உருது நூல்களை அழிப்பதா?
பிகார் மாநிலம் முங்கேர் என்ற பகுதியில் உள்ள நூலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உருது நூல்கள் கங்கையில் வீசப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
பிகார் மாநிலம், முங்கேர் என்ற இடத்தில் 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பை விளக்கும் வகையில் நினைவிடம் ஒன்று கட்டப்பட்டது. அங்கு நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடு களுக்கிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன.
இங்கு வடமொழிக் கென்று தனிநூலகமும், உருது மொழிக்கென்று தனி நூலகமும் உருவாக்கப்பட்டு அந்த நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தது; அந்தப் பகுதியின் பாஜக பிரமுகர் அந்தக் கட்டடத்தின் பாதி இடம் தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார்.
அந்தக் கட்டடம் முழுக்க முழுக்க அரசுக்குரியது ஆகும். இந்தக் கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள வெற்று இடத்தை நீண்ட கால குத்தகைக்கு உள்ளூரில் இருந்த சிலர் எடுத்து வணிக வளாகம் கட்டிவைத்திருந்தனர்.
இந்த நிலையில் பாஜக பிரமுகர் உருது நூலகம் உள்ள பகுதியை தனது இடமாக அரசு வழங்கிவிட்டது என்று கூறி, அடிக்கடி நூலக நிர்வாகத்துடன் மோதல் போக்கை உருவாக்கி வந்தார். மேலும் நூலகத்திற்கு வருபவர்களை மிரட்டியதன் காரணமாக நூலகத்திற்கு வாசகர்கள் வருவது குறைந்து போனது,
கடந்த 2 ஆண்டுகளாக நூலகத்திற்கு யாரும் வராத நிலையில் நூலகம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஞாயிறன்று இரவு நூலகத்தின் வெளிப்புறச்சுவர் இடிக்கப்பட்டு நூலகத்திற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்து உருது நூல்களையும் அள்ளிக்கொண்டு அருகில் ஓடிக்கொண்டு இருக்கும் கங்கை நதியில் வீசிவிட்டனர்.
மறுநாள் காலையில் ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர் அங்கு நூற்றுக்கணக்கான உருது நூல்கள் கங்கையில் மிதந்து செல்வதைக் கண்டு நகர நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காலையில் நூலகத்தை திறக்க வந்தவர்கள் உருது நூலக சுவர் இடிந்திருப்பதையும், நூல்கள் எதுவும் இல்லாததையும் கண்டு காவல்துறையில் புகார் அளித்தனர். பிறகுதான் தெரியவந்தது நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இருந்து வீசப்பட்டது என்ற உண்மை வெளியில் வந்தது.
இவ்விவகாரம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அந்த நூலகத்தின் முன்னாள் நூலகராக இருந்த பாரூக் அன்சாரி கூறியதாவது; 2011 இல் நான் அந்த நூலகத்தில் இருந்து விலகிவிட்டேன். நான் விலகும் போது அந்த நூலகத்தில் குறைந்தபட்சம் 12,000-த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. அவை அனைத்தும் 1800 ஆம் ஆண்டு முதல் 1900 ஆம் ஆண்டுவரையிலான கைப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் என வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.
இந்த நூல்கள் மிகவும் அரியவகை நூல்களாகும். நீண்ட நாட்களாகவே உருது நூலகத்திற்கு அச்சுறுத்தல் வந்துகொண்டே இருந்தது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரலாற்றுப் பெட்டகங்கள் அனைத்தும் அழிந்து போயிற்று; இனிமேல் இது போன்ற பழைமைவாய்ந்த நூல்களை திரட்டுவது என்பது மிகக்கடினம் ஆகும் என்று கூறி வருந்தினார்.
கங்கையில் நூல் வீசப்பட்ட விவகாரம் குறித்து புகழ்பெற்ற தாவரவியல் பேராசிரியர் சபீர் ஹுசேன் இணைய செய்தி இதழ் ஒன்றுக்கு கூறியதாவது:
இந்த நூலகம் வரலாற்றுப் பெருமை மிக்க நூலகமாகும். 1934 ஆம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்கு இடையே சேகரிக்கப்பட்ட நூல்கள் ஆகும். இந்த நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
முக்கியமாக ஆங்கிலேயருக்கும் முன்பிருந்த காலம் பற்றிய அரிய தகவல்கள் இந்த நூலக நூல்களில் இருந்தன. இப்போது அனைத்தும் அழிந்துவிட்டன. இந்த அரசு அறிவுப்பெட்டகத்தின் மதிப்பை உணராமல் நடந்துகொண்டு இருக்கிறது. உண்மையில் இந்த விவகாரம் வரலாற்று ஆவணங்களின் சேகரிப்பு ஆர்வலர்களுக்கு பெருத்த பேரிழப்பு ஆகும் என்று கூறினார்.
பாசிசவாதிகள் எப்பொழுதுமே தங்கள் எதிரிகளின் அறிவுக் கருவூலங்களை எரிப்பார்கள்- அழிப்பார்கள். நாலந்தா பவுத்தப் பல்கலைக் கழகத்தை அழிக்க வில்லையா? யாழ் நூலகத்தை சிங்கள வெறியர்கள் தீ மூட்டி ஆனந்தக் கூத்தாடவில்லையா?
இந்துத்துவாவாதிகளும் அந்த முறையைத்தான் பின்பற்றுகின்றனர். விழித்துக்கொள்ளவில்லையானால், மேலும் மேலும் விபரீதங்கள்தான் ஏற்படும்!
source: http://www.viduthalai.in/page1/101800.html#ixzz3aqQnDJG6