நிம்மதியான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் நிறைவான வழி!
உடுத்த ஒரு துணியில்லாவிட்டாலும், உண்ண ஓர் கவளம் உணவில்லாவிட்டாலும், ஒதுங்க ஓர் இடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனுசனுக்கு மனசில நிம்மதி இருக்க வேண்டாமா? என அங்கலாய்ப்பவர்கள் பாருலகில் பலருண்டு.
என்னிடம் காசு இருக்கிறது, பணம் இருக்கிறது, சமூகத்தில் எனக்கென ஓர் மரியாதை அந்தஸ்து இருக்கிறது, சொகுசு பங்களாவும், பஞ்சு மெத்தைகளும் இருக்கிறது. நாலு தலைமுறைக்கு இருந்து சாப்பிடுகிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது.
இருந்து என்ன பிரயோஜனம்? இத்தனை இருந்தும் மனசில் நிம்மதி இல்லையே? என குமுறுபவர்களும் இப்பாருலகில் உண்டு.
கோடிகளில் புரள்பவர்களும், தெருக்கோடியில் நிற்பவர்களும், ஆள்பவர்களும், ஆளப்படுபவர்களும், படித்தவர்களும், பாமரர்களும் எந்த வித்தியாசமும் இன்றி நினைப்பதும், விரும்புவதும் “மன நிம்மதியான ஓர் வாழ்க்கை” வாழவேண்டும் என்று தான்.
அந்த வாழ்க்கை ஒரு நிமிடமானாலும் சரி, ஒரு மணி நேரமானாலும் சரி, ஒரு வருடமானாலும் சரி அறுபது ஆண்டுகள் ஆனாலும் சரி நிம்மதியோடு வாழ்கிற வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும்.
எல்லாவற்றையும் தேடிப் பெற்றுக்கொள்வது போன்றே நிம்மதியையும் தேடித் திரிந்து எப்பாடு பட்டாவது பெற்றுக் கொள்ளலாம் என உலகெங்கும் சுற்றித் திரிகின்றான்.
சிலர் தனிமையில் இருந்தால் நிம்மதி கிடைக்குமா? என முயற்சிக்கிறார்கள், இன்னும் சிலர் தூங்கினால் கிடைக்குமா? என தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி முயற்சிக்கின்றார்கள்.
சிலர் போதையில் கிடைக்குமா? என முயற்சிக்கின்றார்கள். சிலர் இன்னிசை, மெலோடி பாடல், சினிமா என முயற்சிக்கின்றார்கள்.
இன்னும் சிலரோ காமம், விபச்சாரம், இன்பம் என முயற்சிக்கின்றார்கள். தீய வழிகளாக இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது நிம்மதி கிடைத்து விடவேண்டும் என நினைக்கின்றார்கள்.
இன்னும் சிலர் ஊர் ஊராக, நாடு நாடாக ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று முயற்சிக்கின்றார்கள். இன்னும் சிலர் ஆன்மீக உரைகளைக் கேட்டால் நிம்மதி வந்து விடும் என முயற்சிக்கின்றார்கள்.
தாங்கள் தேடிச்சென்ற நிம்மதியைத் தவிர மற்றெல்லாமும் இவர்களுக்குக் கிடைத்தது. எங்கேயும் இவர்களால் நிம்மதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இறுதியில் இந்தச் சிலர்களில் பெரும்பாலனவர்கள் தேர்ந்தெடுப்பது மிகக் கொடூரமானச் சாவைத்தான். ஆம்! தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.
தற்கொலைச் சாவுகளைப் பார்ப்பவர்கள் அவர்கள் சாவதற்கு பயன்படுத்திய வழிகளை சிந்தித்துப்பார்க்கவே அச்சப்படுவார்கள், திகிலடைந்து போவார்கள்.
ஏன் இப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்? என்ற வினாவோடு நாம் உற்று நோக்கிப் பார்த்தால் ”தான் விரும்பிய, தேடிய நிம்மதி கிடைக்காத போது ஏன் இந்த உலகில் நிம்மதியில்லாமல் வாழவேண்டும், பேசாமல் செத்துப் போகலாம்” என்ற முடிவுக்கு வந்ததைப் பதிலாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஓர் இறைநம்பிக்கையாளனாக இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் நடமாடிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய சமூகமும் இந்த நிலைக்கு சமீப காலமாக வந்து விட்டிருப்பதைக் காணமுடிகின்றது.
