MUST READ
இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ o நம்முடைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தொழுவதே கிடையாது. அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் யாதொரு பகையும் கிடையாது; பகையே இல்லாததால் படைக் கருவிகளுக்கும் வேலையே இல்லை! பகைவனோடு தோழமையை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது அவர்கள் வெகுநிம்மதியாக உள்ளார்கள்.
o இன்னும் பலபேர் தொழுகையை என்னவோமுறையாகக் கடைபிடித்து வருவார்கள். அதே சமயம், இஸ்லாமுக்கு விரோதமான எல்லாவகையான அனாச்சாரங்களிலும் மாசுகளிலும் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரே நேரத்தில் அல்லாஹ்வோடும் ஷைத்தானோடும் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று இத்தகையவர்கள் நினைக்கிறார்கள் போலும்!!
o இன்னும் சிலருக்கு தொழவேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் கிடையாது. ஆனாலும் மக்களுக்காக ஐவேளை தொழுது கொண்டிருப்பார்கள். ஷைத்தானோடு போராடவேண்டும் என்பதற்காக அல்ல, மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தோழுது வரும் மக்கள் இவர்கள்!
o அடுத்ததாக, பொதுமக்கள்! பாவம், அவர்கள் தொழுவதே மிகவும் குறைவு. அதுவும் தங்களுடைய பாவக்கறையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களுடைய முறையற்ற அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமே என்ற எண்ணத்திலும் தொழும் மக்களே அதிகம்!!
o பொதுவாக முஸ்லிம்களை எடைபோட்டுப் பார்த்தால் இப்படித்தான் நாம் அவர்களை வகுக்க வேண்டியிருக்கின்றது. தொழுகை என்றால் என்ன? அதை எவ்வாறு முறையாகத் தொழுக வேண்டும்? என்பதை நன்கு உணர்ந்து தொழக்கூடிய இறைநம்பிக்கையாளர்களும் காணப்படவே செய்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே விளக்கிக் கூறிய கூட்டத்தைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.]
இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
o இஸ்லாமிய ஜமாஅத்தின் மூன்று சின்னங்கள்
o ஷதீத் என்ற சொல்லின் பொருள்
o ருஹமாஉ பைனஹும்
o முஸ்லிம்களின் தற்போதைய நிலை
o முஸ்லிம்களும் முதல் அடையாளமும்
o முஸ்லிம்களும் இரண்டாவது அடையாளமும்
o ஃபித்னாக்களில் முஸ்லிம்கள்
o முஸ்லிம்கள் மீதான கடமை
o இஸ்லாம் அல்லாத நீதிமன்றங்கள்
o முஸ்லிம்களும் மூன்றாவது அடையாளமும்
o முஸ்லிம்களில் வேறுசில வகையினர்
அல்குர்ஆனை நீங்கள் வாசித்துப் பார்த்தால் பக்கத்துக்குப் பக்கம் வரிக்குவரி இறைநம்பிக்கையாளர்களைப் பற்றியும் அவர்களுடைய தன்மையைப் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காணலாம். ஆயினும் இங்கு நாம் அத்தியாயம் அல்ஃபதஹ் உடைய வசனம் ஒன்றை முன்னிறுத்தி விளக்கத்தைக் காண்போம்.
”முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களிடம் கடுமையாகவும் தங்களுக்கிடையில் மென்மையாகவும் நடந்துகொள்வார்கள். (இறைவனுக்கு முன்னால்) குனிந்தவர்களாக, சிரஷ்டாங்கம் (ஸுஜூது) செய்பவர்களாக, அல்லாஹ்விடம் அருளையும் அவனுடைய திருப்தியையும் வேண்டி நின்றவர்களாக இருக்கக் காண்பீர்கள். அவர்களுடைய நெற்றிகளில் ஸஜ்தா செய்ததற்கான அடையாளத் தழும்புகள் காணப்படும்.”
இவைதாம் அவர்களுடைய தன்மைகளென தவ்ராத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வசனத்திலுள்ள நுண்தகவல்களை விளக்கிக்கூற தக்க இடம் இதுவல்ல! தனியொரு இறைநம்பிக்கையாளனோ அல்லது இறைநம்பிக்கையாளர்களின் கூட்டமைப்போ எத்தகைய பண்புகளோடு இலங்கும் என்பது ஈங்கு அழகாக விளக்கப்பட்டுள்ளது. தம்மை முஸ்லிம்களாக கருதிக்கொண்டிருக்கிறவர்கள் நெடுநெடுவென்று நிற்கின்ற இந்தக் கண்ணாடியில் தங்களை நன்றாக ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே தாங்கள் முஸ்லிம்கள் தாமா என்று ஒரு முடிவிற்கு அவர்கள் வர அப்போது தான் வசதியாக இருக்கும்.
முஸ்லிம்களின் அடையாளங்களை வர்ணிக்க நாம் இந்த வசனத்தை தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்த அடையாளங்கள் யாவும் தவ்ராத் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன. இத்தகு பண்புகளோடு கூடிய சமூகத்தினர் உதயமாகும்போது யூதர் களும் கிறிஸ்தவர்களும் அவர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களோடு தங்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும், அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு இறைவனின் கட்சியினர் நாங்கள் என்று உலகிற்கு முன்னால் சாட்சியம் அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான் தவ்ராத்தில் தெள்ளந்தெளிவாக இவ்வடையாளங்கள் விளக்கப் பட்டுள்ளன.
