இதிலென்ன வெட்கம்?
திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான்.
அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.
அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி வராண்டாவின் ஓர் ஓரத்துக்கு இருவரும் நகர்கின்றனர்.
மெல்லிய குரலில் மணமகன் மணமகளின் அண்ணனிடம் சில விஷயங்களைச் சொல்கிறார். அவர் முகத்தில் எந்த நேரமும் குதித்து வெளி வந்துவிடுவது போல கண்ணீர்த்துளிகள்! மணமகளின் அண்ணன் முகம் அதைக்கேட்டு இருண்டு விடுகிறது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மலைத்துவிடுகிறார்.
“என்ன தம்பி சொல்றீங்க? நிஜமாகவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? வேறு எதையும் மறைப்பதற்காக இப்படிச் சொல்றீங்களா?” “இல்லீங்க… சத்தியமா இதுதான் நிஜம்!
ஏற்கனவே எங்கத்தாகிட்ட சொல்லிட்டேன்… என் கல்யாணம் தள்ளிப் போனதுக்கே இதுதான் காரணம்!… ஆனாலும், என் மேலுள்ள அக்கரையினாலே.. என் எதிர்ப்பையும் மீறி அவங்க பாட்டுக்கு இந்த ஏற்பாட்டைச் செஞ்சிட்டாங்கஸ நீயே உன் தலையில மண்ணை வாரிக் கொட்டிக்காதடா… அப்படி இப்படின்னு என்னோட சன்டை போடுறாங்கஸ ஆனா என் மனச்சாட்சி ஒவ்வொரு விநாடியும் என்னைக் கொல்லாமல் கொல்லுது…. எப்படி இதை உங்க கிட்டச் சொல்றதுன்னு எனக்கும் முதலில் தயக்கமாத்தான் இருந்துச்சு… சந்தர்ப்பத்தை எதிர்பாத்துக் காத்துக் கிட்டிருந்தேன். அல்லாவாப் பாத்து இப்படி எதிர்பாராத ஒரு வாய்ப்பை ஏற்பாடு செஞ்சு தந்துட்டான்ஸ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். என்னோட மனப் பாரத்தை எறக்கிட்டேன்ஸ உங்க தங்கச்சி வாழ்கையைக் காப்பாத்திக்கிங்க சார்!” கோபம்- குமுறல்- கலக்கம்- அண்ணனுக்கு! இருக்காதா, பின்னே?
திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள்தான்!
திருமணம் நின்றுவிட்டால், தங்கள் குடும்ப கௌரவம் என்னாவது தங்கையின் எதிர்காலம்…?
மாப்பிள்ளை வீட்டார் தான் கல்யானம் நின்றதற்குக் காரணம் என்றால் யார் நம்பப் போகிறார்கள்?
பையனுக்குள்ள பெரிய குறைபாட்டை மறைத்துவிட்டு வக்கணையாகத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கிற மணமகனின் தந்தை, பெண்மீதே பழியைத் திருப்பிப் போடமாட்டார் என்று எப்படி நம்புவது?
பையன் உறுதியாகச் சொல்கிறான்! “சார்! உங்க தங்கைய உடல் ரீதியா என்னால திருப்திப் படுத்த முடியாது…” வாட்ட சாட்டமான வாலிபன்! அழகும் கம்பீரமும்! பார்த்தால் பத்துப்பேரை ஒருவனாய் நின்று அடித்துபோட்டுவிடும் வல்லமை! நம்ப முடியவில்லைதான்! ஆனால்….. “இது நிஜம்… எந்த டாக்டரிடம் வேண்டுமானாலும் என்னை அழைத்துச் சென்று செக்-அப் செய்துகொள்ளுங்கள்” என்கிறான்! உயிரணு உற்பத்தி முழுமையாக இல்லை என்பதோடு பெண்சகவாச உயிர்ப்பு கூட மிகக் குறைந்திருப்பதாகவும் சொல்கிறான்…!
பொன்னுக்கு வீங்கியா… மனநல பாதிப்பா..? டாக்டர்கள் ஏதோதோ சொல்கிறார்கள்” என்கிறான். யாருக்கும் தெரியாமல் சம்பாத்தியத்தில் பாதியை அவன் தன் சிகிச்சைக்கே செலவழித்திருக்கிறான்ஸரகசியம் ரகசியமாய்! முதலில் கோபப்பட்ட அண்ணன், அந்த இளைஞனை பிறகு கருணையுடன் பார்க்கிறான்! கண்களில் நீர் மல்க நன்றி சொல்கிறான், தன் தங்கையின் வாழ்க்கையை இந்தமட்டில் காப்பாற்றியதற்கு.
