இன்றைய இளைஞர்களின் நிலை
[“மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு இளமைப் பருவம்!” கட்டுரையின் தொடர்ச்சி]
இன்று எமது இளைஞர் யுவதிகளை சிந்தனா ரீதியான படையெடுப்பு ஆட்டிப்படைத்து வருகிறது. மதசார்பற்ற, சடவாத, தாராண்மைவாத சிந்தனைகளால் தாக்கமடைந்து அதில் அள்ளுண்டு செல்கின்றார்கள்.
இன்றைய எமது இளைஞர்களிடம் உயர்ந்த இலட்சியங்கள் குறிக்கோள்கள் இல்லை. அற்ப ஆசைகளுக்குப் பின்னால் போட்டி போட்டுப் பயணிக்கின்றார்கள். தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இணையதளமும் சமூக ஊடகங்களும் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் பெரும் சமூகச் சீர்கேட்டை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நாடகத் தொடர்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் யுவதிகளின் நிலை பரிதாபகரமானது. விரசமும் ஆபாசமும் தலை விரித்தாடும் இணையதளங்களுக்குள் சிக்கி அவற்றுக்கு அடிமைப்பட்டிருக் கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய இளம் ஸஹாபாக்களை முன்னுதாரணங்களாக ஏற்றுப் பின்பற்றுகின்ற ஓர் இளைஞர் சமூகத்தைப் பார்க்க முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
எமது அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து மிகத் தீவிரமாக சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். எமது இளைஞர்களும் யுவதிகளும் கையில் சுமந்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகள், ஐ-ஃபோன்கள் மற்றும் இணையதளங்களுக்கூடாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இணையதளங்களைப் பார்வையிடுபவாகளில் 60 வீதமானோர் ஆபாசமான விரசமான, படங்களைப் பார்ப்பதற்காகவே இணைய தளங்களுக்குள் நுழைகிறார்கள் என அண்மைக்கால ஆய்வு முடிவு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்று இதன் விளைவுகளை அவதானிக்க முடிகிறது. எமது இளைஞர்களும் யுவதிகளும் காதலுக்குப் பின்னால் செல்கிறார்கள். போதைவஸ்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தவிரவும் எமது இளைஞர், யுவதிகளின் ஆடைக் கலாசாரம் தரக் குறைவான, அநாகரிகமான முறைகளில் அமைந்திருப்பதற்கும் இன்றைய சினிமாவின் ஆக்கிரமிப்பே காரணம். பள்ளிவாசலுக்கு அசிங்கமான வார்த்தைகள் பொறிக் கப்பட்ட, அவ்ரத் வெளித் தெரியும் வகையில் ஆடை அணிந்து வருகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை இன்று யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
இதற்கு இஸ்லாமிய அழைப்பாளர்கள், சமூகத் தலைவர்கள், ஆலிம்கள், மூத்தவர்கள் அனைவரும் நாளை மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும்.
“முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (ஸூரதுத் தஹ்ரீம்: 06)
பெற்றோரின் கவனத்திற்கு
எமது பிள்ளைகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்துகிறோம். வகைவகையான உணவு, பானங் கள், கலர் கலராய் ஆடைகள், அதிநவீன கணினி, மடிக் கணினி (laptolp) நவீன ரக கையடக்கத் தொலைபேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க நாம் தயார். ஆனால், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?
குழந்தைகளை குறிப்பாக இளைஞர், யுவதிகளை எப்போதும் எமது கண் காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
“நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். உங்களுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்” என நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் இந்த உலகத்திலே எமக்குக் கிடைத்திருக்கின்ற மிகப் பெரும் அருள். அருட் செல்வங்களில் எல்லாம் உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். எனவேதான் அல்லாஹ் சொல்கிறான்:
“செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்.” (ஸூரதுல் கஃப்: 46)
குழந்தைகளையும் சொத்து, செல்வங்களையும் அலங்காரம் எனச் சொன்ன அல்குர்ஆன், அவர்கள் சோதனையாகவும் (ஃபித்னா) இருக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றது.
“நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனை யாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.” (ஸூரதுல் அன்பால்: 28)
எமது பிள்ளைகள் இந்த உலகத்திலும் நாளை மறுமையிலும் அலங்காரமாக (ஸீனா) இருக்க வேண்டும். எம்மை நரகில் தள்ளுகின்றவாகளாக அல்லாமல் சுவனத்திற்கு அழைத்துச் செல்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும். அவர்களை அதற்காகத் தயார்படுத்த வேண்டியது எமது பொறுப்பு.
வாலிபப் பருவத்தில் பதினேழு முதல் இருபத்தொன்று வயது வரையுள்ள காலம் மிகவும் முக்கியமானது. அந்தப் பருவம் பெற்றோலையும் பஞ்சையும் ஒத்த பருவம். இந்த பருவத்திலே அவர்கள் ஓய்வாக இருக்கிறார்கள். இவர்களது விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு முறையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பாதையில் இவர்கள் வழிந டத்தப்பட வேண்டும். நடிகர் நடிகைகளையும் பாடகர் பாடகிகளையும் விளையாட்டு வீர வீராங்கனைகளையும் அடையாள புருஷர்களாக மதித்து அவர்களைப் போன்று செயலாற்றுகின்ற இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல முன்மாதிரி இஸ்லாமிய ஆளுமைகளை அறிமுகப்ப டுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை.
மூஸா, ஈஸா, யூஸுப், இப்ராஹீம் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரையும் உத்தம நபித் தோழர்களையும் தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், முன்னோர்கள், அறிஞர்கள் மேதைகள், சிந்தனையாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வரலாற்றை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்தி ருக்கிறது. இன்றைய எமது இளைஞர்கள் இத்தகையவர்களை முன்னுதாரண புருஷர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அதற்கான வழிகாட்டல்க ளை நாம் வழங்கியிருக்கின்றோமா? அத்தகைய நல்லடியார்கள் பற்றி அவர் களுக்கு அறிமுகப்படுத்திக் கொடுப்பதற்கான கருத்தரங்குகள், வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றனவா?
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் , மொழிப் பாடம் ஆகியவற்றில் திறமைச் சித்தி பெற வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் செலவளித்து மாலை நேர, இரவு நேர வகுப்புக்களை ஒழுங்கு செய்து கொடுக்கும் நாம், மறுமையில் அந்தப் பயங்கரமான, மகத்தான பரீட்சையில் எமது பிள்ளைகள் சித்தி பெற்று சுவனம் நுழைய வேண்டுமே என்பது குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கின்றோமா? எமது முன்னுரி மைப் பட்டியலில் இது எந்த இடத்திலே இருக்கிறது?
அல்லாஹ்வின் பேரருளினால் இன்று எமது இளைஞர், யுவதிகளை வழிப்ப டுத்துவதற்காக பல இஸ்லாமிய அமைப்புக்களால் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங் கள் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், தஃவாப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட பல இஸ்லாமிய அமைப்புகள் சமூகத்தின் முதுகெலும்பாக, எதிர்கால தலைவர்களாக திகழ்கின்ற இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்திருக் கின்றன.
இன்றைய இளைஞர், யுவதிகளை இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆவன செய்வது பெற்றோரின் பொறுப்பு.
source: http://www.sheikhagar.org/articles/muslimumma/419-youth-in-islam