உள்ளங்கை நெல்லிக்கனி போல பார்த்தவுடன் சட்டென்று புலப்பட்டுவிடுகின்ற பண்புகளையே இங்கு அடையாள உருக்களாக காட்ட வேண்டும் என்பதுதான் இறைவனின் திருநாட்டமாக இருந்தது. காரிருளில் நடந்துபோகிற ஒரு மனிதனைக் கண்டாலும் தூரத்திலிருந்து பார்த்தவுடனேயே இவர் ஒரு முஸ்லிம் என்று சட்டென்று சொல்லிவிடும் அளவுக்கு, இவர் இவ்வுலகில் எப்பணிக்காக அனுப்பப் பட்டுள்ளார் என்று விளக்கிக் கூறும் அளவுக்கு அப்பண்புகள் பட்டப்பகலவனைப்போல ஒளிவீச வேண்டும்.
கண்ணை இறுக மூடிக்கொண்டுள்ளவர்களுக்கு மத்தியான நேரத்து சூரியன் கூட பார்வையில் படாது. யூதர்களுடைய நிலையும் கிறிஸ்தவர்களுடைய நிலையும் அவ்வாறுதான் ஆகிப்போனது. விடியல் வாசலில் விளக்கேந்திக்கொண்டு நின்று கொண்டிருந்தவர்கள் உதயநேரத்தின்போது தங்கள் கண்களை இறுகக் கட்டிக்கொண்டார்கள். விழிகளைத் திறந்துவைத்து பார்வைக்கு வேலை தந்தவர்கள் பேரொளிப் பிரகாசத்தின் பரவசத்தில் மூழ்கிப் போனார்கள். இத்தகு மேன்மக்களின் அடையாளக் குறியீடுகள் குர்ஆனின் பக்கங்களில் ஆங்காங்கு கொட்டிக் கிடக்கின்றன. ரோம தேசத்து உளவாளிகள்கூட இரவின் இருளில் நின்று கொண்டிருப்பவர்கள் யாரென்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டார்கள்.
இரவில் வணங்கி பகலில் போராடுகிற மக்கள் இவர்கள்! என்று மேலதிகாரிகளிடம் சென்று அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
இஸ்லாமிய ஜமாஅத்தின் மூன்று சின்னங்கள்
படித்தால் புரிந்து கொள்ளும் சராசர அறிவு படைத்த சாதாரண மனிதன்கூட இவ்வசனத்தைப் படித்தவுடன் கீழ்வரும் மூன்று சின்னங்களை கண்டுகொள்வான்.
(1) நிராகரிப்பாளர்களைப் பொருத்தவரை முஸ்லிம்கள் கடுமையாக இருப்பார்கள்.
(2) தங்களுக்கிடையில் மிகவும் இணக்கமாகவும் பாசத்தோடும் நடந்துகொள்வார்கள்
(3) ஸஜ்தாக்களின் காரணமாக அவர்களுடைய நெற்றிகள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
மூன்றாவது அடையாளத்தைப் புரிந்து கொள்வதில் எந்தவிதமான சிக்கலும் இருக்கப் போவதில்லை. முதல் இரண்டு அம்சங்களை மட்டும் சற்று சிரத்தை எடுத்து விளங்கிக் கொள்ள வேண்டி யிருக்கும்.
நிராகரிப்பாளர்களோடு கடுமையாக நடந்துகொள்வார்கள் என்றால் பார்த்தவுடனேயே முகமெல்லாம் கடுப்பேறிப்போய் கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நின்றுவிடுவார்கள் என்று அர்த்தமல்ல! கைகலப்பில் இறங்கி காரணமே இல்லாமல் கழுத்தில் கத்தி வைத்துவிடுவார்கள் என்றும் அர்த்தமல்ல! வான்மறை குர்ஆனின் போதனைக்கும் வழிகாட்டவந்த இறைத்தூதரின் நடைமுறைக்கும் முற்றிலும் மாற்றமான விஷயமாகும் இது! நிராகரிப்பாளர்களோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான ஏராளமான நெறிமுறைகளையும் நிபந்தனை களையும் இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.
சாதாரணமாகப் பார்த்தால் கடுமையானதாகக் காட்சியளிக்கும் ஜிஹாதில் கூட எண்ணற்ற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. ஜிஹாத் என்பதேதோ கடுமை காட்டவேண்டிய இடமோ வன்முறையை வெளிப்படுத்த வேண்டிய இடமோ அல்ல, மாறாக, கிருபையையும் கருணையையும் வெளிப்படுத்த வேண்டிய இடம் என்றுதான் வான்மறை குர்ஆனும் கூறிக்கொண்டள்ளது. ஆயினும், இப்பிரச்சனை யைப் பற்றி ஆராய வேண்டிய இடம் இதுவல்ல!
