மனித வாழ்வு: ஓர் இஸ்லாமிய நோக்கு
இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கைக்கும் சமூக உறவுகளுக்கும் நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான பரிபூரண வழிகாட்டல்களைக் கொண்ட மார்க்கம். உலக, மறுமை வாழ்க்கை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் அற்புதமானது.
இஸ்லாம் மறுமை வாழ்க்கைக்காக உலக வாழ்வைத் துறக்குமாறு வலியுறுத் தவில்லை. மறுமை வாழ்க்கையை மறந்து விட்டு உலக வாழ்க்கையை அனுபவிக்குமாறு சொல்லவுமில்லை. ஏக காலத்தில் ஈருலக வாழ்வையும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்குத் தேவையான எல்லா வழிகாட்டல்களையும் இஸ்லாம் நிறைவாகவே வழங்கியிருக்கிறது.
ஸூரதுல் ஜுமுஆவில் அல்லாஹுத் தஆலா கடைத் தெருவிலுள்ளவர்களை, காரியாலயத்திலுள்ளவர்களை, உலக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களை விளித்து இப்படிச் சொல்கின்றான்:
“விசுவாசிகளே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், வர்த்தகத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வைத் தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங் கள். நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று.” (ஸூரதுல் ஜுமுஆ: 09)
“தொழுகை முடிவடைந்தால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸூரதுல் ஜுமுஆ: 10)
“நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்.” (ஸூரதுல் ஜுமுஆ: 10)
இவ்வசனங்கள் ஒரு முஸ்லிம் எவ்வாறு வர்த்தகம் போன்ற உலக விவகா ரங்களிலும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளிலும் மாறி மாறி ஈடுபடு வதனூடாக, குறித்த இரு வாழ்வுக்குமிடையிலான சமநிலையைப் பேண வேண்டும் என்பதனை அழகுற விளக்குகின்றன.
முஃமின்கள் உலக விவகாரங்களிலும் ஈடுபடுவார்கள் மறுமை விவகாரங் களிலும் ஈடுபடுவார்கள். இவ்விரு வாழ்க்கைக்குமிடையில் சமநிலை பேணுவதில்தான் ஓர் இறைவிசுவாசியின் வெற்றி தங்கியிருக்கிறது.
பலபோது நாம் இவ்வுண்மையை மறந்து விடுவதுண்டு. ஒரு சாரார் மறுமை வாழ்க்கையை மறந்து உலக வாழ்க்கையில் மூழ்கியிருக்கின்ற அதேநேரம் அடுத்த சாரார் மறுமைக்காக முழு வாழ்வையும் அர்ப்பணிப்பதாகக் கூறி உலக வாழ்க்கையை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள்.
ஓர் இறைவிசுவாசியின் அடிப்படைக் கடமைகள் குறித்து அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:
01. கிலாபத்
“(நபியே) இன்னும் உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீபா) படைக்கப் போகிறேன்’ என்று கூறியபோது,” (ஸூரதுல் பகரா: 30)
02. இபாதத்
“இன்னும் ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி அவர்களை நான் படைக்கவில்லை.” (ஸூரதுத் தாரியாத்: 56)
இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை வணங்கி வழிபடுமாறு கட்டளை பிறப்பிக்கின்றான்.
03. இமாரத்
“அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி அதிலே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள் இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக் கிறான் (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”(ஸூரதுல் ஹூத்: 61)
இவ்வசனத்தில் அல்லாஹ் இந்தப் பூமியை வளப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு பணிக்கின்றான்.
இம்மூன்று கடமைகளையும் ஏக காலத்தில் நிறைவேற்றுகின்றபோதுதான் ஓர் இறை அடியான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுகின்றான். அல்லாஹுத் தஆலா சொல்கிறான்:
“அவனே இந்தப் பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான் ஆகவே, அதன் நாலா பக்கங்களிலும் நீங்கள் பரந்து சென்று அவனுடைய வாழ்வாதாரத்தைத் தேடிப் புசியுங்கள் இன்னும் அவனிடமே (அனைவரும்) உயிர்த்தெழ வேடியிருக்கிறது.” (ஸூரதுல் முல்க்: 15)
பள்ளிவாசலுக்கும் சென்று தொழுவது கடமையாக இருப்பதுபோல வேலைத் தளங்களுக்குச் சென்று உழைப்பில், சம்பாத்தியத்தில் ஈடுபடுவதும் வாழ்க்கைக்குத் தேவையான ஆகாரத்தைத் தேடுவதும் மார்க்கக் கடமையாகும்.
