கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..!
தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் (இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன?) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்கவரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார்.
ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் மீதான சுங்க வரிச் சலுகை என்பது கடந்த 12 மாதங்களில் இருந்த அளவை விட ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
42 டிரில்லியன் ரூபாய்
இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்பது 42 டிரில்லியன் ரூபாய் (ஒரு டிரில்லியன் என்பது நூறாயிரம் கோடி) என்ற அளவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவோம் என நரேந்திரமோடி அரசு சூளுரைத்ததே, அந்த கருப்புப் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு புரிந்திடும்படி சொல்ல வேண்டும் எனில், இதனை 678 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட வேண்டும்.
42 என்கிற எண்ணுக்குப் பிறகு வருகின்ற பன்னிரண்டு பூஜ்யங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் ஏழைகளுக்கு(?!) நிவாரணமாக 5,89,285.2கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே, தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள லேசான சலுகையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில், கார்ப்பரேட்களுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் (சுமாராக 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகள் இவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள 5.49 லட்சம் கோடி ரூபாய்களோடு சேர்த்து கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்பது 42.08 டிரில்லியன் ரூபாய்களாகும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் விருந்தாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள்.
140 சதவீதம் அதிகம்
2005-06ம் ஆண்டிலிருந்துதான் தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் பட்டியலை அரசு வெளியிடத் துவங்கியது. எனவேதான் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட தொகை என சொல்கிறோம். உண்மையில் சொல்லப் போனால், இன்னும் கூடுதலான காலத்திற்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கூட்டினால் மொத்தத் தொகை எவ்வளவாக இருக்கும்? நிச்சயம் அது ஒரு மிகப் பெரியதொரு தொகையாக இருந்திடும்.
கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட ஆரம்பித்த பின்னர் உள்ள தொகைகளை கூட்டினால் அது 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இந்த அளவிற்கு இதற்கு முன்எப்போதும் அளிக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகை என்பது, இத்தகைய புள்ளிவிவரம் நமக்கு கிடைக்கத் துவங்கிய ஆண்டான 2005-06ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சலுகையின் அளவை விட கிட்டத்தட்ட 140 சதவீதம் அதிகம் ஆகும்.
மோடியின் புதிய பாணி
இந்த ஆண்டு சலுகைகள் என்பது புதிய பாணியில் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டு வரை இது கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் மிக முக்கியமானதொரு செலவினமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் `ஊக்கத்தொகை’ என இதற்கு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. ஆம்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையே ஆகும்.
அரசிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட ஒன்றல்ல. பாஜக அரசின் கீழ், `வீண் செலவாகிய’ மானியங்கள் அளிப்பது என்ற பழைய நடைமுறை மீண்டும் இடம் பெறாது என “நம்புவதாக” சென்ற ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், நிலவுகின்ற காலச்சூழலைப் பொறுத்து அது அமைந்திடும் என்றும் குறிப்பிட்டார். எனவே, தற்போது அத்தகையதொரு காலச்சூழல் அவரைப் பொறுத்தவரை கனிந்துவிட்டது.
முந்தைய ஐமுகூ அரசின் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீதான வரி என்பது 57,793 கோடி ரூபாய்களாகும். மோடி அரசின் முதலாவது ஆண்டில், அது 62,399 கோடி ரூபாய்களாக ஆனது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு இத்தொகையின் அளவு இன்னமும் கூடுதலான ஒன்றாகவே இருந்திடும். ஏனெனில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது இடைக்கால தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் 171 கோடி ரூபாய் சலுகை
மதிப்பீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகையை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-15 நிதியாண்டின் ஒவ்வொரு நாளிலும் 171 கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 கோடிக்கும் கூடுதலான ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையோடு, தள்ளுபடி செய்யப்பட்ட கலால் வரித் தொகையான 1.84 லட்சம் கோடி ரூபாய்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரியான 3.01 லட்சம் கோடி ரூபாய்களையும் சேர்த்து கணக்குப் போட்டால், மொத்தமாக இவர்களுக்கு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்திட இயலும்.
கேட்காதீர்கள்… அது ரகசியம்
இந்திய நாட்டு வங்கிகளின் வாராக் கடனாக உள்ள பல லட்சம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய சலுகைகளை அனுபவித்தவர்களிடமிருந்து வரவேண்டிய ஒன்றாகும். ஆனால், ரகசியக் காப்பு சட்டத்தின்படி இவர்களது பெயர்களை வெளியிட இயலாது. இதற்கு முன்எப்போதும் இருந்திராத அளவு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதலானதொரு தொகையை அருண் ஜெட்லி ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
உண்மையில், வரிகள் வாயிலாக அரசிற்கு கிடைத்திடும் வருமானம் என்பது உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்தால்… இன்னமும் கூடுதலாக 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்றே ஜெட்லி குறிப்பிட்டார். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அதனையடுத்து மற்றொன்று நிகழும் என்று சொல்லும்போது அது அவ்வாறு நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34,699 கோடி ரூபாய்கள் என்பது உண்மையில் குறைவான தொகையே அன்றி கூடுதலான தொகையல்ல. ஏற்கனவே, மத்திய அரசு இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய்களை மாநில அரசுகளுக்கு அளித்திடாமல் பாக்கி வைத்துள்ளது.
