மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும்
இக்பால் M.ஸாலிஹ்
[ ஒரு கால கட்டத்தில் “மக்க நகர் வீதிகளில் தனியொரு மனிதனாக ஓடி ஓடிப்போய் ஒவ்வொருவனிடமும் ஏகத்துவத்தை ஏந்தி நின்ற எளிய மனிதராக,
ஸபா மலைக் குன்றுகளில் ஏறி நின்று அக்கிரமக்கார அபூஜஹலுக்கும் அநியாயப் பெரியப்பன் அபூலஹபுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சத்தியத்தை எடுத்துச் சொன்ன சன்மார்க்க நபியாக,
உக்காஸ் சந்தைகளில்கூட ஒருவரையும் விடாமல் சுண்டியிழுக்கும் பேச்சுத் திறனாலும் தங்களின் தங்குதடையற்ற வாதத் திறனாலும் ‘வல்லவன் அல்லாஹ் ஒருவனே வணங்கத்தக்கவன்’ என்று ஓங்கி ஒலித்த ஒப்பற்ற தூதராக,
தாயிஃப் நகரத்தில் தனிமனிதராக நின்று கயவர்களின் கடுமொழியையும் காட்டான்களின் கல்லடியையும் ஏற்று நம் உள்ளமெல்லாம் துடிக்கும் வண்ணம், தங்கள் உதிரத்தையே வடித்து நின்று பொறுமைக்கே பெருமை சேர்த்த பூமான் நபியாக,
பத்ரிலும் கைபரிலும் ஹுனைனிலும் ஹுதைபியாவிலும் தீர்க்கமான முடிவு எடுத்துத் திறம்பட எதிர்த்து நின்று, பகைவர்களின் படை வென்று வாகை சூடிய வெற்றிகளின் வேந்தராக…
இப்படியெல்லாம், சரித்திரச் சாலைகளில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மாமன்னர் அதோ ஒரு சின்னஞ்சிறுமியின் சுண்டுவிரல் சுட்டும் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பசுந்தளிரின் சின்ன உலகத்தில் ஒரு நல்ல நண்பராக அவளோடு நடந்து செல்கிறார்! ஏனென்றால், அவர் மாமனிதர்! மனிதர்களின் ஒளி வீசும் வழிகாட்டி!]
மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும்
உம்மு காலித் ரளியல்லாஹு அன்ஹு: யார் இந்த உம்மு காலித்? உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினரா? இல்லை! உம்முல் முஃமினீன்களுள் ஒருவரா? நிச்சயமாக இல்லை! சத்திய மார்க்கத்திற்காக மாபெரும் தியாகங்கள் செய்த சஹாபிப் பெண்மணியா? இல்லவே இல்லை! அவள் சாதாரணமான ஒரு சிறுமி!
ஒரு வேளை, அவளுடைய தந்தைதான் சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் முஹாஜிர் அல்லது அன்சாரி சஹாபிகளுள் ஒருவரா? அதுவுமில்லை! அவரும் மதீனா நகரின் ஏனைய முஸ்லிம்களுள் ஒருவராக மஸ்ஜித் நபவீக்கு வந்து தொழுது செல்பவர்தாம். பிறகு, அமைதியின் தனி ஜோதியான அண்ணல் நபி அவர்களுக்கு எப்படி அத்தனை நெருக்கமானாள் இந்த உம்மு காலித்!
கருணையில் மெழுகைவிட உருகும் கண்ணியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குழந்தைகளைக் கண்டுவிட்டால், அந்தக் கள்ளமில்லாப் பிஞ்சுகளுடன் சேர்ந்து கொஞ்சிக் கொண்டே அவர்களும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாகி விடுவார்கள்! எப்போதும் மாடிப்படியிலிருந்து இலகுவாய் இறங்குவதைப் போல படுவேகமாக நடந்து செல்லும் பரந்த நெஞ்சம் கொண்ட பண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்துச் செல்லும்போது தெருவில் மழலைப் பட்டாளத்தைப் பார்த்துவிட்டால் மட்டும் தங்களின் வேகத்தைச் சுருக்கிக் கொண்டு மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்துச் சிறுவர்களுடன் சேர்ந்து சின்ன நடை நடப்பார்கள்! குழந்தைகளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதிலும் அக்கறையோடு அவர்கள் பாணியிலேயே அளவளாவுவதிலும் அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொன்றாக முத்தம் கொடுப்பதிலும் அந்த இஸ்லாமியச் சோலையின் இனிய மலர்களின் தலையில் கை வைத்து பிரியமாய் வருடிவிடுவதிலும் விஞ்சுகின்ற அன்பில் நெஞ்சம் நெகிழவைக்கும் நபிகளாருக்கு நிகர் அவர்களேதாம்!
