MUST READ
இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள்
மௌலானா சையத் அபுல்அஃலா மௌதூதி (ரஹ்)
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ இஸ்கந்திரியா நகரைச் சேர்ந்த ஸயீத் இப்து ஹஸன் என்கின்ற யூதர் எழுதுகிறார். ‘முஸ்லீம்களுடைய இபாதத்தைப் பார்த்ததினால் தான் நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை (ஜாமிஆ) பெரிய பள்ளிவாசலில் முஸ்லீம்கள் தொழுவதைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அங்கே நிகழ்த்தப்பட்ட குத்பா உரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்து விட்டது. அதனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து போய் விட்டன. உரையாற்றுகின்ற ஃகதீப் இந்த இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
‘நீதியைக் கடைபிடிக்குமாறும், பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும், உற்றார்களுக்கு ஈயுமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். ஆபாசமான தடுக்கப்பட்ட காரியங்களை விட்டும் வரம்பு மீறுவதை விட்டும். அல்லாஹ் தடுக்கிறான்.’ (அல்குர்ஆன் 16-90)
இந்த வசனத்தை கேட்டதுமே என்னுடைய உள்ளத்தில் எவ்வளவு அற்புதமான போதனையை கொண்டுள்ள சமயம் கண்டிப்பாக உயர்வானது தான் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது!
பிறகு அவர்கள் தொழுகும் முறையையும் நான் கவனித்துப் பார்த்தேன். அணி, அணியாக வரிசை வரிசையாக முஸ்லீம்கள் நின்று கொண்டிருந்தார்கள். வானவர்களைப் போல எனக்கு அவர்கள் காட்சி அளித்தார்கள். இறைவனே அவர்களுக்கு முன்னால் தரிசனம் தருவதைப் போல எனக்குத் தோன்றியது.
இஸ்ரவேலர்களோடு கடவுள் இரண்டு முறை உரையாடி இருக்கின்றார் என்றால் இந்த முஸ்லீம்களோடு அவர் தினசரி ஐந்து முறை உரையாற்றுகின்றார் என்று நான் நினைக்கலானேன்!’
‘முஸ்லீம்களுடைய இந்த வழிபாட்டைப் பார்த்த பிறகு எந்த மனிதனாலும் மௌனமாக இருக்க முடியாது. அதனால் அவன் ஈர்க்கப்பட்டே தீருவான்.]
இஸ்லாமியப் பரவலுக்கான காரணங்கள்
மௌலானா சையத் அபுல்அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
வரலாற்று சம்பவங்களை முன்வைத்துப் பார்க்கும் போது மூன்று விஷயங்கள் இஸ்லாமியப் பரவலுக்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.
1. எளிமையான கோட்பாடுகள்; ஈர்க்கவல்ல இபாதத்துகள்.
2. முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வியப்படைய வைக்கும் மாற்றங்கள்
3. முஸ்லிம்களிடம் காணப்பட்ட அழைப்பு ஆர்வம்.
முதலாவது விஷயம் அறிவைத் தூண்டுகின்றது.
இரண்டாவது விஷயம் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றது.
மூன்றாவது, அன்பு கனிந்த வழிகாட்டியைப் போல, வழி தவறிச் சென்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றது.
சந்தையில் ஒரு பொருளை விற்க வேண்டுமென்றால் அந்தப் பொருள் பயனுள்ள பொருளாக, பல சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தால் மட்டும் போதாது. அதை விற்பனை செய்யக் கூடிய நபர்களும் தேவை. அந்தப் பொருளின் பயன்களை மக்களிடம் தெளிவாக விளக்கி அவர்கள் கூற வேண்டும். அதே போல அந்தப் பொருளை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தியவர்களின் பரிந்துரையும் தேவை.
இந்தப் பொருள் சிறப்பானது தான் என்று அவர்கள் சாட்சி அளிக்க வேண்டும். அதே போலத்தான் இந்த உலகில் இஸ்லாம் பரவ வேண்டும் என்றால் மேற்கண்ட மூன்று அம்சங்களும், சரிசமமான அளவில் பங்கு வகிக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று குறைந்து போய்விட்டாலும் கூட இந்த உலகில் இஸ்லாமியப் பரவல் தடைபட்டு விடும். இஸ்லாத்தின் பரவும் வேகம் குன்றி விடும். இந்த மூன்று அம்சங்களும் எப்படி செயல்படுகின்றன? இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன? என்பனவற்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்!
