கடல் பயணம் கற்றுத்தரும் பாடம்
ரஹ்மத் ராஜகுமாரன்
உலகின் பிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் விமானப் பயணங்களைத்தான் விரும்புவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர்கள் விரும்புவது கப்பல் பயணம் தான் என்று ஒரு புள்ளி விபரம், பெரும் புள்ளிகளைப் பற்றி ஆய்வு செய்து கொடுத்துள்ளது.
உண்மையில் விரைவாக முடிக்கக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே விமாங்களை நாடுகிறார்கள். மற்றபடி அவர்கள் விரும்பிச்செல்லும் பயணம் கப்பல் பயணமே! கப்பலில் பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு மிக எளிதாக அமைந்து விடுகிறது. இப்படி கோடீஸ்வரர்களை ஏற்றிக்கொண்டு கடலில் வலம் வரும் கப்பலுக்கு “யாட்” என்று பெயர்.
இந்த யாட்களில் முக்கியமானது “ஆக்டோபஸ்” என்பது. இந்தக் கப்பல் மைக்ரோ ஸாஃப்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலனுக்கு சொந்தமானது. இது உலகின் எட்டாவது மிகப்பெரிய கப்பல். இதில் இரண்டு ஹெலிகாப்டர்களுடன் ஏழு படகுகளும், ஒரு குட்டி நீர்மூழ்கிக் கப்பலும் உள்ளன.
“ரைசின் சன்” என்றொரு கப்பல் இருக்கிறது. இதன் மதிப்பு 2 ஆயிரம் கோடி டாலர். ஆக்டோபஸ் கப்பலுக்கு போட்டியாக வடிவமைத்திருக்கிறார் இத உரிமையாளரான லோரி எல்லிஸன்.
“அல்லாஹ்வினுடைய அருட்கொடைகளைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்துவோர் அனைவருக்கும், நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 31:31)
ஒரு பெரிய செல்வந்தன் வியாபார விஷயமாக வெளிநாடு போனவன், கப்பலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.. கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென்று கடல் கொந்தலிக்கிறது. கப்பலையே கவிழ்த்துவிடும் அளவுக்கு அலைகள் எழும்புகின்றன. சூறாவளி வீசுகிறது.
“ஆண்டவா! என்னை நீ பத்திரமாக கரை சேர்த்தால் என் பங்களாவை விற்று ஏழைகளுக்கு தானமாக கொடுக்கிறேன்’ என்று பதட்டத்தோடு வேண்டிக் கொள்கிறான்.
கொஞ்ச நேரத்தில் ஆசரியப்படும்படியாக புயல் சுத்தமாக ஓய்ந்து விடுகிறது. கப்பல் நல்லவிதமாக கரை சேர்கிறது
செல்வந்தன் இப்போது நினைக்கின்றான், “சே! நமது பங்களாவை விற்று ஏழைகளுக்கு தானம் கொடுப்பதாக அவசரப்பட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு விட்டோமே! என்ன செய்யலாம்?”
ஊரை அடைந்ததும் கடற்பயண வாக்குறுதி விரட்டிக்கொண்டே இருந்தது. தனது பங்களாவை விற்கப்போவதாக அறிவிக்கிறான்.
வசதிபடைத்தவர்களெல்லாம் அந்த பங்களாவை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வீட்டின் முன் குவிகிறார்கள்.
அப்போது அந்த செல்வந்த சொல்கிறான், “என் பங்களாவின் விலை ஒரு ரூபாய்!” இடைக் கேட்டதும் கூடியிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சி! ப்ளஸ் ஆச்சரியம்!! “கடல் பயணம் இவனை பைத்தியாக்காரணாக்கிவிட்டதோ!”
அப்போது நமது செல்வந்தன் ஒரு நிபந்தனை விதிக்கிறான்.
“என் பூனையை யார் வாங்குகின்றாரோ, அவர்களுக்குத்தான் நான் என் பங்களாவையும் விற்பபேன்!”
சரி, “பூனை என்ன விலை?”
“ஒரு கோடி ரூபாய்!”