எனவே, மன நிம்மதியான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் நிறைவான வழிகளைத் தெரிந்து கொண்டு அந்த வழிகளின் மூலமே முஸ்லிம்களாகிய நாம் நிம்மதியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
அது தான் ஓர் இறைநம்பிக்கையாளனுக்குரிய அழகும், உயரிய பண்புமாகும்.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()
”ஆணாயினும், பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) நாம் தூய (நிம்மதியான) வாழ்வு வாழச்செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.” (அல்குர்ஆன்: 16:97)
والحياة الطيبة تشمل وجوه الراحة من أي جهة كانت.
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “நிம்மதியான வாழ்க்கை” என்று விளக்கம் தருகின்றார்கள்.
மனித வாழ்வென்பதை இரண்டு அடிப்படைகளை மையமாகக் கொண்டு அல்லாஹ் இயக்கிக் கொண்டு இருக்கின்றான்.
இன்பம், துன்பம் என்ற இரண்டு அடிப்படைகளில் மாறி, மாறி அவன் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கின்றது.
இவ்விரண்டு நிலைகளிலும் ஓர் இறை நம்பிக்கையாளனால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும் என்று சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.
وعن أبي يحيى صهيب بن سنانٍ – رضي الله عنه – ، قَالَ : قَالَ رسولُ الله – صلى الله عليه وسلم – :
(( عَجَباً لأمْرِ المُؤمنِ إنَّ أمْرَهُ كُلَّهُ لَهُ خيرٌ ولَيسَ ذلِكَ لأَحَدٍ إلاَّ للمُؤْمِن : إنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكانَ خَيراً لَهُ ، وإنْ أصَابَتْهُ ضرَاءُ صَبَرَ فَكانَ خَيْراً لَهُ )) رواه مسلم .
ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலை குறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக் காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது.
இந்த நிலை ஓர் இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை!
அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலை வந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது!
அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால் பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், ரியாளுஸ் ஸாலிஹீன்)
ஆக, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலக மனித சமூகத்தின் முற்றத்தில் போட்டுடைக்கிற மிகப்பெரிய உண்மை இது தான் “இந்த உலகத்தில் ஈமானும், நல்லறங்களும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிற பண்பும், சோதனையின் போது பொறுமையை மேற்கொள்கிற பண்பும் கொண்டிருக்கிற அல்லாஹ்வையும், அவன் தூதரையும் உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிற ஓர் இறை விசுவாசியால் மட்டுமே உலகத்தில் நிம்மதியாக வாழமுடியும்” என்று.
நிம்மதியைத் தருகிற அம்சங்கள் எவைகள் என்று இஸ்லாம் இனம் காட்டியது போன்று நிம்மதியை இழக்கச் செய்கிற அம்சங்களையும் இஸ்லாம் இனம் காட்டி இருக்கின்றது.
நாம் இந்த இரண்டு அம்சங்களையும் தெரிந்து கொள்வதோடு, மனித வாழ்க்கை குறித்தான அடிப்படை அம்சங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டால் மாத்திரமே இஸ்லாம் கூறும் நிம்மதிக்கான நிறைவான வழியில் நிவாரணம் பெறமுடியும்.
அல்லாஹ் எந்த ஒரு மனிதனையும் கொடுமைப்படுத்துவதில்லை
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
“அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே! அவர் சம்பாதித்த தீமையின் பலனும் அவருக்கே!” (அல்குர்ஆன்: 2:286)
அல்லாஹ் நிர்ணயித்ததைத் தவிர வேறெதும் அணுகுவதில்லை
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ()
”நன்மையோ, தீமையோ அல்லாஹ் எங்களுக்கு விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அணுகாது. அவன் தான் எங்களது பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”
சோதனைகள் எல்லை தாண்டுவதில்லை…
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()
”மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்” (அல்குர்ஆன்: 2:155)
மனித சக்திக்கு மீறிய சோதனைகளை இறைவன் தருவதில்லை, அந்த சோதனைகள் எவையுமே அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி எதையும் விளைவிக்கப் போவதில்லை, அப்படியே சோதனைகள் வந்தாலும் அதற்கென உள்ள எல்லைகளில் தான் சோதனை உண்டாகும் என்பதை மேற்கூரிய இறைவசனத்தில் அல்லாஹ் உணர்த்துகின்றான்.