இயற்கையான, வெகு எளிமையான இஸ்லாமியக் கோட்பாடுகள்:
ஒரு சாதாரண பாமர மனிதனின் அறிவும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு, இஸ்லாமியக் கோட்பாடுகள் மிகவும் எளிமையானதாகவும், மனதை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சிக்கலான தத்துவங்கள் அவற்றில் காணப்படுவது இல்லை. அனுமானங்கள், யூகங்களுக்கு அங்கு வேலையில்லை. தொலைதூரப் பார்வையினால் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள், அங்கே காணப்படுவதில்லை. எடுத்தவுடனேயே அறிவு ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகவும் தெளிவானதாகவும், எளிமையானதாகவும் அவை இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு மனிதனுக்குள், ஆச்சரியப்படத்தக்க, புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டு விடுகின்றது. எந்தளவுக்கு அவை எளிமையானதாகவும் அதே சமயம் திடமானதாகவும் இருக்கின்றன என்றால், எத்தகைய அனுமானங்களுக்கும் அங்கே தேவையே இல்லை. இறைவனைப் பற்றி மிக மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
‘உங்களுடைய இறைவன் ஒரே இறைவனே ஆவான்’ (இரண்டு கடவுளர்கள் என்ற நினைப்பிற்கே இடமில்லை) (அல்குர்ஆன் 21-108)
‘இரண்டு கடவுளர்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்’ (அல்குர்ஆன் 16-51)
அது மட்டுமல்ல எந்த ஒரு உதவியாளரும் தேவையில்லை ஏனென்றால் –
‘அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவனாக இருக்கின்றான்; அவன் நாடுவதையெல்லாம் செய்யக் கூடியவன்’ (அல்குர்ஆன் 14-27)
‘தான் எதையெல்லாம் நாடுகின்றானோ அதை அவன் கட்டளையிடுகிறான்.’ (அல்குர்ஆன் 5-1)
‘அவனை யாரும் பெறவுமில்லை. யாரையும் அவன் பெறவில்லை. அவனுக்கு இணையாக யாரொருவரும் இல்லை.’ (அல்குர்ஆன் 112-3-5)
மனிதனிடம் காணப்படுகின்றதைப் போல எந்த வித குறைபாடுகளோ மனிதனுடைய பலவீன அம்சங்களோ அவனிடம் காணப்படுவது இல்லை.
‘என்றென்றும் நிரந்தரமாக இருக்கக் கூடியவன், தூக்கமோ, சிறு துயிலோ, அவனை அணுகுவது இல்லை.’ (அல்குர்ஆன் 2-255)
வானத்திலும் சரி, வையகத்திலும் சரி அவனைத் தவிர வேறு ஒருவரிடத்தில் மனிதன் உதவி கோரும் அளவிற்கு வேறு எவனும் தகுதி படைத்தவராக இல்லை.
‘வானங்கள், பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உரியது என்பது உனக்குத் தெரியவில்லையா? அல்லாஹ்வை விட்டு விட்டால் உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள், உங்களுக்கு ஆணை நிற்கக் கூடியவர்கள் யார் இருக்கின்றார்கள்?’
வணங்கி, வழிபடுவதற்குரிய தகுதி அவனிடம் மட்டுமே காணப்படுகின்றது.
‘வழிபடுவதை அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தாக்கியவராக அவனை மட்டும் வணங்கி வருவீராக!’ (அல்குர்ஆன் 39-2)
இறைத்தூதுத்துவம் என்கின்ற கோட்பாட்டைப் பற்றியும் மிகத் தெளிவான விதிமுறைகளை இஸ்லாம் கொண்டுள்ளது. இறைத் தூதர் என்பவரும் ஒரு மனிதரே ஆவார்.
தனது அடியாரிடத்தில் தன்னுடைய செய்தியை சமர்ப்பிப்பதந்காக அவரை இறைவன் அனுப்பி வைத்துள்ளான். ஆகையால் மனிதத் தன்மைகளை விட உயர்ந்தவராகவோ, இறை தன்மையைக் கொண்டவராகவோ அவரைக் கருதக் கூடாது.
‘உங்களைப் போன்றே நானும் ஒரு மனிதனாவேன்’ இறைச் செய்தி (வஹீ) என் மீது அருளப்படுகின்றது’ (அல்குர்ஆன் 12-110)
‘ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைவன் வழிகாட்டியை அனுப்பி வைக்கிறான்.’ (அல்குர்ஆன் 13-7)
நாம் செய்கின்ற செயல்களைப் பற்றியும் அதன் விளைவாக ஏற்படுகின்ற பயன்களைப் பற்றியும் மிகத் தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமல்களுக்கு மாற்றோ, ஈடோ கிடையவே கிடையாது.
