1. மரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன?
2. மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா?
3. புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?
கேள்வி 1. : என் அன்புக்கணவரை இழந்து தவிக்கிறேன். என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழக்கமான அமல்களைத் தவிர விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா?
பதில்: கணவன் மனைவிக்கு மத்தியில் மிக நெருக்கமான உறவு இருப்பதால் கணவன் இறந்து விட்டால் மனைவிக்கு மற்றவர்களை விட அதிகமான துக்கமும் கவலையும் ஆட்கொண்டு விடுகிறது என்பது உண்மையே. அதுவும் கணவர் பிரியமுள்ளவராக, வணக்கசாலியாக இருந்து விட்டால் அந்த கவலை இன்னும் அதிகமாகுவது இயற்கையே.
ஹதீஸில் “முஃமினான பெண் மறுமையில் உலகிலுள்ள அவள் கணவரோடு சேர்ந்திருப்பாள்” என்று வருகிறது.
உலகில் (ஒரு கணவர் இறந்துவிட்டதால் வேறு நிகாஹ் செய்து கொள்வது போன்ற காரணத்தால்) ஒன்றிற்கும் மேற்பட்ட கணவன்கள் இருந்தால் மறுமையில் உலகின் கடைசி கணவருடன் அப்பெண் இருப்பாள் என்பதாகவும், வேறு சில உலமாக்கள் ‘அந்தக் கணவன்களில் அப்பெண்ணுக்கு மிகப் பிரியமான கணவனுடன் இருப்பாள்’ என்றும் கூறுகிறார்கள்.
ஒரு வரலாற்று சம்பவம்:
ஹளரத் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விட்டார்கள். (இத்தா காலத்திற்குப் பிறகு) அவரின் மனைவி ஹளரத் உம்மு தர்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்ய தான் விரும்புவதாக ஹளரத் முஆவியா பின் அபூ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.
அதற்கு உம்மு தர்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், “ஒரு முஃமினான பெண் உலகின் கடைசி கணவரோடு சுவர்க்கத்தில் இருப்பாள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக எனக்கு என் கணவர் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்து விட்டு, ‘நீ எனக்குப் பிறகு வேறு யாருடனும் நிகாஹ் செய்யாமலிருந்தால் மறுமையில்லும் எனது மனைவியாக நீ இருப்பாய்” என்று கூறியதாக பதில் கூறி அனுப்பினார்கள்.
எனவே ஹதீஸின் இந்த கருத்துப் படி நீங்கள் வேறு நிகாஹ் செய்யவில்லையென்றால், மேலும் நீங்கள் உலகத்தில் நம்மை சுவர்க்கத்தில் சேர்க்கும் அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக நிறைவேற்றி வந்தால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் உங்களுக்கு நீங்கள் விரும்பும் அதே கணவர் கிடைப்பார்.
source: -மனாருல் ஹுதா ‘மாத இதழ்’ பிப்ரவரி 2015
மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா?
கேள்வி 2. : வாரிசுரிமை மூலமாக தாய் வீட்டிலிருந்து மனைவிக்கு கிடைக்கும் சொத்தை கணவன் விற்கவோ பயன்படுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா?
பதில்: மனைவியின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.
கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம். அது அவளுடைய சொத்தாக ஆகுமே தவிர அதில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
நான் பள்ளிவாசல் இருந்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், ‘நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள்’ என்று கூறினேன்.
அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ என்று கூறி விட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம், ‘நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்’ எனக் கூறினேன். உடனே அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1466)
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆம் என பதிலளித்து அத்துடன் உறவை அரவணைத்ததற்கான நன்மையையும் சேர்த்து இரண்டு மடங்கு கூலிகள் கிடைக்கும் என கூறுகின்றார்கள். இதிலிருந்து மனைவியின் சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை அறியலாம். அவனாக (கணவனாக) மனைவியின் சொத்திலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியும் அவனுக்கு உரிமை உள்ளது என்றால் கணவனுக்கு தர்மம் அளித்தல் என்ற பேச்சுக்கு இடமிருந்திருக்காது.
“சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.” (திருக்குர்ஆன் 4:32)
எனவே மனைவியின் சொத்தை தன் விருப்பப்படி விற்கவோ பயன்படுத்தவோ கணவனுக்கு உரிமை கிடையாது. மனைவியாக விருப்பம் கொண்டு கணவனுக்கு அதை விற்க அல்லது பயன்படுத்த உரிமை அளித்தால் அப்போது அதை பயன்படுத்துவதில் தவறில்லை.
மஹர் எனும் மணக்கொடையை பெண்ணுக்கு அளித்து அதிலிருந்து சிலதை மனமுவந்து மனைவி விட்டுக் கொடுத்தால் அது கணவனுக்கு அனுமதி என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.
“பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்.” (அல்குர்ஆன் 4 :4)
இதிலிருந்து மனைவி தனது சொத்தை பயன்படுத்த கணவனுக்கு அனுமதி அளிக்கும் போது கணவன் அதை பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
source: onlinpj
புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?
கேள்வி 3. : புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.
பதில்: இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது.
7281حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ وَأَثْنَى عَلَيْهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ حَدَّثَنَا أَوْ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا فَاضْرِبُوا لَهُ مَثَلًا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنْ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبْ الدَّاعِيَ لَمْ يَدْخُلْ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنْ الْمَأْدُبَةِ فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا فَالدَّارُ الْجَنَّةُ وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ تَابَعَهُ قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ جَابِرٍ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
(ஒருநாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்கற்டம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ”இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்றார். அதற்கு மற்றொருவர் ”கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்று கூறினார்.
பின்னர் அவர்கள் ”உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ”இவர் உறங்குகிறாரே!” என்றார். மற்றொருவர் ”கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது” என்றார். பின்னர் அவர்கள் ”இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை” என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள், ”இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்” என்றார்கள். அப்போது அவர்கற்ல் ஒருவர் ”இவர் உறங்குகிறாரே!” என்று சொல்ல, மற்றொருவர் ”கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து ”அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்துவிட்டார்; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ் வுக்கு மாறுசெய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்” என்று விளக்கமளித்தார்கள். (புகாரி 7281)
வானவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த உவமையை கூறியதிஇருந்து இந்த உவைமையில் சொல்லப்படும் செய்தி சரியானது என்பதை புரியலாம். புது வீடு கட்டி விருந்து அளிப்பதை வானவர்கள் உவமையாகக் கூறுகின்றனர். இவ்வாறு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் அதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியிருக்கமாட்டார்கள். புதுவீடு கட்டியதற்காக விருந்தளிப்பது சிறந்த செயல் என்பதாலே இதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியுள்ளனர். எனவே புது வீடு கட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.
source: www.onlinepj.com