இம்மூன்றும் தான் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையின் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களாகும். இவைகளை முற்றிலுமாக நம்பி வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் போது அவன் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()
“தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது “நிச்சயமாக, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!” ( அல்குர்ஆன்: 2:156,157 )
அல்லாஹ் கூறுகின்ற இந்த நான்கு அடிப்படைத் தத்துவங்களைப் பின்பற்றுகிற ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையே நிச்சயம் நிம்மதியும், அமைதியும் தவழ்வதாய் அமைந்திருக்கும்.
நிம்மதியை இழக்கச் செய்யும் அபாயகரமான ஆற்றல் பேராசைக்கும், பொறாமைக்கும் உண்டு.
பேராசை…
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ
”அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்”.
அல்லாமா நைஸாபூரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாக இப்னுல் அஃராபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய முஃஜம் எனும் நூலில் பதிவு செய்திருக்கிற ஒரு செய்தி..
رواها ابن الأعرابي في معجمه: أن عيسى عليه السلام خرج.. في طريق فصادفه احد اتباعه و قال له هل اصحبك يا روح الله .. فقال لا بأس .. و مشيا الى ان انهكمها التعب فجلسا لتناول طعامهما … وكان معه ثلاثة أرغفة، فقال: رغيف لي، ورغيف لك. ثم أن عيسى عليه السلام ،… فأخرج و ذهب الى جدول ماء ليحضر بعضاً من الماء … فأكل الرجل رغيف من الرغيفين … فلما عاد نبي الله لم يجد الرغيف الثالث.. – فقال لصاحبه: أين الرغيف الثالث؟ – قال: لا أدري. – فدعا غزالاً فذبحه وشواه وأكلاه، ولم يبقيا منه إلا العظام، فدعاه عيسى عليه السلام فقام غزالاً بإذن الله، قال: سألتك بالذي أحيا هذا الغزال من الذي أكل الرغيف؟ – قال: لا أدري. فانطلق، فوجدا ثلاثة أجبل -جبال كبيرة- فحولها إلى ذهب.. – وقال: هذا لي، وهذا لك، والثالث لمن أكل الرغيف. – قال: أنا أكلته. – قال: لا خير في صحبتك وتركه. وعيسى عليه السلام يضرب المثل للحواريين بتفاهة الدنيا، فهذا الرجل أراد أن ينقل هذه الجبال الثلاثة إلى بلده فوجد اثنين، فأراد أن يستعين بهما على نقل هذا الذهب الكثير، قال الرجلان: ولم نقسم هذه الأجبل على ثلاثة أسلاف؟! نحن نقتل هذا الرجل ونأخذ هذا الذهب كله، وأضمرا في نفسيهما أن يقتلاه، فأرسلاه إلى السوق ليأتي بطعام، فبينما هو يمشي إلى السوق قال: ولم نقسمه إلى ثلاثة أجزاء؟! أنا أضع لهم سماً في الطعام وأنفرد بالذهب، فجاء بالأكل وفيه السم، فما إن تلقياه حتى انهالا عليه ضرباً فقتلاه، ثم جلسا يأكلان فأكلا الطعام المحشو بالسم، فماتوا جمعياً وتركوا جبال الذهب. يضرب عيسى عليه السلام المثل للحواريين بحقارة الدنيا أننا جميعاً نتقاتل من أجلها ثم نتركها كلها للذي يرث الأرض ومن عليها تبارك وتعالى، وكل يخرج منها كما ولدته أمه.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நாள் வெளியூருக்கு பயணமானார்கள். பயணத்தின் இடையே ஒரு மனிதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு இணைந்து பயணம் செய்ய அனுமதி வேண்டினார். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.
இருவரும் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டு ஓரிடத்தில் இளைப்பார அமர்ந்தார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்து இரு ரொட்டிகளை எடுத்து தங்களுக்கு ஒன்று எடுத்து விட்டு, அவருக்கு ஒன்றைக் கொடுத்தார்கள். உணவுப் பொட்டலத்தில் மீதம் ஒரு ரொட்டி இருந்தது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாப்பிட்டு முடிந்து, கைகழுவி விட்டு வருவதற்குள் அந்த ஒரு ரொட்டியை எடுத்து அவர் சாப்பிட்டு விட்டார். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து பார்க்கின்றார்கள். உணவுப் பொட்டலத்தில் இருந்த ஒரு ரொட்டியைக் காணவில்லை. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரிடம் “இங்கிருந்த ஒரு ரொட்டியை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கவர் “எனக்குத் தெரியாது” என்றார்.