‘ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களுக்குத் தானே பொறுப்பாவான். எவன் ஒருவன் கடுகளவு நன்மையை செய்திருந்தாலும் அதைக் கண்டு கொள்வான். கடுகளவு தீமையான காரியத்தை செய்திருந்தாலும் அதை அவன் கண்டு கொள்வான்.’ (அல்குர்ஆன் : ஜில் ஜால் – அத்தியாயம்)
‘மஆத்’ எனப்படுகின்ற ஆஃகிரத் எனப்படுகின்ற மறுமைக் கோட்பாடும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சமயத்திலும் காணப்படாத அளவிற்கு தெளிவானதாகவும் இருக்கின்றது. புத்த மதத்தில் காணப்படுவதும் வெற்றிக்கான தத்துவம் என்பதைப் போல அறிவு ஏற்றுக் கொள்ளாத வகையிலோ, வேத தர்மத்தில் காணப்படுகின்ற சிக்கலான மறுபிறவிக் கொள்ளையைப் போன்றோ, ஊழ்வினைக் கோட்பாடு போன்றோ இது இல்லை. கடவுள் மறுப்புக் கொள்கையினர் வாதிடுவது போல உலகத்தோடு எல்லாம் முடிவடைந்து விடும் என்பதைப் போன்றும் இது இல்லை.
இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாடு வெகு தெளிவானது. இந்த உலகத்தில் மனிதன் எத்தகைய செயல்களையெல்லாம் செய்கின்றானோ மரணத்திற்குப் பிறகு வருகின்ற மறுமை வாழ்க்கையில் அவற்றிற்கான விளைவுகளை அவன் அனுபவிப்பான். மரணத்திற்கு பிறகு வருகின்ற வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை ஆகும்! மனித அறிவு நிறைவாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவானதாகவும், எளிமையானதாகவும் இந்தக் கோட்பாடுகள் காணப்படுகின்றன. சிக்கலான விஷயங்கள் எதுவும் இல்லை. மனித அறிவு ஏற்றுக் கொள்ள தயங்குகின்ற விஷயங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே இஸ்லாமியப் பிரச்சாரங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டி வந்திருக்கிறார்கள்.
புகழ்பெற்ற பிரெஞ்ச் அறி’ர் பேராசியர் மான்ட்ரேட் இந்த கொள்கையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ‘இந்த அளவிற்கு தெளிவான, தத்துவச் சிக்கல்கள் எதுவும் இல்லாத, சாதாரண மனிதனும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோட்பாடுகள் கண்டிப்பாக மனித மனங்களை கொள்ளை கொண்டு விடும்!’ உண்மையும் அது தான்! இந்த கோட்பாட்டுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கின்றது. எளிமையான இந்த கோட்பாடுகள் மனித அறிவை எந்த அளவிற்கு கொள்ளை கொண்டு விடுகின்றன என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் நாம் அறியலாம்.
ஆப்பிரிக்காவின் காலா இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் சிறு வயதிலேயே அடிமையாக்கப்பட்டு, ஜித்தாவில் விற்கப்பட்டிருந்தாள். ஓர் ஐரோப்பிய மாலுமி அவனை ஒரு முறை சந்தித்தார். ‘சிறு வயதிலேயே உன்னை அநியாயமாக பிடித்து அடிமையாகி விற்று விட்ட அந்த மனிதர்கள் மீது உனக்கு கோபம் வரவில்லையா? மனிதர்களை மிருகங்களைப் போல விற்று வருகின்றார்களே!’ என்று அவனிடம் அவர் கேட்டார். அதற்கு அவன் பதில் கூறினான் – ‘அதை பற்றி யோசிக்கும் போது என்னுடைய உள்ளத்தில் வருத்தம் மேலோங்குகிறது. இருந்த போதிலும், ஒரு விஷயத்தை எண்ணி நான் மனதைத் தேற்றிக் கொள்கிறேன். நான் அடிமையாக இங்கு விற்கப்பட்டதினால் தானே குஃபர் என்ற அறியாமையிலிருந்து என்னால் வெளி வர முடிந்தது. இறைவன், என் மீது செய்த கிருபையாக நான் இதை நினைக்கிறேன் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டேன். இஸ்லாமை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஈமானிய சந்தோஷத்தை விட வேறு எதுவும் உயர்ந்த சந்தோஷம் கிடையாது. எந்த அளவிற்கு ஈமான் சுவையானது என்றால் மனதால் மட்டுமே அதை உணர முடியும் வார்த்தைகளால் அதை என்னால் விளக்க முடியாது!’
