Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்

Posted on April 7, 2015 by admin

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்

இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே, “உமருப் புலவர் காப்பியம் பாடியவர்; குணங்குடி மஸ்தான் மெய்ஞானக் கவிஞர் எனப் பலராலும் பாராட்டப் படுபவர்” என்பதுதான் நம்மில் பெரும்பாலோரின் கருத்தில் வரும்.

உமருப் புலவராயினும் குணங்குடி மஸ்தானாயினும் இன்னபிற தமிழ் முஸ்லிம் புலவர்களாயினும் அவர்கள் அனைவரும் இயற்றிய அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணான குப்பைகள் என்றெல்லாம் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு ஒதுக்கித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.

அவர்களின் பாடல் தொகுப்புகளில் பல நல்ல கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விரோதச் சங்கதிகளும் அவற்றுள் அடங்கிக் கிடக்கின்றன.

இவர்களுடைய பாடல்களின் ‘சிறப்பம்சங்கள்’ பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல வால்யூம்களில் எழுதியும் வந்திருக்கிறோம். நாளடைவில் இக்கவிஞர்களை “நாதாக்கள்; வலீயுல்லாக்கள்” எனப் போற்றிப் புகழ்ந்தது போதாதென்று இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் சிலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புலவர்கள், “வலீயுல்லாக்கள்-இறைநேசர்கள்” என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகத்துக்கு இனங் காட்டப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வலீயுல்லாப் புலவர்களின் ஒட்டுமொத்த எல்லாப் பாடல்களுக்கும் ஒரு ‘விலாயத்’ எனும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு அவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று பலரால் அணுகப் படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

இங்கு நாம் இந்தப் புலவர்களின் இறைநேசம் பற்றிப் பேசவரவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. இவர்களுடைய பாடல்களாக நமக்குக் கிடைப்பவற்றை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துகள் இப்புலவர்களால் பாடப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. “இப்புலவர்களின் எல்லாப் படைப்புகளும் கொள்ளத் தக்கவை அல்ல; அவற்றுள் தள்ளத் தக்கவையும் இடம்பெற்றுள்ளன” என்பதை எடுத்துச் சொல்வதே நம் நோக்கமாகும்.

“நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இவற்றைப் பாடிய நாதாக்கள் – ஸூஃபிகள் – வலியுல்லாக்கள் சாமானியமானவர்களா என்ன? கால் குழியிலேயே கஅபத்துல்லாவை தரிசித்தவர்களல்லவா அவர்கள்?” போன்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள், நமது விளக்கங்களைத் தீண்டத் தகாதவையாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர், “அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலுங்கூட அவற்றை நாமே ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?” எனக் கேட்கின்றனர். “நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளைத் தோண்டித் துருவி எடுத்தெழுதும் கோடாறிக் காம்புகளாக நாமே மாறிவிடுவதா?” எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள புழுதிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற – சாகடிக்கின்ற இத்தகையக் கவிதைகள் பல ‘இஸ்லாமிய இலக்கியம்’ எனும் போர்வையில் உலா வரும்போது, அவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன? என்பதை இனிக் காண்போம். அவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.

“அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும் நீங்கி விட்டனர்.

‘முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்’ – அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 – பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான ‘தொண்டியார் பேட்டை’, இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நாகூர் ஷாஹுல்ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

இவருக்குக் ‘குணங்குடியார்’ என்ற பெயர் ஏன் வந்தது? இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:

ஆண்டவன் என்செய்வானோ – குணங்குடி

ஆண்டவன் என்செய்வானோ
ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ
தீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ
எனப் பாடுகிறார்.

நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே
எனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.

சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே
எனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.

இனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:

ஐயன் குணங்குடியானை அன்றி வேறு
உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்
ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்
என்னுள்ளாய்க் காணேன்
ஐயன் குணங்குடியானே யானே
என்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்
குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே
என அமைகிறது பாடல்.

ஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ஒரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, “எல்லாரும் அல்லாஹ்வே” என்ற கொள்கையை – வஹ்தத்துல் உஜூத் – எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.

இதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.

“ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு …” எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே
வானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே
வளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.