ஹுவ ஷதீதுன் அலைஹி என்று அரபியில் கூறினால் ஏதோ செங்கிஸ் கானைப் போலவும் தைமூரைப் போலவும் கொடுங்கோன்மையோடு நடந்து கொள்வது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஒருபொருளை அடைய முயற்சிப்பது, அதனை வெற்றி கொள்வது என்றும் இப்பதத்திற்குப் பொருள் உண்டு! தமது குறிக்கோளை அடைய இடையூறாக இருக்கும் ஒன்றை தோதாக மாற்றுவது, இணக்கமாக ஆக்குவது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்னும் ஆழமாக விளக்கிக் கொண்டு போனோம் என்றால் இது அரபி இலக்கண வகுப்பாக மாறிவிடும். இருப்பினும் சொல்லவந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ளும் வகைளில் புகழ்பெற்ற அரபி கவிதைத் தொகுப்புகளில் ஒன்றான ஹமாஸா எனும் நூலில் இருந்து ஈரடிக் கவிதை ஒன்றைக் காண்போம்.
விளையும் பருவத்தில் நற்பண்புகளை கைக்கொள்ளாவிட்டால் முதுமைப் பருவத்தில் அவற்றை அடைவது எளிதான செயல் அல்ல!
ஷதீத் என்ற சொல்லின் பொருள்
ஏதேனும் ஒரு பொருள் மிகவும் கடினமாக இருந்தாலோ அதனை உடைப்பதோ முறிப்பதோ இலகுவான காரியமாக இல்லாது போனாலோ ஷதீதுன் அலைக்க (அது உன்னால் முடியாது) என்று கூறுவோம். ஒரு மனிதர் நெஞ்சழுத்தம் மிக்கவராகவும் மனோதிடம் கொண்டவராகவும் இருக்கிறார் அவரை வளைப்பதோ நம்முடைய காரியத்திற்கு தோதானவராக மாற்றிக் கொள்வதோ கஷ்டமான காரியம் என்று இருந்தால் அதனையும் ஷதீதுன் அலைக்க என்றே குறிப்பிடுவோம்.
இங்கு இவ்விரு கோணங்களையும் முன்வைத்தே இவ்வசனத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், என்ற போதிலும் இரண்டாவது கோணம் மிகவும் கவனத்திற்கு உரியது. முஸ்லிம்களிடம் காணப்படவேண்டிய உறுதியான இறைநம்பிக்கை, குன்றாத கொள்கைப் பிடிப்பு, நெறிமுறைகளில் முன்னேறும் பண்பு, உயர்ந்து ஓங்கிய பண்புச் சிறப்புகள் போன்றவற்றின் வடிவமாக இக்கோணமே திகழ்கின்றது.
நிராகரிப்பாளர்களின் விஷயத்தில் அவர்கள் கடுமையானவர்களாக இருப்பார்கள். விரலை நீட்டி விரும்பிய பக்கமெல்லாம் மெழுகுவர்த்தியின் திரியை வளைப்பது போல அவர்களை வளைக்க முடியாது. பாறையில் பிளவொன்றை ஏற்படுத்துவதைப் போல அவர்களை வளைக்க நினைப்பதும் இயலாத காரியம்!.
ஈமானில் உறுதியில்லாத பலவீனமான முஸ்லிம்களைப் பற்றியும் முனாஃபிக்கீன்கள் எனும் இரட்டைவேட நயவஞ்சகர்களைப் பற்றியும்தான் இவ்வசனம் பேசுகின்றது. முஸ்லிம்களின் அணியில் அவர்கள் காணப்பட்டாலும் உண்மையில் அவர்கள் யூதர்களுடைய, நிராகரிப்பாளர்களுடைய கருவிகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். அவர்களின் முகத்துக்கு நேராக கண்ணாடி ஒன்றை நீட்டிக் காண்பித்து உள்ளநிலையை அப்பட்டமாக அவர்களுக்கு விளக்க இவ்வசனம் முயற்சிக்கின்றது. நிராகரிப்பாளர்களின் தன்மைகள் என்னென்ன? அவர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எத்தகு கடுமையைக் காட்டவேண்டும் என்று புரியவைக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது.
ருஹமாஉ பைனஹும்
இரண்டாவது பண்பைப் பற்றியும் கொஞ்சம் காண்போம். ஏற்கனவே கூறப் பட்டுள்ள பண்புக்கு நேர்எதிரானது ஆகையால் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தே பொருள் கொள்ளவேண்டும். ஒரே கொள்கை, ஒரே கோட்பாடு, ஒரே குறிக்கோள், ஒரே இலக்கு, ஒரே பயணதிசை போன்றவை அவர்களிடையே நேசத்தையும் இணக்கத்தையும் பரஸ்பர நல்அபிப்பிராயத்தையும் தோற்றுவித்துள்ளன. மூடுதிரைகள் ஏதுமின்றி ஒவ்வொருவருடைய மனமும் திறந்த புத்தகத்தைப் போன்று விசாலமாக உள்ளது. சம்பிரதாயங்கள், வெற்றுவிசாரிப்புகள் போன்ற போலிக் கட்டுப்பாடுகள் யாவும் தகர்க்கப் பட்டுவிட்டன. ருஹமாஉ பைனஹும் என்பதன் விளக்க வடிவத்தை நீங்கள் ஹதீது நூற்களிலும் ஸீறா நூற்களிலும் கண்டு கொள்ளலாம். வார்த்தைகளின் துணைகொண்டு அதைவிடவும் அதிகமாக நம்மால் விளக்கிவிட முடியாது.