உடனடியாக, அங்கிருந்து இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் ஒரு மான் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அதன் அழகை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரிடம் “உமக்கு மான் இறைச்சி சாப்பிட ஆசை இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்” என்றார்.
உடனே, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்த மான்களில் ஒரு கொழுத்த மானை அழைத்தார்கள். அது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருகே வந்ததும் அந்த மானிடம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏதோ பேசினார்கள்.
பின்னர், அந்த மானை அறுத்து, அதன் இறைச்சியை சுட்டு இருவரும் உணவாக உட்கொண்டனர். பின்னர் அங்கு அவர்கள் இருவரும் கடித்துப் போட்ட எழும்புகளை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒன்றிணைத்து வைத்து “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நீ மானாக மாறி இங்கிருந்து பழைய படி எழுந்து போ” என்று கூறினார்கள். அது மானாக மாறி உடலை ஒரு உலுக்கு உலுக்கி அங்கிருந்து சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மனிதரை நோக்கி “அல்லாஹ் எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவன் என்பதை நீ அறிந்து கொண்டாயா? உண்மையில் அல்லாஹ் தன் ஆற்றலின் மூலம் நமக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான்” என்று கூறி விட்டு இப்போது சொல்லும்! அந்த ஒரு ரொட்டியை யார் எடுத்தது” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “எனக்குத் தெரியாது” என்று கூறினார். பின்னர் இருவரும் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினார்கள்.
நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் குறுக்கே காட்டாற்று வெள்ளத்தால் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆற்றைக் கண்டார்கள். அதைக் கடந்து அக்கரைக்குச் செல்லவேண்டும்.
இப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு அந்த மனிதரிடம் கூறினார்கள்.
பின்னர் அவரை அழைத்துக் கொண்டு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த ஆற்றின் மீது சாதரணமாக தரையில் நடந்து செல்வது போன்று சென்றார்கள். அக்கரைக்கும் வந்து விட்டார்கள்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மனிதரை நோக்கி “அல்லாஹ் எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவன் என்பதை நீ அறிந்து கொண்டாயா? உண்மையில் அல்லாஹ் தன் ஆற்றலின் மூலம் நமக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான், இல்லையெனில் நாம் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்போம்” என்று கூறி விட்டு இப்போது சொல்லும்! அந்த ஒரு ரொட்டியை யார் எடுத்தது” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “எனக்குத் தெரியாது” என்று கூறினார். பின்னர் இருவரும் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினார்கள்.
நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் மணற்பாங்கான ஓர் பெரும் திடலை அடைந்தார்கள். அங்கு ஓரிடத்தில் சிறிது நேரம் இளைப்பாறினார்கள்.
அப்போது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்த மணலை மூன்று பெரும் குவியலாக அமைத்து “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நீ தங்கமாக மாறி விடு” என்றார்கள். அது தங்கமாகவே மாறியது.
அருகே இருந்த அந்த மனிதரின் முகம் அதைக் கண்டதும் தங்கத்தை விட மேலாக இலங்கியது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குவியல் தங்களுக்கு என்றும், இன்னொரு குவியல் அந்த மனிதருக்கு என்றும், மூன்றாம் குவியல் ”உமக்குத் தான் தெரியாது என்று சொல்லி விட்டீரே?” அந்த மூன்றாவது ரொட்டியை எடுத்தவருக்கு” என்றும் கூறினார்கள்.
உடனே, நபியே! நான் தான் அந்த மூன்றாவது ரொட்டியை எடுத்தேன்” என்று அந்த மனிதர் கூறினார்.
அப்போது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “உலகத்தின் மீதும், உலகப் பொருட்களின் மீதும் பேராசை கொண்ட ஒரு மனிதனோடு தொடர்பு வைப்பதென்பது ஒரு இறைத்தூதருக்கு அழகல்ல! இம்மூன்று குவியல்களையும் நீயே எடுத்துக்கொள்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்கள்.
ஆள் அரவரமற்ற திடலில் மூன்று பொற்குவியல்களோடு என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில் அங்கே இன்னொரு இரண்டு பேர் வந்து சேர்கின்றார்கள்.
