உண்மை உரைத்தீர்கள்!
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்களிடம்) “என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள்.
மக்கள் அவர்களிடம் கேட்கத் தயங்கினர். அப்போது (எங்கிருந்தோ) ஒருவர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழங்காலுடன் ஒட்டி அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்(கட்டுப் படுதல்) என்றால் என்ன?” என்று கேட்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமலிருப்பதும் தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அவர் “உண்மை உரைத்தீர்கள்” என்று கூறினார்.
“அல்லாஹ்வின் தூதரே! ஈமான்(இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனது வேதத்தையும் அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் மறுமையில் மீளெழுப்பப் படுவதை நீங்கள் நம்புவதும் விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அதற்கும் அவர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார்.
“அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில் நீங்கள் அவனைப் பார்க்கா விட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறினார்கள்.
அதற்கும் அவர் “உண்மை உரைத்தீர்கள்” என்று கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று அவர் கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “வினவுபவரைவிட வினவப்படுபவர் அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும் நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்களில் சிலவற்றை அறிவிப்பேன்:
“ஒரு பெண் தன் எஜமானைப் பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
காலில் செருப்பு அணிந்திராத, அரைகுறை ஆடை அணிந்திருந்த (அறிவுச்) செவிடர்களாக, (அகக்கண்) குருடர்களாக வாழ்ந்தவர்களை பூமியின் அரசர்களாய் நீங்கள் காண நேர்ந்தால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
மேலும், ஆடு மேய்த்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வானுயர்ந்த கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும்”
என்று கூறிவிட்டு,
“நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது.
அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே.
நாளைக்குச் சம்பாதிக்கப் போவது என்ன? என்பது எவருக்கும் தெரியாது. மரணிக்கப் போவது எந்த மண்ணில் என்பதையும் எவரும் அறியார்.
திண்ணமாக, அல்லாஹ் (அவற்றை) முற்றாய் அறிந்தவன்; நுண்ணறிவாளன்.” எனும் (31.34ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பிறகு (கேள்வி கேட்க வந்த) அவர் எழுந்து (சென்று) விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால் அவரைக் காண இயலவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர் (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். நீங்கள் என்னிடம் கேட்காத(விளக்கத்)தை (தம் வாயிலாக) நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பி(இங்கு வந்து போ)னார். என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
“இறைத்தூதர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை.
உடனே அவர், “(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார்.
உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, “மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, “அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?” என்று கேட்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, “நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?” என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்.
உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.
பிறகு, “இறைத்தூதர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.
பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். “அவர்கள் “தூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த நிகழ்ச்சியின் போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப் (பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெரிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?’ என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (நூல் : புகாரி 3414)