நவீன அரபிமொழி (Modern Arabic) ஏன் அவசியம்?
மவ்லவி, முஹம்மது கான் பாகவி
அறிவியல் வளர்ச்சி, கால மாற்றம், பிறமொழிக் கலப்பு, கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் பரிணாமம், வணிகத் தொடர்புகள் முதலான காரணங்களால், மக்கள் பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
புதியன புகுதலும் பழையன கழிதலும்தான் அந்த மாற்றம். பழஞ்சொற்கள் மறைந்து புதுச் சொற்கள் நடைமுறைக்கு வந்துவிடும். அல்லது பழைய சொல்லுக்கே புதிய அர்த்தம் காணப்படலாம். வாக்கிய அமைப்புகளில்கூட முன்பு கேள்விப்படாத புதிய நடை புகுத்தப்படலாம்.
செல்வாக்குமிக்க பிறமொழிச் சொற்கள், நடைகள் வேறு மொழியினுள் புகுந்து அதற்கு அழகூட்டலாம்; அல்லது அழகைக் கெடுக்கலாம். அதிலும் உலகமயமாக்கலுக்குப் பின்னால், இந்த மொழிதான் தேவை; இது தேவையில்லை என்ற வரையறை மறைந்துபோனது.
திருக்குர்ஆனின் தொன்மை வாய்ந்த மொழியான அரபிமொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. காரணம், அரபி, வேத மொழியாக மட்டுமன்றி, மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. உலகில் 22 நாடுகளில் உள்ள சுமார் 300 மில்லியன் (30 கோடி) மக்கள் அன்றாடம் பேசும் மொழியாகும் அது.
165 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வேதமொழி என்ற அடிப்படையில் அரபியைக் கற்கின்றனர்; உச்சரிக்கின்றனர்.
ஆசிய கண்டத்தில் 10 நாடுகளும் ஆப்பிரிக்க கண்டத்தில் 12 நாடுகளும் அரபு நாடுகள். உலகின் பல கோணங்களில் பரவியிருப்பதால் வட்டார வழக்குகள் (லஹ்ஜா) நிறைய உள்ளன. அத்தோடு காலத்திற்கு ஈடு கொடுக்கும் கட்டாயத்தில் அரபிமொழி தன்னை வெகுவாக வளர்த்துக்கொண்டுள்ளது.
அறிவியல் சொல் ஒன்று புதிதாக உருவானவுடனேயே, அந்த ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான ஒரு சொல்லை அரபுகள் உருவாக்குவதில் விரைந்து செயல்படுகிறார்கள். அல்லது ஆங்கிலத்தையே அரபி வடிவத்தில் மாற்றி, அலிஃப், லாம்; பெண்பாலைக் குறிக்கும் ‘தா’; இணைப்பை (நிஸ்பத்) குறிக்கும் ‘யா’; பன்மை வடிவம் போன்றவற்றைச் சேர்த்து அரபிமொழிச் சொல்லாக மருவச் செய்துவிடுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ‘செம்மொழி’ என்பதை ஆங்கிலத்தில் ‘Classical Language’ என்பர். இதற்குத் தூய அரபிச் சொல்லும் اللغة الفُصحى உண்டு. இருப்பினும், ஆங்கிலத்தையே அரபிமயமாக்கி اللغة الكلاسيكية என்பர்.
அவ்வாறே هيدروجين (ஹைட்ரஜன்), كاراتية (கராத்தே), كاردينال (கார்டினல்), الفلسفي (ஃபிலாஸஃபி), ليبرالية (லிபரலிஸம்), ليتر (லிட்டர்), كنغر (கங்காரு)… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வாறே, பழைய சொற்களைப் புதிய பொருள்களிலும் அரபுகள் பயன்படுத்துகின்றனர்.
எகா: الجِراحَة . இதற்கு ‘காயம்’ என்பதே பழைய பொருள். இப்பொருளிலும் தற்போது இது பயன்படுத்தப்பட்டாலும் ‘ஆப்ரேஷன்’ (அறுவை சிகிச்சை) எனும் பொருள் புதிய வரவு. السَّيّارة இது ‘பயணிகள்’ எனும் பொருளில் திருக்குர்ஆனில் (12:10) ஆளப்பட்டிருக்கிறது.