இவ்வசனத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது நம்முடைய நினைவில் இறைத்தூதர் ஈஸா அவர்கள் தம்முடைய சீடர்களுக்கு செய்த ஒரு போதனை அடிக்கடி தலை காட்டுகின்றது. பாம்பைப் போன்று புத்திசாலித்தனமாகவும் புறாவைப் போன்று தீங்கற்றவர்களாகவும் இருக்கவேண்டும். பாம்பைப் போன்ற புத்திசாலித்தனம் என்றால் அஷித்தாஉ அலல் குஃப்பார் என்பது தானே? ள்புறாவைப்போன்று தீங்கற்று என்றால் ருஹமாஉ பைனஹும் என்பதைப் போன்றுதானே?
உங்களுடைய கொள்கைக்கும் உங்களுடைய கோட்பாட்டிற்கும் நேர்எதிரான கொள்கை, கோட்பாடு கொண்டவர்களோடு….
நீங்கள் பயணிக்கின்ற திசைக்கு எதிரில் பயணிப்பவர்களோடு
உங்களுடைய தத்துவங்கள், விளக்கங்களோடு மோதுகின்ற தத்துவங்களை விளக்கங்களைக் கொண்டிருப்பவர்களோடு நீங்கள் எப்படித்தான் நடந்து கொள்ள முடியும்?
பாம்பைப் போன்று இன்னுஞ் சொல்லப்போனால் பாம்பை விடவும் புத்திசாலித்தனமாக அல்லவா நடந்துகொள்ள வேண்டும்?
அதேசமயம் ஒரே பாதையில் உங்களோடு இணைந்து பயணிப்பவர்களிடம் குறிக்கோளிலும் திசையிலும் யாதொரு கருத்துமுரண்பாடும் இல்லாதவர்களிடம் பார்க்கும் பார்வையிலும் கொண்ட கருத்திலும் யாதொரு மாற்றத்தையும் ஏற்படுத்த நினைக்காதவர்களிடம் எவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும்? புறாக்களை விடவும் மென்மையானவர்களாக நாம் அவர்களிடம் நடந்து கொண்டால் அதில் தவறேதும் இருக்க முடியுமா? இதை மனதில் கொண்டுதானோ என்னவோ அல்முஃமினு இஸ்ஸுன் கரீமுன் (இறைநம்பிக்கையாளன் கடினமானவனாகவும் அதேசமயம் கருணையாளனாகவும் இருப்பான்) என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் தற்போதைய நிலை
தவ்ராத் வேதத்தில் முஸ்லிம்கள் குறித்து தெள்ளந்தெளிவான இம்மூன்று அடையாளங்கள் விளக்கப் பட்டுள்ளன. அடுத்ததாக தோன்றப் போகின்ற சமுதாயத்தை எளிதில் இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இவ்வறிகுறிகள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. அந்தக் காலத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் சிந்தனையைத் தொலைத்து விட்டு கண்களைக் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருந்ததால் அவர்களால் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டது. ஆனால் இந்தக் காலத்து யூத, கிறிஸ்தவர்கள் தங்களுடைய வேதநூலைக் கையில் ஏந்திக் கொண்டு முஸ்லிம் களுடைய ஊர்களிலும் பகுதிகளிலும் மஹல்லாக்களிலும் மதரசாக்களிலும் இஸ்லாமியக் கல்லூரிகளிலும் திரிந்து தேடிப் பார்த்தார்கள் என்றால் இவ்வடை யாளங்களுக்கு ஏற்ப எத்தனை எத்தனை முஸ்லிம்களைக் கண்டு கொள்வார்கள்?
முஸ்லிம்களும் முதல் அடையாளமும்
நிராகரிப்பாளர்களோடு கடுமையாக நடந்து கொள்வார்கள் என்பதுதானே முதல் அடையாளம்! அதைப் பற்றிய விளக்கத்தையும் பார்த்தாகிவிட்டதே! இந்த அடையாளக்குறிப்பை அட்டையில் எழுதிக் கொண்டு மஹல்லாக்களில் தேடி அலைபவர் எந்த முடிவுக்குத்தான் வந்துசேர்வார்? இத்தகு தகுதி கொண்ட முஸ்லிம் ஜமாஅத் ஒன்றையாவது அவரால் கண்டுகொள்ளமுடியுமா? குஃப்ருக்கு எதிரானதாகவோ குஃப்ர் விஷயத்தில் கடுமையானதாகவோ அல்ல, மாறாக, குஃப்ருடைய சபிக்கப்பட்ட எல்லாச் செயல்களுக்கும் தொண்டூழியம் புரியவர்களாகவும் முதன்மைச் சேவகர்களாகவும் இஸ்லாமிய அமைப்புகளும், ஜமாஅத்துகளும் ஓடோடி பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் விழிகள் விரிய பார்த்து திகைத்துப் போய் நின்றுவிடுவார்.
நம்முடைய இஸ்லாமிய ரோஷம் உருக்குலைந்து உருக்குலைந்து கடைசிப் புள்ளிக்கே போய்ச் சேர்ந்து விட்டிருக்கின்றது. குஃப்ருக்கு பணியாற்றுகின்ற வாய்ப்பு ஏதேனும் ஒரு வடிவில் கிடைத்துவிட்டதென்றால் ஏதோ மிகப்பெரியதொரு பாக்கியம் தமக்குக் கிடைத்துவிட்டதென நினைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய பொன்னரிய வாய்ப்பு இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் எப்போதடா அதுபோன்றதொரு தமக்குக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சமூகத்து இளைஞர்கள் அனைவரையும் நாம் நவீன ஜாஹிலிய்யா கல்விக்கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் ஒப்படைத்து விட்டிருக்கிறோம். இஸ்லாமற்ற கல்விமுறை, இஸ்லாமற்ற தத்துவம், இஸ்லாமற்ற சட்டம், இஸ்லாமற்ற அறிவியல் என்று அவர்களுடைய சிந்தனை இஸ்லாமற்ற சிந்தனையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொஞ்சம்கூட சுவையேயற்ற கசப்பான இந்தக் கல்விமுறை இப்போது எந்த அளவுக்கு பிடித்துப் போய்விட்டிருக்கின்றது என்றால் வேறு எதுவுமே இப்போது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. முகத்தை தூக்கி வைத்துக்கொள்கிறார்கள்.