எனவேதான் அல்லாஹுத் தஆலா ஸூரதுல் ஜுமுஆவில், பள்ளிவாசலுக்குச் சென்று இபாதத் செய்வதை திக்ருல்லாஹ் அல்லாஹ்வை திக்ரு செய்வதென்றும் வேலைத் தளங்களுக்குச் சென்று சம்பாதிப்பதை பழ்லுல் லாஹ் அல்லாஹ்வுடைய அருளைத் தேடுவது என்றும் சொல்கிறான்.
திக்ருல்லாஹ் (அல்லாஹ்வை வணங்குவது) எவ்வளவு மகத்தானதோ அவ்வாறே பழ்லுல்லாஹ் (அல்லாஹ்வின் அருளைத் தேடுவதும்) மகத்தானது. உழைப்பு, பணம், சொத்து, செல்வம்… ஹலாலான அனைத்தும் அல்லாஹ்வின் அருள் (பழ்லுல்லாஹ்). அவற்றைத் தேடிப் பெற்றுக் கொள்ளுமாறும் அதற்கா கவே இந்தப் பூமியை வசப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அல்குர்ஆன் சொல்கிறது.
இஸ்லாம் ஓர் அற்புதமான மார்க்கம். ஏனைய மதங்களைப் போன்று வெறுமனே தனி மனிதனுக்கும் கடவுளுக்குமிடையிலான உறவு குறித்தும் ஆன்மிகம், உபகாரம் பற்றியும் பேசுகின்ற மார்க்கமல்ல இஸ்லாம். உலக விவகாரம், ஆன்மிக விடயம் என்ற பாகுபாடு இஸ்லாத்தில் கிடையாது. இது குறித்து அல்லாஹுத் தஆலா இப்படிச் சொல்கின்றான்:
“நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.” (ஸூரதுல் பகரா: 208)
இஸ்லாம் என்றால் அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகும். ஒருவர் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வில், கொடுக்கல் வாங்கலில், உழைப்பல் இஸ்லாம் சொல்லும் வழிகாட்டல்கள், வரையறைகளைப் பேணவில்லை யென்றால் அவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரல்ல. முழு வாழ்க்கையிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்குத் தேவையான எல்லா வழிகாட்டல் களையும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன.
ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வாழ்க்கையைப் படித்துப் பார்க்கும் எவரும் அவர்கள் எந்தளவு தூரம் உலக வாழ்க்கைக்கும் மறுமைக்குமிடையில் சமநிலையைப் போணினார்கள் என்பதைப் புரிந்து கொள்வர்.
“நபித் தோழர்கள் இரவில் உலகத்தையே முற்றிலும் துறந்த துறவிகள் போன்று வணக்கத்தில் ஈடுபடுவார்கள். பகல் பொழுதில் குதிரை வீரர்களாகத் திகழவார்கள்.”
வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே ஹலாலான ஆகாரத்தைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
“தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய ஒரு மனிதன், என் இறைவா! என் இறைவா! என்று வானத்தை நோக்கி தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிபானம் ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்)
ஹலாலான வழியில் சம்பாதிப்பது பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
பிறரிடம் கையேந்துவது பாரதூரமான பாவம். ஒரு முஃமின் பிறரிடம் கையேந்தக் கூடாது. முஃமின் கண்ணியமானவன் கௌரவமானவன். அவன் எப்போதும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். சுய கௌரவத்தோடு வாழ்வது ஈமானுடைய ஓர் உயர்ந்த பண்பு எனச் சொல்கிறது இஸ்லாம்.
கொடுத்து வாழும் கரங்களை இஸ்லாம் உருவாக்க விரும்புகிறதே தவிர எடுத்து வாழும் கரங்களை இஸ்லாம் உருவாக்க விரும்புவதில்லை.
