தஃவா களத்தை அசிங்கப்படுத்தும் ஆன்மிகநோய்கள்
[ தஃவாக் களத்தில் நிலவும் போட்டி, பொறாமை காரணமாக காட்டிக் கொடுப்புக்களும் கழுத்தறுப்புகளும் சகஜமாகி விட்டன.
குழு வாதமும் இயக்க வெறியும் இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் ஈமானிய உறவையும் பலபோது மிகைத்து விடுகின்றன.
மாற்றுக்கருத்துடையோர் தொடர்பில் நல்லெண்ணம் இல்லை, சுபமான பார்வை இல்லை.
சுருக்கமாகச் சொல்வதாயின், மற்றவர்கள் மீது சேறு பூசுவதையே வாடிக்கையாகக் கொண்ட பலர் தஃவாக் களத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தனிப்பட்ட அதிருப்திகளை, விருப்பு வெறுப்புக்களை, காழ்ப்புணர்ச்சிகளை கொட்டும் இடமாகவும் இன்று தஃவாக் களம் மாறியுள்ளது.]
இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுள் சிந்தனைச் சிக்கல் பிரதான இடத்தைப் பெறுகின்றது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மிகப் பாரதூரமானவை. சிந்தனைத் தெளிவின்மையின் விளைவாக முஸ்லிம் சமூகத்துக்குள் எதிரும் புதிருமான சிந்தனைப் பள்ளிகளும் முகாம்களும் தோன்றி முட்டி மோதும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்திற்கு வெளிச் சக்திகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை விட உள்வீட்டு முரண்பாடுகளால் உருவாகியுள்ள பாதிப்பு மிக மோசமாக மாறியள்ளது. இந்த முரண்பாடுகளால் ஷரீஆவின் குறிக்கோள்களும் இஸ்லாத்தின் நலன்களும் மிகப் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளன. மார்க்கத்தினால் கிடைக்கப் பெறும் பல நன்மைகளை சமூகம் அனுபவிக்க முடியாமல் போயுள்ளது.
கொள்கை முரண்பாடு என்ற மாயையின் விளைவாக பல்வேறு ஆன்மிக நோய்கள் தஃவாவின் பெயராலேயே பரவி வருகின்றன. மாற்றுக்கருத்துடையோரை விமர்சித்தல் என்ற பெயரில் தூற்றுதல், அவமதித்தல், அசிங்கப்படுத்துதல், பழி சுமத்துதல் முதலான பாவங்கள் அங்கீகரிக்கப்பட்ட தஃவா வழிமுறைகளாக மாறிவிட்டனவோ என நினைக்கத் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.
தஃவாக் களத்தில் நிலவும் போட்டி, பொறாமை காரணமாக காட்டிக் கொடுப்புக்களும் கழுத்தறுப்புகளும் சகஜமாகி விட்டன. குழு வாதமும் இயக்க வெறியும் இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் ஈமானிய உறவையும் பலபோது மிகைத்து விடுகின்றன. மாற்றுக்கருத்துடையோர் தொடர்பில் நல்லெண்ணம் இல்லை, சுபமான பார்வை இல்லை. சுருக்கமாகச் சொல்வதாயின், மற்றவர்கள் மீது சேறு பூசுவதையே வாடிக்கையாகக் கொண்ட பலர் தஃவாக் களத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட அதிருப்திகளை, விருப்பு வெறுப்புக்களை, காழ்ப்புணர்ச்சிகளை கொட்டும் இடமாகவும் இன்று தஃவாக் களம் மாறியுள்ளது.
இத்தகையோர் மத்தியில் மிகவும் தூய்மையாகவும் பண்பாடாகவும் நடந்து கொள்ளும் ஒரு சாரார் இருப்பது மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது. இவர்கள் நாகரிகமானவர்கள், மாற்றுக் கருத்துடையோரை மதிப்பவர்கள், அவர்கள் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்கள், காழ்புணர்ச்சியற்றவர்கள். இவர்கள் தஃவாவின் பெயரால் பிறரை கிண்டல், கேலி செய்யாதவர்கள். முரண்பாட்டில் உடன்பாடு காண்பதே இவர்களின் நிலைப்பாடு. குறைந்தபட்சம் உடன்படும் விடயங்களில் ஒத்துழைக்கவும் முரண்படும் விடயங்களில் விட்டுக் கொடுக்கவும் தெரிந்தவர்கள். இத்தகையவர்கள் எல்லா அணிகளிலும் இருக்கின்றார்கள்.
இன்றைய தேவை இவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதாகும். இவர்களின் அணுகுமுறையே தூய இஸ்லாமிய வழிமுறையாகும் என்பதை இஸ்லாத்தையும் ஸலபுகளின் வாழ்வையும் முறையாகப் படித்த எவரும் மறுக்கப்போவதில்லை. இந்த வகையில் இவர்களின் அணுகுமுறை களத்தில் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும். இதுவே தஃவா கலாசாரமாக மாற வேண்டும். தவறுகளை குத்திக் காட்டி உள்ளங்களைக் காயப்படுத்துவதை தவிர்த்து தவறுகளைக் காணும்போது அவற்றைப் பண்பாடாக சுட்டிக்காட்டி திருத்தும் இஸ்லாமிய மரபைப் பேணும் பண்பாட்டை மேலோங்கச் செய்வது காலத்தின் தேவையும் சனமார்க்கக் கடமையுமாகும்.
source: http://sheikhagar.org/component/content/article/21-short-articles/425-dhawa-ethics