கனியிருப்பக் காய் கவர்தல்!
புலவர் செ.ஜஃபர் அலி, பி.லிட்.,
“(நபியே! எனக்கு வழிப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீர் கூறும்: அவர்கள் (எம்மனிதருடன் பேசியபோதிலும் எது நல்லதோ அதையே கூறவும். உறுதியாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படிச் செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்) உறுதியாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான். (ஆகவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்) (அல்குர்ஆன்:17:53)
இனிய சொற்களால் உரையாடுக! அது மனிதப் பண்பாட்டை உயர்த்திக் காட்டும்; கடுஞ்சொல் கூறுவதால் ஏற்படுவது தீமையே! எல்லாருக்கும் தெரிந்த உண்மையே இது!
இறைநேசச் செல்வர் என்று மக்களால் நம்பப்படும் சிலருடைய வாயிலிருந்து வெளி வருவதெல்லாம் கெட்ட வார்த்தைகளாகவே இருக்கின்றன. தன்னை நோக்கி வருபவர்களைப் பார்த்து நாக்கூசாமல் இழிந்த சொற்களால் திட்டித் தீர்க்கும் இவர்களைப் பார்த்து என்ன சொல்வது?
சாராணமாக, மனித சமுதாயத்துக்கு மகுடமிடுவது இனிய சொற்களே! உரையாடிக்கொண்டிருக்கும்போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி வீணே கோபப்படுவது மனித சமுதாயத்தை மாசற்ற சமுதாயமாக மாற்றிவிடும். ஒருவரைப் பற்றி கூறும்போது, அவருடைய நற்பண்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, தீய பண்புகளை மறைக்க முற்படவேண்டும்!
பிறருடைய பண்புகளைப் பாராட்டுபவருடைய பண்புகளும் பாராட்டப்படுவதற்கு தகுதியுடையன!
எல்லாம் வல்ல அல்லாஹ் மிகத்தெளிவாகவே அருள்மறையில் குறிப்பிடுகின்றான்; “(நிராகரிப்போரின் குப்ரு, ஷிர்க்கான) கெட்ட வார்த்தைக்கு உதாரணம்: பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப்போன ஒரு) கெட்ட மரத்துக்கு ஒப்பாகும்: அது நிலைத்திருக்காது. (அல்குர்ஆன் 14:26)
நாம் மனிதர்களில் பலரைப் பார்க்கலாம்; அவர்கள் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் யாவும், தத்துவமுத்துக்கள் என்னும் எண்ணத்தில்-கெட்ட வார்த்தைகளாகவே சர்வசாதாரணமாக வெளிவந்து கொண்டிருக்கும். கெட்ட வார்த்தைகளைப் பேசுவது தங்களுக்குரிய அதிகபட்சமான தகுதியாகவே சிலர் எண்ணி, பெருமைப்பட்டுக் கொள்வோரும் உண்டு. கேவலம்! அந்தோ கைசேதம்!
பகிரங்கமான விரோதி ஷைத்தான், அவர்களுடனேயே இருந்து வருகின்றான் என்பது அவர்களுக்கே தெரியாது போலும்! வேடிக்கைக்காகவும், விளையாட்டுக்காகவும் நண்பர்களுக்காகவும் கெட்ட வார்த்தைகள் பேசிக்கொள்வோரும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர் களுக்கு சமுதாயத்தில் எப்படி மதிப்பு இருக்கும்?
மூன்று-நான்கு வயது அடைந்த சின்னஞ் சிறுவர்கள்-சிறுமியர்கள் கூட சில குடும்பங்களில் சர்வசாதாரணமாக, கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்! காரணம் என்ன? வளர்ப்பவர்களும்-சூழ்நிலைகளும் அரிச்சுவடி பாடமாக, கெட்ட மொழிகளையே கற்பித்துக் கொடுத்துள்ளனர்.
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும், தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்: தவிர அல்லாஹ்(எவரிடத்திலும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன் (2:263)
“இனிய உளவாக இன்னாத கூறல்” “கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”-என்பது குறள். அழகிய இனிய மொழிகள் உன்ளபோது, தீய வார்த்தைக் கூறுவதானது.மரத்தில் பழங்கள் கனிந்து குலுங்கும்போது, காயைத் தேடி பறிப்பது போலாகுமன்றோ? நாம் ஒருவரைப் பார்க்கும்போது, “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!”
சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் என்னும் பொருள்தரும். “அஸ்ஸலாமு அலைக்கும் வாஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு” என்று கூறும்போது கேட்பவருக்கு எத்துணை இதமாக இருக்கும்? சொல்லும் நமக்கும் எத்துணை இனிமையாக இருக்கும்?
சிந்தித்துப் பாருங்கள்! இன்று வரை, நாம் அறிந்தோ.. அறியாமலோ கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம்! அல்லாஹ்வின் கட்டளை நமக்குத் தெளிவாகத் தெரிந்த பின்பும், நாம், பழக்கத்தின் காரணமாக, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது அல்ல என்பதை நாம் அறிவோம்.
இனிய மொழிகளால் உரையாடி-நல்லன கூறி, மனிதப் பண்பாளர்களாக வாழ்வாங்கு வாழ்வோமாக! எல்லாம் வல்ல ரஹ்மானும் அருள்புரிவானாக.