மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு இளமைப் பருவம்!
நாம் இவ் உலகில் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்த ஓர் அருட்கொடைதான் மனிதர்களாகப் பிறந்திருப்பது. முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள அத்தனை படைப்பினங்களை விடவும் மனிதனே மிக உயர்ந்த சிருஷ்டி என அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் சொல்கின்றான்.
“ஆதமுடைய சந்ததியினரை நாம் கௌரவித்திருக்கின்றோம்.”
நீர், நிலம், தாவரங்கள், கால்நடைகள், மிருகங்கள் உட்பட உலகத்திலிருக்கின்ற எல்லா உயிரினங்களும் ஜீவராசிகளும் மனிதனுக்காக, மனித நலனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மனிதனோ உலகத்தைப் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காப்பாற்றுகின்ற அல்லாஹ்வுக்காகப் படைக்கப்பட்டிருக்கி றான். மனித வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன.
1. குழந்தைப் பருவம்
2. இளமைப் பருவம்
3. முதுமைப் பருவம்
குழந்தைப் பருவம் மிகவும் பலவீனமானது. முதுமைப் பருவமும் அவ்வாறே மிகவும் பலவீனமானது. ஆனால், இவ்விரு பருவங்களோடும் ஒப்பிடுகின்றபோது மனித வாழ்க்கையில் மிகவும் பலமான பருவம், வலிமைமிக்க பருவமென்றால் அது இளமைப் பருவம்தான். மனிதானாகப் பிறந்ததே பெரிய அருள். அதிலும் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் இளமைப் பருவம் மிகப் பெரும் அருள்.
இளமைப் பருவம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, முறுக்கேறிய பருவம் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமைமிக்க பருவம். இந்த வகையிலேயே இளமைப் பருவம் மிகப் பெரும் அருளாக விளங்குகிறது. குழந்தைப் பருவத்தில் இளமையின் முக்கியத்துவத்தை எவராலும் உணர முடியாது. ஆனால், முதுமைப் பருவத்தில் இவ்இளமைப் பருவத்தின் முக்கியத்துவத்தை உணராத எவரும் இருக்க முடியாது.
வயோதிபத்தை அடையும் ஒவ்வொரு மனிதனும் உலகில் திரும்பக் கிடைக்காத இளமை மீண்டு வராதா!? என ஏங்குவான். இதனையே ஓர் அரபுப் பழமொழி இப்படிச் சொல்கிறது:
“ஒரு நாள் அந்த இளமை மீண்டு வராதா!”
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் ஒவ்வோர் அருளும் அமானிதம். உடல் ஆரோக்கியம் ஓர் அருள். அது அமானித மும் கூட. வாழ்க்கை ஓர் அருள். அது அமானிதமும் கூட. அந்த வகையில் இளமை எனும் பேரருளும் அமானிதம். அது குறித்து நாம் நாளை மறுமையில் விசாரிக் கப்படுவோம்.
மறுமையில் ஒவ்வொரு மனிதனும் ஐம்பெரும் வினாக்களுக்கு பதில் சொல்லாமல் அவ்விடத்திலிருந்து ஒரு சாணும் நகர முடியாது.
“மறுமை நாளில் ஆதமுடைய மகன், அவனது வாழ்நாள் எப்படிக் கழிந்தது, அவனது இளமை எவ்வாறு கழிந்தது, சம்பாதித்தது எவ்வாறு, செலவளித்தது எப்படி, கற்றுக் கொண்டதை வைத்து என்ன செய்தான்? ஆகிய ஐந்து கேள்வி களுக்கு பதிலளிக்காமல் ஓர் எட்டும் நகர முடியாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அந்த ஐம்பெரும் கேள்விகளுள் முதலிரு வினாக்களும் மனித வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. அதிலும் குறிப்பாக, மனித வாழ்க்கையில் பெரும் அருளாகக் கிடைத்த இளமை குறித்து கடுமையாக விசாரிக்கப்படும். அப்போது இளமைப் பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் கழித்தவர்கள் அந்தப் பயங்கரமான நாளில் அர்ஷுடைய நிழலின் கீழ் இருப்பார்கள் என்ற சுபசெய் தியையும் சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இளமைப் பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதிலேயே வாழ்வின் வெற்றி தங்கியிருக்கிறது என்ற உண்மையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இதன் காரணமாகவே இஸ்லாம் இளம் பருவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
“அல்லாஹுத் தஆலா எல்லா நபிமார்களையும் இந்த உலகத்துக்கு இளை ஞர்களாகவே அனுப்பி வைத்தான். அவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றபோதும் இளைஞனுக்கே அதனைக் கொடுத்தான்” எனக் கூறிய இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,
“இப்ராஹீம் என்று சொல்லப்படுகின்ற ஓர் இளைஞனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்தான் இந்த வேலையை செய்திருப்பார் என்று நாம் நினைக்கிறோம் என்று அந்த மக்கள் பேசிக் கொண்டார்கள்” எனும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்ததாக இமாம் இப்னு அபூ ஹாதிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
இங்கு நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்குர்ஆன் ஓர் இளைஞனாகவே அல்குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது.