“ஊனாகி, ஊனில் உயிராகி …” எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

“இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி … என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்” என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது ‘இசுலாமியத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுகம்’ எனும் நூலில் ‘ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு’ எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

“அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்” எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

“(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். … மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை” (அல்குர்ஆன் 112: 1-4).

“அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்” (அல்குர் ஆன் 42: 11).

இறைவனைத் தவிர உள்ள மற்றெல்லாமும் அவனது படைப்புகளே. அவனே படைப்பாளன். மற்றவை அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப் படைப்புகளின் எல்லா இயக்கங்களையும் படைத்தவனாகிய அந்த அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்குகின்றான்; நன்கு செவியுறுகிறான்.

இஃது இங்ஙனமிருக்க, குணங்குடி மஸ்தானோ படைப்புகள் யாவும் அல்லாஹ்வாகவே இருப்பதாகப் பிதற்றுகிறார். அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம் இருப்பதாகக் கூறி இஸ்லாத்தைப் பரிகசிக்கிறார். மஸ்தான் எனும் இந்தப் பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக் குருநாதர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆவார். முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை இவர் அல்லாஹ்வுக்கு இணையானவர் என்றே கருதுகிறார், கதை விடுகிறார். இவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றில் ‘குணங்குடி ஆண்டவன்’ என்று இவர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையே சுட்டுகிறார்.

‘குணம்’ என்பதை அல்லாஹ்வாகவும் அந்த அல்லாஹ்வாகிய குணம் முழுவதையும் தன்னுள் குடியிருத்திக் கொண்டவர் முஹைதீன் அப்துல் காதிர் எனவும் கருதுகின்றார் குணங்குடி மஸ்தான். எனவேதான் “குணங்குடி வாழும் முஹையித்தீனே!” என, பாட்டுக்குப் பாட்டுப் பாடிச் செல்கிறார்.

அதாவது, முஹையித்தீன் அப்துல் காதிரிடம் அல்லாஹ்வே குடியிருந்தான் என்ற அத்துவைதக் கோட்பாடுடையவர் இந்த வழிகெட்ட கவிஞர். அத்துவைதம் என்றால் என்னவென்று இங்குத் தெரியக் கடமைப் பட்டிருக்கிறோம்.

‘துவைதம்’ என்பதன் எதிர்ச் சொல்லே ‘அத்துவைதம்’ ஆகும். ஆண்டவன் (பரமாத்மா) வேறு; அடியான் (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும் தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும் கலக்க முடியாதவை என்னும் கொள்கையே ‘துவைதம்’ எனப்படும். இந்தக் கொள்கையின்படி ஆண்டவன், எப்போதும் ஆண்டவனேதான். அடியான், எப்போதுமே அடியானேதான். அடியான் எவ்வளவுதான் புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டு எம்பிக் குதித்தாலும் – அதிகபட்சம் – ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான் ஆகமுடியுமேதவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது.

ஆனால், இதற்கு நேர் மாற்றமான கொள்கையைக் கொண்டுள்ளது அத்துவைதம் ஆகும். ஆண்டவனும் (பரமாத்வாவும்) அடியானும் (ஜீவாத்மாவும்) வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றேதான் என்பதே அத்துவைதக் கோட்பாடாகும். இந்த அத்துவைதக் கோட்பாட்டுக்காரர்கள் ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள் நம்பும் அடியார்களையும் ஆண்டவனாகவே காண்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக் கோட்பாடு, பல வடிவங்களில் பாரெங்கும் பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித் தத்துவங்களும் நம் நாட்டு சைவ-வைணவச் சித்தாந்தங்களும் இந்த அத்துவைதக் கோட்பாடுகளையே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள் காலத்துக்குப்பின் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடலாயினர். அதற்கு அடிப்படையான காரணம், இந்த அத்துவைதக் கொள்கைதான். அல்லாஹ் வேறு, அடியார் வேறு என்பதல்ல; அல்லாஹ்வும் அடியாரும் ஒருவரேதான் என்று அம்மக்கள் எண்ணலாயினர்.

எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்கூட இந்த ஸூஃபி அறிவிலிகள் அத்துவைதச் சிலுவையில் அறையத் தவறவில்லை. அவரையும் கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம் இன்று பெரும்பான்மை ஜனத் தொகையினராவர்.

இந்த அத்துவைதக் கோட்பாட்டை அடித்துத் தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக இறைவனால் நபியாக அனுப்பப் பட்டவர்கள்தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். அவர்கள் தம் காலத்திலேயே இந்தத் தூய பணியை நிலை நிறுத்தி, அதில் மகத்தான பெருவெற்றியும் கண்டார்கள். அத்துவைதத்துக்கு அடிகோலக் கூடிய சிலைகள் தகர்ந்தன. தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள் தவிடு பொடியாயின. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் கொள்கை ஓங்கி வளர்ந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார் எவருமிலர். இருப்பினும் அவர்கள்கூட அல்லாஹ்வின் அடிமையாகிய அடியார்தாம் என்பதை இஸ்லாம் மிக அழுத்தந் திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக் கூறியுள்ளது.

நம்முடைய ஈமானைப் பறை சாற்றும் உயிர்க் கலிமாவின் உன்னத வாசகங்களைப் பாருங்கள்:

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியுரைக்கிறேன். அவன் ஏகன்; அவனுக்கு இணை கிடையாது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சமாக அவனுடைய அடியாரும் தூதருமாவார் எனவும் சாட்சியுரைக்கிறேன்.

இதுதான் நமது மூல மந்திரத்தின் முழுப் பொருளாகும்.

இந்தக் கலிமாவில் அல்லாஹ் யார்? நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் யார்? என்பது மிகத் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப் பட்டுள்ளனர். அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள் இரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பான தன்மைகள் இரண்டும் இங்குப் பளிச்செனக் காணக் கிடக்கின்றன.

அல்லாஹ் ஒரே ஒருவன்தான். அவனுக்கு எத்தகைய கூட்டும் இல்லை என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தாம்; அவர்கள் அவனுடைய தூதராயிருக்கிறார்கள் என்பது நபிகளாரின் சிறப்பியல்புகளாகும்.

இந்தக் கலிமா, அத்துவைதக் கோட்பாட்டைப் புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல் இல்லையா? ஆம். அதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களுமான ஸஹாபாப் பெருமக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர் வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களே அல்லாஹ்வின் அடியார்தாம் என்பதை நாம் சாகும் தறுவாயிலுங்கூட நினைவில் இருத்தத் தவறக் கூடாது.

இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ் வந்து குடியிருந்து கொண்டான் என்றும் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ்தான் அல்லது அல்லாஹ்வின் ஒரு கூறுதான் என்றும் எவராவது கருதுவாரானால் அவர் கலிமாவைச் சரியாக விளங்காத பித்தராகத்தான் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம் பேசுவதே மாபெரும் பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக் கொண்டு அல்லாஹ்வுடன் கூட்டாக்கி அத்துவைத அவியல் சமைப்பது எவ்வளவு தவறான செயல்?

source: http://wahhabipage.blogspot.in/

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”ஏகத்துவ முழக்கம்”

o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.

o மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?”

o உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.

o “அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு “இம்மை-மறுமை”யில் வெற்றி கிடையாது.

o “அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்” இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. “அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்”, இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. “பித்அத்”-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.

o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.

o யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர்

(இந்த விபரங்கள் அனைத்தும் அவர்கள் எழுதிய “ஃபுதூஹுல் ஃகைப்”, ஃபத்ஹுர் ரப்பானி ஆகிய நூல்களில் அடங்கியுள்ளன.)

குனங்குடி மஸ்தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நூல்களை பார்த்திருந்தால் அவரிடமிருந்து தப்பான உளரல்கள் இருந்திருக்காது என்று எண்ணத்தோன்றுகிறது.

”ஈமான் ஒரு பொக்கிஷம்”. அதனை முஃமீன்களிடமிருந்து பறித்து விட்டெரிய முயலும் ஷைத்தானின் அனைத்து முயற்சிகளிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்.

“தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். மாயக்காரன் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். அவன் பகிரங்க விரோதி (அல்குர்ஆன்)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb