மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அளித்த தனிச் சிறப்புத் தன்மைகளில் தலையாயது நகைச்சுவை!
செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிலேடையாகவும் சிரிப்பாகவும் பேசத் தெரியாது என்று யார் சொன்னது?
உண்மையை நன்மையாக உபதேசிக்க வந்த உத்தமத் தூதரிடம் உயர்ந்தோன் அல்லாஹு ஜல்லஷானஉ தஆலா இவ்வாறு உரையாடுகின்றான். “நபியே! நீர் அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பாகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீராயின் உம்மை விட்டும் அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்”.
வையகம் வியக்கும் அந்த வரலாற்று நாயகரின் மகத்தான வாழ்வின் இரு பெரும் கால கட்டங்களில் அண்ணல் அவர்களின் அருகே அணுக்கமாகவும் மிக நெருக்கமாகவும் வாழ்ந்து, அந்தப் பேணுதல் நிறைந்த பெருந்தகையின் மகிழ்வூட்டும் முகமலர்ச்சியை, அழகிய வார்த்தைகளை, ஆறுதல் தரும் அன்பை, நேரிய நெறிமுறைகளை, நிறைவான நற்குணத்தை, நன் நடத்தையின் நறுமணத் தென்றலை சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நம் அன்னையர் இருவர் இயம்புவதைக் காண்போம்:
இந்த அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அண்ணல் நபியவர்கள் அனுப்பப்பட்ட அந்த மாபெரும் தினத்தில், வேத வெளிப்பாடு அருளத் தொடங்கியபோது, நடுக்கத்துடன் பயந்தவர்களாக தம் இல்லம் வந்து, தமக்கு நிகழ்ந்த புதுமையான நிகழ்ச்சி பற்றி துணைவியாரிடம் அதிர்ச்சியுடன் விவரித்தபோது, பெண்ணினத்திற்கே பெருமை தேடித்தந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நற்பணி புரியும் நாயகம் அவர்களுக்கு நெஞ்சத்தில் நிம்மதி ஏற்படும் வண்ணம் அழகான ஓர் ஆறுதலை அளித்தார்கள்.
“அண்ணலே! அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களைத் துன்பத்திலோ துயரத்திலோ ஆழ்த்தி விடமாட்டான்.
ஏனெனில், நீங்கள் எல்லோரிடமும் மிக்க அன்புடனே இருக்கிறீர்கள்.
எப்போதும் உண்மையே உரைக்கிறீர்கள்.
ஏழைப் பங்காளராகவும் எல்லோருக்கும் தோழராகவும் இருக்கின்றீர்கள்.
அடுத்தவர் உடமைகளை உரிமையாளர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து விடுகின்றீர்கள்.
எளியவர்களுக்கு எல்லாம் எப்போதும் ‘இல்லை’ என்று சொல்லாமல் ஓடோடிச் சென்று உதவி செய்கிறீர்கள்.
அபலைகளையும் ஆதரவற்றோரையும் ஆதரிக்கிறீர்கள்.
அனாதைகளுக்கு அடைக்கலம் தருகின்றீர்கள்.
சக மனிதர்களுக்கு தயவு காட்டி ஒத்துழைக்கிறீர்கள்.
அநீதி இழைப்பவர்களால் நேரிடும் துன்பங்களைக்கூட சகித்துக் கொள்கிறீர்கள்.
இப்படிப்பட்ட அருங்குணங்கள் கொண்ட நல்லடியார் ஒருவருக்கு அருளாளன் அல்லாஹ் ஒருபோதும் மனவேதனையை ஏற்படுத்திவிட மாட்டான்” என்று அல் அமீன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆதரவளித்துப் பேசியது மட்டுமின்றி அன்னை கதீஜா பின்த் குவைலித் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அந்த இடத்திலேயே அண்ணலார் கொண்டு வந்த தூதை ஏற்றுக் கொண்டு, உலகிலேயே முதன்மையாக அண்ணல் நபியிடம் விசுவாசம் கொண்டவர் என்ற அரும்பேறைப்பெற்றார்கள். அதன்பின் ஏற்றுக் கொண்ட தியாகங்களின் விளைவாக என்றென்றும் சரித்திர ஜோதியின் சரவிளக்காக மிளிர்ந்தார்கள்!
