ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு!
பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது
திருக்குர்ஆனில் அருளப்பட்ட நேரான வழியைக் கடைப்பிடித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து மனோயிச்சையெனும் ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதாகும். படைத்த ஏக இறைவனை வணங்குவது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இதுதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம்.
ஆக இஸ்லாம் ஒரு தூய்மையான மார்க்கமாகும். ஏகத்துவக் கொள்கையை ஏற்று அல்லாஹ்வை மட்டும் வணங்குவோர் அனைவரும் முஸ்லிம்கள். இதில் வேறுபாடு இல்லை. அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். (3:19)
அல் இக்லாஸ் அத்தியாயத்தில் முதல் வசனத்தில் அல்லாஹ் ஒருவனே என்று சொல்லப்பட்டு, பல கடவுள்களை வழிபடுவதை நிராகரிப்பதைப்போல, ஏகம் ஏவம் அத்வித்யம் என்று இந்து கிரந்தங்கள் கூறும் பிரம்ம சூத்திரம். இதன் பொருள் அவன் ஒருவனே அவனுக்கு யாதோர் இணையுமில்லை.
திருவள்ளுவரும் இறைவனுக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லை என்று திருக்குறளில் சொல்லி விட்டார். அடுத்து, ஏகம் பிரஹம்தவித்ய நாஸ்னோஹ் நா நாஸ்தே இன்ஜன் என்பதும் ஒரு பிரம்மசூத்திரம். இதன் பொருள் இறைவன் ஒருவனே. வேறு எவரும் இல்லை. இல்லவே இல்லை என்பதாகும். அதாவது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும்.
மனோயிச்சையைப் பின்பற்றி வாழும் இறைமறுப்பாளர்களான காஃபிர்கள் தாங்கள் செய்வதே சரி என்ற அடிப்படையில் இறைவனுக்கு இணை கற்பித்து வணங்குவதுதான் அவர்களது நாட்டம். இப்பொழுது அதையும் தாண்டி தங்களைப் போலவே அனைவரும் தாங்கள் பின்பற்றும் மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களின்மீது அவற்றைத் திணிப்பதிலும் ஈடுபடுகின்றனர். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பெரும்பான்மையின மதவாதச் சக்தி தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்றவற்றால் தோற்றுவிக்கப்படும் பாகுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன் வாழ வழிகாட்டும் ஒரு பகுத்தறிவுப் பாதை இஸ்லாம். சமுதாயச் சீர்திருத்தப் பகுத்தறிவுவாதியான ஈவேரா பெரியார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஏக இறைக்கொள்கையைப் போற்றி, இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற தலைப்பில் சொற்பொழிவும் ஆற்றியுள்ளார். ஏனென்றால் இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை, குலத்தாழ்ச்சியும் சொல்லமாட்டார்கள். ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடந்த திராவிடர்களை மீட்க அரும்பாடுபட்டவர் பெரியார்.
இந்தியத் திருநாட்டில் பல மதங்களைப் பின்பற்றுவோரும் பல மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர். அவரவர்கள் விரும்பிப் பின்பற்றுவதைத் தடுத்தால் அது மனித உரிமை மீறலாகும். தற்பொழுது சில மதவாத அமைப்பினர் சிறுபான்மைச் சமூகத்தாரைப் பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருகின்றனர். அதாவது இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவரை பெரும்பான்மைச் சமூகத்தார் இந்து மதத்திற்கு மாற்றுகின்றனர். இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படும் சிறுபான்மையினர் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தாழ்ந்த சாதியில் (ஷெட்யூல்டு வகுப்பில்) தான் சேர்க்கப்படுவார்கள். இதன் அடிப்படையில் அரசின் சலுகைகளைப் பெற்றாலும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுவர். தீண்டாமை தொடரும். உயர் ஜாதி இந்துக்கள் பாதுகாப்பைப் பெறுவர். இது நீதி வழுவா நெறிமுறையா?
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபொழுது கீழ்க்கண்டவாறு விமர்சனம் செய்தார். இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இருக்கும் வரைதான் வளர்ச்சி இருக்கும். பிறமதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றும் சம்பவங்களும் டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த மதச் சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேரிட்டால் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று பேசியுள்ளார்.
இதற்குச் சமாதானம் செய்வதுபோல் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி டெல்லியில் நடந்த கிறிஸ்தவ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றியபோது, மதரீதியான வன்முறைகளைக் கண்டிப்பதாகவும், அனைத்து மதங்களுக்கும் சம மதிப்பு அளிப்பதாகவும் எல்லா மதங்களையும் மதிக்கும் பண்பு இந்தியர்களின் மரபணுவிலேயே இருக்க வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் மதவாத இயக்கங்களின் வன்முறையை பிரதமர் மோடி எப்படித் தடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதச் சக்திகளைத் தடுத்து நிறுத்த சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும். கருத்து வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்றுபட்டு ஒரு குடையின்கீழ் நின்றால்தான் இஸ்லாமிய மார்க்கம் தழைத்தோங்கும். அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று ஆலு இம்ரான் அத்தியாயத்தில் உள்ள 103 ஆம் வசனத்தைப் பின்பற்றிச் சமாதானமாக ஒரே ஜமாஅத்தாக வாழ்ந்தால்தான் இன்றைய சூழ்நிலையில் மதவாத எதிர்ப்புகளைத் தடுத்து மன அமைதியுடன் வாழலாம்.
