, நம்பிக்கையில் தூய்மையானவனாக, அடிபணிவதில் கலப்பற்றவனாக ஒருவர் அல்லாஹ்வின் தூதரோடு இந்தச் செயல்களைச் செய்திருந்தால் மற்ற யாவரைக் காட்டிலும் முன்னேறிச் சென்று விடுகிறார்.
ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் அமீர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு பற்றி கேட்கப்பட்டது. உங்களைப் பொருத்த வரை முஆவியா சிறந்தவரா, உமர் இப்னு அப்துல் அஜீஸ் சிறந்தவரா?
அதற்கு அவர் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து செயல்பட்ட முஆவியாவின் காலடி தூசு, உமர் இப்னு அப்துல் அஜீஸை விடச் சிறந்தது.
தாபியீன்களில் புகழ் பெற்று விளங்கிய முஆஃப இப்னு இம்ரான் என்பவரிடம் இதே கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதைக் கேட்டு அவர் சினமடைந்தார். முஆவியாவின் ஒரு நாள் உமர் இப்னு அப்துல் அஜீஸை விட மிகச் சிறந்தது என்றார். தொடர்ந்து, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரை தாபயீன்களில் ஒருவரோடு ஒப்பிடுகிறாயா என மேற்கொண்டு கண்டிக்கவும் செய்தார்.
அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் யாவரும் இவ்வனைத்து தகுதிகளையும் பெற்றுவிடுகிறார்கள் – அளவால், தன்மையால், இயல்பால், காலத்தால், இடத்தால், சேர்க்கையால். இவ்வனைத்து தகுதிகளையும் ஒருங்கே பெற்ற உத்தமர்களாக சஹாபாக்களிலேயே சான்று பெற்ற பதின்மர் திகழ்கிறார்கள். அவர்கள் இஸ்லாமை நோக்கி முந்திக் கொண்ட முதல் அணியி னரில் இருக்கிறார்கள். முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த அணியில் காணப்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
கலப்பற்ற வகையில் இறைவனுக்கு அஞ்சியவர்களாகவும் இருக்கிறார்கள். இறைநெருக்கம் கொண்ட ரப்பானிகளாகவும் திகழ்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரோடு கொண்ட தோழமையில் உண்மையாளர்களாக கலப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை பின்பற்றக் கூடிய முன்மாதிரி ஆகிவிட்டது. இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் அறிவிலும், செயலிலும், நடத்தையிலும் வழிகாட்டக் கூடியவர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். இந்த 10 பேரையும் சொர்க்கத்துக்கு உரியவர்கள் என அல்லாஹ்வின் தூதர் சான்றிதழ் கொடுத்திருப் பதே அவர் இறைவனின் தூதர் என்பதற்கான முன்னறிவிப்பாகத் திகழ்கிறது.
அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு ஒருவர் கூட விலகிச் செல்லவில்லை. சரியவில்லை. சறுகவில்லை. மற்ற எல்லா சஹாபாக்களையும் கட்டுப் படுத்தி வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் இருந்தவர்கள், அதற்குப் பின்னால் வந்தவர்கள், எல்லாரையும் விட மேம்பட்டுத் திகழ்கிறார்கள். இவர்கள் யாவரும் குறைஷிகளில் சிறந்தவர்கள். முந்திக் கொண்ட முஹாஜிரீன்களில் சிறந்தவர்கள். பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் சிறந்தவர்கள். மரத்திற்குக் கீழாக பைஅத் செய்தவர்களில் சிறந்தவர்கள். உலகிலும் சரி, ஆகிரத்திலும் சரி இந்த உம்மத்தின் தலைவர்களாகத் திகழ்வார்கள்.
-சையத் அப்துர் ரஹ்மான் உமரி