பிரயாணத் தொழுகை
“பூமியில் பிரயாணம் செய்யும் போது நிராகரிப்பாளர்கள் தொல்லை கொடுப்பார்கள் எனப் பயந்தால் நீங்கள் தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் குற்றமுமில்லை” (ஸுரா நிஸா 4:101)
இவ்வசனம் தொழுகையைச் சுருக்கித் தொழ பிரயாணத்தின்போது நிராகரிப்பாளர் பற்றிய பயமிருக்க வெண்டுமெனக் கூறுகிறது. எனினும் இது பற்றி இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உமர் ரளியல்லாஹு அன்ஹு வினவிய போது: “அல்லாஹ் அது உங்களுக்கு வழங்கிய சதகா. அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றார்கள் (ஸிஹாஹ் சித்தா எனப்படும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களும்)
எனவே பிரயாணம் மட்டுமே சுருக்கித் தொழப் போதுமானது, பாதுகாப்பற்ற நிலையும் காணப்பட வெண்டும் என்ற நிபந்தனை இல்லை என்பது சட்ட அறிஞர்களுக்கு மத்தியிலான உடன்பாடான கருத்தாகும்.
சுருக்கித் தொழல் கடமையா?
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் : மக்காவில் தொழுகை இரண்டு ரக்ஆத்துகளாகக் கடமையாக்கப்பட்டது . இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா வந்ததும் பிரயாணம் செய்தால் அந்த ஆரம்பத் தொழுகை அமைப்பில் தொழுவார்கள். (அதாவது மக்காவில் கடமையாக்கப்பட்ட அமைப்பில்) (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)
இமாம் இப்னுல் கையிம் கூறுகிறார்:
“இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரயாணம் ஆரம்பித்ததிலிருந்து மதீனா திரும்பும் வரை இரண்டு ரக்அத்களே தொழுவார்கள். 4 ரக்அத்துகளைக் கொண்ட தொழுகைகளை அப்படியே முழுமையாகப் பிரயாணத்தின் போது தொழுதார்கள் என்பதற்கு ஆதாரமில்லை. இதில் இமாம்கள் யாரும் கருத்து வேறுபாடு படவில்லை.”
எனினும் இவ்வாறான தொழுகையை எவ்வாறு நோக்க வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடு கொண்டார்கள்.
ஹனபி மத்ஹபினர் : இவ்வாறு பிரயாணத்தின் போது சுருக்கித் தொழல் வாஜிபாகும். அலி ரளியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரது கருத்தும் இதுவாகும்.
மாலிக் மத்ஹபினர் : இது ஜமாஆத் தொழுகையையும் விடக் கட்டாய (முஅக்கதான) ஸுன்னாவாகும். பிரயாணி இமாமாகத் தொழ வேறு பிரயாணி இல்லாவிட்டால் தனியாகத் தொழ வேண்டும்.
ஷாபியீ, ஹன்பலி மத்ஹபினர்: பிரயாணி சுருக்கித் தொழல் அனுமதிக்கப்பட்டதாகும். பூரணமாகத் தொழுவதை விட அது சிறந்ததாகும்.
மாலிகி மத்ஹபினர் : இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நடத்தையை நோக்கும்போது மாலிகி மத்ஹபினரது கருத்தே மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளக்கிய அடிப்படையிலிருந்து நோக்கும்போது ஹனபி மத்ஹபும் ஓரளவு பலமான அடிப்படையைக் கொண்டுள்ளது எனலாம்.
பிரயாணி தனது ஊருக்கு அல்லது நகரத்திற்கு வெளியே சென்றதன் பிறகுதான் சுருக்கித் தொழலை ஆரம்பிக்க வேண்டும் என்பது நான்கு மத்ஹப்கள் உட்பட மிகப் பெரும்பாலான இமாம்களது அபிப்பிராயமாகும்.