வந்த இருவருக்கும் அந்த பொற்குவியலின் மீது ஆசை பிறக்கிறது. மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். ஆளுக்கு ஒரு குவியலை எடுத்துக் கொள்வோம்.
மூவருக்கும் பசி எடுக்கவே அந்த இருவரில் ஒருவர் தன்னோடு வந்த மற்றவரிடம் “அருகில் இருக்கிற ஊருக்கு சென்று ஏதாவது உணவு வாங்கிவா, நாம் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து இதை எடுத்துச் செல்வோம்” என்றார்.
அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், ”நாம் ஏன் இதை மூன்றாக பங்கு வைக்க வேண்டும். பேசாமல் ஆளுக்கு ஒன்றைக்குவியலை எடுத்துக் கொள்வோம். அவன் உணவு வாங்கி வந்ததும் நாம் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிடுவோம்” என்று உணவு வாங்கச் செல்பவனோடு வந்தவன் சொன்னான்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு வந்தவனும் அதை ஆமோதித்தான். உணவு வாங்கச் சென்றவன் “நாம் ஏன் தங்கக்குவியலை மூன்றாக ஆக்கவேண்டும். இருவரையும் கொன்று விட்டு நாமே முழு தங்கக்குவியலையும் எடுத்துக் கொள்வோம்” என்று திட்டம் தீட்டி வாங்கிய உணவில் விஷம் கலந்தான். பின்னர் உணவுப் பொட்டலத்தோடு அங்கு வந்து சேர்ந்தான்.
முன்னரே திட்டமிட்டபடி அவன் உணவுப் பொட்டலத்தைக் கொண்டு தந்ததும் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
பின்னர் மகிழ்ச்சியோடு உண்வு உண்டனர். ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அவர்களும் கொல்லப்பட இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. உண்ட சிறிது நேரத்தில் விஷம் தலைக்கேறி இருவரும் மாண்டனர்.
மூவரின் பேராசையும் மூர்ச்சையைப் பெற்றுத்தந்தது. சில நாட்கள் கழித்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் சீடர்களோடு அந்த இடத்தைக் கடந்து சென்ற போது “மூன்று தங்கக்குவியலும் அப்படியே இருந்தது. ஆனால், சின்ன மாற்றம், அருகே மூன்று பிணங்கள் கிடந்தன.
சீடர்கள் விளக்கம் கேட்ட போது, தங்களோடு பயணம் செய்தவனைப் பற்றி சொல்லி விட்டு, மற்ற இரண்டு பேர்களின் செய்தியை இறைச்செய்தியைப் பெற்று சீடர்களுக்கு விளக்கினார்கள்.
பின்னர், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் சீடர்களை நோக்கி “சீடர்களே! உலகில் வாழும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உலக மோகங்களின் மீது கொண்ட பேராசையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
எதற்காக சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்களோ அது அவர்களின் கைகளுக்கு வந்து சேர்கிற போது அதை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. அதை அனுபவிக்காமலேயே போய்ச் சேர்ந்து விடுகின்றனர்.
இந்த உலகில் தன் தாயின் வயிற்றில் இருந்து எப்படி ஒன்றுமில்லாமல் வந்தார்களோ அப்படித்தான் இந்த உலகை விட்டும் ஒன்றுமில்லாமல் செல்வார்கள். ஆனால், இதை உணர்பவர்கள் எவரும் இல்லை” என்று கூறினார்கள். (நூல்: அல் முஃஜம் லி இமாமி இப்னுல் அஃராபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி)
பேராசை கொண்டிருக்கிற மனிதர்களால் நிம்மதியாக வாழ இயலாது. இறுதியில் அவர்கள் சேர்த்து வைத்த அனைத்தும் அவர்களால் அனுபவிக்க முடியாமல் போவதை மேற்கூறிய நிகச்சி நமக்கு உணர்த்துகின்றது.
பொறாமை….
அல்லாமா அபுல்லைஸ் ஸமர்கந்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது நூலான தம்பீஹூல் ஃகாஃபிலீனில் இப்படிக் குறிப்பிடுவார்கள்..
வானத்திலே நடந்த முதல் பாவமும், பூமியில் நடந்த முதல் பாவமும் பொறாமை எனும் தீயகுணத்தால் தான்.
ஷைத்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தாச் செய்ய மறுத்ததும் பொறாமையால் தான்.
