அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்
3375. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், ”இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்” என்று கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்கு அநாவசியமானது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)
3373. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)
3369. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்). இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)
3367. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் தாயார் நேர்ந்துகொண்டு விட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துபோய்விட்ட நேர்த்திக்கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”அவர் சார்பாக நீங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)
3368. அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் ”நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)
4521. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; ”காலத்தின் கைசேதமே!” என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் ”காலத்தின் கைசேதமே!” என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழலவிடாமல் நிறுத்திவிடுவேன்.) இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 40)
4519. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 40)
4555. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும். கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன்.
கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: (கால் விலங்கு மற்றும் கழுத்து விலங்கு பற்றிய) இறுதிக் குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் இப்ன சீரீன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றா என்பது எனக்குத் தெரியவில்லை.
– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: காலில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை என் மனம் விரும்புகிறது. கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்.
கால் விலங்கு மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதைக் குறிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இறை நம்பிக்கையாளர் காணும் நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ”காலம் சுருங்கிவிட்டால்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ”கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்” என்பது, இறுதிவரையுள்ள தகவலை விளக்க இடைச்சேர்ப்பாக (”இத்ராஜ்”) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அதில் ”நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று இடம் பெறவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 42)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 42. கனவுகள்)
4367. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும்.
1. முகமனுக்குப் பதிலுரைப்பது
2. தும்மி (”அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி)யவருக்கு (”யர்ஹமுகல்லாஹ்” என்று) மறுமொழி கூறுவது
3. விருந்தழைப்பை ஏற்பது.
4. நோயாளியை நலம் விசாரிப்பது
5. ஜனாஸாவில் கலந்து கொள்வது. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஸ்ஸாக் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: (பொதுவாக) இந்த ஹதீஸை மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து ”முர்சலா”கவே அறிவிப்பார்கள். ஒரு முறை மஅமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சயீத் பின் அல்முசய்யப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்தும்,சயீத் அவர்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தும் கூறியதாவது” என்று (முஸ்னதாக) அறிவித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
source: http://islam-bdmhaja.blogspot.in/2014/12/blog-post_11.html