ஒழுக்கமும் பண்பாடும் எந்த அளவுக்கு சீர்குலைந்து போய்விட்டிருக்கின்றது என்றால் மற்றவர்களுடைய குற்றங்குறைகளையும் சிறப்புகளாக எண்ணி காப்பியடித்துக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், நம்முடைய சிறப்புகளை ஏதோ பாவங்களாக எண்ணிக்கொண்டு மறைத்து ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய கோழைத்தனத்தைத்தான் ஏதோ பெரிய முன்னேற்றம் என்றுவேறு நினைத்துக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு சொத்தாக விட்டுச் செல்லப் போகிறோம்.
இத்தகைய அடங்கிஒடுங்கிய, மற்றவர்களின் தாக்கத்திற்கு ஆட்படுகின்ற, எந்தப் பாத்திரத்திலும் நிறைந்துவிடுகின்ற, கொள்கையோ கோட்பாடோ ஏதுமற்ற, வாழ்க்கைக் குறிக்கோள் என்று எதனையும் கொண்டிராத அமைப்பைப் பற்றித்தான் குர்ஆனிலும் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளது, இத்தகையவர்களைப் பற்றிய அடையாளங்கள்தாம் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
முஸ்லிம்களும் இரண்டாவது அடையாளமும்
இரண்டாவது அடையாளத்தைப் பொருத்த வரையிலும் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் பார்த்தாக வேண்டும். ஒருவொருக்கொருவர் பாசப்பிணைப்புடன் காணப்படுவார்கள் (ருஹமாஉ பைனஹும்) இந்த ஒரு சொற்றொடரை விளக்கத்தான் அத்தியாயம் அல்ஃபத்ஹ் உடன் அத்தியாயம் அல்ஹுஜ்ராத்தும் கூடவே இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அவிளக்கத்தையும் அதில் நாம் பார்க்க முடியும். அவற்றைப்பற்றி சுருக்கமாகவாவது இங்கு நாம் பார்த்தேயாகவேண்டும். அத்தியாயத்தின் தொடக்கத்தில் இறைத்தூதரை பின்பற்றியாக வேண்டியதின் அவசியத்தை விளக்கிய பிறகு கீழ்வரும் விஷயங்கள் முஸ்லிம்களுக்கு அழகுற விளக்கப்பட்டுள்ளன.
(1) பாவி ஒருவன் தரும் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் கிளம்பி நின்றுவிக் கூடாது.
(2) முஸ்லிம்களில் இரண்டு தரப்பார் தங்களுக்குள் மோதிக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சமாதான முயற்சிக்குப் பிறகும் அதில் ஒரு சாரார் வரம்பு மீறிச் சென்றால் வலிமையைக் ஞடண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்.
(3) முஸ்லிம்கள் அனைவரும் ஒருவொருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். ஆகையால், அவர்களுக்கிடையே என்றும் சமாதானமே நிலவ வேண்டும்.
(4) ஆண்களோ, பெண்களோ ஒருவரையொருவர் கேலி, கிண்டல், பரிகாசம் செய்துகொள்ளக் கூடாது.
(5) மற்றவர்களின் குறைகளை தோண்டித்துருவி ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. பட்டப் பெயர்களை சூட்டி அழைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மற்றவர்களை திட்டுவது என்பது அதைவிடக் கொடியது.
(6) யாரைப் பற்றியும் வீண் சந்தேகம் கொள்ளக் கூடாது.
(7) யாரையும் உளவு பார்க்கக் கூடாது.
(8) யாரைப் பற்றியும் புறம் பேசக் கூடாது.
(9) யாருக்கு முன்பாகவும் அகம்பாவத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.
இவ்விஷயங்களை உரைகல்லாக வைத்துக்கொண்டு மூன்றாம் கலீஃபா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு காலத்திலிருந்து இன்றுவரை நடைபெற்ற ஃபித்னாக்களையெல்லாம் எடைபோட்டுப் பாருங்கள். மேற்கூறப்பட்ட அறவுரைகள் பின்பற்றப்படாததுதான் யாவற்றுக்கும் காரணம் என்பது தெரிந்துபோகும்!. பூதக் கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் வாழ்கின்ற வீதிதோறும் அலைந்து திரிந்து பாருங்கள். ருஹமாஉ பைனஹும் என்று வான்மறை குறிப்பிடுகின்ற, அத்தியாயம் அல்ஹுஜ்ராத்தில் வர்ணிக்கப்பட்ட பண்புகளுக்குச் சொந்தக்காரர்களான சமுதாயத்தினர் இவர்கள்தானா என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றிவிடும்.