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()
ஷைத்தான் இறைவனிடம் “ நான் அவரை விட உயர்ந்தவன் என்னை நெருப்பால் படைத்தாய், (ஆதமை) அவரை களிமண்ணால் படைத்தாய்” என்றான். ( அல்குர்ஆன்: 7:12 )
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் காபீல் ஹாபீலைக் கொன்றதும் பொறாமையால் தான்.
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ ()
“இறுதியில் தன்னுடைய சகோதரனைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவரை அவன் கொலை செய்தான். ஆதலால் அவன் பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.” (அல்குர்ஆன்: 5:30)
இந்த பொறாமை தான் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவனை மிகவும் கேவலமானவனாக மாற்றியது,
சகோதரத்துவத்தோடும், வாஞ்சையோடும் வாழவேண்டிய ஒருவனை கொலைக் குற்றவாளியாகவும் மாற்றியது.
ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”அருட்கொடைகள் நிரப்பமாக வழங்கப்பட்டிருப்பவரை பார்க்காதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் பிறரின் வளங்களையும், நிஃமத்களையும் கண்டு பொறாமை கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மனநிம்மதி கிடைப்பதில்லை.
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (انظروا إلى من هو أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم) متفق عليه .
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “(செல்வம், உலக வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியவற்றில்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். (உலகாதாய நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது) உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கிற அருட்கொடைகள் உங்களுடைய பார்வையில் மதிப்பிழந்து போய் விடாமல் இருப்பதற்கு இந்த நடத்தையே அதிகப் பொருத்தமானதாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
பிறரின் வளங்களப் பொறாமைக் கண் கொண்டு பார்ப்பதால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிற உணர்வு போய், மனக்குறைகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு மனநிம்மதியும், மனஅமைதியும் பறிபோய்விடும்.
இந்த மாதிரி தருணங்களில் அல்லாஹ் நமக்கு ஒரேயொரு வாய்ப்பைத் தந்திருக்கின்றான்.
وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ
“அல்லாஹ்விடம் அவனுடைய அருள்வளங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்”. (அல்குர்ஆன்: 4:32)
நபித்தோழர்களின் வாழ்க்கையை வாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்போர் வாசித்துப் பார்த்து விட்டு வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவார்கள்.
அவ்வளவு ஆச்சர்யமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.
حديث مرفوع حَدَّثَنَا الْفِرْيَابِيُّ ، قَالَ : حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدِ الدَّرَاوَرْدِيُّ ، وَحَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ ، قَالَ : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ قَاسِمُ بْنُ زَكَرِيَّا الْمُطَرِّزُ ، قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ ، وَعُمَرُ فِي الْجَنَّةِ ، وَعُثْمَانُ فِي الْجَنَّةِ ، وَعَلِيٌّ فِي الْجَنَّةِ ، وَطَلْحَةُ فِي الْجَنَّةِ ، وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ ، وَعَبْدُ الرَّحْمَنِ فِي الْجَنَّةِ ، وَسَعْدٌ وَسَعِيدٌ فِي الْجَنَّةِ ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فِي الْجَنَّةِ
லட்சத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இருக்க, ”பத்து தோழர்களை பெயர் குறிப்பிட்டு இவர் சுவனத்தில் இருப்பார், இவர் சுவனத்தில் இருப்பார்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்த போதுஸ
ஏனைய நபித்தோழர்களில் ஒருவர் கூட “அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மார்க்கத்திற்காக எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றேன், எவ்வளவு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றேன், நான் எவ்வளவு இபாதத்களைச் செய்திருக்கின்றேன், நான் இன்னின்னவரை விட எதில் குறைந்து போனேன், ஏன் என்னைக் குறித்தும் நீங்கள் சோபனம் சொல்லவில்லை என்று வினா எழுப்ப வில்லையே?”
எந்த ஒரு நபித்தோழரும் வேறெந்த நபித்தோழருக்கு வழங்கப்பட்டிருந்த எந்த ஒன்றைக் கண்டும் கண நிமிடம் கூட பொறாமை கொண்டதாகவோ, பேராசை கொண்டதாகவோ வரலாற்றின் எந்த ஒருப் பக்கத்திலும் நாம் பார்த்திட முடியாது.
அப்படி அப்பழுக்கற்ற, தூய்மையான ஆச்சர்யம் மிக்க வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.