“சம்பாதிப்பதற்கு சக்தியுள்ள ஒருவர் ஸகாத் பெறுவது ஹராமாகும்”எனச் சொன்னார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
வசதியுள்ளவர் ஸகாத்தைப் பெற முடியாதது போலவே உழைப்பதற்கு சக்தியிருந்தும் உழைப்பில் ஈடுபடாமல் பிறரது ஸகாத்தின் மூலம் வாழ்வது ஹராமானதென நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்குடன் மனிதர்களிடம் கை நீட்டிக் கேட்பவர் நரகத்தின் தணலையே கேட்டுப் பெற்றுக் கொள்கின்றார்.” (ஸஹீஹு முஸ்லிம்)
மற்றோரு சந்தர்ப்பத்தில்,
“எடுக்கும் கரங்களைவிட கொடுக்கும் கரங்களே உயர்ந்தது” என்று சொன்னார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
“ஒருவர் காலையில் தனது வீட்டை விட்டு வெளியேறி தொழிலுக்காகச் செல் கிறார். மாலை வரை கஷ்டப்பட்டு உழைக்கிறார். அவர் களைப்படைந்த நிலையில் வீடு திரும்புகிறார். அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்புகிறார்.”
பள்ளிவாசலுக்குச் சென்று இபாதத்தை நிறைவேற்றி விட்டு வீடு திரும்புகின்ற ஒருவரது பாவம் மன்னிக்கப்படுவது போல ஒருவர் ஹலாலான சம்பாத்தியத்தில் ஈடுபட்டு களைப்படைந்த நிலையில் வீடு திரும்பும்போது அவரது பாவமும் மன்னிக்கப்படுகிறது என்பதே இந்த ஹதீஸ் சொல்லும் செய்தி.
ஒரு முறை பெரியார் ஷகீக் அல்பல்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வியா பார நோக்கமாக ஒரு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்திற்கு முன்னால் தனது நண்பர் இப்றாஹீம் இப்னு அத்ஹமைச் சந்தித்து பிரியா விடை பெற்றுக் கொண்டார். இவரது இந்தப் பயணம் நீண்டநாள் பயணமா கவே அமைய இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார். அவரைப் பள்ளிவாசலில் சந்தித்த இப்றாஹீம் இப்னு அத்ஹம் ஆச்சரியப்பட்டு, “என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பி விட்டீர்கள்?”எனக் கேட்டார். அதற்கு ஷகீக் அல்பல்கி, “நான் எனது பயணத்தின்போது இடையில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக ஒரிடத்தில் தங்கினேன். அது பாழடைந்த ஓர் இடமாக இருந்தது. அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையைக் கண்டேன். கண்பார்வையற்ற, பறக்கவோ, அசையவோ முடியாத அந்தப் பறவை இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் எப்படி உயிர்வாழ்கிறது! என நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன். சற்று நேரத்தின் பின்னர் அங்கே மற்றோரு பறவை வந்தது. அது இந்தப் பறவைக்கு உணவைக் கொண்டு வந்திருந்தது. இவ்வாறு ஒரு நாளைக்கு பல தடவைகள் அது இந்தப் பறவைக்குப் போதுமான உணவைக் கொண்டு வந்து கொடுப்பதை நான் அவதானித்தேன். இதன் மூலம் இந்த இடத்தில் இந்தப் பறவைக்கு உணவளிப்பவன் எனக்கு உணவளிக்க முடியுமானவனாக இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்த நான் உழைப்பை நோக்காகக் கொண்ட எனது பயணத்தை இடைநடுவில் கைவிட்டு உடன் ஊர் திரும்பினேன்”என்றார்.
இதைக் கேட்ட இப்றாஹீம் இப்னு அத்ஹம், “ஷகீகே! உமது இந்த நிலைப்பாடு எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பிறரின் தயவில் வாழு கின்ற அந்தக் குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் குருடர்களாகவும் முடவர்களாகவும் இருக்கும் பிறருக்காகவும் உழைக்கின்ற அடுத்த பறவையின் நிலையில் நீர் இருக்கக் கூடாது? (கொடுக் கும்) உயர்ந்த கரம் (வாங்கும்) தாழ்ந்த கரத்தைவிட சிறந்தது என்பதை நீர் அறிய மாட்டீரா?”என வினவினார்கள். இதைக் கேட்ட ஷகீக், இப்றாஹீம் இப்னு அத்ஹம் அவர்களின் கரங்களைப் பற்றி முத்தமிட்டு, “அபூ இஸ்ஹாக்கே! நீங்கள் எமது ஆசானல்லவா?”எனக் கூறிவிட்டு மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதற்காகத் திரும்பினார்.
இவ்வாறு மார்க்கத்தை விரிந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு முஸ்லிமின் முழு வாழ்வுமே வணக்கமாக மாறிவிடும். அவர் பள்ளிவாசலில் அல்லது தனது வேலைத் தளத்தில் இருந்தாலும் அவர் இபாதத்தில் ஈடுபட்ட கூலி யைப் பெற்றுக் கொள்வார்.
