கடந்த ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் மோடி அரசு
[ கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்துவிட்டு, அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் காய்கறி உணவு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது மோடி அரசு.]
புதுடில்லி: மோடி ஆட்சியில் கல்விக்காக 2015-16-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக் கீடு முந்தைய ஆண்டு நிதி ஒதுக்கீடான ரூ.82,771 கோடியிலிருந்து, நடப்பு நிதி ஆண்டில் ரூ.69,074 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த மன்மோகன் ஆட்சியில் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு 18 விழுக்காடு அதிகரித்து இருந்தது. தற்போது 24.68 விழுக்காடு குறைந்துள்ளது.
மோடி ஆட்சியில், சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு 22.14 விழுக்காடு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு 16.41 விழுக்காடு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
இடைநிலை கல்விக்கான ராஷ்டிரிய மத்யமா சிக்ஷா அபியான் திட்டத் திற்கு 28.7 விழுக்காடு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி அளித்திடும் மாநில கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு என்கிற ராஷ்டிரிய உச்ச தார் சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.2200 நிதி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டு ரூ.387 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ. 55,115 கோடியிலிருந்து ரூ.42,210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு, மத்திய மனித வளத்துறை ரூ.50,000 கோடி கேட்ட நிலையில், அதற்கு ரூ.20,000 கோடி தான் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக அரங்கில் தகுதி பெற்ற பல்கலைக் கழகங்கள்….
உலக அரங்கில் முதல் 200 தகுதி பெற்ற பல் கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆனால் அதற்கான எந்த வித முயற்சிக்கான திட்டமும் மோடி ஆட்சியில் இல்லை. மாறாக, மோடி ஆட்சியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 புதிய அய்.அய்.டி,கள் துவங்கப்படும் என பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஒரு அய்.அய்.டி அமைக்கப்பட ரூ.2200 கோடி தேவைப்படும்; இந்த தொகையை ஏழு ஆண்டுகளில் அரசு ஒதுக்க வேண்டும்; அதாவது ஆண்டு ஒன்றுக்கு ஒரு அய்.அய்.டி துவக்க செலவு ரூ.310 கோடி தேவை என ஒரு பக்கம் அரசின் திட்ட அறிக்கை வெளியிட்டு விட்டு, இன்னொரு பக்கம் துவக்கப்படும் ஏழு அய்.அய்.டிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு என நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிக்கிறார் என்றால், இந்த நிதி ஒதுக்கீடுகள் மோடி அரசு உயர் கல்வியில் எந்த அளவுக்கு முரணாக செயல் படுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
பன்னிரெண்டாவது நிதி திட்டத்தின் அறிக்கையில் மொத்த கல்விக்கான ஒதுக்கீடு 18 விழுக்காடு இருக்க வேண்டும்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர் கல்விக்கான ஒதுக்கீடு 1.12 விழுக்காடு இருக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டுள்ளது. நாடாளு மன்ற நிலைக்குழுவும் இந்த ஒதுக்கீடு 25 விழுக்காடாகவும், உயர்கல்விக்கு 1.5 விழுக்காடு இருக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மோடி அரசின் கல்விக்கான ஒதுக்கீடு இதற்கு எதிர்மாறாக உள்ளது.
தற்போது உள்ள 16 அய்.அய்.டி.க்கான ஒதுக்கீடு 2014-15 ஆண்டு ரூ.2500 கோடியாக ஒதுக்கப்பட்டதை ரூ.2337 கோடியாக குறைத்துள்ளது. அதாவது ரூ.163 கோடி குறைத்துள்ளது மோடி அரசு.
ஆன் லைன் மூலம் திறந்த வெளிக் கல்விக் கான ஒதுக்கீடு ரூ.100 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது. மதன்மோகன் மாளவியா பெயரில் அறி விக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக்கான திட்டத்திற்கு ரூ.100 கோடி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் ரூ.15 கோடி தான் ஒதுக்கப்பட்டது.
ஒரு பக்கம் உயர் கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் என கூறிக்கொள்ளும் மோடி அரசு; இன்னொரு பக்கம் அதற்கு எதிரான ஆணைகளை பிறப்பிக்கிறது. அய்.அய்.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் இனி எந்த நிறுவனங்களோடும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால், தங்களது அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அண்மையில் ஆணை பிறப்பித்துள்ளது.
அய்.அய்.டி. இயக்குநர்கள் பதவி விலகல்
இதன் காரணமாக, அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் சிலர் தங்களது பணியிலிருந்து பதவி விலகல் செய்துள்ளனர். அய்.அய்.டி., மும்பை மற்றும் புதுடில்லி இயக்குநர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தங்களது பதவியிலிருந்து விலகி உள்ளனர். தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவர் சேதுமாதவன் ஏறத்தாழ 17 நாவல்கள், 20 சிறுகதைகள் என எழுதியவர். ஏழு மாதங்களுக்கு முன்பாகவே தனது பதவியிலிருந்து விலகி சென்றுள்ளார். அவரது பதவிக்கு ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையான பஞ்ச சன்யாவின் முன்னாள் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பனராஸ் ஹிந்து பல்கலை கழகத்திற்கு மிகக்குறைந்த கல்வித் தகுதி கொண்ட ஒரு ஆர்.எஸ். எஸ். இயக்கத்தவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்களாக சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன், ஆச் சார்யா நரேந்திர தேவ் போன்றோர் இருந்துள்ளனர். அதேபோன்று இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக ஹிந்துத்துவா கொள்கை கொண்ட சுதர்சனராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆக, கல்வித்துறையை காவி மயமாக்கும் பணியை மட்டும் துரிதமாக மோடி அரசு செய்து வருகிறது.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்துவிட்டு, அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் காய்கறி உணவு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது மோடி அரசு.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றது மனுஸ் மிரிதி. ஒரு நூற்றாண்டாகத்தான் இந்த சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வி எனும் நீரோடை பாய்ந்து வருகிறது.
சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக் குப் பின்னர்தான்,மத்திய அரசின் பல்கலைக்கழகங் களில், குறிப்பாக அய். அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத் தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 27 விழுக்காடு தரும் சட்டம் நிறைவேற் றப்பட்டது. நீதிமன்ற தடை என நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, பின்னர் 2009-ஆம் ஆண்டுதான், இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந் தது. உரிய கட்டிட வசதிகள் இல்லை, ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது விழுக்காடு தான் தரமுடியும் என அய். அய்.டி. நிர்வாகம் சொல்லி, 2012-ஆம் ஆண்டு தான் முழுமையாக பிற்படுத்தப் பட்ட சமுதாய மாணவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக வாய்ப்பு அளித்தாலும், இந்த நிறுவனங்களில் நிகழும் பல வர்ண வேறுபாடுகள் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன.
இவையெல்லாம் களையப்பட்டு, சூத்திர, பஞ்சம மக்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைத்திட, கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கும் நேரத்தில், ஏற்கெனவே ஒதுக்கப்படும் நிதியையும் குறைத்து, இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தை தடுப்பதில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல்வியை காவிமயமாக் குவதற்கும், இன்ன உணவு சாப்பிட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதற்கும் கவனம் செலுத்தும் மோடியின் அரசு, மக்களின் அடிப்படையான கல்வியில் கைவைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
source: http://viduthalai.in/e-paper/101196.html#ixzz3ZvkX9O36