பெண்களே! கல்லூரிக்குப் புதுசா? உங்கள் கவனத்திற்கு!
தன் எதிர்கால லட்சியங்களுக்காக விரும்பிய கல்லூரியில் கல்வியைத் துவங்கும் நாள் இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ளன எம் இஸ்லாமியப் பெண்களுக்கு!
விதவிதமாய் உடைகள், புதுப்புது உபகரணங்களும் தயாராகிவிட்டிருக்கும்… ஆனால் அதை விட முக்கியம் உள்ளத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வேண்டிய பயிற்சியல்லவா… சுயமரியாதையை உறுதியாய்ப் பற்றிப்பிடிக்கும் யுக்தியை கடைபிடிப்பதற்கான முயற்சியல்லவா….
கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு சில நிமிடங்கள் அதற்காக ஒதுக்குங்கள்.
இன்று உள்ள கல்விச்சூழலில் +2 முடித்த உடன் மேற்படிப்பு படிப்பது என்பது அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாய் உள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முன்பை விட அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் என நம் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அமையப்பெற்றது மகிழ்ச்சியான ஒன்றே.
அக்கல்லூரிகளையோ அல்லது நாம் விரும்பும் எந்தக் கல்லூரியையோ தேர்ந்தெடுக்கும் முன்பு நாம் யோசிப்பது மிக சொற்பமான சிலவற்றையே. அவை நம்முடைய மதிப்பெண், நம்முடைய விருப்பமான பாடம், நம்முடைய பொருளாதார சூழல், இவற்றிற்கு அடுத்த படியாக நமது பள்ளி நண்பர்களும் அவர்களின் நட்புறவுத் தொடர்ச்சியின் மீதுள்ள ஆவலும். ஆனால் நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வதற்கு முன் இந்த சில சிந்தனைகள் போதுமானதா? நிச்சயமாக இல்லை.
யோசிக்கவேண்டியவை:
உலகக்கல்வியை தேர்ந்தெடுக்கும் நாம், நம் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ ஏதும் இல்லை. அப்படி இருக்க நாம் சிந்திக்கும் மேற்கூறிய சிந்தனைகளில் இஸ்லாம் எங்கே மறைந்தது (மறந்தது)?
பள்ளிப்படிப்பு வரை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சில பல கண்டிப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்கிறோம் அல்லது நடந்து கொள்ள வைக்கப்படுகிறோம். ஆனால் நாம் கல்லூரிப் படிகளில் அடிவைக்கும் போது நமக்கு, நமது பெற்றோர்களாலும் சமூகத்தாலும் சில சுதந்திரங்கள் தரப்படுகின்றன.இந்த சுதந்திரத்தின் தவறான புரிதலே சிறிய பெரிய தவறுகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
சுதந்திரத்தின் வரையறை:
சுதந்திரத்திற்கு வரையறை கொடுக்க இறையச்சத்தினால் மட்டுமே இயலும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அனேக கல்லூரிகளில் நம் இஸ்லாத்திற்குப் புறம்பான விஷயங்கள் செய்யப்படுகின்றன அல்லது செய்யத் தூண்டப்படுகின்றன. கல்வி கற்க செல்கிற நாம் அதை ஆமோதிக்கும் நபர்களாய் காலப்போக்கில் மாறிவிடுகிறோம் என்பதே வேதனை.
பட்டப்படிப்பு முடித்ததன் பரிசாக இறையச்சம் குறைந்துவிடுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு மதமாகி போகின்றது. இதற்கு நாம் வைத்துக்கொள்கின்ற பெயர் முற்போக்குச்சிந்தனை. ஆனால் சுய பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகி விடுகிறது.
விளைவுகள்:
இந்த சிந்தனையின் செயல்பாடே வேற்று மதத்தவரை மணந்துகொள்வது, வேற்று மதத்தினரோடு காதல் வயப்படுவது, ஆண் – பெண் விதிமுறைகளற்ற நட்பு, பெண்ணியத்தை மறந்துபோவது, பெற்றோர்களையும், பெரியோர்களையும் முந்தைய சமூகமாய் மட்டும் பார்ப்பது, இவ்வாறு இன்னும் இந்தப் பட்டியல் கூடுதல் தாள் வாங்கும் அளவிற்கு நீளலாம். இவைதான் முற்போக்குச் சிந்தனையா?
