தேர்வுக் கூடம்!
நல்லம்பல் – ஷேக் அலாவுதீன்
“காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 103:1,2)
இவ்வுலக வாழ்வோடு எல்லாம் முடிந்து விட்டது என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்படியானால் மனித வாழ்வில் ஏன் பல பாகுபாடுகள்?
பணக்காரர்கள், பிச்சைக்காரர்கள், நியாயவான்கள், அநியாயக்காரர்கள், முதலாளி, தொழிலாளி, இப்படி பல பாகுபாடுகள் ஏன்? எல்லோரும் ஒரே மாதிரியல்லவா இருக்கவேண்டும்! சாத்தியமில்லையே ஏன்?
பணக்காரர்கள் என்ன, கொடுத்து வைத்தவர்களா? பிச்சைக்காரர்கள் என்ன, ஏமாளிகளா?
சிலர் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் சிலர் அநியாயத்திலேயே ஊறித் திளைப்பவர்களாகவும் ஏன் இருக்க வேண்டும்?
சிந்தித்தால், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியானால் நிச்சயமாக இவைகளுக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்க வேண்டும் என்பதை சிந்திப்போர் விளங்க முடியும்.
”உங்களில் எவர், செயல்களில் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக(வே) அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்” (அல்குர்ஆன் 67:2)
இவ்வுலக வாழ்வு மனிதனுக்கு ஒரு தேர்வுக்கூடமேயல்லாமல் வேறில்லை. இது நிரந்தரமற்ற வாழ்க்கைதான் என்பது மெற்கண்ட ஆயத்தின் மூலம் தெளிவாகிறது. மனிதன் இவ்வுலகில் செய்யும் நல்ல அல்லது கெட்ட செய்கைகள் அனைத்தும் மரணத்தின் மூலம் முற்று பெற்றுவிட்டாலும் மறுமையில் அதற்கான தகுந்த கூலி நிச்சயம் உண்டு.
“அந்நாளி(மறுமையி)ல் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநியாயமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.” (அல்குர்ஆன் 40:17)
அல்லாஹ் மனிதனைத் தன் சுய விருப்பப்படி இயங்க இவ்வுலகில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கின்றான்.
“(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! இந்தச் சத்திய(வேத)ம் உங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ளது. ஆகவே விரும்பியவர் இதில் நம்பிக்கைக் கொள்ளட்டும்; இன்னும் விரும்பியவர் நிராகரிக்கலாம்.” (அல்குர்ஆன் 18:29)
“இப்படிப்பட்ட சுதந்திரத்தை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கி, மனிதன் தன் ரப்பை நினைத்து அவனை வணங்கி வழிபடுவதும், வழிபடாமலிருப்பதும் மனிதனுடைய சுய விருப்பத்திற்கு விட்டுவிட்டாலும், ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை வணங்கி வழிபடுவதற்காக(வே) அல்லாமல் நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)
என்று மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளான். அது மட்டுமல்லாமல் நபிமார்கள் மூலமாகவும், வேதங்களின் மூலமாகவும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதை மனிதனுக்கு அறிவுறுத்திக் காட்டி அவன் நேர்வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிவகுத்துத் தந்துள்ளான்.
ஆனால் பெரும்பாலான மனிதர்களோ, தம்மைப் படைத்து, பாதுகாத்து, தனக்கு நேரான வழியையும் வகுத்துக் கொடுத்துள்ள அந்த மகத்தான ரட்சகனைப் பற்றி சிந்திப்பதில் சிறிதேனும் அக்கரைக் கொள்வதில்லை! மாறாக இவ்வுலக நிலையற்ற வாழ்வின் மாயையிலும், ஷைத்தானுடைய சூழ்ச்சியாலும் சிக்கி இரட்சகனுக்கு மாறு செய்வதிலும் அவனை நினைவு கூற கூட நேரமில்லா வகையில் பொருளைச் சேர்ப்பதிலும், மாட மாளிகைகள் அமைத்து பெருமைப்படுவதிலும், தான்தோன்றித்தனமாக வாழ்வதிலுமே பெரும்பாலான மனிதர்கள் காலத்தைக் கழித்துக் கொண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையில் மரணம் விதிக்கப்பட்டுவிட்டுது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு நாள் பொழுது (இபாதத் இல்லாமல்) வீணாகப் போவதினால் தன் மரணத்தை நோக்கி ஒரு நாள் முன்னேறி விட்டோம் என்பதை மனிதன் ஒரு நிமிடமாவது சிந்திப்பானேயானால் இப்படி வீணான விஷயங்களில் ஈடுபட்டுப் படைத்தவனை மறந்து பொழுதை போக்கிக் கொண்டிருக்கமாட்டான். பொருளை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டிருப்பதிலையே ஈடுபட்டிருக்கமாட்டான். மாறாக மறுமைக்குத் தேவையானதையும் மறக்காமல் செர்த்துக் கொண்டிருப்பான்.
“மனிதனே! நிச்சயமாக நீ உன் ரப்பிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய். பின்னர் அவனை சந்திப்பவனாக இருக்கின்றாய் (என்பதை மறந்து விடாதே)” (அல்குர்ஆன் 34:6)
மனிதன் சுதந்திரமாக சுயமுடிவுப்படி இயங்குவது எல்லாம் மரணத்துடன் முற்றுப்பெற்றுவிடும் அதன் பின்னர் அவன் “”தவ்பா”” நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆகவே சகோதர, சகோதரிகளே! உங்கள் சுதந்திரம் பறிக்கப்படுமுன் அல்லாஹ்வைப் பற்றி சிந்தியுங்கள் அல்லாஹ்வும், அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்துள்ள அந்த நேரிய வழியில் வாழ ஆயத்தமாகுங்கள்.
இவ்வுலக தேர்வுக் கூடத்தில் நீங்கள் பரீட்சை எழுத குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களையும் கவனமாகப் படித்து, சிந்தித்து அதன்படி உங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு வழி தவறாமல் வாழ்ந்து இறந்து விட்டீர்களேயானால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியால் சுவனத்திற்கு “பாஸ்” ஆகிவிடுவீர்கள்.
குர்ஆனையும், ஹதீஸையும் விட்டுவிட்டு, கிஸ்ஸாக்களையும், அப்பா, மஸ்தான் பாடல்களையும், மெளலூதுகளையும், புரு(டா)தா போன்ற கப்ஸாக்களையும் படித்துக் காலத்தை வீண் விரயம் செய்து கொண்டிருந்தீர்களேயானால், நிச்சயமாக படைக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகாமல் மறுமைக்கான பரீட்சையில் படுதோல்வி அடைந்தவர்களாவீர்கள் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ்களை(மட்டும்) சரியாக விளங்கிப் பின்பற்றி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தில் வெற்றிபெற்ற கூட்டத்தில் ஆக்கியருள்வானாக! ஆமீன்.