எனவே, பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு ஒதுக்கப்படுகிற புதிய தொகை என்பது 30,000 கோடி ரூபாய்களை விட குறைவான ஒன்றாகவே இருந்திடும். எது எவ்வாறு இருந்தாலும் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படுகிற தொகை பணவீக்கம் மிக அதிகமாக இருந்த மூன்றாண்டுகளில் இருந்த அளவே இருந்திடும். அதாவது சுமார் 33000 கோடி ரூபாய்களாகவே இருந்திடும். ஆனால், இது குறித்து ஜெட்லி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. இதற்கான துவக்கப்புள்ளி ப.சிதம்பரம் காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது.
121 ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம்!
கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு தற்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவின்படி பார்த்தால், முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கப்படுகிற 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வருகின்ற 121 ஆண்டுகளுக்கு அதனை செயல்படுத்திடலாம். ஆனால், நாடாளுமன்றத்தின் அவையிலே இத்திட்டத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும் வரை, இதனை நாம் செய்திட மாட்டோம்.
34 ஆண்டுகளுக்கு மானியம் தரலாம்!
தற்போது உணவு மானியத்திற்கு அளிக்கப்படும் தொகையின் அளவீட்டின்படி, இந்த 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வரும் 34 ஆண்டுகளுக்கு இந்த மானியத்தை மக்களுக்கு தொடர்ந்து அளித்திடலாம். “குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதியில் 22 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”, “குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது” என குழந்தைகளின் உரிமைகளுக்கான மையம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதிகள் வெட்டிச் சுருக்கப்பட்டதை மாற்றியமைத்திடலாம்.
குழந்தையா? தங்கமா?
ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வருமானம் குறித்த பட்டியலைப் பார்த்தால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரித் தொகை என்பது 2014-15ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 10 சதவீதமாகும். 2005-06 முதலான பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி என்பது 4.3 டிரில்லியன் ரூபாய்களாகும்.
குழந்தைகளின் மேம்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்கத்தை அதிகரித்திடும் நடவடிக்கையே இது. சலுகையாக அளிக்கப்படுகிற இந்த 42 டிரில்லியன் ரூபாய்கள் எல்லோருக்குமானது. இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்கிறது என இத்தகைய “ஊக்கத் தொகைக்கு” வக்காலத்து வாங்குகிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய சலுகையின் பெரும்பகுதி செல்வச் சீமான்களையே சென்றடைகிறது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஏழையின் பணம்
இவ்வாறாக செல்வந்தர்களுக்கு வாரி இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திடவில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனாக நிலுவையில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய செல்வந்தர்களால் திருப்பிச் செலுத்தப்படாதவை ஆகும். ஆனால், ரகசியக் காப்பு என்ற பெயரில் இவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. கார்ப்பரேட் ஊடகமும் இவர்களது பெயரை வெளியிடாமல் இருப்பதில் ஆனந்தம் அடைகிறது.
தங்களிடம் உள்ள சிறு சிறு தங்க நகைகளை அடமானம் வைத்து அதனை திருப்ப முடியாமல் போகிற சாதாரண மக்களின் நகைகள் ஏலம் விடப்படுவது குறித்த விளம்பரங்களையும், சிறு தொகையை பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த விளம்பரங்களையும் ஊடகத்தில் நாம் பார்க்கிறோம். இதுதான் இவர்களது நியாயமும் தர்மமும் ஆகும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நூற்றுக் கணக்கான செல்வந்தர்களின் பட்டியலை கடந்த ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டபோது கார்ப்பரேட் ஊடகம் கனத்த மௌனத்தையே சாதித்தது.
இதற்கு மேலும் இதனை மூடி மறைத்திட முடியாது என்ற நிலை தோன்றுகின்ற வரை இந்த மௌனம் நீடிப்பதனை பார்க்க முடிகிறது. இதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, மிக மலிவானதொரு விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கு இவற்றையெல்லாம் வாரி இறைக்கிறவர்கள் தான் ‘இலவசம்’ என்பது சாத்தியமல்ல என சொல்கிறார்கள்.
கட்டுரை : பி.சாய்நாத், மூத்த பத்திரிக்கையாளர்
தமிழில் : எம்.கிரிஜா
நன்றி : தீக்கதிர்