இளமைப் பருவத்தை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஓர் இளைஞன் விரும்பினால் சுவனம் நோக்கிய பாதையை செப்பனிடும் பருவமாக இளம் பருவத்தை அமைத்துக் கொள்ளலாம். நரகத்தை நோக்கி நகரத்துகின்ற பருவமாகவும் அமைத்துக் கொள்ளவும் முடியும்.
இளமைப் பருவத்தை கத்திக்கு உவமைப்படுத்தலாம். ஒரு கத்தி யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் பயன்பாடு அமைகிறது. ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் கத்தியைக் கையிலெடுத்தால் அதனைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றப் போராடுவார். அதே கத்தி ஒரு கொலைகாரனின் அல்லது கொள்ளைக்காரனின் கையில் இருந்தால் அதன் மூலம் ஓர் உயிர் கொல்லப்படலாம் இரத்தம் ஓட்டப்படலாம். இளமைப் பருவமும் இப்படித்தான். யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இளமைப் பருவத்தின் நிலையும் அமையும். ஓர் இளைஞனின் நிலை அவன் எந்தக் கொள்கையைப் பினபற்றுகின்றான் எத்தகைய போக்கைத் தெரிவு செய்கிறான் என்பதில்தான் தங்கியிருக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்று, அவர்களை ஆதரித்தவர்களும் அரவணைத்தவர்களும் இளைஞர்கள்தான். அவ்வாறே நபியவர்களைக் கடுமையாக எதிர்த்து அவருக்கும் அவரை ஏற்றவர்களுக்கும் சித்திரவதை செய்தவர்களும் வாலிபர்கள்தான்.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் இளைஞர்கள் தனக்களித்த மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களை மெச்சிப் புகழ்ந்து இவ்வாறு பாராட்டினார்கள்:
“வயோதிபாகள் என்னைப் புறக்கணித்தபோது இளைஞர்களே எனக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புப் பணிக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நிராகரிப்பாளர் களின் சித்திரவதை தாங்க முடியாமல் முதன் முதலாக ஒழுங்கு செய்த அபீசீ னிய ஹிஜ்ரத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் இளைஞர்களும் யுவதி களும் என்பதை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
இஸ்லாமிய வரலாற்றில் அநேகமான சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இளைஞர்கள். பதினேழு வயதுக்கும் இருபத்தேழு வயதுக்கும் இடைப்பட்ட வாலிபர்கள்தான் இஸ்லாத்தின் தூதை உலகளாவிய ரீதியில் பரவச் செய்த வர்கள். சிந்துப் பிரதேசத்தைக் கைப்பற்றியபோது படைத் தளபதியாக இருந்த முஹம்மத் காசிமுக்கு வயது பதினேழு. கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக் கப்பட்ட பைசாந்திய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தைக் கைப்பற்றிய முஹம்மது பின் பாதிஹுக்கு அப்போது வயது இருபத்து மூன்று மாத்திரம்தான். தாரிக் பின் ஸியாத் ஸ்பெய்னை இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது அவருக்கு வயது இருபத்தொன்று.
இப்படி எமது இளைஞர்கள் வரலாற்றுப் புருஷர்களாகத் திகழ்ந்த வரலாறு மறுமை வரை நினைவுகூரப்படும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.