எனவே, பேராசையையும், பொறாமையையும் தவிர்த்து வாழ முயற்சிப்போம். நிம்மதியிழப்பிலிருந்து தவிர்ந்து வாழ்வோம்.
நீ வாழ பிறரைத் துன்புறுத்தாதே…
எப்படி நாம் நிம்மதியாக வாழவேண்டும் என விரும்புகின்றோமோ, அது போன்றே பிறரின் நிம்மதியைக் கெடுக்காமல் வாழவும் வேண்டும்.
ஆனால், சமூகத்தில் இன்று ”எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, என் பக்கத்து வீட்டானுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் அதிகம்.
இஸ்லாம் ஓர் உயரிய பண்பாட்டை இந்த உம்மத்திற்கு கற்றுக் கொடுத்து, கடைபிடிக்கவும் வலியுறுத்துகின்றது.
முகத்தால் கூட நிம்மதி இழக்கச் செய்து விடாதே…
فعن أبي ذر رضي الله عنه قال
قال رسول الله ـ صلى الله عليه وسلم
تَبَسُّمُك في وَجْه أَخِيك لك صدقة
رواه الترمذي
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உம்முடைய சகோதரனை முகமலர்ச்சியோடு சந்திப்பதும் கூட உமக்குத் தர்மமாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
கரத்தாலும்.. நாவாலும் கூட..
في صحيح البخاري عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم
من سلم المسلمون من لسانه ويده
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் தம் சக முஸ்லிம் ஒருவருக்கு கரத்தாலும், நாவாலும் துன்பம் தரவில்லையோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( புகாரி )
فقد روى البخاري (6290) ومسلم (2184) عن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : ( إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَلَا يَتَنَاجَى رَجُلَانِ دُونَ الْآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ أَجْلَ أَنْ يُحْزِنَهُ ) .
وروى الترمذي (2825) عن عبد الله بن مسعود قال : قال رسول صلى الله عليه وسلم : ( إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَلَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا ) . وصححه الشيخ الألباني في ” صحيح سنن الترمذي ” .
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நீங்கள் மூன்று பேர் இருக்கும் போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும் போது இருவர் மட்டும் பேசும்போது) மூன்றாமவர் நிம்மதி இழக்கக்கூடும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
பிறர் நிம்மதி இழந்து தவிப்பதை அல்லாஹ்வும், அவன் தூதரும் விரும்புவதில்லை..
وروي أنه لحق بني إسرائيل قحط على عهد موسى عليه السلام ، فاجتمع الناس إليه ، فقالوا : يا كليم الله ، ادع لنا ربك أن يسقينا الغيث ، فقام معهم ، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفا أو يزيدون ، فقال موسى عليه السلام : إلهي اسقنا غيثك ، وانشر علينا رحمتك ، وارحمنا بالأطفال الرضع ، والبهائم الرتع ، والمشايخ الركع ، فما زادت السماء إلا تقشعا ، والشمس إلا حرارة ، فقال موسى : إلهي إن كان قد خلق جاهي عندك ، فبجاه النبي الأمي محمد صلى الله عليه وسلم الذي تبعثه في آخر الزمان ، فأوحى الله إليه : ما خلق جاهك عندي ، وإنك عندي وجيه ، ولكن فيكم عبد يبارزني منذ أربعين سنة بالمعاصي، فناد في الناس حتى يخرج من بين أظهركم ، فبه منعتكم ، فقال موسى : إلهي وسيدي أنا عبد ضعيف ، وصوتي ضعيف ، فأين يبلغ وهم سبعون ألفا أو يزيدون ، فأوحى الله إليه منك النداء ، ومني البلاغ ، فقام مناديا ، وقال : يا أيها العبد العاصي الذي يبارز الله منذ أربعين سنة ، اخرج من بين أظهرنا ، فبك منعنا المطر ، فقام العبد العاصي ، فنظر ذات اليمين وذات الشمال ، فلم ير أحدا خرج ، فعلم أنه المطلوب ، فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق افتضحت على رءوس بني إسرائيل ، وإن قعدت معهم منعوا لأجلي ، فأدخل رأسه في ثيابه نادما على فعاله ، وقال : إلهي وسيدي عصيتك أربعين سنة ، وأمهلتني وقد أتيتك طائعا ، فاقبلني فلم يستتم الكلام حتى ارتفعت سحابة بيضاء ، فأمطرت كأفواه القرب ، فقال موسى : إلهي وسيدي ، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد ؟ فقال : يا موسى ، سقيتكم بالذي به منعتكم ، فقال موسى : إلهي أرني هذا العبد الطائع ؟ فقال : يا موسى ، إني لم أفضحه وهو يعصيني ، أأفضحه وهو يطيعني.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் ரப்பிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லை” என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ் “மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன்” என்றான்.
