சொற்களில் விஷமத்தனம்!
S.N.R.ஷவ்கத் அலீ மஸ்லஹி
ஒரு மனிதனுக்கு மானம் எப்படி மிக முக்கியமோ அவ்வாறே அவன் வாழும் சமூகத்துக்குச் சொந்தமான மனிதம் முக்கியம். இதையே “ஈவு இரக்கம்” என்றும் சொல்வர். இதுவே அரபியில் “ரஹ்மத், ரஹ்மானிய்யத், ரஹீமிய்யத்” என்றும் அழைக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் தொட்டதெற்கெல்லாம் சொல்லிக் கொள்ளும் “பிஸ்மில்லாஹ்”வில் அந்த ரஹ்மத்தெனும் ஈவு இரக்கம் தானே அடிப்படிக் கூறாக இருக்கிறது.
சொல்லில் மட்டும் பிஸ்மி. செயலில்? யோசிக்க வேண்டிய ஒன்று. “மண்ணில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், விண்ணில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்” என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணைமொழி எவ்வளவு அர்த்தபுஷ்டி மிக்கது, ஆழம் மிக்கது. அதைப் படித்துப் பார்க்க மட்டும் தானா என்ன! அவற்றின் ஆழ அகலங்களை செவ்வனே செயல்படுத்திப் பார்ப்பது எப்போது?
முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் இவர்களைத் தான் “விஷமிகள்” என்கிறோம்.
விஷப் பூச்சிகளின் கடியை விட விஷப் பேச்சிகளின் கடி விஷமானவையல்ல, விஷமத்தனமானவை. விஷத்தை ஏதோ ஒரு மருந்தின் மூலம் முறித்துப் போட்டுவிடலாம். ஆனால் விஷமிகளின் விஷமத்தனத்தை எந்த ஒரு மருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் முறித்துப் போட்டுவிட முடியாது.
“அல் ஃபித்னத்து அஷத்தும் மினல் கத்ல்” (அல்குர்ஆன் 2:191), “அல் ஃபித்னத்து அகபரும் மினல் கத்ல்” (அல்குர்ஆன் 2:217) என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக “கொலையை விடக் கொடியது விஷமத்தனம்” என்று அடித்துச் சொல்கிறது அருள்மறை குர்ஆன்.
இன்றைக்கு குடும்பங்களிலும், மஹல்லாக்களிலும் அப்படி ஒரு சில விஷமிகள் கருப்பாடுகளாய் வெண்ரோமங்களில் “செல்ரோமிங்” செய்திகளை செவ்வனே செம்மையாய் சிம்மிலும் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!
தீன் விஷயங்களை விதைக்க வேண்டியவர்கள் வீண் விஷயங்களை விதைத்து விட்டுச் செல்வது ஏன்? ஃபேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் “ஒங்க புள்ளய நேத்து ‘பீச்’ பக்கம் பார்த்தேனே…” என்ற ஒற்றை ஒற்றை விஷமச் சொல் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறது?”
“சில சொல் வெல்லும், சில சொல் கொல்லும்” என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் அன்று.
நமக்கென்று வரும்போதுதான் ஒரு பிரச்சினையின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே நாம் விஷமச் சொற்களில் வெகு கவனமாக இருக்க வேண்டும். “பேசுவது வெள்ளியைப் போன்றது என்றால் கவனமாக இருப்பது தங்கத்தைப் போன்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உவமையாய் அன்று சொன்னது இன்றைக்கும், இனி என்றைக்கும் திரும்பத் திரும்ப யோசிக்க வேண்டிய ஒரு பொன்மொழி என்பதை மறந்திட வேண்டாம்.
“மெய்யுடன் பொய்யை கலக்காதீர்” என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுவதன் காரணமும் இதுதான். விளையாட்டு வினையாகும் என்பார்கள். அது போல ஒரு விளையாட்டுச் சொல் இன்னொரு எதிர்வினையை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதில் என்றைக்கும் நாம் வெகு எச்சரிக்கை விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
“தேனில் விஷத்தை கலப்பது போன்றது தான் மெய்யில் பொய்யை கலப்பது என்பது” என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உவமைப் படுத்திச் சொல்லியிருப்பது பொய்யின் உண்மையை பெய்ப்படுத்திக் காட்டுகிறது.
உயிர் நரம்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்போதுதான் தெரியும், “விஷம் கூட இனிக்கும்” என்று. அதனால் தான் விஷமிகளைக் குர்ஆன் “கொலையாளிகளை விட கொடூரக்காரர்கள்” என்று வர்ணிக்கிறது. உண்மையும் அதுதான்.
நன்றி: முஸ்லிம் முரசு, ஏப்ரல், 2015