இந்த நிகழ்ச்சி நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தபெண் காப்பாற்றப்பட்டு- வேறு திருமணம் மூலம் ஒருவனுக்கு மனைவியாகி இன்று 3 குழந்தைகளுக்குத் தாய்! இந்தப் பையன் இன்றும் தனி மரமாக! மார்ர்கப்பற்றுள்ள அவன், இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விஷயம் என்று பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, நிறையப் படித்துக் கொன்டிருக்கிறான். சமூக சேவையில் ஈடுபாடுகாட்டி வருகிறான்.
இந்த இளைஞன் தான்,
எவ்வளவு நல்லவன்?
நாணயமானவன்?
நாகரீகமிக்கவன்?
இறையச்சம் உள்ளவன்?
ஆனால், எல்லோரும் அப்படியா..?
எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி குறையுள்ள தகவல் மறைக்கப் பட்டு பாழடிக்கப் பட்டுள்ளது?
எத்தனை மோசமான நோய்கள் – பாலியல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை நிர்மூலப் படுத்தியிருக்கின்றன?
அதனால் எத்தனை கருச்சிதைவுகள்?
கலக்கங்கள்?
மருட்சிகள்?
திருமணச் சிக்கல்கள்?
மணமுறிவுகள்?
திருமணச் சந்தையில் இன்று மாப்பிள்ளைகளுக்கு மார்க்கெட் ஏறுமுகம்தான்!
ஒரு பையனுக்கு விலைபேச ஒன்பது பெண்களின் தந்தையர் தயார் என்பதும் நிஜம்தான்.
என்றாலும் திருமணத்துக்கு முன்பு ஒவ்வொரு இளைஞனும் தானாக முன்வந்து ஒரு முழுமையான மருத்துவச் சோதனை செய்துகொண்டால், என்ன? அதில் என்ன தவறிருக்கிறது? தவறிருக்க முடியும்?
இளமை வக்கிரங்களால் – சகவாச தோஷங்களால் ஏதேனும் நோய்த் தொற்று இருந்தால் – அல்லது உடற்கோளாறுகள், முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமே?
மனச்சிதைவுகள் இருந்தால் ஒரு மனோதத்துவ சிகிச்சையில் மறுமலர்ச்சி – மனமலர்ச்சி பெற்றுக் கொள்ளலாமே?
அந்த மனநிறைவுடன் திருமனம் செய்து கொள்ளலாமே?
எயிட்ஸ் (AIDS) கிருமி ரத்தத்தில் இருந்தால், திருமணத்தையே தவிர்த்துவிடலாமே? அதனால் ஒரு சந்ததியின் வாழ்க்கையையே காப்பாற்றலாமே?
ஸிஃபிலிஸ் (Syphilis) நோய் இருந்தால், 100 ரூபாயில் சிகிச்சை பெற்று உன்னையும் உன் வருங்கால மனைவியையும் முழுமையாகக் காப்பாற்றிக் கொண்டு சிறப்பாக வாழ முடியுமே?
இவற்றையெல்லாம் தெரிந்தே மறைப்பது பெரிய பாவமல்லவா?
திருமணத்துக்குத் தயாராகும் சமுதாயக் கண்மணியே!
உன்னைப் பற்றிஸ. உன் உடலைப் பற்றி… உன் நிலையைப் பற்றி..
உன் மனநிலையைப் பற்றி ஏதேனும் சிறு சந்தேகம் இருந்தாலும்கூட, அதை வெட்கம் காரணமாக ஒளிக்காமல், விபரம் தெரிந்தவர்களிடம், டாக்டர்களிடம் தெளிவு பெற்றுக்கொள்ள மறக்காதே! அதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய்!
ஒரு பெண்ணை – அவள் மூலம் நீ பெறப்போகும் சந்ததி முழுவதையும் காப்பற்றிக் கொள்கிறாய்!
பின்னாளில் ஏற்றபடவிருக்கிற விரக்தியை – வேதனையை – விபரீதங்களை முற்றிலுமாக நீக்கிக் கொள்கிறாய்!
source: http://chittarkottai.com/