இதையெல்லாம் அனுதினமும் கவனித்த உம்முகாலிதின் தந்தை காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, தம் அருமை மகளையும் அண்ணலின் அன்பான சபைதனில் அறிமுகப்படுத்தும் ஆசை வந்து, தருணம் பார்த்து ஒரு நாள் அதற்காக அன்பின் ஊற்று அண்ணல் நபியிடம் அனுமதியும் பெற்றுவிட்டார்!
அன்பினால் எதையும் மறுக்கத் தெரியாத இனிய நபிதான்! எனினும் இறைத் தூதருக்குத்தான் அனுதினமும் மூச்சுமுட்டும் அளவுக்கு எத்தனைப் பணிச் சுமைகள்!
தொழுகைக்குத் தலைமை தாங்கும் இமாமாக, அல்லாஹ்வின் வேதத்தைப் போதிக்கும் ஆசிரியராக, சிக்கலான வழக்குகளுக்குத் தீர்ப்பளிக்கும் சட்டச் சிற்பியாக, திண்ணைத் தோழர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழி வகுக்கும் வள்ளல் நபியாக, யூதர்களின் சூழ்ச்சிகளை எதிர்த்துச் சாதுரியமாக போராடக்கூடியவராக, ஒரு மாபெரும் வல்லரசின் ராணுவத் தளகர்த்தராக, ஆளும் திறமையில் அறிவின் ஆற்றல் நிறைந்த அற்புதமான ஆட்சியாளராக, முற்களை அள்ளி முகத்தில் எறிந்த முட்டாள்களிடம் பூக்களை எடுத்துப் புன்னகையுடன் கொடுப்பவராக, ஆயுத பலமில்லாமலேயே அதி உன்னதமான படைத் தளபதிகளை உருவாக்கும் மாமன்னராக, கடல் போன்ற படை முன்பு உடைவாளைக் கரமேந்தி நிற்கும் ஆபத்தான சூழலில்கூட போர்க்களத்தின் விதிமுறைகளை வகுத்தளித்த மனித உரிமையின் காவலராக, சமாதான சமுத்திரத்தின் அடியில் அபாயமான கண்ணி வெடிகள் கயவர்களால் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் தம் அபூர்வமான ஆட்சிக் கப்பலை ஆடாமல் அசையாமல் செலுத்திச் செல்லும் நேர்த்திமிகு மாலுமியாக……
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தரை மீதினில் பிறந்த அத்தனைக் குழந்தைகளையும் அளவுகடந்து நேசிக்கும் அன்பு மனம் கொண்ட அருள்மிகு அல்லாஹ்வின் தூதராகவே ஏந்தல் நபியவர்கள் ஆங்கே தோன்றி நின்றார்கள்!
அன்றிரவு உம்மு காலிதுக்குத் தூக்கம் தொலைந்து போனது! தந்தை சொன்னதைக் கேட்டுத் தலைகால் புரியவில்லை அந்தச் சின்ன மலருக்கு!
எத்தனை எத்தனையோ சின்னஞ் சிறார்களும் வயதில் பெரியவர்களும் இந்த மதீனா முனவ்வராவை நோக்கி அந்த மனிதரில் புனிதரைப் பார்க்கவும், அவர்களின் இனிய உரைகளைக் கேட்கவும், அந்த அறிவு ஜீவியிடம் ஆலோசனை கலக்கவும், மனம் விட்டுப் பேசி மனதாறிக் கொள்ளவும், பொங்கிப் பிரவாகம் எடுக்கும் அந்தக் கருணைச் சுனையிலிருந்து அந்த இதமான அன்பு அமுதத்தைக் கொஞ்சம் அள்ளிப் பருகவும், ஏன் – அவர்களின் உடையின் விளிம்புகளைக் கூடத் தொட்டு மகிழவும் சாரிசாரியாக அனுதினமும் மஸ்ஜித் நபவீயில் மன்னர் நபியைக் காண வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் எனக்கே எனக்குமட்டும் ஒருநாளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒதுக்கியிருக்கிறார்களா?