இமாம் இப்னு அல்முன்திர்: இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவை விட்டு வெளியேறாது தமது பிரயாணத்தின் போது ஏதாவதொரு தொழுகையை சுருக்கினார்கள் என நான் அறியவில்லை.
சுருக்குவதற்கான பிரயாணத்தூரம்:
மத்ஹபுகளின் இமாம்கள் சில கருத்து வேறுபாடுகளுடன் குறிப்பிட்டதொரு தூரத்தை வரையறுத்துக் கூறுகிறார்கள். சிலர் 60வும் சொச்சம் கிலோமீட்டர் எனவும் வேறு சிலர் 80வும் சொச்சம் கிலோ மீட்டர் எனவும் கூறுகின்றனர்.
எனினும் இவ்வாறு சொல்லப் படும் தூரத்திற்கு தெளிவான நேரடியான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. பிரயாணம், சுருக்குவதற்கான காரணம். எனவே “பிரயாணம்” என்றால் என்ன என்பதனை வரையறுக்க வேண்டும். அந்த வகையில் பிரயாணத்தை வரையறுக்க முற்பட்டமையே இக் கருத்துக்களாகும்.
எனினும் கீழ்வரும் ஹதீஸ் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணம் என்பதை எவ்வாறு நோக்கினார்கள் எனக் காட்டுகிறது.
யஹ்யா இப்னு யஜீத் கூறுகிறார்: நான் அனஸ் இப்னு மாலிகிடம் சுருக்கித் தொழல் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 3 மைல்கள் அல்லது 3 பர்சகுகள் சென்றால் சுருக்கித் தொழுது வந்தார்கள் எனக் கூறினார். (நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
இமாம் இப்னு ஹஜர் பத்ஹ் அல் பாரியில் (ஸஹீஹ் புகாரியின் மிக முக்கிய விரிவுரை நூல்) இந்த ஹதீஸ் பற்றிக் குறிப்பிடுகையில் : “இவ்விடயம் பற்றி விளக்கி வந்துள்ள மிக ஆதார பூர்வமான, மிகத் தெளிவான ஹதீஸ் இது” என்கிறார்.
ஒரு பர்சக் என்பது 3 மைல்களாகும். இந்த வகையில் ஹதீஸில் வந்துள்ள 3 மைல்கள் அல்லது 3பர்சகுகள் என்பது அறிவிப்பாளருக்கேற்பட்ட சந்தேகத்தைக் காட்டுகிறது.
சுருக்கித் தொழல் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனம் (ஸூரா நிஸா 4:101) பிரயாணமெனப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. “பிரயாணம்” எனின் அது இவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று வரையறுக்க எந்த ஆதாரமுமில்லை. எனவே பிரயாணம் செய்தால் சுருக்கித் தொழலாம் என்றே கொள்ள வேண்டும். இந்நிலையில் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மிகக் குறுகிய தூரம் சென்ற போதும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பிரயாணம் இலகுவானதுவா, கஷ்டமானதுவா என இங்கு நோக்குவதில்லை. பிரயாணத்தின் போது மனிதன் சாதாரண வாழ்நிலையைவிட்டு மாறுகிறான் என்பதையே கவனத்திற் கொள்ள வேண்டும்.
