“என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”
“என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”
நிலையான மறுமையில் குருடனாக எழும் நிலையா…? நினைக்கவே அச்சமாக இருக்கிறதல்லவா…?
இவ்வுலகில் கண்ணுள்ளவர்களும், கண்ணில்லாதவர்களும் கலந்து வாழ்கிறார்கள். அவர்களில் காலமெல்லாம் கண்ணொளி பெற்றவர்கள் அல்லாஹ் படைத்த இவ்வுலகின் அனைத்தையும் கண்டு மகிழ்கிறார்கள்.
வானத்தையும், பூமியையும். இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவைகளையும் பார்த்து மனித இனம் பரவசம் அடைகிறது.
அப்படிப்பட்ட மனிதன் கண்ணொளியை இழப்பானாகில் அது அவனுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை எவரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஆனால் கண்ணொளி பெற்ற மனிதன் அதைப்பற்றி; இறைவன் தனக்கு வழங்கியிருக்கும் அந்த மகத்தான அருட்கொடையைப் பற்றி என்றைக்கேனும், எப்போதேனும் சிந்தித்துப் பார்க்கிறானா…?
இதோ மனிதனை அச்சமூட்டி எச்சரிக்கும் இறைவசனம்!
ஒளியுள்ள நம் கண்கள் அதனை பார்த்து நமது உள்ளத்துக்குள் அது ஊடுருவட்டும்.
“எவன் எனது உபதேசத்தை புறக்கணிக்கின்றானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை இருக்கிறது. மேலும் குருடனாகவே மறுமை நாளில் அவனை நாம் எழுப்புவோம். (குர்ஆன் 20:124)
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்(குர்ஆன் 20:125)
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். (குர்ஆன் 20:126)
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். (குர்ஆன் 20:127)
சொற்ப காலமே வாழக்கூடிய இவ்வுலகில் கண்ணில்லாமல் போனாலே கதிகலங்கும் மனிதன், நிலையான மறுமையில் குருடனாக எழும் சூழலுக்கு தன்னை உள்ளாக்கலாமா?
சிந்திப்போம் சீர்பெறுவோம்
எம்.ஏ.முஹம்மது அலீ