அடேயப்பா! இன்னும் அவளால் நம்ப முடியவில்லையே! மூடிய கண்களுக்குள் தூக்கம் வராமல் அண்ணலைப் பற்றி அடிக்கடி தன் தந்தை சொல்லும் வர்ணனைகளெல்லாம் வரிசை வரிசையாய் வந்து கொண்டிருக்கிறதே!
“தூரப் பிரதேசங்களுக்குச் சென்று களைப்பாகத் திரும்பும் வேளையில் கூட, வழியில் சின்னஞ்சிறார்களைப் பார்த்துவிட்டால் கொஞ்ச நேரம் அவர்களுடன் தங்கி இருந்து சிரித்துப் பேசி மகிழ்ந்தபின் தான் வீடு திரும்புவார்களாம்! சில சமயத்தில் அந்த மழலைச் செல்வங்களைத் தம் ஒட்டகத்தின் மீது சவாரி ஏற்றிக் கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வந்து கொண்டுவந்து விடுவார்களாம்!”
நபியவர்களுடன் ஒட்டகச் சவாரி செல்வதற்காகக் குழந்தைகள் உற்சாக மிகுதியால் போடும் ஆரவாரக் கூச்சல் உம்மு காலித் வீட்டு வாசற்படிவரைக்கும் கேட்பதுபோல் ஒரு பிரம்மை நம் உம்மு காலிதுக்கு!
அதோ வருகிறார்கள் மறைமணம் வீசும் மழலையர் நேசர்! பிள்ளைகளை சிநேகத்துடன் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு ஸலாம் சொல்கிறார்கள். அன்போடு தலையில் தடவி துஆச் செய்கிறார்கள். பிள்ளைகள் எல்லோரும் குதூகலத்துடன் குதித்து மகிழ்கிறார்கள்…. அத்தோடு தூங்கிப்போனாள் உம்மு காலித்!
அன்று அதிகாலை எழுந்ததிலிருந்து ஒரே பரபரப்பாக இருந்தாள் உம்மு காலித். இருந்த உடைகளில் சிறந்ததாய்த் தெரிந்த ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள். தந்தையைப் பார்த்து அடிக்கடி ‘இப்போது போகலாமா! இப்போது போகலாமா!’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.
ஒருவழியாக அவளுக்கு அந்த இனிய காலை நேரமும் வந்து சேர்ந்தது. அண்ணல் நபியின் பொன்முகத்தைப் பார்த்ததும் அந்தச் சின்னப் பூவின் வண்ணக் கண்களில் குதூகலம் கொப்பளித்தது. அவளது அளவுகடந்த மகிழ்ச்சியை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
கஸ்தூரி வாசம் கமழ்ந்து அங்கு வீசும் அண்ணலுக்கு அருகே அவள் அமர்ந்து கொண்டாள். அகில உலகங்களின் இரட்சகனாகிய அல்லாஹ் அனுப்பிய தூதருடன் அல்லவா நான் அமர்ந்திருக்கிறேன்! அதை நினைக்கும்போதே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள் உம்மு காலித். சிறிது நேரத்தில் செம்மல் நபியிடம் சிரித்துப் பேச ஆரம்பித்து விட்டாள். பேசினாள்… பேசினாள். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தாள்!
அவளின் மழலைப் பேச்சு, மானுடம் போற்றிடும் மன்னர் நபிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ‘நபியவர்களுக்கு எத்தனையோ முக்கியமான பணிகள் இருக்கும். நாயகத்தின் பொன்னான நேரமெல்லாம் உம்மு காலிதால் வீணாகின்றதே’ என்று தயங்கி நின்ற தந்தை காலித் ரளியல்லாஹு அன்ஹு இடம் “இவள் கெட்டிக்காரி! படுசுட்டிப் பெண்!” என்று பாராட்டவும் செய்தார்கள். அத்தோடு மட்டுமின்றி ‘உம்முகாலித் இன்று என்னோடு இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, அந்தச் சின்னச்சிறுமியின் பிஞ்சுக் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கத் துவங்கி விட்டார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
பள்ளிவாசல், கடைவீதி, பேரீத்த மரத்தோட்டங்கள், வயல் வரப்புகள், மைதானம் என்று அவள் விரும்பும் இடமெல்லாம் நபியுடன் சிரித்துச் சிரித்து வேடிக்கையாகப் பேசிக்கொண்டும் அவர்களோடு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டும் போய்க்கொண்டே இருந்தாள் உம்மு காலித்!