சில வேலைகளோடு செல்லல், பிரயாணத்திற்கான வாகனம் உரிய முறையில் கிடைத்தல், வேலைகளை நிறைவேற்றக் காத்திருத்தல், குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தல் போன்ற பல விடயங்களைக் கொண்டது பிரயாணம். இந்த வகையிலேயே இந்தச் சலுகை தரப்பட்டுள்ளது. தான் செல்வது பிரயாணமா, குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றச் செல்கிறேனா என ஒவ்வொருவரும் இப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் குறுகிய தூரமும் தொழுகையைச் சுருக்கித் தொழும் பிரயாணமாக அமையலாம். பிரயாணி தான் சென்ற ஊர், நகரப் பள்ளியில் அங்குளள் இமாமுக்குப் பின் நின்று தொழுதால் பூரணமாகவே தொழ வேண்டும். பிரயாணியைப் பின்பற்றி ஊரில் உள்ளோர் தொழலாம். இந்நிலையில் பிரயாணி ஸலாம் கொடுத்ததும் ஊரிலிருப்போர் மீதி இரண்டு ரக்ஆத்துகளை தனியாகப் பூரணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரயாணி எவ்வளவு காலம் சுருக்கித் தொழலாம்:
ஒரு தேவை நிறைவேறுவதை எதிர்பார்த்திருப்பதில் நாட்கள் கழிகிறது. ஆனால் தேவை முடியும் நாள் தெளிவில்லாவிட்டால் எத்தனை நாட்களாயினும் சுருக்கித் தொழலாம் என்பது நான்கு மத்ஹபின் இமாம்களதும் கருத்து. எனினும் இமாம் ஷாபியின் இன்னொரு அபிப்பிராயப் படி 17 அல்லது 18 நாட்கள் வரை மட்டுமே இந்நிலையில் சுருக்க முடியும்.
குறிப்பிட்ட காலம் தங்கி இருப்பதாக எண்ணம் வைத்துத் தங்கினால் கீழ்வரும் கருத்துக்களை இமாம்கள் கொண்டுள்ளனர்:
இமாம் மாலிக், இமாம் ஷாபியி: 4 நாட்களுக்கு மேல் தங்குவதாக எண்ணம் கொண்டால் சுருக்கக் கூடாது. அதற்குக் குறைந்த நாளாயின் சுருக்கலாம்.
இமாம் அபூ ஹனீபா: 15 நாட்கள் தங்குவதாக முடிவு செய்யின் சுருக்கக் கூடாது.
ஆனால் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயற்பாடு கீழ்வருமாறு:
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்: இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தபூக்கில் 20 நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்போது சுருக்கித் தொழுதார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)
இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கா வெற்றியின் போதும் 19 நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்போதும் சுருக்கித் தொழுதார்கள். (நூல்: ஸஹீஹ் புகாரி)
எனவே இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்பகுதியில் நாட்களை வரையறுக்கவில்லை என்பது தெளிவு.
ஆனால் கல்விக்காவோ, தொழிலிற்காகவோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ, நகரிலோ பல ஆண்டுகள் தங்கும் போது அது சொந்த ஊர். நகரத்தின் நிலைக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் அவர் பிரயாணியாகக் கணிக்கப்பட மாட்டார். எனவே அவர் சுருக்கித் தொழக் கூடாது என்பது தெளிவு.
ஏனைய நிலைகளில் பிரயாணி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வேலைகளில் மூழ்கி இருக்கும்போது சுருக்கித் தொழலாம். இப்பகுதியில் ஷரீஆ வரையறுத்த நாட்களைச் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தனது நிலைகளுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம்.
பிரயாணத்தின் போதான தொழுகை பற்றியே இங்கு விளக்கினோம். தொழுகையைச் சுருக்கித் தொழல் என்பது பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டதாகும். அதாவது சுருக்கித் தொழ ஒரே காரணம் பிரயாணமாகும். ஆனால் தொழுகையைச் சேர்த்துத் தொழல் (ஜம்உ செய்தல்) என்பது இன்னொரு விடயமாகும். அதனை அடுத்த முறை நோக்குவோம்.
ஆதார நூல்கள்:
ஃபத்ஹ் அல் பாரி: இமாம் இப்னு ஹஜர்: வா 02 பக் 648-650
ஃபிக்ஹ் அல் ஸுன்னா: ஸையித் ஸாபிக்: வா-01 பக் 213-216
மவ்ஸூஅத் அல் ஃபிக்ஹ் அல் இஸ்லாமி அல் முஆஸிர்: அப்துல் ஹலீம் உவைஸ்: வா – 01 பக் 262,263
source: http://www.usthazmansoor.com