ஒரு முஸ்லிமின் வியாபாரம், உழைப்பு ஹலாலாக அமைகின்றபோது அவை அனைத்துமே இபாதத்தாக மாறி விடுகிறது.
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டோம் எனக் கூறிக் கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி “உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது. அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்குவாயாக எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது. வானம் தங்கத்தையோ வெள்ளி யையோ மழையாகப் பொழியப் போவதில்லை”எனக் கூறி அவர்களுக்கு வழிகாட்டல் வழங்கினார்கள்.
ஒரு தடவை ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக மஸ்ஜிதுந் நபவியில் தரித்திருக்கும் ஒரு மனிதனைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள் “இவர் எப்போதும் பள்ளிவாசலிலேயே இருக்கிறார். இவருடைய உலக விவகாரங்களைக் கவனிப்பது யார்?”என்று நபித் தோழர்களிடம் கேட்டார்கள். “இவருக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். அவர் உழைத்து தனது குடும்பத்தினரையும் இவரையும் இவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார்”என பதில் வந்தது. அப்போது நபியவர்கள், “நிச்சயமாக பள்ளிவாசலில் இருக்கும் இந்த மனிதனை விட தனக்காகவும் உழைத்து இவருக்காகவும் உழைக்கின்ற இவரது சகோதரர் சிறந்தவர்”எனச் சொன்னார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உழைப்பின் முக்கி யத்துவம் குறித்து பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
“தன் கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை.” (அல்புகாரி)
“உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந் ததாகும்.” (அத்திர்மிதி)
“அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது?”என்று நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. “ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும் (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும்”என்று நபியவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
“எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும்.” (அல்புகாரி, முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிறரிடம் கை நீட்டாது சுய மரியாதையுடனும் கௌரவத் துடனும் வாழ வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. உழைத்து வாழ வேண்டும் பிறருக்கு உதவி வாழ வேண்டும் உபகாரம் செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற மார்க்கம் இஸ்லாம்.
உழைப்பும் சம்பாத்தியமும் ஹராமான வழியிலோ ஹராத்திற்கு உதவி செய்வதாகவோ ஹராத்தோடு தொடர்புபட்டதாகவோ அமைந்து விடக் கூடாது. வட்டி, மோசடி, கலப்படம், ஏமாற்று, பொய், கொள்ளை இலாபம், பதுக்கல்… போன்ற இஸ்லாம் தடை செய்திருக்கின்ற அனைத்திலிருந்தும் எமது உழைப்பும் சம்பாத்தியமும் தூய்மையடைய வேண்டும்.
உழைப்பில் ஹலால், ஹராம் வரையறை பேணாத வியாபாரிகளை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.
“நிச்சயமாக வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர். அல்லாஹ்வைப் பயந்து நன்முறையில் உண்மையுடன் நடந்து கொண்டோரைத் தவிர.” (முஸ்தத்ரக் அல்ஹாகிம்)
நம்பிக்கையும் நாணயமும் நேர்மையும் உண்மையுமுள்ள வியாபாரிகளைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு புகழ்ந்துரைத்தார்கள்:
“உண்மையான, நம்பிக்கையான வியாபாரி மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள் (ஸித்தீகீன்கள்), ஷஹீத்களோடு இருப்பர்.”
உணவுக் குவியலில் நனைந்த பகுதியை அடியிலும் உலர்ந்த பகுதியை மேலாகவும் வைத்து விற்றுக் கொண்டிருந்த மனிதரைத் தடுத்து வழிப்படுத்தி,
“எம்மை ஏமாற்றுபவர் எம்மைச் சேர்ந்தவரல்ல”(இப்னு ஹிப்பான்) என்று எச்சரிக்கை விடுத்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நாம் வாழ்ந்து வருகின்றோம். இந்த நாட்டில் எமக்கு மிகப் பொரிய ஒரு வரலாறு இருக்கிறது. 810 க்கு இடைப் பட்ட வீகிதாசாரத்தில் வாழும் நாம், ஏனைய 90 வீதமான முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்திருக்கின்றோமா?