‘அழகிய முன்மாதிரி’ என்று அல்லாஹ் அறிவித்த அந்தப் பெருமானாரின் ஒரு நாளைய நபிப் பணி என்பது ஓராயிரம் ஆண்டுக்கு நிகரானது எனினும், அந்தக் கள்ளங் கபடமில்லாத வெள்ளை உள்ளத்தின் பிஞ்சுக் கைகளை விட்டும் தானாக உதறிவிட மனமில்லாத அந்தத் தனிப்பெரும் தலைவர்!
ஒரு கால கட்டத்தில் “மக்க நகர் வீதிகளில் தனியொரு மனிதனாக ஓடி ஓடிப்போய் ஒவ்வொருவனிடமும் ஏகத்துவத்தை ஏந்தி நின்ற எளிய மனிதராக, ஸபா மலைக் குன்றுகளில் ஏறி நின்று அக்கிரமக்கார அபூஜஹலுக்கும் அநியாயப் பெரியப்பன் அபூலஹபுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சத்தியத்தை எடுத்துச் சொன்ன சன்மார்க்க நபியாக, உக்காஸ் சந்தைகளில்கூட ஒருவரையும் விடாமல் சுண்டியிழுக்கும் பேச்சுத் திறனாலும் தங்களின் தங்குதடையற்ற வாதத் திறனாலும் ‘வல்லவன் அல்லாஹ் ஒருவனே வணங்கத்தக்கவன்’ என்று ஓங்கி ஒலித்த ஒப்பற்ற தூதராக, தாயிஃப் நகரத்தில் தனிமனிதராக நின்று கயவர்களின் கடுமொழியையும் காட்டான்களின் கல்லடியையும் ஏற்று நம் உள்ளமெல்லாம் துடிக்கும் வண்ணம், தங்கள் உதிரத்தையே வடித்து நின்று பொறுமைக்கே பெருமை சேர்த்த பூமான் நபியாக, பத்ரிலும் கைபரிலும் ஹுனைனிலும் ஹுதைபியாவிலும் தீர்க்கமான முடிவு எடுத்துத் திறம்பட எதிர்த்து நின்று, பகைவர்களின் படை வென்று வாகை சூடிய வெற்றிகளின் வேந்தராக’
இப்படியெல்லாம், சரித்திரச் சாலைகளில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மாமன்னர் அதோ ஒரு சின்னஞ்சிறுமியின் சுண்டுவிரல் சுட்டும் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பசுந்தளிரின் சின்ன உலகத்தில் ஒரு நல்ல நண்பராக அவளோடு நடந்து செல்கிறார்! ஏனென்றால், அவர் மாமனிதர்! மனிதர்களின் ஒளி வீசும் வழிகாட்டி!
அதற்குப் பிறகும் அந்தச் சிறுமியை மன்னர் நபியவர்கள் மறக்கவே இல்லை! அண்ணலின் அன்பை வெளிப்படுத்த நல்ல ஒரு நாளும் வந்தது. அந்த அன்புப் பரிசை பெற்று மகிழ்ந்த உம்மு காலிதின் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே அவளிடம் இல்லை!
உம்மு காலித் பின்த் காலித் ரளியல்லாஹு அன்ஹு பிற்காலத்தில் அதைப் பின்வருமாறு கூறுகிறார்:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அன்பளிப்பாக ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அழகிய, கண்ணைப் பறிக்கும் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை அது! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, மக்கள் மரியாதை நிமித்தம் பதில் பேசாமல் மெளனமாக இருந்தார்கள்.