மனதை ஈர்க்கின்ற இஸ்லாமிய வழிபாடுகள்
இதே நிலை தான் இஸ்லாமிய வழிபாடுகளிலும் காணப்படுகின்றது. மனதை ஈர்க்கின்ற அம்சம், கவர்ந்திழுக்கின்ற தன்மையை இஸ்லாமிய வழிபாடுகளில் நாம் பார்க்கலாம். இஸ்கந்திரியா நகரைச் சேர்ந்த ஸயீத் இப்து ஹஸன் என்கின்ற யூதர் எழுதுகிறார். ‘முஸ்லீம்களுடைய இபாதத்தைப் பார்த்ததினால் தான் நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை (ஜாமிஆ) பெரிய பள்ளிவாசலில் முஸ்லீம்கள் தொழுவதைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே நிகழ்த்தப்பட்ட குத்பா உரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்து விட்டது. அதனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து போய் விட்டன. உரையாற்றுகின்ற ஃகதீப் இந்த இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
‘நீதியைக் கடைபிடிக்குமாறும், பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும், உற்றார்களுக்கு ஈயுமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். ஆபாசமான தடுக்கப்பட்ட காரியங்களை விட்டும் வரம்பு மீறுவதை விட்டும். அல்லாஹ் தடுக்கிறான்.’ (அல்குர்ஆன் 16-90)
இந்த வசனத்தை கேட்டதுமே என்னுடைய உள்ளத்தில் எவ்வளவு அற்புதமான போதனையை கொண்டுள்ள சமயம் கண்டிப்பாக உயர்வானது தான் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது! பிறகு அவர்கள் தொழுகும் முறையையும் நான் கவனித்துப் பார்த்தேன். அணி, அணியாக வரிசை வரிசையாக முஸ்லீம்கள் நின்று கொண்டிருந்தார்கள். வானவர்களைப் போல எனக்கு அவர்கள் காட்சி அளித்தார்கள். இறைவனே அவர்களுக்கு முன்னால் தரிசனம் தருவதைப் போல எனக்குத் தோன்றியது.
இஸ்ரவேலர்களோடு கடவுள் இரண்டு முறை உரையாடி இருக்கின்றார் என்றால் இந்த முஸ்லீம்களோடு அவர் தினசரி ஐந்து முறை உரையாற்றுகின்றார் என்று நான் நினைக்கலானேன்!’ எந்த அளவிற்கு மாண்பு மிக்கதொரு தொழுகை திகழ்கின்றது! எந்த புரோகிதரும், பாதிரியாரும் வந்தாக வேண்டிய அவசியமில்லை. ஆலயத்திற்கோ கோவிலுக்கோ, போக வேண்டிய நிபந்தனையில்லை. எந்த ஒரு முஸ்லீமும் தொழுவைப்பவராக இமாமாக மாறி விடலாம். எந்த இடத்தையும் அவன் பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்ளலாம். சமூகத்தில் யாருக்கு எந்த மதிப்பு இருக்கிறதோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல் தொழுகையில், கலந்து கொள்ளலாம், தொழ வைப்பதில் ஈடுபடலாம்.
எந்த அளவிற்கு தொழுகை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக திகழ்கின்றது என்றால் இஸ்லாமைக் கடுமையாக எதிர்த்து வருகின்ற இஸ்லாமிய விரோதிகள், எதிர்ப்பாளர்களும் தொழுகையை பாராட்டி இருக்கின்றார்கள். தொழுகையை புகழ்ந்திருக்கின்றார்கள். கண்களால் பார்க்காத ஓர் இறைவனை வெறுமனே கருத்து உருவகத்தின் மூலம் மனதில் கொண்டு பயபக்தியோடு உள்ளச்சத்தோடு இந்த அளவிற்கு ஈடுபாட்டோடு தொழுகின்ற அம்சம், அமைதியாக, பணிவாக தங்களுடைய ஒவ்வொரு செயல்களிலும் இறையச்சத்தை வெளிப்படுத்துகின்ற இந்த வழிபாட்டைக் கண்ட பிறகு கல்லை விடக் கடுமையான உள்ளங்கள் கூட மென்மையாக இளகி விடுகின்றன.
