இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும்.
பேராசையுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்” என்று கூறினார்கள்.
நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்” என்று கூறினேன். (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி)
மனிதனுக்கு இரு வெட்ட வெளிகள் பொருள் இருந்த போதிலும் அவன் மூன்றாவதைத் தேடத்துவங்கி விடுவான். மனிதனின் வயிற்றில் மண்ணைத்தவிர (வேறு ஒன்றும்) நிரம்பாது. எவர் (பேராசையை விட்டொழித்து) பாவமன்னிப்பு கோருகிறாரோ அவருடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி அவர்கள், ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)” என்றார்கள். (நூல்: புகாரி)
பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘கொலை, கொலை’ என்று பதிலளித்தார்கள்.
‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.