உடனே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் ”இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம்” என்று கூறினார்கள்.
உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டுஸ
“அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே!” என்று பிரார்த்தித்தார்.
அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது.
அல்லாஹ்விடம் கையேந்தினார் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். “அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்!”.
அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன்” என்று பதில் கூறினான்.
அப்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டு” என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான்.. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னரா பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன்” என்று பதில் கூறினான். (நூல்: இப்னு கஸீர்)
ஓர் அடியான் கேவலப்பட்டு மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டு, நிம்மதியின்றி வாழ்வதை அல்லாஹ்வே விரும்பவில்லை.
حدثنا سليمان بن داود العتكي حدثنا حماد حدثنا واصل مولى أبي عيينة قال سمعت أبا جعفر محمد بن علي يحدث عن سمرة بن جندب أنه كانت له عضد من نخل في حائط رجل من الأنصار قال ومع الرجل أهله قال فكان سمرة يدخل إلى نخله فيتأذى به ويشق عليه فطلب إليه أن يبيعه فأبى فطلب إليه أن يناقله فأبى فأتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فطلب إليه النبي صلى الله عليه وسلم أن يبيعه فأبى فطلب إليه أن يناقله فأبى قال فهبه له ولك كذا وكذا أمرا رغبه فيه فأبى فقال أنت مضار فقال رسول الله صلى الله عليه وسلم للأنصاري اذهب فاقلع نخله
ஸமுரா இப்னு ஜுந்துப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அன்ஸாரித் தோழர் ஒருவரின் தோட்டத்தில் எனக்கு ஒரு வரிசை கொண்ட பேரீச்சமரங்கள் இருந்தன. அவரும் அவரின் குடும்பத்தினரும் அத்தோட்டத்தில் தான் வசித்து வந்தனர்.
ஆனால், நான் என் மரங்களைப் பார்வையிட அத்தோட்டத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. இதனால் அந்த நபித்தோழருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, அவர் அம்மரங்களுக்குப் பகரமாக வேறு இடத்தில் உள்ள தமக்குரிய மரங்களைத் தந்து விடுவதாகக் கூறினார். அதற்கு நான் மறுத்து விட்டேன்.
உடனே, அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அழைத்து ”அவருக்கு விற்று விடுமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். பின்னர், அதற்குப் பகரமாக வேறு இடத்தில் உள்ள மரங்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அதற்கும் நான் மறுத்து விட்டேன்.
அப்பொழுது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “தங்களுக்கு அவற்றை அன்பளிப்பாகத் தந்து விடுமாறும் அதற்குப் பிரதிபலனாக இன்ன இன்ன நற்பலன்கள் கிடைக்கும்” என்று சொல்லி என்னை உற்சாகப் படுத்தினார்கள்.
அதற்கும் நான் மறுத்து விடவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி “நீர் உமது பக்கத்திலுள்ளவருக்கு தீங்கிழைப்பவராக இருக்கின்றீர்” என்று கூறிவிட்டு, அந்த அன்ஸாரித்தோழரிடம் “நீர் சென்று அம்மரங்களை அடியோடு வெட்டி எறிந்து விடும்” என்று பணித்தார்கள். (நூல்: அபூதாவூத்)
பிறரின் நிம்மதியைக் கெடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரித்தோழரின் மன உளைச்சலுக்கு எப்படியாவது ஈடு செய்திட வேண்டும் என முயற்சியும் செய்தார்கள் என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து வாழ முயற்சிப்போம்! நிம்மதியிழக்கச் செய்திடும் தீய அம்சங்களிலிருந்து விலகி வாழ்வோம்! பிறிரின் நிம்மதியையைக் கெடுக்கிற காரியத்தின் அருகே கூட செல்லாதிருப்போம்!
அல்லாஹ் அத்தகைய நற்பேற்றை உங்களுக்கும், எனக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
source: http://vellimedaiplus.blogspot.in/2015/03/blog-post_18.html