பங்களாவை வாங்க வந்தவர்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால், பங்களா நிச்சயமாக ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ளது என்பதால், வந்திருந்தவர்களில் ஒருவர் பங்களாவை ஒரு ரூபாய்க்கும், பூனையை ஒரு கோடி ரூபாய்க்கும் வாங்கிக் கொள்கிறார்!
பணத்தை வாங்கிக்கொண்ட நமது செல்வந்தன் ஒரு பிச்சைக்காரனுக்கு அந்த ஒரு ரூபாயை தானம் செய்துவிட்டு, ஆண்டவனிடம் சொல்கிறான்,
ஆண்டவா! உன்னிடம் நான் வேண்டிக்கொண்டபடியே என் பிரார்த்தனையில் நான் கொடுத்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றிவிட்டேன். பங்களாவை விற்ற பணத்தை ஏழைக்கு தானம் செய்து விட்டேன்!”
“இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்ப மாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள். (அல்குர்ஆன் 17: 67,68)
மக்கா வெற்றியின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அபூ ஜஹ்லின் மகன் இக்ரிமா தப்பியோடினார். அவ்வாறு ஓடிச்சென்ற இக்ரிமா, எத்தியோப்பியா (அபிசீனியா) செல்லும் நோக்கில் கடற்பயணத்தை மேற்கொண்டார். கடற்பயணத்தின்போது கடலில் பெரும் புயல் காற்று வீசத்தொடங்கிட்யது.
அப்போது கப்பலில் இருந்தோர், “ஏக இறைவனை அழைப்பதைத்தவிர வேறு உங்களுக்கு வேறெந்த வழியும் கிடையாது” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
அப்போது இக்ரிமா, “கடலில் அவனையன்றி வேறெவரும் உதவ முடியாது என்றிருந்தால், கரையிலும் அவனையன்றி வேறெவரும் உதவ முடியாது” என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
மேலும், “இறைவா! உன்னிடம் வாக்குறுதி அளிக்கின்றேன். இதிலிருந்து என்னை நீ காப்பாறினால் நிச்சயமாக நான் நேராக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அவரது கரத்தில் என் கரத்தை வைத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வேன். நான் அவரை பேரன்புடையவராகவும், இரக்கமுடையவராகவும் கான்பேன்” என்றும் சொல்லிக்கொண்டார்.
இறுதியாக அம்மக்கள் கடற்பயணத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். இறைவனிடம் கொடுத்த வாக்குறுதியின்படி இக்ரிமா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, இஸ்லாத்தை ஏற்று இறுதி வரை நல்ல முஸ்லிமாகவே வாழ்ந்தார்.
கடலில் பயணம் செய்வதற்கு வசதியாக கப்பலை தன் அடியார்களுக்கு அல்லாஹ் வசப்படுத்தியுள்ளான். அதுவும் நவீன விஞ்ஞான உலகில் பல கப்பல்களை வசப்படுத்தித் தந்துள்ளான். தன் அடியார்களின் நலன்களுக்காக கப்பல் பயணத்தை அல்லாஹ் எளிதாக்கியுள்ளான்.
இக்கப்பல்கள் மூலம் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணித்து வணிகம் செய்து இறைவனின் அருளை தேடிக்கொள்ள முடியும் என்பதாக குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
“(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17: 67)
ஒரு ஞானி பல மாதங்களாக கடற்பயணத்தை மேற்கொண்டுவிட்டு தன் தாயகம் திரும்பினார். அவரிடம் மக்கள், “கடற்பயணத்தில் நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்?” என வினவினர்.
அதற்கு அந்த ஞானி “கடலிலுள்ள மீன் எனக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத் தந்தது.
அந்த மீன் என்னிடம் சொன்னது, “கடலின் உப்புத் தண்ணீரில் நான் மூழ்கி இருந்தாலும் என் உடலுக்குள் இந்த உப்பு செல்லவில்லை. நீங்கள் துன்யாவிற்குள் மூழ்கி இருந்தாலும் துன்யாவின் ஆசை உங்கள் கல்புக்குள் நுழைந்துவிட வேண்டாம்” என்ற உயரிய பாடத்தை மீன் எனக்கு கற்றுத் தந்தது” என்றார்.
இன்ஷா அல்லாஹ் நாம் மேற்கொள்ளும் கடற்பயணங்கள் நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தரட்டும்.