பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?
அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக)நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்)வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)
“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)
இறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எப்படி பிரார்த்தனை செய்வது, எதற்கு பிரார்த்திக்க வெண்டும் என்பதெல்லாம் அவரவர் கொண்டுள்ள கடவுள் கொள்கையைப் பொறுத்தது.
அன்றைய அரேபியாவின் இருண்டகால மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத்தான் மேலே உள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது.
நியூஸ்வீக் என்ற ஆங்கில வார ஏடு ஒர் ஆய்வை மேற்கொண்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் நிறைய பேர் தினமும் பிரார்த்திக்கிறார்ளாம். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், அன்புக்காகவும், மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பிரார்த்திக்கிறார்களாம்.
நேரான பாதைக்கு வழிகாட்டுதல், நரகத்திலிருந்து பாதுகாப்பு, மறுமையில் வெற்றி – இம்மாதிரி விஷயங்கள் அமெரிக்கர்களின் பிரார்த்தனையில் இடம் பெறவில்லை என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.
நியூஸ்வீக் அத்தோடு ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. அவர்கள் செய்யும் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகின்றானா என்பதே அந்த வாக்கெடுப்பு.
வானத்தில் சஞ்சாரமிடும் ஒரு புத்திசாலிக் கிழவன்தான் இறைவன் என்று இலக்கியங்கள் கூறும் ஒரு நாட்டில், மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனுக்குப் போடும் “மனுக்கள்” என்றும், அந்த மனுக்களைக் கவனித்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது இறைவனது “கடமை” என்றும் கருதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆதலால் இந்த ஓட்டெடுப்பின் முடிவுகளைக் கண்டு நாம் வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை. 85 சதவிகித அமெரிக்கர்கள் தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றவில்லை என்றும், கடவுள் தோற்றுப் போய்விட்டார் என்றும் கூறினார்காள் என்பதே அந்த ஆய்வின் முடிவு.
ஆம்! கடவுள் அநீதமாக நடந்து கொள்கிறாரா? அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா? காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா? அவருக்கு அது தெரியாதா?”
அஞ்ஞான காலத்தில் அரேபியர்கள் வைத்திருந்த கடவுள் நம்பிக்கையை விட மோசமான கடவுள் நம்பிக்கை இது.
விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேறி விட்டதன் அறிகுறி இதில் தெரிகிறது. உண்மையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு சிலர் பிரார்த்தனையின் “பயன்பாடுகள்” குறித்து ஒரு “சோதனையை” நிகழ்த்தினர்.
ஃபுளோரிடாவில் மூட்டுவலி சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நோயாளிகளை இரு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினருக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. அத்தோடு அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற்றது.
இன்னொரு பிரிவினருக்கு வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் குரூர மனங்களை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது.
பிரார்த்தனை என்பது நமது உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வழியல்ல. இறைவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான். அவனே நமக்கு அனைத்து அம்சங்களையும் தந்தான். இது அவனது நாட்டம். இது அவனது விருப்பம்.
ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமது ஆரோக்கியம் – சுகவீனம், செழிப்பு – வறுமை, மகிழ்ச்சி – துக்கம், வெற்றி – தோல்வி, லாபம் – நஷ்டம் இவையனைத்துமே சோதனைகள்தான்.
உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டே, அவன், வாழ்வையும் மரணத்தையும் படைத்திருக்கிறான். அவன் (யாவரையும்) மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன். (அல்குர்ஆன் 67:2)
மறுமையில் நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி என்பது இவ்வுலகில் விதவிதமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பதைப் பொருத்தே அமையும்.
உண்மையிலேயே நமக்கு உதவி தேவைப்பட்டபொழுது. நாம் இறைவனது உதவியைக் கோரினோமா? அல்லது திமிர் பிடித்து உதவி கோராமல் இருந்தோமா?
நாம் நினைப்பது நடக்காமல் அவன் விரும்பியதே நடக்கும் பொழுது நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோமா? அவன் நமக்கு செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா? அல்லது நாம் அடைந்த வெற்றிகளுக்கு நாம்தான் காரணம் என்று இறுமாப்போடு இருந்தோமா?
எல்லா சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவனது கட்டளைகளை ஏற்று நடந்தோமா? அல்லது நமது மனம் போன போக்கின்படி நடந்தோமா?
இறைநம்பிக்கையாளர்கள் இறைவனிடமே பிரார்த்திக்கிறார்கள். ஏன்? அவன் மட்டுமே கொடுக்க முடியும். அவன் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் அனைவரும் அவனுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.
அவனுக்கு அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. நமக்கோ ஓர் இம்மியளவு சக்தியும் இல்லை.
அவனது அறிவு அணை போட முடியாதது; எல்லையற்றது. நமது அறிவோ மிகக் குறுகியது.