‘அறிவைப் பொதுவுடைமையாக்கிய அண்ணலார்’ அவர்களின் குணாதிசயங்கள் குறித்து நம் நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உண்டாக்கும் வண்ணம், நம் அன்னை ஆயிஷா முதஹ்ஹரா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மொழிவதைக் காண்போம். “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருபோதும் எவரையும் பழித்துக் கூறியதில்லை; தமக்குத் தீங்கிழைத்த தீயவர்களையும் வல்லோனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொண்டதில்லை! மாறாக, மாண்பு நிறைந்த மன்னர் நபியவர்கள், அவர்களை மன்னிக்கவே செய்தார்கள். அநீதமான அனைத்துப் பாவமான காரியங்களிலிருந்தும் முற்றிலும் விலகி, எப்போதும் பரிசுத்தம் நிறைந்தவர்களாகவே விளங்கினார்கள். தமது ஏவலாட்களையோ, வேலைக்காரர்களையோ ஒரு போதும் அடித்துத் துன்புறுத்தியதோ உதைத்து வருத்தியதோ கடுஞ்சொல் பேசியதோ இல்லை! அவசியமான, தகுதியான வேண்டுகோளை விடுப்பவர் யாராயினும் அவர்களின் கோரிக்கையை நீதி நபியவர்கள் நிராகரித்ததே கிடையாது!”
இந்த அரிதான குணங்கள் அனைத்தும் நம் தாஹா நபியின் தனிச் சிறப்பாகும்!
இதயங்களைக் கவர்ந்த இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இனிமையாகச் சொன்னார்கள்: ஓ, ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகின்றான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததை எல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகின்றான். ‘இளகிய மனமும் இனிய நல்மொழியும் மனிதனைப் புனிதனாய் மாற்றும்’ எனும் பொருள்பட மேலும் சொன்னார்கள். “மென்மை எதில் இருந்தாலும், அது அதனை அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்!”.
ஒரு முறை, நானிலம் போற்றிடும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குள் வர, அண்ணலாரின் அருமைத் தோழர் உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டு நின்றார்கள். அப்போது நபியவர்களிடம், அவர்களின் துணைவியரான குறைஷிப்பெண்கள் குடும்பச் செலவுத் தொகையை அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டபோது, அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்து கொண்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்த உடன், உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே வந்தார்கள். ‘சிரிப்பழகர்’ என்ற செய்யதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே சிரித்துக் கொண்டிருந்தார்கள்!
அப்போது, உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’. தங்களை அல்லாஹ் வாழ்நாள் முழுதும் சிரித்தபடியே மகிழ்ச்சியாக இருக்கச் செய்வானாக! என்றார்கள். அதற்கு நற்குணம் நிறைந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கத்தாபின் மகனே! ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்! என்னிடம் சகஜமாக அமர்ந்து வாதாடிக் கொண்டிருந்த இவர்கள் உமது குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்டு உள்ளே சென்று விட்டார்களே!’ என்றார்கள். அதற்கு உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்படியல்ல! அல்லாஹ்வின் தூதரே! ‘இந்தப் பெண்கள் எனக்கு அஞ்சுவதை விட, அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, ‘தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?’ என்று சப்தமாகக் கேட்டார்கள். அதற்கு அந்தப்பெண்கள், ‘அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீர் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கின்றீர்’ என்று பதிலளித்தார்கள்.
அப்போதுதான், பொறுமையின் உறைவிடம் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது இருக்கட்டும், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீர் ஓர் அகன்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் உம்மை ஷைத்தான் எதிர்கொண்டால், உமது பாதையல்லாத வேறு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று தம் அருமைத் தோழரை நோக்கி அன்பாய்க் கூறினார்கள்.
மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அளித்த தனிச் சிறப்புத் தன்மைகளில் தலையாயது நகைச்சுவை!