ஃபித்னாக்களில் முஸ்லிம்கள்
முற்காலத்தைய ஜாஹிலிய்யா பழக்கவழக்கங்கள் அனைத்தும் முஸ்லிம் களிடம் நீக்கமற நிறைந்து காணப்படுவதை நம்மால் எளிதாகக் காணமுடியும். முஸ்லிம்கள் வாழ்கின்ற ஏதேனும் ஓர் ஊருக்கு நீங்கள் சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் குழுக்கள் குழுக்களாக சிதறிப் போய்க் கிடப்பதையே காண்பீர்கள். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஊருக்கு ஊர் பிரச்சனை, பஞ்சாயத்து. தொழில், வருமானம், சொத்துத் தகராறு என்று அவர்களிடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் தினந்தோறும் தலைதூக்கிக் கொண்டே உள்ளன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஒரு பிரச்சனையிலிருந்து இன்னொரு பிரச்சனை கிளம்புகின்றது. இந்தப் பிரச்சனை கொஞ்ச நாளில் இன்னொரு குட்டியைப் போடுகின்றது.
சிலபல பிரச்சனைகள் தாமாகப் பிறக்கின்றன என்றால் சிலபல பிரச்சனைகளை அக்குழுக்களின் தலைவர்கள் தோற்றுவிக்கிறார்கள். அத்தகைய தலைவர்களும் அவர்களுடைய வக்கீல்களும் நகரங்களிலும் பட்டணங்களிலும் தத்தமது அறைகளில் வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய படிப்புகளை என்னவோ அவர்கள் படித்திருக்கிறார்கள். ஆனாலும்கூட, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துப் பார்க்க அவர்களுக்குத் தெரியாது. தங்களுடைய கட்சிக்காரன் என்னதான் செய்தாலும் அவனுக்காக வழக்காட இவர்கள் தயாராகவே உள்ளார்கள். அவன் செய்தது சரியா, தவறா என்பதெல்லாம் தேவையே இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம். பணம் மட்டுமே! பணத்தைக் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் செய்த அராஜகம், அநியாயத்தைக்கூட சரியானதாக ஆக்கிவிடலாம். அவர்கள் படித்திருக்கின்ற பிஏபிஎல் அளவுக்கு சத்தியத்தை சரிக்கட்டி விடலாம். அவர்களுடைய தகுதியே இதுதான்! சுடதாடரண வார்த்தையை சூப்பர் வார்த்தையாக மாற்றிவிடக்கூடிய திறமை அவர்களிடம் உள்ளது. முஸ்லிம்களுடைய சிறுசிறு சண்டைகளைக் கூட அவர்கள் நீதிமன்றங்களுக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். நீதிக் கடவுளர்களாக அங்கே மனிதர்கள்தாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு காலடிக்கும் லைசென்ஸ் தேவை!
பெரியதொரு தொகை கொடுத்துத்தான் அங்கே நீதியை பெற்றுக் கொள்ள முடியும். (அப்போது கூட கிடைக்குமா என்பது சந்தேகமே!) ஆக, இவையெல்லாம் ஒன்றுசேர்ந்தபிறகு சமயநெறிக்கும் ஒழுக்கத்திற்கும் நீதி நேர்மைக்கும் அங்கே என்ன நிலை என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். அடுத்தவன் சொத்தை விழுங்குவது, கபளீகரம் பண்ணுவது என்பதெல்லாம் அங்கே சர்வசாதாரணமான விஷயங்கள்.
பொய்ச்சாட்சிகள் கொண்டுவந்து நிறுத்தப் படுவார்கள்; பொய்யான தஸ்தாவேஜுகள், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்படும்; பொய்யான விவாக ரத்துப் பத்திரங்கள் தயாரிக்கப்படும்; திருமணப் பதிவுகளும் முறைகேடாகச் செய்யப்படும்….. இத்தகு காரியங்களைத்தான் தொழில் என்ற பெயரில் அவர்கள் செய்து கொண்டுள்ளார்கள். இவ்வாறாக பணத்தையும் இறைநம்பிக்கை ஈமானையும் பண்பையும் ஒழுக்கத்தையும் செலவழித்து நம்முடைய சகோதரர்கள் தொழில் செய்து கொண்டுள்ளார்கள். நாள் முழுக்க இப்படியே கழித்துவிட்டு இரவில் தூங்கச் செல்லும்போது அடுத்த நாளுக்கான தங்களுடைய பணிகளை அவர்கள் திட்டமிடத் தொடங்கிவிடுகிறார்கள்.
நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் இந்த வியாதி பரவியிருப்பதைப் பார்க்கலாம். இந்த மாதிரியான முஸ்லிம்களைப் பார்த்துவிட்டு யாராவது இவர்கள்தாம் பரஸ்பரம் கருணை காட்டிக் கொள்கிற உண்மை முஸ்லிம்கள் – ருஹமாஉ பைனஹும் – என்று சொல்ல முன்வருவார்களா?
முஸ்லிம்கள் மீதான கடமை
ஒரு தவறான நம்பிக்கையில் முஸ்லிம்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். தங்களுடைய பாதுகாப்பை மனதில் கொண்டு அவர்கள் செய்யும் செயல்கள் யாவும் ஷரீஆ அடிப்படையில் கூடுமா என்பதை அவர்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை. தன்னை திட்டிவிட்டான் என்பதற்காக இன்னொரு முஸ்லிமைத் திட்டுவது பாவம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் அவர்களுடைய போதனையை பல்வேறு வகைகளிலும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. ஒரு முஸ்லிம் மீது கொலைத் தாக்குதல் நடத்துவது குஃப்ரு என்றும் ஹதீதுகளில் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இன்னொரு முஸ்லிமுடைய உயிரும் மானமும் உடைமையும் ஹராம் ஆகும்.