இஸ்லாம் இந்த நாட்டில் அறிமுகமான அதே காலப் பிரிவிலேயே இந் தோனேசியா, மலேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இஸ்லாம் அறிமுகமானது. வியாபாரிகளாக வந்த அரபிரயர்களுக்கூடாகவே இஸ்லாம் இந்நாடுகளில் பரவியது. ஒரு காலத்தில் மலேசியாவும் இந்தோனேசியா, மாலைதீவு என்பன முஸ்லிம் நாடுகளாக இருக்கவில்லை. ஆனால், அவை இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளாக மாறியிருக்கின்றன. மாலைதீவில் 100 முஸ்லிம்களே வாழ்கிறார்கள். அங்கெல்லாம் எமது முன் னோரின் முன்மாதிரியான நடத்தையினால், உண்மை, நேர்மை, வாய்மை மிகுந்த வாழ்க்கை முறையினால் இஸ்லாம் பரவியது. ஆனால், இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நாம் வாழ்ந்து வருகின்றபோதும் இந்த முன்மாதிரியை நாம் வெளிப்படுத்தியிருக்கிறோமா என்றால் பதில் கவலைக்கிடமாகவே அமையும்.
இந்த நாட்டில் முன்மாதிரியாக வாழ்ந்து நாம் பல இலட்சம் அபூ பக்ர், உமர், கதீஜா, ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹும்) போன்றோர்களை உருவாக் கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பல இலட்சம் அபூ தாலிப்களையாவது உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், எமது பிழையான நடத்தைகளால் அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோரையே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு கசப்பான உண்மை. இந்த நிலை மாற வேண்டும் மாற்றப் பட வேண்டும்.
எனவே, எமது இபாதத்துக்கள் சீராக வேண்டும் வணக்க வழிபாடுகளின் தாத்பரியத்தைப் புரிந்து அவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும் அவ் வாறே எமது சமூக உறவுகளும் உழைப்பும் சீராக வேண்டும். சம்பாத்தியம் ஹலாலாக வேண்டும். பிறருடனான கொடுக்கல், வாங்கல் சீரமைய வேண்டும். எப்போதும் உண்மை, நேர்மை, வாய்மையோடு வாழ வேண்டும்.செய்யும் தொழிலுக்கூடாக சுவனம் நோக்கிய பாதையை செப்பனிட வேண்டும்.
ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் கௌரவமான, முன் மாதிரியான வாழ்க்கை முறையினால் இந்த உலகில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், உம்ரா ஆகிய கிரியைகளின் தாத்பரி யத்தை நாம் மறந்து விட்டோம். அவை எமது பண்பாடுகளை சீர்செய்யத் தவறி விட்டன. எமது வாழ்வை ஒழுங்குபடுத்தத் தவறி விட்டன. காரணம், நாம் அவற்றை முறையாக, உள்ளச்சத்தோடு நிறை வேற்றாமையே.
நிச்சயமாக இந்தத் தொழுகை வெட்கக்கேடான காரியங்கள், பாவங் களிலிருந்து தடுக்கும் தடுக்க வேண்டும். அத்தகையதொரு ஆன்மிகப் பயிற்சியை, பண்பாட்டுப் பயிற்சியை நாம் நிறைவேற்றம் தொழுகை நமக்குத் தருகிறதா? நோன்பு தருகிறதா? நாம் நிறைவேற்றும் ஹஜ்ஜும் உம்ராவும் தருகின்றனவா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
எமக்கு இரண்டு வகையான கடமைகள் இருக்கின்றன. ஒன்று ஹுகூகுல்லாஹ் எனப்படும் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். அடுத்தது ஹுகுல் இபாத் எனப்படும் மனிதன் பிற மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
அல்லாஹ்வுக்குரிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது போல அடுத்த மனிதர்களுக்குரிய கடமைகள், உரிமைகளை செவ்வனே நிறை வேற்ற வேண்டும். அல்லாஹ்வுக்குரிய கடமைகளில் தவறுகள், குறைகள் ஏற்பட்டால் அர்ரஹ்மான், அர்ரஹீமாகிய அல்லாஹ் எம்மை மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். அடுத்த மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை களைச் செய்யா விட்டால், அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை நிறைவேற்றத் தவறி விட்டால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக் காதவரை அல்லாஹ் எம்மை மன்னிக்க மாட்டான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ஒரு ஷஹீதுடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர.”