தன்னலம் மறந்த தகைமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். உடனே சிறுமியாக இருந்த நான் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் எனக்கு அணிவித்து, ‘யா உம்மு காலித்! இதை நீ உடுத்திப் பழையதாக்கிக் கிழித்து நைந்து போகச் செய்துவிடு’ என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு என் பக்கம் திரும்பி, தம் கையால் சைகை காட்டி, ‘உம்மு காலிதே! இந்தப் பூக்கள் எத்தனை அழகு எனப் பார்த்தாயா? இது ‘சனாஹ்’, இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)’ என்று சொல்லலானார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட ‘ இது ‘சனாஹ்’ என்ற அபிசீனியச் சொல்லுக்கு ‘எழிலானது’ என்று பொருள்.
ஹஸன் இப்னு அலீய் ரளியல்லாஹு அன்ஹு:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது பேரர் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அளவுகடந்து நேசித்தார்கள். ஹஸனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்கள். குழந்தையைத் தங்கள் மார்போடு அணைத்துக் கொண்டும் தங்கள் தோள் மீது ஏற்றிக் கொண்டும் வெளியே வருவார்கள். ஹஸன் பின் அலீய் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அடிக்கடி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைக்கு ஏதேனும் சிறு துன்பம் என்றாலும் பதறிவிடுவார்கள். குழந்தையைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அருமை மகளார் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு வருகை தருவார்கள். அன்புச் செல்வங்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு இருவருமே தங்களின் பாட்டனாரை மிகவும் நேசித்தார்கள்.
சில சமயங்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் இருக்குபோது, பேரர்கள் இருவரும் திருத்தூதரின் முதுகின் மீது ஏறி அமர்ந்து கொள்வார்கள். ருகூஃ செய்து கொண்டிருக்கும்போது இறைத்தூதரின் இருகால்களுக்கிடையே புகுந்து விளையாடுவார்கள். அன்பின் பிறப்பிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேரர்களின் இந்த விளயாட்டுக்கெல்லாம் இடம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டிக்கவோ அதட்டவோ மாட்டார்கள்! அவர்கள் செய்யும் குறும்புகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு இருவரையும் இந்த உலகின் ‘இரு துளசி மலர்கள்’ என்று குறிப்பிடுவார்கள்.
பேரனின் மீது எந்த அளவுக்குப் பாசமும் கருணையும் கொண்டிருந்தார்கள் என்றால், ஒருநாள், சன்மார்க்கத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஜ்தாவில் இருக்கும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன் ஓடிவந்து நபியவர்களின் முதுகில் ஏறிக் கொண்டு ஒரு குதிரையின் மீதேறி சவாரி செய்வதுபோல் அதட்ட ஆரம்பித்தார்! நீண்ட நேரமாகியும் அவர் முதுகிலிருந்து இறங்கவில்லை. அவர் இறங்கும்வரை நபிகளார் அவர்கள் சஜ்தாவிலேயே இருந்தார்கள்.
அவர் இறங்கிய பிறகுதான் தொழுகையை முடித்தார்கள். ஒரு நபித் தோழர் வந்தார். ‘யா ரசூலல்லாஹ்! தாங்கள் சஜ்தாவிலேயே நீண்ட நேரம் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது! தொழுகையில் இருக்கும்போது தங்களுக்கு ‘வஹீ’ ஏதும் அருளப்பட்டதா? என்று வினவினார்.
‘இல்லை இல்லை. அப்படி ஏதும் இல்லை! என் பேரப்பிள்ளை அப்போது முதுகில் ஏறி இருந்தான். அவன் விளையாட்டை நான் தவிர்க்க விரும்பவில்லை!’ என்றார்கள் அன்பின் அமுதமான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டே!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சின்னஞ்சிறார்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் சொல்லுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்திப் பேசுவார்கள்.
மேலும், ‘(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீய் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருக்க, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கியும் உரை நிகழ்த்திய வண்ணம், ‘இந்த என்னுடைய புதல்வர் கண்ணியத்திற்குரிய தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்” என்று கூறிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்று அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தோற்றத்தில் தம் முன்னோர்களில், தங்களின் பாட்டனார் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் தங்களின் வழித்தோன்றல்களில், தம் பேரர் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் உருவத்தில் ஒத்திருந்தார்கள்.