லெப்ஃராய் பாதிரியாரைப் பற்றி நன்றாக நமக்குத் தெரியும். இந்து மத அறிஞர்களோடு அவர் நிகழ்த்திய வழக்காடு மன்றங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ‘MzNkikN and Church’ என்கின்ற தன்னுடைய நூலில் அவர் எழுதுகிறார். ‘முஸ்லீம்களுடைய இந்த வழிபாட்டைப் பார்த்த பிறகு எந்த மனிதனாலும் மௌனமாக இருக்க முடியாது. அதனால் அவன் ஈர்க்கப்பட்டே தீருவான்.
முஸ்லீம் எங்கிருந்தாலும் சரி, வழியில் ரூபாய் கொண்டிருக்கலாம், ரயில் நிலையத்தில் தங்கியிருக்கலாம். கடைகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கலாம். மைதானத்தில் உலாத்திக் கொண்டிருக்கலாம் பாங்கொலி கேட்ட உடனேயே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ஒரே இறைவனுக்கு முன்னால் தலைகுனிந்து நின்று விடுகின்றான்.
அதிலும் குறிப்பாக டில்லியில் இருக்கின்ற ஜாமிஆ பள்ளிவாசலில் நடைபெறும் பண்டிகை நாள் தொழுகையை ஒரு மனிதன் பார்க்க வேண்டும். ஏறத்தாழ பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அடக்க ஒழுக்கமாக மௌனமாக நின்று கொண்டு ஒவ்வொரு செயல்களிலும் இறையச்சத்தை பயபக்தியை வெளிப்படுத்துகின்ற அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண வேண்டும். அதைப் பார்க்கின்ற எந்த மனிதனும் ஈர்க்கப்படாமல் இருக்க மாட்டான்.
இந்த சமயத்தை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் மறைவான அந்த ஆற்றலின் மீதான மதிப்பச்சம் உள்ளத்திலும் தோன்றிவிடும். அது மட்டும் கிைடயாது, முஸ்லீம்கள் தினந்தோறும் கட்டுக்கோப்பாக ஐவேளைத் தொழுகைகளிலும், குறிப்பிட்ட நேரங்களில் தொழுது நிதானமாகவும், நிம்மதியாகவும் தங்கள் மீதான கடமையை நிறைவேற்றுகின்றார்களே அதுவும் குறிப்பிட்ட ஒரு செய்தியை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
முஸ்லீம்களின் வாழ்க்கையில் வெளிப்படும் இஸ்லாமிய போதனைகள்
கோட்பாடுகள், வழிபாடுகள், இவற்றை அடுத்து செயலளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஓர் அம்சமாக முஸ்லீம்களுடைய இஸ்லாமிய வாழ்க்கை திகழ்கின்றது. இஸ்லாமைப் பரப்புவதில் அனைத்தையும் விட இது தான் வீரியமான விஷயமாகத் திகழ்கின்றது. வெறுமனே தன்னுடைய கோட்பாடுகளை மட்டுமே இஸ்லாம் முன்வைத்திருந்தால் அந்த கோட்பாடுகளை பின்பற்றுவதால் ஏற்படுகின்ற தாக்கங்களை அது நிகழ்த்தாமல் இருந்திருந்தால் குறைவான உள்ளங்கள் தான் அதன் பால் ஈர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக கொள்கைகளை மட்டுமே பிரச்சாரம் பண்ணாமல் செயல் உலகிலும் அது சாதித்துக் காட்டியது. காட்டுமிராண்டிகளாக திகழ்ந்த சமூகங்களை எல்லாம் நாகரீகப் பண்பாட்டில் தலைசிறந்தவர்களாக மாற்றிக் காட்டியது. இந்தப் பண்பு தான் உள்ளங்களை எல்லாம் ஈர்க்கக் கூடியகாந்தப் பண்பாக மாறி விட்டது எனலாம்.
ஓரிறைக் கொள்கை, இறைவன் ஒருவன் தான் என்கின்ற கொள்கை, அவனுடைய ஆற்றல், உதவி தேடுவது என்றால் அவனிடம் மட்டும் தான் தேட வேண்டும் என்கிற நம்பிக்கை முஸ்லீம்களிடம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தன்னம்பிக்கை கொண்டவர்களாக சுய மரியாதை உடையவர்களாக அவர்களை மாற்றி விட்டது. பொறுமைசாலிகளாகவும், நன்றி உடையவர்களாகவும் அவர்கள் மாறி விட்டார்கள். உலகத்தில் யாருக்கும் அவர்கள் பயப்படுவது கிடையாது. யாருக்கு முன்னாலும் கைகட்டிக் கொண்டு கரங்களை ஏந்திக் கொண்டு நிற்பது கிடையாது. எத்தகைய பெரிய, பெரிய, கவலைகள் வந்தாலும், பெரிய பெரிய துன்பங்கள் வந்தாலும் வருத்தம் மேலிட்டு மூலையில் முடங்கி விடுவதும் கிடையாது.
