இறை நேசர்கள் யார் என்பதை மனிதர்கள் யாராலும் கண்டு பிடிக்க முடியாது; அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் புகாரி 1367வது ஹதீஸில், இறந்துவிட்ட ஒருவரை மக்கள் நல்லவர் என்று புகழும் போது அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். எனவே மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?
இறைநேசர்கள் யார் என்று மக்களால் தீர்மானிக்க முடியாது என்பதை நாம் சுயமாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலேயே கூறுகின்றோம்.
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். (அல்குர்ஆன் 10 : 62, 63)
இந்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணம் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.
ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.
யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.
மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு ஹதீஸ்களிலேயே ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உறுதியாகி விட்டது என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உறுதியாகி விட்டது எனக் கூறினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு எது உறுதியாகி விட்டது? எனக் கேட்டதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள் எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 1367)
மேற்கண்ட ஹதீஸில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசி என்றும் மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று புகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் தெரிகிறது.
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், இது யார்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது.
அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?) என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள் என்று கூறினார்கள். (நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533)
மக்கள் தாமாகப் பேசுவதில்லை. மாறாக மலக்குமார்கள் தான் மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று பேசுகிறார்கள். நபியவர்கள் இறைத் தூதர் என்பதால் தான் மக்கள் நாவில் பேசியது மலக்குகள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இதன் காரணமாக மக்கள் புகழ்ந்தவரை சொர்க்கவாசி என்றும் மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
ஆனால் மக்கள் ஒருவரைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் மலக்குமார்கள் பேசியதா என்பதை நம்மில் யாரும் தீர்மானிக்க இயலாது.
அதனால் தான் இன்று மக்களால் இறைநேசர் என்று போற்றப்படும் எத்தனையோ பேர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான காரியங்களைச் செய்தவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.
சதாவும் போதையில் இருந்தவர்களையும், பீடி புகைத்துக் கொண்டிருந்தவர்களையும் கூட, பீடி மஸ்தான் அவ்லியா என்று கூறி சிலர் வணங்கி வருகின்றனர்.
தமிழ் இலக்கியம் என்ற பெயரில், கல்லையும் மண்ணையும் கடவுள் என்று சித்தரித்துப் பாடி, ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைத்தவர்கள் கூட இன்று அவ்லியாக்கள் என்று கப்ரு வணங்கிகளால் கொண்டாடப்படுகின்றனர்.
தொழுகையே இல்லாதவர்களையும், இஸ்லாம் கூறியுள்ள எந்த அம்சத்தையும் பின்பற்றாமல் பண்டார, பரதேசிகளாகப் பிச்சை எடுத்துத் திரிபவர்களையும் அவர்களது மரணத்திற்குப் பின், மக்களில் சிலர் அவ்லியாக்கள் என்று தீர்மானித்து விடுவதால் அவர்கள் இறைநேசர்களாகி விடுவார்கள் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
எனவே மக்கள் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அவர் நல்லவர் தான், இறைநேசர் தான் என்று தீர்மானித்தால் அவர் இணை கற்பிக்கும் காரியத்தைச் செய்தவராவார்.
-Ehathuvam Magazine Dec 2009