இது குறித்து ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், சற்று விரிவாக வர்ணிப்பதைக் காண்போம்:
நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நன்மையின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, நான் அவர்களிடமிருந்து கேட்டு அவற்றை மனதில் மனனம் செய்துகொள்ள ஆசைப் பட்டேன். என் மாமா கூறினார்கள்:
அழகின் சிகரமான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் மற்றவர்களால் மிகவும் மதிக்கப் படுபவர்களாகவும் இருந்தார்கள். ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாந்த முகம் பவுர்ணமி இரவின் சந்திரன் போலப் பிரகாசித்த வண்ணம் இருக்கும். நடுத்தரமான உயரம் உடையவர்களைவிட சற்றுக் கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களைவிட சற்றுக் குறைவானவர்களாகவும் இருந்தார்கள். தலை நடுத்தரத்தைவிட சற்றுப் பெரிதாக இருந்தது. அவர்களின் தலை முடியோ அழகாய் சற்றுச் சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாய் வகிடு படிந்துவிட்டால் அதை அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையெனில் வகிடு எடுப்பதைப் பிரதானப் படுத்துவது இல்லை! முடி வளரவிட்டு காதின் சோனையையும் தாண்டி நிற்கும். மேனியோ அழகாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும்!
அறிவு படர்ந்த நெற்றி, அழகிய வில்லைப் போன்ற அடர்ந்த புருவங்கள், தனித்தனியான அந்த இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ளே ஒரு நரம்பு இருக்கும். கோபம் கொள்ளும்போது அது அப்படியே எம்பிக் கொள்ளும்! அவர்களை முதல் பார்வையில் காண்போர் மூக்கு நீண்டதாக நினைத்துக் கொள்வர்! ஆனால், நன்கு ஊன்றிக் கவனிக்கும்போது அதில் ஓர் ஒளி வீசிக் கொண்டிருக்கும். அதைத்தான் நீண்டதுபோல் நினைத்துக் கொள்வர்! எழில் என்றால் என்னவென்று பொருள் சொல்லும் அந்த ஒளிமயமான வட்ட முகத்தில் தாடி அடர்ந்திருக்கும். கன்னங்களின் மென்மையில் செவ்வரி படர்ந்திருக்கும். வாய் அகன்று இருக்கும். அதில் பற்கள் இடைவெளிவிட்டு இருக்கும். சிரிக்கும்போது முன்பற்கள் இரண்டும் பளிச்செனத் தெரியும்.
நெஞ்சில் இருந்து தொப்புள்வரை கோடு இழுத்தார்ப் போன்று முடி இருக்கும். மார்பிலும் வயிற்றிலும் அதிகமாக முடி இருக்காது. முழங்கைகள், தோள் புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதியில் முடியிருக்கும். கண்ணியத் தூதரின் கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட சிற்பம் போல அழகானதாய் அமைந்திருக்கும்! அன்பும் அரவணைப்பும் கொண்ட அண்ணலின் அனைத்து அவயவங்களும் கூடுதலோ குறைவோ இல்லாத நடுத்தரமானதாகவும் சதைப் பிடிப்புள்ளதாகவும் இருக்கும். வயிறும் நெஞ்சும் ஒரே மட்டத்தில் சமமானதாக இருக்கும்.
நெஞ்சு அவர்களின் மனதைப் போலவே படர்ந்து விரிந்து இருக்கும்! இரண்டு தோள் புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும். அவர்களின் மூட்டுக்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை.
முக்கியமாக இரு உள்ளங்கைகளின் மூட்டுக்களும் நீளமானவை. அத்துடன் உள்ளங்கைகள் அகன்று விரிந்திருக்கும். உள்ளங்கைகளும் பாதமும் சதைப் பிடிப்புடன் இருக்கும். பாதங்கால் சற்றுக் குழிந்து இரு பாதங்களும் சமமாக இருக்கும். பாதங்கள் மிருதுவாக இருப்பதால் அதன்மீது தண்ணீர் பட்டால் தங்குவது இல்லை! ஆடைகளை அகற்றும்போது மொத்த உடலும் ஒளி வீசிப் பிரகாசிக்கும்!