நகைச்சுவை வாழ்வில் அறவே இல்லை எனில் வாழ்க்கை என்பது சுவை இல்லாமல் சோகம் ததும்பும்! அதுவே, அளவுக்கு மீறும்போது சகிக்க முடியாத விளைவுகளைப் பாவங்களுடன் கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தை மேற்கொண்டிருந்தபோது, அன்ஜஷா எனும் பெயருடைய ஒட்டக ஓட்டி ஒருவரும் உடன் சென்றிருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டிருந்தார்.
அவரது முக்கியமான பணி என்னவென்றால், ஒட்டகச் சிவிகைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரை அமர வைத்துப் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வதுதான். பயண வேகத்தை விரைவுபடுத்த வேண்டி, பாலைவனப் பாடல்கள் சிலவற்றைப் பாடி ஒட்டகத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்து ஓடச்செய்து வந்தார் அவர். ஒட்டகமும் பாட்டைக் கேட்டு வேகமாக ஓடத் துவங்கியது! இதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகாய்ச் சிரித்தார்கள்.
உத்தமத் தூதரின் சிரிப்பு மேலும் உற்சாகமளிக்கவே இன்னும் ஒட்டகத்தை விரைவாக ஓடச்செய்தார் அவர். ஒட்டகமும் அதி விரைவாக ஓடத்துவங்கவே, ஒரு கட்டத்தில் அந்த ஒட்டக ஓட்டி சிவிகையுடன் சேர்ந்து கீழே விழுவதைப்போல ஒருபக்கமாகச் சாய்ந்தார்! அதைக்கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஓ அன்ஜஷா! உனக்கு நாசம்தான். நிதானமாகப்போ! உள்ளே சிவிகைக்குள் இருக்கும் கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்றார்கள்.
மலர் போன்ற மென்மை கொண்ட மங்கையரை கண்ணாடிக் குடுவைக்கு ஒப்பிட்டு ஞானத்தின் ஒளிவிளக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பெண்கள் கண்ணாடி போன்று மிருதுவானவர்கள்; மென்மையானவர்கள் என்றும் கண்ணாடியை எச்சரிக்கையுடன் கையாள்வதைப் போலவே பெண்களிடம் நளினத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவின்றார்கள். இன்னும், கண்ணாடி ஓர் அழகான, அதே சமயம் எளிதில் உடைந்துவிடக் கூடிய ஒரு பொருள். ஒருவேளை, உடைந்து போய் விட்டால் மீண்டும் சீர்படுத்துவது கடினம்! அவ்வாறே மங்கையரிடம் நம் கடுமையைக் காட்டி, அவர்கள் மனம் உடைந்து போகாமல் நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்ற ஆழமான அர்த்தம் அளித்தே இவ்வாறு, கருணைக்கும் கனிவான அன்பிற்கும் முன்னுதாரணமான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா ரஹ்மதுல்லாஹி அலைஹி, “பெண்கள் மென்மையானவர்கள் எனும் கருத்தில் அவர்களைக் கண்ணாடிக் குடுவைகளாக உவமித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிலேடையாகக் குறிப்பிட்டிருக் கின்றார்கள்” என்று கூறுகிறார். இன்னொரு அறிவிப்பாளரான அபூகிலாபா ரஹ்மதுல்லாஹி அலைஹி தம்முடன் இருந்த ஈராக்கியரிடம் இவ்வாறு கூறினார். “அப்போது நபியவர்கள், ஒரு வார்த்தைக் கூறினார்கள். உங்களில் ஒருவர் அதைச் சொல்லி இருந்தால், இங்கிதம் தெரியாத நீங்கள் அதற்காக அவரைக் கேலி செய்து விளையாடி இருப்பீர்கள். அந்த வார்த்தை “நிதானமாக ஓட்டிச்செல்! கண்ணாடிக் குடுவைகளை (கண்ணாடி போன்ற பெண்களை) உடைத்து விடாதே!” என்பதுதான்.
செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிலேடையாகவும் சிரிப்பாகவும் பேசத் தெரியாது என்று யார் சொன்னது?
source: http://adirainirubar.blogspot.in/2015/02/blog-post_26.html