அவனே பிரபு. அவனே அனைவருக்கும் மேலானவன். நாமெல்லாம் அவனது அடிமைகள். நமது பிரார்த்தனைகளை இம்மையில் அவன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நமது பிரார்த்தனைகளுக்கான கூலியை அவன் மறுமையில் தரலாம் அல்லது நாம் கோரியவற்றை விட நல்லதை அவன் இங்கு தரலாம்.
எப்படியிருந்தாலும் நாம் பிரார்த்தனை செய்தது வீண் போகாது. பிரார்த்தனைதான் இறைவனை அடி பணிவதில் உயர்ந்த தரம்.
மெளலானா மன்ஸூர் நுஃமானி அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இறைவனை அடிபணிவதில் மிகச் சிறந்தவராக இருந்தார்கள்.”
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகரத்திற்குச் சென்ற நாள். அன்னாரின் கசப்பான நாட்களில் ஒரு நாள்.
தாயிஃப் நகர்வாசிகள் ஏக இறைவனின் பால் அழைப்பு கொடுத்த அன்னாரின் அழைப்பை நிராகரித்தது மட்டுமல்ல, சிறுவர்களையும், தெருப் பொறுக்கிகளையும் ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தனர். அன்னாரது பாத அணிகள் முழுவதும் ரத்தத்தால் தோயும் அளவுக்கு கல்லால் அடித்தனர்.
உடல் வலியாலும், மன வலியாலும் சொர்வுற்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தனது முகம் திருப்பி இப்படி கேட்டார்கள்: “யா அல்லாஹ்! உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய்? என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா? அல்லது என்னை மேலாதிக்கம் செய்யும் எதிரிகளிடத்திலா?
என் மீது உனக்கு கோபம் இல்லையெனில் நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ எனக்கு உபகாரம் செய்தால் அது எனது பணிக்கும் எளிதாக இருக்கும். நான் உனது சமுகத்திலேயே எனது ஆதரவை வைக்கின்றேன். உனது ஆதரவில் அனைத்து இருள்களும் ஒளிமயமாகிவிடும். இம்மை, மறுமையில் நடக்கும் விஷயங்கள் அனத்தும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நான் உனது கோபத்திற்கு ஆளாகாமல் உன்னிடம் ஆதரவு வைக்கிறேன். கண்டிப்பதற்குள்ள உரிமை உன்னிடமே உள்ளது. தண்டிப்பதற்குள்ள உரிமையும் உன்னிடமே உள்ளது. உன்னிடமே தவிர வேறு ஆற்றல் இல்லை. வேறு பலம் இல்லை.”
என்னே அருமையான வார்த்தைகள்! உள்ளத்தை ஊடுருவும் வார்த்தைகள்!
ஆனால் 13 வருடங்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. அரேபியாவின் பெரும் பகுதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. அஞ்ஞானம் அறவே ஒழிக்கப்பட்டது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது அவர்களோடு 1,24,000 நபித்தோழர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினர். அரஃபாப் பெருவெளியில் அன்னார் கோரிய பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது:
“யா அல்லாஹ்! நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். என்னைப் பார்க்கின்றாய். நான் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் நீ அறிகின்றாய். எனது எந்த நடவடிக்கையும் உன்னிடமிருந்து மறைவதில்லை. நான் துயரத்தில் இருக்கும் ஒரு மனிதன். யாசகன். அச்சமுள்ள ஒரு மனிதன். எனது குறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்கமுள்ள, தேவையுள்ள ஒரு மனிதனாக நான் உன்னிடம் யாசிக்கிறேன். பெருஞ்சோதனயிலிருக்கும் ஒரு மனிதன், அவனது தலை உன் பக்கம் சாய்ந்துள்ளது, அவன் உன் முன்னால் அழுகிறான், அவனது முழு உடலும் உன் முன்னால் வீழ்ந்து கிடக்கின்றது. அப்படிப்பட்ட மனிதனாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனேஸ கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனேஸ.!”
நல்ல நிலையிலும், மோசமான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாக, ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள்.
அவர்களது இந்தப் பிரார்த்தனை ஒரு வாழும் அற்புதமாக திகழ்கிறது. திறந்த மனதுள்ள அனைத்து மக்களையும் அறிவொளியின் மூல ஊற்றின் பக்கம் அழைப்பதாக இருக்கிறது.
அவர்களது பிரார்த்தனைகள் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இந்தப் பிரார்த்தனைகளை அறிந்துகொள்ளாத நம்மவர்கள் எவ்வளவு துர்ப்பாக்கியசாலிகள்!
ஃகாலித் பெய்க்
தமிழில் : MSAH
நன்றி : விடியல் வெள்ளி, ஜூலை 2002
source: http://www.thoothuonline.com/archives/51234#sthash.U6KextMg.dpuf