நன்மையோ, தீமையோ நாளை மறுமை நாளில் அதற்கான பிரதிபலனை பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்கின்ற இஸ்லாமியக் கோட்பாடு அவர்களுடைய உள்ளங்களை பெருமளவு மாற்றி விட்டது. அவர்கள் வீரமிக்கவர்களாக தைரியமுடையவர்களாக மாறி விட்டார்கள். தங்களுடைய இந்த உலக வாழ்க்கை அழியக் கூடிய நான்கு நாள் வாழ்க்கை தான் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றார்கள். இறைவனுக்காக எத்தகைய தியாகத்தை செய்யவும், எந்தவொரு பொருளை அர்ப்பணிக்கவும் தயாராகி விடுகின்றார்கள்.
அவர்களுடைய தியாகத்திற்கு இணையாக இந்த உலகத்தில் வேறு எதையுமே நீங்கள் பார்க்க முடியாது. தக்வா இறையச்சம் இறைவனிடத்தில் உயரிடத்தை அடைதல் என்பவற்றைப் பற்றிய இஸ்லாமிய போதனையானது அவர்களிடத்தில் அசாதராரணமான பண்புகளை எல்லாம் தோன்ற வைத்து விட்டது. தக்வாவின் அடிப்படையிலான வாழ்க்கை, உலகப்பற்றற்ற தன்மை அவர்களிடம் தோன்றி விட்டது.
மது, சாராயம், திருட்டு, களவு போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளை விட்டு முஸ்லீம்கள் விலகி இருக்கும் அளவிற்கு மற்ற எந்த சமயத்தினர்களும் விலகி இருப்பது கிடையாது! மனித உரிமைகள், மனித சகோதரத்துவம் இஸ்லாமியச் சகோதரத்துவம் போன்றவற்றைப் பற்றி இஸ்லாம் எந்த அளவிற்கு அவர்களுக்கு கற்பித்திருக்கின்றது என்றால் அவர்களிடையே ஜனநாயக உயிரோட்டம் தோன்றிவிட்டது. அங்கே இனப்பாகுபாடு, மொழி வேறுபாடு, நிற பாகுபாடு போன்றவற்றை காணவே முடியாது. ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாட்டையும் காண முடியாது. இன வெறியோ, மொழி வெறியோ, நிற வெறியோ அங்கே காணப்படாது.
ஒரு மனிதன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஒரு தூணாக அவன் மாறிவிடுகின்றான். அவன் மாறிவிடுகின்றான். அவன் கருப்பனாக இருக்கலாம் அல்லது வெள்ளையனாக இருக்கலாம், பணக்காரனாக இருக்கலாம். பரம ஏழையாக இருக்கலாம், எஜமானனாக இருக்கலாம். அடங்கிப் போகும் வேலைக்காரனாக இருக்கலாம். ஆனால் எல்லா முஸ்லீம்களும் அவனை தங்களுடைய சகோதரனாகவே எண்ணி ஆக வேண்டும். தொழுகை போன்ற வழிபாடுகளில் எல்லா முஸ்லீம்களுக்குப் பக்கத்திலும் சரி சமமாக நிற்கக் கூடிய நிறைவேற்றக் கூடிய உரிமை அவனுக்குக் கிடைத்து விடும்.
இது மட்டும் கிடையாது. இஸ்லாத்தின் மற்ற போதனைகளும் முஸ்லீம்களின் வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகம் என்னதான் காட்டுமிராண்டித் தனமான சமூகமாக அது இருந்தாலும் சரியே இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களிடையே கல்வி, நாகரீகம், கலாச்சரம், பண்பாடு போன்றவை தோன்றி விடுகின்றன.
ஐரோப்பாவைச் சேர்ந்த கிருஸ்துவ பிரச்சாரகர்கள் இந்த நிலைமையைப் பார்த்து வெகுவாக ஆச்சரியப்படுகின்றார்கள். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த படுபயங்கர காட்டுமிராண்டித்தனமான சமூகங்களைக் கூட இஸ்லாமியப் பிரச்சாரம் எந்த அளவிற்கு நாகரீகமுடையவர்களாக பண்பாடுடையவர்களாக மாற்றி விட்டது, என்பதை யோசித்துப் பார்த்து அவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கின்றார்கள்.
இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுகின்றார்கள். மதரஸாக்களை நிறுவுகின்றார்கள். சமூக வாழ்க்கையில் இஸ்லாமிய ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள். வியாபார வணிகங்களில் தீவிரமாக ஈடுபடுகின்றார்கள். பொருளாதாரத் துறைகளில் வெகுவாக முன்னேறி விடுகின்றார்கள். இது போன்ற விஷயங்களை செய்து வந்ததால் இஸ்லாமியப் பிரச்சாரம் ஆப்பிரிக்காவில் தோன்றிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஆப்பிரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான சமூக வாழ்க்கை அடியோடு ஒழிந்து போய் நாகரீக பண்பாடு உள்ள சமூகங்களாக அவர்கள் மாறி விட்டார்கள். ஒரு சமூகம் இவ்வாறு மாறிவிட்டதைப் பார்த்து அவர்களுக்கு அருகில் உள்ள மற்ற சமூக மக்களும் இதே மாறுபாடுகளை தங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த சமயத்தை – அந்த அற்புத மாற்றங்களுக்குக் காரணமாக இருந்த சமயத்தை – உடனடியாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.
வரலாற்றில் புகழ்பெற்ற ஒரு சம்பவத்தை நாம் பார்க்க முடியும். ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் மேற்கு நைஜீரியாவில் காணப்பட்ட வலிமை வாய்ந்த அரசாங்கமான ஜின்னி (Jenne) மாகாணத்தில் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்பரியர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். என்ன ஆனது ஏராளமான அறிஞர்கள் உலமாக்கள் உருவாகி விட்டார்கள். சிறிது காலம் கழித்து அந்த நாட்டின் மன்னர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ஒரு கமிட்டியை ஏற்படுத்தினார்.
அந்த கமிட்டியில் 2400 உலாமாக்கள் பங்கு பெற்றார்கள் என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய பண்பாட்டின் காரணமாகத்தான் அரபுலகம், இந்தியா, எகிப்து மற்றும் ஸ்பெயின் (உந்துதலிஸ்) போன்ற நாடுகளில் வியக்கத்தக்க மாறுபாடுகள் ஏற்பட்டன! அவை அனைத்தையும் நம்மால் இங்கே விளக்க முடியாது. வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துக்களில் அவை பொறிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய சமத்துவத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள்
இஸ்லாமிய வாழ்க்கையில் எடுப்பாக காணப்படுகின்ற ஒரு விஷயம் இஸ்லாமிய சமத்துவம், எந்த எந்த சமூகங்கள் மரபுக்கும், சமூக நெறிமுறைகளுக்கும் ஆட்பட்டு அதிகாரத்திற்கும், வலிமைக்கும் பலியாகி மனிதத்துவம் என்கின்ற பொதுவான தளத்திலிருந்தே வெகு கீழாக ஒடுக்கப்பட்டு வெகு கீழாக இறக்கப்பட்டு அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களாக திகழ்ந்து கொண்டிருந்தார்களோ அவர்களைப் பொறுத்த வரை விண்ணிலிருந்து வந்த கருணை மழையாக இஸ்லாம் விளங்கியது. அவர்கள் வெற்றி பெறுவதற்கான செய்தியை அது தாங்கி வந்தது. இஸ்லாமை தழுவிக் கொண்டதால் ஆயிரக்கணக்கான சமூகங்கள் இழிவு என்கின்ற சேற்றிலிருந்து வெளிவந்து புகழின் உச்சியை மரியாதையின் சிகரத்தை தொட்டு விட்ட சம்பவங்களை நாம் வரலாற்றில் பார்க்கலாம்.
இஸ்லாமை வெகுவாகப் பரவச் செய்ததில் சமத்துவம் என்கின்ற இந்த மாபெரும் அம்சம் தான் பெரும் பங்கினை வகித்தது. அடக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கெல்லாம் அதிகமாக வசித்து வந்தார்களோ அங்கெல்லாம் அதி வேகமாக இஸ்லாம் பரவுவதற்கு இந்த சமத்துவம் மட்டும் தான் காரணமாக அமைந்தது.