நடக்கும்போது கம்பீரமாக முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். பாதத்தை பலமாக எடுத்து மெதுவாக வைப்பார்கள். அதாவது, மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியை நோக்கி இறங்கி வருவதுபோல அவர்கள் நடை இருக்கும். எடுத்து வைக்கும் காலடிகள் அகலமாகவும் வேகமாகவும் இருக்கும். அன்பொழுகும் அழைப்பாளர் அண்ணலார் நடந்து வந்தால், அதற்கு ஈடு கொடுத்து தோழர்கள் ஓட வேண்டியிருக்கும்!
யாராவது அழைத்தால், திரும்பும்போது முகத்தை மட்டும் திருப்பாமல் நேர்கொண்ட பார்வையாக முழுமையாகத் திரும்புவார்கள். பண்புகளைப் பயிற்றுவித்த பண்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை பூமியைப் பார்த்தே இருக்கும். நடக்கும்போது, எப்போதும் அவர்களின் பார்வை வானத்தைப் பார்ப்பதைவிட பூமியைப் பார்ப்பதாகவே இருந்தது. எந்த ஒரு பொருளையும் நோக்கும்போது சாதாரணமாகவே பார்ப்பார்கள். தம் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் எளிமையாகப் பின்னால் வருவார்கள்!
தம்மைச் சந்திக்கும் எவருக்கும், பரந்த உள்ளம் கொண்ட பண்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே முந்திக் கொண்டு ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.
இந்த அழகம்சங்களை எல்லாம், தமக்கே உரித்தான கவித்துவ வர்ணனையில் இவ்வாறு சுருக்கமாக வரைந்து செல்கின்றார் அண்ணல் நபியின் ஆஸ்தான கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்:
“எக்கண்ணும் காணவில்லை
உனைப்போன்ற உருவத்தை-எந்நாளும்
எப்பெண்ணும் பெறவில்லை
உனைவிட அழகுருவை-இதுநாளும்
குற்றங்குறை ஏதுமில்லா தனிப்பிறவியே
உற்ற வடிவை நீயே எடுத்திங்கு வந்தாயோ!” என்று:
எனினும், வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் விரும்பி ரசித்த தலயாய வரிகள், புகழ்பெற்றக் கவிஞன் லபீத் பின் ரபீஆ உடைய கவிதையிலிருந்துதான்:
“அலா குல்லு ஷைஇன் மா ஃகலல்லாஹு பாதிலா” (அல்லாஹ் ஒருவனைத் தவிர அனைத்துப் பொருட்களும் அழியக்கூடியவையே!)
உமாமா பின்த் அபுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹா:
கருணையும் கனிவும் கொண்ட கண்ணியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் முதல் பேரக் குழந்தையான ‘உமாமா’ மீது மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்கள். உமாமா எப்போதும் தம் தாயாரும் அண்ணல் நபியின் மூத்த மகளுமான ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடனேயே இருந்துவந்தார். அருமைப் பேத்தி உமாமாவைத் தம் தோளில் சுமந்தவர்களாகப் பள்ளிவாசலுக்குச் சென்ற பசுமை குலுங்கும் பழமுதிர்ச் சோலைகளின் பங்காளர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதும்போதும் உமாமாவைத் தோளிலேயே வைத்திருந்தார்கள். ஓதும்போது சஜ்தா செய்யவேண்டிய சூழல் வரின், அவரைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சஜ்தாவிலிருந்து நிமிர்ந்ததும் மீண்டும் தோளில் வைத்துக் கொள்வார்கள்.
ஒருமுறை தம் மனைவியரும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களும் ஒன்றாய் அமர்ந்திருந்தபோது, அந்தச் சபையில் நுழைந்தார்கள் சன்மார்க்கத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். சற்று முன்னர் அன்பளிப்பாகக் கிட்டியிருந்த அழகிய வேலைப்பாடு நிறைந்த ஒரு ‘கோமேதக மாலை’ மஹ்மூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையில் மினுமினுத்தது! அங்கிருந்த அனைவருக்கும் ஸலாம் கூறியபின், கையில் இருந்த மாலையை அனைவருக்கும் தூக்கிக் காண்பித்து ‘என்னால் மிகவும் நேசிக்கப்படும் ஒருவருக்கு இன்று இதனைப் பரிசளிக்கப் போகிறேன்’ என்றார்கள்.