இரண்டு முஸ்லிம்களிடையே சண்டை ஏற்பட்டு அதில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால் இரண்டுபேர்களுமே நரகம் செல்வார்கள் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அறிவுறுத்தியுள்ளார்கள். கொன்றுவருக்கு தண்டனை சரி, கொலையானவருக்கு எதற்காக தண்டனை என்று கேட்கப்பட்ட போது இறைத்தூதர் கூறினார்கள்: இவரைக் கொன்றுவிடவேண்டும என்று அவரும் அவரைக் கொன்று விடவேண்டும் என்று இவரும் போரிட்டார்கள். கொலை செய்யும் எண்ணம் இருவரிடத்திலும் இருந்தது!
இஸ்லாம் அல்லாத நீதிமன்றங்கள்
உங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்திற்கு நீங்கள் பதிலடி தந்தாக வேண்டும். பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும். ஆனால் அதற்காக நீங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் செய்யவேண்டுமோ அதனைச் செய்தாக வேண்டும். ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இறைச் சட்டங்களின் அடிப்படையில் செயல்படும்நீதிமன்றங்களுக்கு மட்டுமே தன்னுடைய வழக்குகளைக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தா:கூத்தை நீதிபதியாக்கிய குற்றத்திற்கு (தஹாகும் இலத் தா:கூத்) அவன் ஆளாக நேரிடும்.
ஒருவேளை அத்தகைய நிலை இல்லை, இஸ்லாமிய அடிப்படையில் செயல்படும் நீதிமன்றங்களே இல்லை என்றால் என்ன செய்வது? பொறுமை காக்க வேண்டும்! எத்தனை எத்தனையோ செயல்களை நாம் இதன் காரணமாக விட்டு விடுகிறோம். ஷரீஆ அடிப்படையில் செயற்பட இயலாது என்ற காரணத்திற்காக ஷரீஅத்தினுடைய எத்தனையோ சட்டங்களை அமுல்படுத்தாது விட்டுவிடுகிறோம். இஸ்லாமிய அமைப்பு இல்லை, இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று காரணம் சொல் கிறோம். இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகளில் பொறுமை காக்க முடிந்த நம்மால் ஏன் இவ்விஷயத்திலும் பொறுமை காக்க இயலாது? இஸ்லாமிய அடிப்படையில் செயல்படும் நீதிமன்றங்கள் இல்லையென்பதால் நம்முடைய வீட்டுப் பிரச்சனைகளை வீதிப் பிரச்சனைகளை நாமே பேசித் தீர்த்ததுக் கொள்ளவேண்டுமே அல்லாமல் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது சரியல்ல என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?
வேறுவழியே இல்லாமல் ஒருவேளை நீதிமன்றங்களுக்கு நாம் சென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை ஒரு நிர்ப்பந்த நிலையாக நாம் கருதிக் கொள்ளவேண்டுமே அல்லாமல் ஒருபோதும் அதை சலுகையாக எண்ணிவிடக் கூடாது. நிர்ப்பந்த நிலைகளில்தாம் ஹராமானவற்றையும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதியை ஷரீஅத் வழங்கியுள்ளது.
அவ்வாறல்லாமல் இந்நீதிமன்றங்களை ஏதோ ஷரீஆ அடிப்படையிலான நீதிமன்றங்களாக எண்ணிவிடக்கூடாது. இறைவனையும் நம்புகிறோம் இஸ்லாமையும் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இத்தகைய நீதிமன்றங்களில் போய் நீதிக்காக யாசித்துக் கொண்டிருக்கும் அதிசயத்தை இருபதாம் நூற்றாண்டில்தான் பார்க்க முடியும்!!
முஸ்லிம்களும் மூன்றாவது அடையாளமும்
தற்காலத்தைய முஸ்லிம்களிடம் மூன்றாவது அடையாளம் எந்தளவுக்கு காணப்படுகின்றது என்பதையும் பார்ப்போம்.
பள்ளிவாசல்களில் ருகூஃகளையும் ஸஜ்தாக்களையும் செய்தவாறு இறைவனின் அருளையும் திருப்தியையும் தேடிக் கொள்கிறார்கள்; அவர்களின் நெற்றிப் பொட்டுகளில் ஸஜ்தாக்களின் சுவடுகள் பிரகாசிக்கின்றன என்பதுதான் மூன்றாவது அடையாளம். இறையச்சத்தோடும் வழிபாட்டுக்கென்றே உள்ள அணியலங்காரத்தோடும் திகழ்கின்ற தொழுகைகளைப் பற்றியே இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இத்தகு சிறப்பான தொழுகையை முஸ்லிம் சமூகத்தில் பார்க்க முடியுமா என்ற நப்பாசையைக் கைவிட்டுவிட்டு தொழுகை என்ற ஒன்றையாவது பார்க்க முடியுமா என்பதைப் பார்ப்போம்.
வான்மறை குர்ஆனை நீங்கள் ஆழமாக வாசித்துப் பார்த்தீர்கள் என்றால் தொழுகையின் மூலமாக நமக்கு இரண்டு விஷயங்கள் கிடைக்கின்றன என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.
