தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி
எல்லோருக்கும் இருக்கும் வழக்கமான ஆசைதான் எனக்குள்ளும் இருந்தது.நாமும் ஒரு நாள் அரபுநாடு செல்லவேண்டும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்க வேண்டும்.
நமது சம்பாத்தியத்தில் சொந்த வீடு,கார்,நகை என்று வாங்கி ஓரளவுக்கு வசதி வந்தவுடன் கொஞ்சம் பணத்தை சேமித்து ஊரில் போய் செட்டிலாகி விடவேண்டுமென்ற எனது கனவு எப்போது பலிக்குமோ? என்று ஏங்கி தவித்த எனக்கு எனது அதிர்ஷ்டக்கார மனைவியின் மூலமே அதுவும் பலித்தது.
படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தேன். உள்ளூரில் எத்தனையோ இடங்களில் வேலைக்கு அழைப்பு வந்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனது.
காரணம் உள்ளூரில் சம்பாதித்து எப்போது நம் கனவுகளை நனவாக்குவது?வேலை பார்த்தால் வெளிநாட்டில் தான் என்பதில் தீர்க்கமாய் இருந்தேன்.
எனக்கு வயதும் 26 ஆகிவிட்டது. திருமணம் முடிக்கும் வயது என்ற போதிலும் வேலை வெட்டி இல்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?
என் வயது சக நண்பர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடித்து அதில் சிலர் உள்ளூரிலும் சிலர் வெளிநாடுகளிலும் வேலை நிமித்தமாக செட்டிலாகி விட்டனர்.
இந்நிலையில் தான் ஒரு நாள் அந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் எனது வீட்டு வாசல் கதவை தட்டியது.
கதவை திறந்து பார்த்த எனது அம்மா வா தம்பி, எப்படி இருக்கே? எப்போ வந்தே? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா? என்று குசலம் விசாரித்ததை வைத்து எனது தாய்மாமன் தான் வந்திருக்கார் என்று புரிந்து கொண்டேன்.
எனது அம்மாவுக்கு ஒரு தங்கையும் ஒரே தம்பியும் தான் உடன்பிறந்தவர்கள்.என் அம்மாவின் ஒரே தம்பியான எனது தாய்மாமன் 21 வயதிலேயே அரபு நாட்டுக்கு சென்று கை நிறைய சம்பாதித்து எனது அம்மாவுக்கும் சித்திக்கும் நல்ல படியா கல்யாணம் செய்து கொடுத்தார் என்பதை அவ்வப்போது சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார் எனது தாத்தா.
எனது மாமனோ லட்சம்,லட்சமாய் சம்பாதித்து அந்த வருமானத்தில் சென்னையில் ஒரு பெரிய வீடு வாங்கி அங்கேயே செட்டிலாகி விட்டார்.வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்தால் எனது அம்மாவை வந்து பார்க்காமல் இருக்க மாட்டார்.
இன்றும் அதே போலத்தான் வந்துள்ளார். வந்தவரை மரியாதை நிமித்தமாக நானும் வரவேற்று அருகில் அமர்ந்தேன். என் படிப்பு பற்றி விசாரித்த அவர் என்ன வேலை செய்கிறாய் என்றதும் தலையை கீழே தொங்க விட்டு அமைதி காத்தேன்.
எனது அம்மா முந்திக்கொண்டு, வேலை பார்த்தால் மாமனை போல வெளிநாட்டில் தான் என்று பிடிவாதமாய் இருக்கிறான் உனது மருமகன். நீ தான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லனும் என்றார் அம்மா.
இவன் வயதுடைய பிள்ளைகளெல்லாம் திருமணமும் முடித்து குழந்தையும் பெற்று விட்டனர். இவன் மட்டும் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறான். இவனை நினைத்து கவலை பட்டே எனக்கு வியாதியும் வந்து விட்டது என்று நீண்டதொரு பெருமூச்சுடன் மூக்கை சிந்தினார் என் அம்மா.
எனது அம்மாவின் முறைப்பாடுகளை கவனமுடன் உள்வாங்கி கொண்ட என் மாமா சரி விடுக்கா, அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு என்று ஆறுதல் சொன்னவர், திடீரென்று ஏன்க்கா பேசாம நம்ம இளவரசிக்கு உன்மகனை கட்டி வைத்தால் என்ன? என்றதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
இளவரசி என்பது எனது தாய்மாமனின் மூன்றாவது பெண். என்னை விட 2 வயது இளமை என்ற போதிலும் என்னை போல அவளும் நன்கு படித்தவள் தான்.
வேலை இல்லாதவனுக்கு ஒம்பொண்ணை கட்டி வச்சு ரெண்டு பேருக்கும் சோறு போட போறியானு என் அம்மா மாமாவை பார்த்து கேட்டதும் எனக்கு பெரும் அவமானமாய் இருந்தது.
உடனே குறுக்கிட்ட என் மாமன் என்னக்கா இப்படி சொல்லிப்புட்டே? கல்யாணம் முடிந்ததும் மாப்பிள்ளைக்கு ஒரு விசிட் விசா ரெடி பண்ணி எனக்கு தெரிந்த ஒரு நண்பர் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்த்து விடுகிறேன் கவலையை விடுக்கா என்று சொன்னதும் தான் என் அம்மாவுக்கு முகத்தில் சந்தோஷம் வந்தது.