சர் வில்லியம் ஹன்டர் (Sir. william hunter) வங்காளத்தில் எப்படி இஸ்லாம் பரவியது, அங்குள்ள அடக்கப்பட்ட மக்களிடம் அது எப்படி செல்வாக்கைப் பெற்றது என்பதைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆதரவற்ற இந்த ஏழை மீனவர்கள், செம்படவர்கள் வேட்டைக்காரர்கள், பாமரத்தனமான விவசாயிகள் போன்றோர் வானிலிருந்து தங்கள் மீது பொழிந்த கருணை மழையாகவே இஸ்லாமைக் கண்டார்கள். ஆட்சியாளர்களின் மதமாக மட்டும் அது திகழவில்லை. மாபெரும் சமத்துவத்தை அது தனக்குள் கொண்டிருந்தது. யார் யாரெல்லாம் இத்தகைய மக்களை இழிவானவர்களாக கருதிக் கொண்டிருந்தார்களோ அவர்களை விடவும் முன்னேறிய மக்களாக இவர்களை அதுவே மாற்றியது. இதன் காரணமாக நாட்டின் வளமான பகுதிகளில் எல்லாம் இஸ்லாம் பரவிவிட்டது.
வற்புறுத்தி இஸ்லாமை ஏற்கச் செய்த சம்பவங்களையும் நாம் வரலாற்றில் பார்க்கலாம். ஆனால், இஸ்லாம் வெகு வேகமாகப் பரவுவதற்கு வலிமை என்றுமே காரணமாக இருந்தது கிடையாது. மாறாக, இஸ்லாத்தின் சிறப்பம்சங்களே அதற்குரிய காரணமாக இருந்தன. வங்காளியர்களின் அறிவை அது தூண்டியது. மனிதத் தன்மை என்றால் என்ன? என்கிற செய்தியை அவர்களுக்கு எடுத்துரைத்தது. இதுவரைக்கும் வங்காளர்கள் அறிந்திராத மனித சகோதரத்துவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அவர்களிடையே காணப்பட்ட இன வேறுபாடுகளை சாதி வேறுபாடுகளை அது முறித்துப் போட்டது. தென்னிந்தியாவில் இஸ்லாம் வெகுவேகமாக பரவுவதற்கும் இதுவே காரணமாக திகழ்ந்தது. கல்வியிலும் பொருளாதாரத்திலும் நிறைவு பெற்றுவிட்ட எத்தனையோ தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதின் காரணமாக குடும்பம் குடும்பங்களாக கிராமம், கிராமங்களாக இஸ்லாமைத் தழுவுகின்ற காட்சியை நாம் பார்க்க முடிகின்றது. பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் தொடர்ந்து நாம் அதை வாசித்து வருகிறோம். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சமூகங்களிலும் இஸ்லாம் வெகுவாகப் பரவுவதற்கு இந்த மனித நேயமும் மனித சமத்துவமும் இஸ்லாமிய சகோதரத்துவமும் தான் முக்கிய காரணங்களாக திகழ்ந்திருக்கின்றன.
ஆச. பிலாய்டன் (chirstianity islam and ngro race) என்கிற தன்னுடைய நூலில் தெளிவாக இதை குறிப்பிட்டிருக்கிறார். ‘ஏதேனும் ஒரு நாகரீகமற்ற ஆப்பிரிக்கனைப் பற்றி அவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றான் என்கின்ற தகவல் முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களுக்கு தெரிந்து விடுமேயானால் உடனே அவர்கள் அவனை அணுகுகின்றார்கள். அவன் என்ன தான் நாகரீகமற்றவனாக, கீழ்த்தரத்து மக்களைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி அவனைத் தம்மோடு அழைத்துச் செல்கிறார்கள். தங்களுக்கு இணையானவனாக அவனைக் கருதுகிறார்கள். தங்களுடைய சகோதரத்துவத்தில் அவனையும் இணைத்துக் கொள்கிறார்கள். அவனுடைய உள்ளத்தை மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்வது கிடையாது. மாறாக, உண்மையிலேயே அவனை தங்களுடைய ஒரு சகோதரனாக நினைத்துத் தான் இத்தகைய பணிவிடைகளை, இத்தகைய பாசத்தை பொழிகின்றார்கள். இஸ்லாத்தின் காரணமாக தனக்குக் கிடைத்த அசாதாரணமான இந்த அருட்கொடைகளை அவன் ஒரு போதும் மறப்பதே கிடையாது!
ஆப்பிரிக்காவில் கிருஸ்துவ மதம் பரவியதை விடவும் வேகமாக, வலிமையாக இஸ்லாம் பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாக இந்தத் தன்மையே அமைந்திருக்கின்றது!’
– சையத் அப்துர் ரஹ்மான் உமரி