(அ) இறைவனை வழிபடுவதா? ஷைத்தானை வழிபடுவதா என்கிற விஷயத்தில் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையே இவ்வுலகில் தொடர்ந்து போராட்டம் நடை பெற்றுக் கொண்டே உள்ளது. இப்போராட்டத்தில் தொழுகையைக் கொண்டுதான் நம்மால் வெல்ல முடியும்!
(ஆ) போராட்டத்தின் மூலமாக நமக்குக் கிடைத்த வெற்றிகளையும் தொழுகை யின் மூலமாகத்தான் தக்கவைத்துக் கொள்ள முடியும். இவ்விரண்டையும் மனதில் கொண்டு நமது தொழுகைகளின் நிலை எவ்வாறு உள்ளது? நாம் எந்தளவுக்கு தொழுகையாளிகளாக உள்ளோம்? என்பதை எடைபோட்டுக் கொள்ளலாம்.
முஸ்லிம்களில் வேறுசில வகையினர்
நம்முடைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தொழுவதே கிடையாது. அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் யாதொரு பகையும் கிடையாது; பகையே இல்லாததால் படைக் கருவிகளுக்கும் வேலையே இல்லை! பகைவனோடு தோழமையை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது அவர்கள் வெகுநிம்மதியாக உள்ளார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய கடவுளர்களுக்கும் எப்போதாவது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு சமயத்தைப் பற்றிய சிந்தனை வந்துவிட்டால் நாளிதழ்களிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரங்களைக் கொடுத்தோ, சீசன் பக்தி மான்களாக மாறியோ தங்களுடைய கடவுட்பக்தியை பறைசாற்றிக் கொள்வார்கள். லவுட் ஸ்பீக்கர்கள் மூலமாக தெருவெங்கும் இஸ்லாமிய உத்வேகத்தை ஏற்படுத்தும் பாடல்களை ஒலிபரப்புவார்கள். மீலாது விழாக்களிலும் பாபரி மஸ்ஜித் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.
இன்னும் பலபேர் தொழுகையை என்னவோமுறையாகக் கடைபிடித்து வருவார்கள். அதே சமயம், இஸ்லாமுக்கு விரோதமான எல்லாவகையான அனாச்சாரங்களிலும் மாசுகளிலும் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரே நேரத்தில் அல்லாஹ்வோடும் ஷைத்தானோடும் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று இத்தகையவர்கள் நினைக்கிறார்கள் போலும்!!
இன்னும் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள். இவர்களோ தொழமட்டும் செய்வார்கள்; தொழுகையின் பக்கம் மட்டும் மக்களை அழைப்பார்கள். மற்ற மற்ற இஸ்லாமிய விஷயங்களைப் பற்றி அக்கறையோ ஆர்வமோ காட்டமாட்டார்கள். போரே தேவையில்லை என்று கூறிக் கொண்டு போர்க்களத்தை விட்டு வெகு தூரம் விலகி நின்றுகொண்டு அதே சமயம் போர்க் கருவிகளைப் போட்டு துடைதுடை யென்று துடைத்துக் கொண்டிருப்பவர்களைப் போன்றது இவர்களுடைய நிலை!
இன்னும் சிலருக்கு தொழவேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் கிடையாது. ஆனாலும் மக்களுக்காக ஐவேளை தொழுது கொண்டிருப்பார்கள். ஷைத்தானோடு போராடவேண்டும் என்பதற்காக அல்ல, மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தோழுது வரும் மக்கள் இவர்கள்!
அடுத்ததாக, பொதுமக்கள்! பாவம், அவர்கள் தொழுவதே மிகவும் குறைவு. அதுவும் தங்களுடைய பாவக்கறையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களுடைய முறையற்ற அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமே என்ற எண்ணத்திலும் தொழும் மக்களே அதிகம்!!
பொதுவாக முஸ்லிம்களை எடைபோட்டுப் பார்த்தால் இப்படித்தான் நாம் அவர்களை வகுக்க வேண்டியிருக்கின்றது. தொழுகை என்றால் என்ன? அதை எவ்வாறு முறையாகத் தொழுக வேண்டும்? என்பதை நன்கு உணர்ந்து தொழக்கூடிய இறைநம்பிக்கையாளர்களும் காணப்படவே செய்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே விளக்கிக் கூறிய கூட்டத்தைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
ஆக, இம்மூன்றாவது அடையாளமும் (முழுக்கத் தொலைந்து போய்விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும்) ஏறக்குறைய தொலைந்துபோயே காணப்படுகின்றது.
உணர்வுத் துடிப்புள்ள ஓர் இறைநம்பிக்கையாளன் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவன் உள்ளத்தில் இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து முஸ்லிம்களின் சிறப்பம்சங்களாக சொல்லப்பட்டு வருபவை யெல்லாம் ஒன்றன்பின்ஒன்றாக அழிந்துகொண்டே சென்றுவிட்டன. அல்லது அழிந்து கொண்டே வருகின்றன என்ற ஒரேயொரு சிந்தனையே ஏற்படுகின்றது. விளைவாக, தாங்கமுடியாததொரு சுமையாக இவ்வுலக வாழ்க்கை அவனுக்குக் காட்சியளிக்கின்றது!!!
-சையத் அப்துர் ரஹ்மான் உமரி