தங்கக் குணமேவும் நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதைத் தங்களுக்கே தரவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஏங்கினர்! உம்முல் முஃமினீன்களுள் சிலர் ஒருவருக்கொருவர் இரகசியமாகக் குசுகுசுக்கத் தொடங்கினர். “நிச்சயமாக, அதை அபூபக்ருவின் மகளுக்குத்தான் அல்லாஹ்வின் தூதர் அளிப்பார்கள்” என்று அனைவரும் நம்பினர்! எல்லோரையும் சற்று நேரம் திகிலில் ஆழ்த்திய பின்னர், தம் இதயம் நிறைந்த பேத்தி ‘உமாமா’ வை இனிமையுடன் அழைத்து, மாலையை அன்போடு அவர் கழுத்தில் அணிவித்தார்கள் அருமைப் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!
உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு:
அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மிகவும் நெருங்கிய அன்பு பாராட்டப்பட்ட மற்றொருவர் சிறுவர் உஸாமா! இவர் வாஞ்சை நபியின் வளர்ப்பு மகன் ஸைத் மற்றும் வளர்ப்புத்தாய் உம்மு அய்மன் (ரலி) ஆகியோரின் மகன். அவரது பெற்றோர் காரணமாகவும் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிப்பட்ட ஆழ்ந்த பிரியத்திற்கும் ஆளாகியிருந்த உஸாமா வீட்டினுள்ளும் அல்லது வாசலின் அண்மையிலும் பெரும்பாலும் காணப்படுவார்! ஆக, வளர்ப்பு மகனின் புத்திரன் எனினும், வீட்டில் எந்த வேறுபாடும் இல்லாமல் அவர் அண்ணலாரின் பேரனாகவே கணிக்கப்பட்டார்.
பல சந்தர்ப்பங்களில் உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸாமாவையும் ஹஸனையும் தம் கைகளில் பிடித்துப் பிரார்த்தித்தார்கள். ‘யா அல்லாஹ்! நான் இவர்களை நேசிக்கிறேன். நீயும் இவர்களை நேசிப்பாயாக!’
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது அந்திம காலத்தில் சிரியாவை நோக்கி அனுப்பிய பெரும்படைக்கு வயதில் மிகவும் சிறியவராயினும், தளபதியாக உஸாமாவையே நியமித்தார்கள். அஞ்சாத வீரம் கொண்ட உஸாமா, தியாகத்திலும் இறைத்தூதருக்குக் கட்டுப்படுவதிலும் தம் தாய் தந்தைக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் காட்டியிருக்கின்றார். பெரும்பெரும் மூத்த முஹாஜிர், அன்ஸாரி சஹாபாக்கள் எல்லோரும் எந்தவித மறுப்புமின்றி இவர் பின்னால் அணிவகுத்து நின்றார்கள் என்பதிலிருந்து அல்லாஹ்வின் தூதரிடம் இவர் பெற்றிருந்த அலாதியான தகுதி எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்!
மேற்குறிப்பிட்ட மழலைகள் மட்டுமின்றி, இவ்வுலகில் வாழும் அனைத்துக் குழந்தைகள் மீதும் அண்ணலார் அவர்கள் போன்று அளவு கடந்த அக்கறையும் அன்பும் பாசமும் வைத்திருந்த வேறு எவரையும் இந்த உலகம் இதுவரைக் கண்டதில்லை! மேலும் அந்த சிறார்களின் சிறு வயதை அலட்சியப் படுத்தாமல் அவர்கள் அனைவர்மீதும் தங்களின் அன்பு, பாசம், மென்மை, பெருந்தன்மை போன்ற நற்பண்புகளைக் கொண்டு நண்பர்களாக நடத்திக் காட்டி, மனிதர்களை மட்டுமல்லாமல், மழலைகளின் மனங்களையும் எளியவர்களின் இதயங்களையும் கவர்ந்த இறுதித்தூதராய் நல்லவர் மனங்களில் வீற்றிருக்கிறார்கள். இனியும் என்றும் இறுதிநாள் வரை வீற்றிருப்பார்கள், இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மத்.
source: http://adirainirubar.blogspot.in/2015/02/blog-post_19.html