உம்மத்தே முஹம்மதிய்யாவின் தனிச்சிறப்பு
மவ்லவீ, ஹாஃபிள்,ஜே.ஏ.நைனார் முஹம்மது பாகவி
உலகில் பற்பல உம்மத்துகள் வாழ்ந்தாலும் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தனிப்பெரும் சிறப்பம்சங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
o ஏனைய உம்மத்துகள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தொழ முடியும். தவறியதை அங்கு வந்தே களா செய்ய வேண்டும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு சுத்தமான பூமி முழுவதையும் அல்லாஹ் தொழும் இடமாக ஆக்கியுள்ளான்.
o ஏனைய உம்மத்துகள் தண்ணீரால்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தண்ணீர் கிடைக்காதபோது சுத்தமான பூமியில் தயம்மம் செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான்.
o ஏனைய உம்மத்துகளின் ஆடையில் அசுத்தம் பட்டால் அவ்விடத்தை வெட்டிவிட வேண்டும். உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு அவ்விடத்தை கழுவினாலே போதுமானது.
o ஏனய உம்மத்துகளின் மார்க்கத்தை இறைவன் மாற்றி விட்டான். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவின் மார்க்கத்தை கியாமத் நாள் வரை நிலைக்கச் செய்தான்..
இது குறித்து…
“இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கி விட்டேன்” (அல்குர்ஆன் 5:3) என்று இறைவன் கூறியுள்ளான்.
o ஏனைய உம்மத்துகளில் சிலதை கடுமையான சட்டங்களிலும், சிலதை சலுகையான சட்டங்களிலும் இறைவன் அமைத்தான். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு நடுநிலையான சட்டங்களை வழாங்கி நடுநிலைச் சமுதாயமாக சிறப்பித்தான்.
இது குறித்து…
“உங்களை நடுநிலையான உம்மத்தாக ஆக்கினோம்” (அல்குர்ஆன் 2:143) என்று இறைவன் இயம்பியுள்ளான்.
o ஏனைய உம்மத்துகள் தவறுதலாக ஒரு பொருளை ஹலால், ஹராம் ஆக்கியதற்கு உடனே தண்டனை இறங்கியது. ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யா தவறுதலாக, மறதியாக செய்ததை இறைவன் மன்னித்து சிறப்பித்துள்ளான்.
o ஏனைய உம்மத்துகள் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போல ஆக முடியாது. ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யா ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகனை போன்று ஆகிவிடுவார்கள்.
o ஏனைய உம்மத்துகள் போரில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட கனீமத் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அதை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து வைப்பார்கள். வானத்திலிருந்து நெருப்பு இறங்கி அதை கரித்து விடும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு கனீமத் பொருட்களை பயன்படுத்துவதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான்.
இதைப் பற்றி…
“நீங்கள் போர்ச்செல்வமாக பெற்றதிலிருந்து ஹலாலான பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள்” (அல்குர்ஆன்) என்று இறைவன் கூறியுள்ளான்.
யூதர்கள் மார்க்கத்தை விளையாட்டாக, விற்பனையாக, அநீதமாக ஆக்கிக்கொண்டதால் நல்லவற்றை அல்லாஹ் அவர்களுக்கு ஹராமாக ஆக்கினான்.
“யூதர்களின் அநியாயத்தின் காரணத்தினால் அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏராளமானவர்களை தடுத்த காரணத்தினால் அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட நல்லவற்றை அவர்களின் மீது ஹராமாக ஆக்கிவத்தோம்.” (அல்குர்ஆன் 4:160) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
இதன்படி யூதர்களுக்கு வாத்து போன்ற கால் விரியாதவையும், கொழுப்புக்களும் ஹராமானவை. ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு இவற்றை அல்லாஹ் ஹலால் ஆக்கி மேன்மைப்படுத்தினான்.
இது பற்றி…
“இன்று முதல் பரிசுத்தமானவை உங்களுக்கு ஹலாலாக் ஆக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 5:5)
யூதர்கள் மாதவிடாய் பெண்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தாம்பத்ய உறவைத் தவிர மற்றவற்றை அனுமதித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.
o ஏனைய உம்மத்தினர்கள் பாவங்கள் செய்தால், அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் அவர்களின் உருவங்களை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றப்படும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு அந்த இழிநிலை ஏற்படாது. இவ்வாறு உம்மத்தே முஹம்மதிய்யாவை இறைவன் சிறப்பித்துள்ளான்.
o ஏனைய உம்மத்துககள் ஒரு நன்மை செய்தால் ஒரு நன்மை. ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யா ஒரு நன்மை செய்தால் பத்து, எழுபது, எழுநூறு இவ்வாறு மனத்தூய்மையின் படி பன்மடங்காக வழங்கப்படும்.
இன்னும் ஏராளமான தனிச்சிறப்புகள் உம்மத்தே முஹம்மதிய்யாவுக்கு குவிந்துள்ளன.
நன்றி: “குர்ஆனின் குரல்” டிசம்பர் 2011