சுவனத்தின் திறவுகோள் தொழுகை!
தொழுகையின் திறவுகோள் உளூ!
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட!
‘பிஞ்சுக்கால்களை கழுவும் சிறுவனின் அழகை ரசிப்பதா அல்லது அவனது செயலின் அழகை ரசிப்பதா? எத்தனையோ இளைஞர்கள், பெரியவர்கள் (அங்கச் சுத்தி) உளூ என்றால் என்னவென்றும் தொழுகையின் பக்கமும் வராமலிருக்கும் போது இந்த சிறுவன் எவ்வளவு அழகாக உளூ எடுக்கிறான் பாருங்கள்.
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 148)
“குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்”
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். (அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160)
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்’ என்று நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ என்றார்கள். (அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத், நூல்: புகாரீ 165)