பிரிந்து விடாமல் ஒற்றுமையுடன் இறைக்கட்டளைப்படி இம்மையில் வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.
மேலும் ஒன்றுபட்டு நின்றால்தான் சமூகப் பொருளாதார அரசியல் ரீதியாகவும் முன்னேறி ஒற்றுமையாக மன நிறைவுடன் வாழ முடியும். அப்படிச் செய்தால்தான் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுபவரின் தொந்தரவுகள் குறையும். அல்லாஹ் திருக்குர் ஆனில் அல்காஃபிரூன் அத்தியாயத்தில் சொல்லியிருப்பதுபோல் “இறைமறுப்பாளர்களே, நீங்கள் வழிபடுவதை நான் வழிபட மாட்டேன்ஸ உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு’’ என்று அவர்களிடம் சொல்லிப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சமுதாயத்தில் ஒற்றுமையாக இருந்தால்தான் உலகில் செம்மையாக வாழ முடியும் என்பதைச் சின்னஞ்சிறு உயிரினங்களில்கூட நாம் காணலாம். உதாரணமாக மிகச்சிறிய உயிரினங்களான எறும்புகள் எவ்வாறு இறைவன் நாட்டப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன என்பதைப் பார்ப்போம்.
உணவு இருக்கும் இடத்தை அறிந்த ஓர் எறும்பு எறும்புப் புற்றுக்கு வந்து தலைமை ஏற்று மற்ற எறும்புகளை உணவு இருக்கும் இடத்திற்கு வழிநடத்திச் செல்லும். அவ்விடத்தை அடைந்ததும் எல்லா எறும்புகளும் உணவைப் பெறுகின்றன. உணவைப் பெற்றுப் புற்றுக்கு வந்ததும் உணவு இருக்கும் இடத்தை அறிந்த இந்த ஒவ்வொரு தொண்டன் எறும்பும் தலைமையேற்று நடத்தும் எறும்பாகச் செயல்பட்டுக் கூட்டிலுள்ள உணவருந்தாத மற்ற எறும்புகளும் உணவருக்க வழி வகுக்கும்.
இவ்வாறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து உணவைப் பெற்று உயிர் வாழ்கின்றன. சில வகை எறும்புகள் உணவைக் கண்டுபிடித்ததும் ஃபிரோமோன் என்னும் வேதிப் பொருளைச் சுரந்து உணவிடத்திலிருந்து புற்றை அடையும் வரை இந்தச் சுரப்புப் பொருளை நீண்ட கோடுபோல் வழித்தடத்தை ஏற்படுத்தும்.
கூட்டிலுள்ள மற்ற எறும்புகள் இந்த வழித்தடத்தைத் தங்கள் தலையிலுள்ள நுகர் கொம்புகளால் நுகர்ந்து ஊர்ந்து சென்று உணவு இருக்கும் இடத்தை அடையும். இந்த ஃபிரோமோன் வேதிப்பொருளைச் சுரந்து எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் பயன்படுத்தும் பார்த்தீர்களா எறும்புச் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமையை!
அதேசமயம் இருவேறுபட்ட எறும்புக் கூடுகளைச் சார்ந்த எறும்புக் கூட்டங்கள் சந்திக்கும்பொழுது சில நேரங்களில் ‘சமாதானச் சைகை’ வெளிப்படுத்திச் சண்டையிடாமல் சென்றுவிடும். எவ்வாறென்றால் உடம்பை முன்னுக்குத் திடீரென்று தள்ளி பின் மெதுவாக இழுக்கும். இதுபோன்ற சமாதானச் சைகைகளை எல்லா எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களுக்கிடையே செய்து கொள்ள வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.
ஒரு சமயம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் தம்முடைய சேனைகளுடன் எறும்புகள் நிறைந்த இடத்திற்கு வந்தார்கள். இதைக் கண்ட தலைமை எறும்பு மற்ற எறும்புகளை நோக்கி அவை நசுங்கிவிடாதிருக்கும் பொருட்டு, எறும்புகளே உங்கள் புற்றுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்று தகவல் பரிமாற்றத்தின் மூலம் அறிவித்ததைக் கண்டு நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் புன்னகைத்துச் சிரித்தார். எறும்புகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒற்றுமையாகச் செயல்படுவதுபோல் நாமும் செயல்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டம்.
இஸ்லாமிய மார்க்கத்திலுள்ள நீதி வழுவா நெறிமுறைகள் பகையேதுமில்லா இந்திய பண்பாட்டை உயர்த்தும். நீதி வழுவா நெறிமுறையில் வாழ்வது அரசியல் தலைவர்கள், அரசு நிர்வாகத்தினர் முதல் பொதுமக்கள் வரை அனைவரது கடமையாகும். மத நல்லிணக்கம் நிலவ அனைத்துத் தரப்பினரும் பாடுபடவேண்டும்.
( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 )
Thanks to- MUDUVAI HIDAYATH