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸஹாபிக்கு ஜனாஸாதை; தொழுகை நடத்துவதற்காக முன்னே செல்கிறார்கள். அப்போது ஜனாஸாவாக இருப்பவர் ஒரு கடனாளி என்பதனை அறிந்த நபிய வர்கள், “இவருக்குத் தொழுகை நடத்த முடியாது”எனச் சொன்னார்கள். அப் போது அங்கிருந்த நபித் தோழர் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே அவரது கட னுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்”என்றார். அதன் பின்னரே நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருடைய ஜனாஸாவைத் தொழு வித்தார்கள்.
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து “இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள் உபரியான நோன்புகள் நோற் கின்றாள் ஸதகா கொடுக்கின்றாள். ஆனால், தன் அண்டை வீட்டாருக்குத் தனது நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்”எனக் கூறினார். இதைக் கேட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அப்பெண் நரகம் புகுவாள்”என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர் மீண்டும் “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான) நோன்பு கள் நோற்கின்றாள் மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றள் பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின் றாள். ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை”என்று கூறினார். இதற்கு அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இவள் சுவனம் புகுவாள்”என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)
அடியார்களோடு தொடர்புடைய கடமைகள், உரிமைகள் எவ்வளவு பாரதூரமானது என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகள்.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்”என்று (மூன்று முறை) கூறினார்கள். அப்போது “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!”என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் தான்”என்று பதிலளித்தார்கள். (அல்புகாரி)
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும்.
அண்டை வீட்டாருக்குத் தொல்லை கொடுப்போர் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் விடுத்துள்ளார்கள்.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹா பாக்களிடம் “வங்குரோத்துக்காரன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என வினவினார்கள்.
அதற்கு அவர்கள், “யாரிடம் திர்ஹமோ உலக செல்வங்களோ இல்லையோ அவனைத்தான் வங்குரோத்துக்காரன் என நாம் கணிப்பேம்”என்றனர். அதனைக் கேட்ட நபியவர்கள், “எனது சமூகத்தி லுள்ள வங்குரோத்துக்காரன் யார் என்றால், அவன் உலகில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றை நிறைவேற்றியவனாக மறுமையில் வந்து நிற்பான். அதேவேளை, ஒருவனைத் தூஷித்திருப்பான் வேறு ஒருவனைப் பற்றி அவதூறு கூறியிருப்பான் இன்னுமொருவனது சொத்துக் களை அநியாயமாகப் புசித்திருப்பான் வேறு ஒருவனது இரத் தத்தை அநியாயமாக ஓட்டியிருப்பான் (கொலை செய்திருப்பான் அல்லது காயப்படுத்தியிருப்பான்) இன்னுமொருவனை அடித்திருப்பான். இவ்வாறு இவனால் அநியாய மிழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இவனது நன்மை களிலிருந்து பகிரப்படும். நன்மைகள் பகிரப்பட்ட பின்னரும் கூட அநியாயங்களின் தொகை எஞ்சியிருந்தால் அநியாயத்திற்கு உட்பட்டவர்களது பாவங்கள் இவன் மீது சுமத்தப்படும் பின்னர் இவன் நரகில் தூக்கி எறியப்படுவான்”என்றார்கள். (முஸ்லிம், அத்திர்மிதி)
எனவே, எமது தொழுகையும் நோன்பும் எமது திலாவத்தும் திக்ரு, அவ்ராதுகளும் எமது முழு வாழ்க்கையையும் சீர்படுத்த வேண்டும் எமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் எமது உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். இஸ்லாம் எமது முழு வாழ்விலும் நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும். உலக வாழ்க்கைக்கும் மறுமை வாழ்வுக்குமிடையில் சமநிலையைப் பேண வேண்டும். ஒப்பீட்டு ரீதியில் நிலையான மறுமை வாழ்க்கைக்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு காரணம் இருக்கிறது.
அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் உலக விடயங்கள் குறித்து பேசும்போது “நடந்து செல்லுங்கள்” எனச் சொல்கின்றான். மறுமை விடயங்கள் குறித்துச் சொல்கின்றபோது “விரைந்து செல்லுங்கள் வேகமாகச் செல்லுங்கள்”எனச் சொல்கின்றான்.
நிலையான மறுமைக்காக போட்டி போட்டுக் கொண்டு விரைந்து செல்ல வேண்டும் ஆனால், உலக வாழ்வை மறந்து விடக் கூடாது. உலக விவகாரங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதன் வேகம் நடந்து செல்லக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டும்.
source: http://www.sheikhagar.org/articles/muslimumma/420-humanlife