மேற்கல்வி கற்பதன் நோக்கம்:
மேற்கல்வி கற்பது நமது அறிவைப் பெருக்கி கொள்ளவே அன்றி நமது சுயமரியாதையை, சுயகட்டுபாட்டை, இஸ்லாத்தை, ஈமானை இழப்பதற்காக அல்ல. இதுவரை இக்கட்டுரையை படித்ததின் புரிதலாக கல்லூரிப் படிப்பே கூடாது என்றோ கல்லூரிகளில் கால் பதிக்கத் தயாராகும் மாணவர்களைத் தவறாக கூறுகிறது என்றோ அல்லது இஸ்லாத்தைத் தவிர மற்ற விஷயங்களை எதிர்க்கிறது என்றோ இக்கட்டுரை கூறுகிறது என எண்ண வேண்டாம். மாறாக உலகக் கல்வியின் அவசியத்தையே தங்கள் முன் வலியுறுத்த முயற்சிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல், மொழி, ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் அவர்களின் கல்வி இஸ்லாத்தையோ ஈமானையோ கடுகளவேனும் பாதிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் நெறிமுறைகளால் அவர்களின் ஞானம் மென்மேலும் வலுப்பெற்றது. இவ்வுலகில் வாழ்கின்ற நமக்கு இவ்வுலகில் நாம் வாழ தேவையான வசதியையும், தொழில்நுட்பத்தையும், அறிவையும், செல்வத்தையும் தேடிக்கொள்வது மிக மிக அவசியமாகும். அது இறைக் கோட்பாடுமளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
நாம் தேர்ந்தெடுக்கப் போகும் கல்லூரியில்
o பெண்கள் புர்கா அணிந்து வர அனுமதி உள்ளதா?
o ஐவேளை தொழுவதற்கு இடமுள்ளதா?
o ஒழுக்கமுள்ள அல்லது ஒழுக்கம் பேணப்படுகின்ற கல்லூரியா?
போன்ற கேள்விகளை முன்வைத்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றில் ஏதேனும் தடை இருந்தால் அதற்கான மாற்று முறைகளுக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பாருங்கள். உதாரணத்திற்கு….
o புர்கா அணிய அனுமதி இல்லையெனில் நம் அணியும் உடையையே ஹிஜாப் முறையில் அணிந்து தலையை மறைத்து வர அனுமதி உள்ளதா?
o தொழுகைக்கு இடவசதி இல்லை எனில் கல்லூரி வளாகத்திலேயே, வகுப்புகளிலே தொழுவதற்கு அனுமதி உள்ளதா என பார்க்கலாம்.
இவற்றில் எவற்றிற்கேனும் குறைபாடுகள் நேரும் பட்சத்தில் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் நபராய் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். கல்வியைக் காட்டிலும் உங்களின் மானமும், ஒழுக்கமும், மரியாதையும், கௌரவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உங்களின் வருகையும், சேர்க்கையும், கட்டணமும், பங்களிப்பும் அக்கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கல்லூரியின் கடமையாகும்.
சிந்திக்க வேண்டியவை:
இந்து மதத்தினர் பொட்டு வைத்துக்கொள்ளவோ, காவி, கருப்பு நிற உடை அணியவோ, கிருஸ்துவ மதத்தினர் சிலுவை அணிந்து வரவோ வெண்மை நிற உடை அணியவோ, சீக்கிய மதத்தினர் டர்பன் அணிவதையோ தடை செய்யாத கல்வி நிறுவனம் இஸ்லாமியர்களாகிய நாம் வைத்துக்கொள்ளும் தாடியையும், அணிகின்ற ஹிஜாப்பையும், தொப்பியையும் தடை செய்கின்றது என்றால் பிரச்சினை யாரிடத்தில் ? சிந்தியுங்கள்.
உங்களிடம் தைரியம் குறைவு, ஒற்றுமை குறைவு, மார்க்கப்பற்று குறைவு என்று எண்ணித்தானே அவர்களின் சட்டங்கள் உங்கள் மீது திணிக்கப்படுகின்றன. நீங்களும் அவற்றை உண்மைபடுத்தும் விதத்தில் தானே நடந்துக்கொள்கிறீர்கள்?
இனியாவது இந்நிலை மாறட்டும். உங்களின் ஒற்றுமையை, மார்க்கப்பற்றை இவ்வுலகிற்கு பறைசாற்றுங்கள். உலக கல்விக்காக மார்க்கத்தையும், சுயமரியாதையையும் பலி கொடுத்த காலம் இன்றோடு ஒழியட்டும். உங்களின் முயற்சியினால் பின்வரும் சமூகத்திற்குக் கல்வியை அழகானதாய் , எளிமையானதாய் ஆக்கி வையுங்கள். நம் சகோதர சகோதரிகளான நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளர்களாய்த் திகழ வேண்டும் (ஆமீன்) என்று இறைவனிடம் இறைஞ்சுபவளாய் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
ஹபிபா ஜமீல்
பரங்கிப்பேட்டை
source: http://www.islamiyapenmani.com/2015/05/blog-post_31.html