அக்லும் நக்லும்
‘அக்ல்’- பகுத்தறிவு
‘நக்ல்’- அல்-குர்ஆன் ஸூன்னா அடங்கலான வஹி
அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
மனிதன் தனது வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து வாழ்;வாங்கு வாழ்வதற்கு இறைவன் அவனுக்கு ‘நக்ல், அக்ல்’; எனும் இருபெரும் வழிகாட்டிகளை வழங்கியுள்ளான். வெறும் ‘நக்ல்’; மனிதனுக்கு வழிகாட்டப் போதுமானதல்ல. ‘அக்லால்’ மாத்திரம் மனிதன் சத்தியத்தை தரிசிப்பதும் சாத்தியமானதல்ல. இரண்டும் இணையும் இடத்தில் தான் மனிதனால் நேர்வழியைக் கண்டு கொள்ள முடியும்.
ழூஅக்ல், ழூநக்ல் ஆகிய இவ்விரண்டினதும் தேவை பற்றியும் இவற்றுக்கிடையிலான இறுக்கமான தொடர்பு பற்றியும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஒரு விளக்கம் இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
‘ஷரீஆவின் துணையின்றி பகுத்தறிவு நேர்வழியைக் கண்டுகொள்ளாது; பகுத்தறிவின் துணையின்றி ஷரீஆவைப் புரிந்து கொள்ள முடியாது; பகுத்தறிவு அத்திவாரத்துக்கு ஒப்பானது. ஷரீஆவை அதன் மீது எழுப்பப்படும் கட்டடத்துக்கு ஒப்பிடலாம்; கட்டடம் எழுப்பப்படாத நிலையில் வெறும் அத்திவாரத்தில் பயனில்லை; அத்திவாரம் இல்லாத கட்டடம் நிலைக்கப் போவதில்லை;
பகுத்தறிவு பார்வையைப் போன்றது; ஷரீஆ வெளிச்சத்தைப் போன்றது; வெளியே வெளிச்சம் இல்லாத நிலையில் பார்வையில் பயனில்லை; பார்வை இல்லாத இடத்தில் வெளிச்சம் இருந்தும் பயனில்லை; பகுத்தறிவு விளக்கைப் போன்றது; ஷரீஆவோ விளக்கை ஏற்ற உதவும் எண்ணெய்யைப் போன்றது;
எண்ணெய் இல்லாத போது விளக்கில் புண்ணியமில்லை; விளக்கில்லாத போது வெறும் எண்ணெய் வெளிச்சம் தராது. ஷரீஆ என்பது வெளியே இருந்து கிடைக்கும் பகுத்தறிவாகும்; பகுத்தறிவென்பது உள்ளே இருந்து கிடைக்கும் ஷரீஆவாகும்; உண்மையில் இவையிரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை; இரண்டறக் கலந்தவை…..’
இது பற்றி தொடர்ந்து விளக்கும் இமாம் கஸ்ஸாலி அவர்கள், ‘பகுத்தறிவென்பது உள்ளே இருந்து பெறப்படும் ஷரீஆவாக இருப்பதனாலேயே பகுத்தறிவை அல்லாஹ் பின்வருமாறு வர்ணிக்க்pன்றான். ‘எதில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய ழூபித்ராவாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான தீனாகும்.’ (ஸூறா அர்ரூம்: 30)
இவ்வசனத்தில் அல்லாஹ் பகுத்தறிவை ‘தீன்’; என வர்ணித்துள்ளதைக் காணலாம். மேலும் ஷரீஆவும், பகுத்தறிவும் (பித்ரா) இரண்டறக்கலந்தவை என்பதனாலேயே அல்லாஹ் அவையிரண்டையும் இரு ஒளிகள் என அல்-குர்ஆனில் வர்ணிக்கின்றான். (பார்க்க: ஸூறா அந்-நூர்: 35)’
சத்தியத்தை அறிந்து கொள்ளவும் நேர்வழியைத் தெரிந்து கொள்ளவும் வஹியுடன் பகுத்தறிவின் துணையும் அவசியம் என்பதை அல்-குர்ஆன் பல இடங்களில் விளக்கியுள்ளது. உதாரணமாக பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களை இங்கே குறிப்பிடலாம்.
அல்லாஹ்தான் இந்த வேதத்தையும், மீஸானையும் சத்தியத்தின் அடிப்படையில் இறக்கியருளினான்…..’ (அஷ்-ஷூறா: 17)
நிச்சயமாக நாம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். மேலும் மனிதர்கள் நீதியின் அடிப்படையில் நிலைப்பதற்காக அவர்களுடன் வேதத்தையும் ஷமீஸானையும்’ இறக்கினோம்…..’ (அல்-ஹதீத்: 57)
இவ்விரு வசனங்களிலும் இடம்பெற்றுள்ள ஷமீஸான்'(தராசு) எனும் பிரயோகம் பகுத்தறிவைக் குறிக்கும் என்பது பல அறிஞர்களின் விளக்கமாகும்.
மேற்குறிப்பிட்ட சுருக்கமான விளக்கம் இஸ்லாத்தில் பகுத்தறிவுக்குரிய இடத்தையும் அதன் செல்வாக்கையும் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.
அல்லாஹ் இருக்கின்றான்; அவன் ஒருவனே என்பதை வஹி வலியுறுத்துவது போலவே இவ்வடிப்டையான உண்மையைப் புரிந்து கொள்ள பகுத்தறிவும் துணைபுரிகின்றது. மேலும் வஹியின் வசனங்களை விளங்கவும் அவற்றின் அடியாக சட்டங்களைப் பெறவும் துணைபுரிவது பகுத்தறிவாகும். வஹியின் ஒளியில் மனிதனுக்கு நன்மை பயப்பவை, கேடு விளைவிப்பவை தொடர்பான விதிகளை வகுக்கவும் பகுத்தறிவின் தேவை இன்றியமையாததாகும்.
இவ்வாறு வஹியை மனித வாழ்வில் பிரயோகிப்பதற்கு பகுத்தறிவின் துணையுடன் மேற்கொள்ளும் ஆய்வு முயற்சியே ‘இஜ்திஹாத்’; எனப்படுகின்றது. இஸ்லாமிய ஷரீஆவின் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் துணைபுரிகின்ற, அதன் உயிரோட்டத்தைக் காக்கின்ற, எல்லா இடங்களுக்கும், காலங்களுக்குமான அதன் ஏற்புடைமைக்கும் பொருத்தப்பாட்டுக்கும் உத்தரவாதமளிக்கின்ற இஸ்லாத்திற்கேவுரிய தனித்துவமான ஒரு கோட்பாடே ‘ இஜ்திஹாத்’ ஆகும்.
இன்றைய இஸ்லாமிய உலகம் எதிர்நோக்கியுள்ள சவால்களுள் சிந்தனைச் சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கவொன்றாகும். அந்த வகையில் சிந்தனைத் தெளிவை வேண்டி நிற்கின்ற ஒரு முக்கியமான பொருளாக இஜ்திஹாதைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
‘அக்ல்’- பகுத்தறிவு
‘நக்ல்’- அல்-குர்ஆன் ஸூன்னா அடங்கலான வஹி
‘பித்ரா’- (அடிப்படையில் இயற்கையைக் குறிக்கும்) அல்-குர்ஆன் பகுத்தறிவு எனும் பொருளில் இப்பதத்தைக் கையாண்டுள்ளது
அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யாக் கலாபீடம்
source: http://www.sheikhagar.org/articles/2-allarticles/330-aklnakl