சரி தம்பி நீ உன் விருப்பம் போல் செய் என்று சொன்ன அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தார்.நானும் சம்மதம் தெரிவிப்பது போல் இருக்கவே அனைவரும் அடுத்தடுத்த சந்தோஷத்திற்கு தாவினோம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி எனது திருமணம் நடந்தேறியது.திருமணம் முடிந்த 35வது நாளிலேயே எனக்கு விசாவும் வந்தது.”இல்லற வாழ்க்கையின் இனிமையை விட வெளிநாட்டு வாழ்க்கையின் மகிமையே எனக்கு பெருசாக தோன்றியது”.
இளம் மனைவி புது தம்பதி என்ற பெரியவர்களின் பழங்காலத்து சம்பிரதாய அறிவுரைகளை கூட உள்வாங்கும் நிலையில் நான் இல்லை என்பதை புரிந்து கொண்ட என் அம்மாவும் அமைதி காத்து உன் விருப்பப்படியே நல்லபடியா போய்ட்டு வா என்று வழி அனுப்பி வைத்தார்.
அம்மாவிடமும், இளம் மனைவியிடமும் விடை பெற்றுக்கொண்ட நான் என் வாழ்நாளின் லட்சியக்கனவான அரபு நாட்டில் முதன் முதலாக கால் பதித்தேன்.
டாம்பீகமான அந்த ஆடம்பர விமான நிலையம் கண்டு அதிசயித்து போனேன்.சவூதி விமான நிலையமே இப்படி என்றால்ஸ.ஊர் ஒரு சொர்க்கலோகமாய் இருக்குமோ? என்று அதீத கற்பனையில் மூழ்கி இலக்கை தொடுவதற்குள் இமிகிரேசன் பணிகளுக்கான அசைவுகள் என்னை நிஜத்திற்கு கொண்டு வந்தது.
எல்லாம் நல்லபடியா முடிந்து என் மாமாவின் நண்பர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டேன்.
என் மாமாவின் செல்போன் மூலம் எனது மனைவியிடம் விபரம் கூறி நான் ஆசைப்பட்டது போலவே வெளிநாட்டுக்கும் வந்து வேலையிலும் சேர்ந்து விட்டேன்.
இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது மனைவி குறுக்கிட்டு உங்களுக்கு இன்னொரு சந்தோஷமும் இருக்குங்க என்றாள்.
என்னவென்றேன்?நீங்க அப்பாவாக போறீங்க என்றாள்.அப்படியா ரொம்ப சந்தோஷம்.உடம்பை நல்லபடியா பார்த்துக்கொள் என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டேன்.
இடையில் காலங்கள் வெகு வேகமாக உருண்டோடி விட்டன. எனக்கு முதல் குழந்தையும் முடிவான குழந்தையுமாய் ரஞ்சனி பிறந்தாள்.அவள் பிறந்து இரண்டு வயதாக இருக்கும் போது ஒரு முறை விடுப்பில் சென்று குழந்தையை பார்த்து விட்டு வந்தேன்.
பெண் குழந்தையாகி விட்டதே….அதற்கும் ஏதாவது சொத்து சேர்க்க வேண்டுமே என்ற எண்ணங்கள் மேலோங்கிட அரபு நாட்டு ரியால் மீதான எனது மோகமும் மேலோங்கியது.
அதன் விளைவு 25 ஆண்டுகள் கழித்து இப்போது கேன்சலில் ஊர் வந்து விட்டேன்.இரண்டு வயதில் பார்த்து விட்டு வந்த எனது மகளுக்கு திருமணமும் முடித்து கொடுத்து எனது மகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளுமாகி விட்டது.
எனக்கு பிறந்த மகளை மடியில் போட்டு கொஞ்சி மகிழும் தந்தையாக இருக்க வேண்டிய நான் ரியால்களின் மோகத்தில் அந்த பாக்கியத்தை இழந்து தற்போது எனது பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழும் தாத்தாவாக ஊரில் இருக்கிறேன்.
ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது போல எனது இளமை இல்லற வாழ்க்கையை தொலைத்து, எனது மனைவியின் தாம்பத்திய உரிமையை பறித்து நான் ஆசைப்பட்ட சொந்த வீடு, கார், நகை, பணம் என்று அனைத்தையும் சேர்த்து விட்டேன்.
நரைத்த முடியுடன் இருக்கும் எனது மனைவியின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் என்னை குற்றவாளியாக உணர்கிறேன்.
இல்லற வாழ்க்கையின் அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது. ஆனால் அதற்கான வயதோ? உடல் ஆரோக்கியமோ என்னிடமில்லை. அனைத்தையும் தான் பாழாய் போன ரியால்களுக்காக விலை கொடுத்து விட்டேனே…
வாசகர்களே! இவரது புலம்பலில் அர்த்தம் உள்ளதா?
குறிப்பு: இது ஒரு நண்பரின் உண்மைக்கதை. இது போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமுண்டு. எனது காதுக்கு வந்த சம்பவத்தை மட்டுமே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
source: http://www.thoothuonline.com/archives/72490#sthash.R8f5ddUO.dpuf