புதிய பொருள்: கார். இச்சொல் السَّيْر எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு ‘பயணம்’ என்று பொருள். பயணம் செய்பவருக்கும் (பயணி) பயண வாகனத்திற்கும் (கார்) இந்தத் தொடர்பிலேயே السَّيّارة என்பதைப் பயன்படுத்துகிறார்கள் போலும்!
الحَافِلة – பஸ்;
القِطار – ரயில்;
الجوّال – மொபைல்;
المُكَيّفَة– ஏர்கண்டிஷன்;
النّووي– அணு அல்லது இயற்கை;
على التّوالِي – முறையே;
مِن جديد – மீண்டும்;
مستوًى عالٍ – உயர்மட்டம்;
الحُضور -கூட்டம். இப்பழைய சொற்களுக்கு இவ்வாறு புதிய பொருள்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அவ்வாறே, பழைய பொருளுக்குப் புதிய சொற்களும் உண்டு. ‘பரவாயில்லை’ என்பதை முன்பெல்லாம் لا بَأسَ என்பர். நான் புனித ஹஜ் சென்றிருந்தபோது ஓர் உணவகத்தில் இந்த அரபிச் சொல்லைக் குறிப்பிட, பொருள் புரிந்தாலும் சற்றே சிரித்துவிட்டார்கள்.
لا مُشكِل என்றோ ما فِي مُشكِل என்றோதான் இன்று குறிப்பிடுகின்றனர். கொண்டு வா – إيتِ என்பதற்குப் பதில் جِب எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது.
வெளியே எடு – نَدِّر; நல்லது (சரி) – كَُوَيْس; நிர்ப்பந்தித்தல் – إرغام; பதவி விலகல் – إستِقالَة; பயன்படுத்தல் – إستخدام … இப்படி நிறைய உண்டு. வாக்கிய அமைப்பிலும் மாற்றங்கள் வந்துவிட்டன.
எடுத்துக்காட்டாக: நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது – لا يفوتني أن أُشِير; அண்மையில் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது – عقد مؤتمر دوليّ مؤخّرا; இதற்கெல்லாம் மேலாக – بِرغمِ هذا كلّه; நாம் முஸ்லிம்கள் என்ற முறையில் – نحن كمسلمين; மேலும், அரபியைக் கற்பதிலும் எனக்கு ஆர்வம் உண்டு – كما أنّ لي رغبةً في تعلّم العربيّة; தொடர்ந்து சொன்னார் – تابَع قائِلا; அத்துடன் அவர் ஒரு நல்ல மனிதர் – بالإضافة إلى أنه رجل صالح “…என்பது இதற்குப் பொருளல்ல” – هذا لا يَعني; குறிப்பிடத் தக்கது – جدير بالذّكر.
இந்த நவீன அரபியை நான் ஏன் கற்க வேண்டும்? தொன்மையான அரபிமொழியில் உள்ள குர்ஆன், ஹதீஸ், சட்டம், வரலாறு ஆகிய நூல்களைக் கற்றால் போதாதா? என்றெல்லாம் நீங்கள் கேள்வி எழுப்பலாம். நானும் ஒரு காலத்தில் அப்படி மனநிறைவு அடைந்திருந்தவன்தான். என்னை மாற்றி யோசிக்கச் செய்தது ஒரு நிகழ்ச்சி. வேலூர் பாகியாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் கழிந்திருக்கும்.
சஊதியில் பணியில் சேர்ந்த எங்களூர் மௌலவி, பரகத்துல்லாஹ் பாகவி, ‘அல்ஜஸீரா’ எனும் தினசரி பத்திரிகையை எனக்கு அனுப்பியிருந்தார். அத்துடன் ‘அல்யமாமா’ எனும் அரசியல் வார இதழும் அனுப்பினார். இவையிரண்டும் தொடர்ந்து என் முகவரிக்கு அஞ்சலில் வர ஏற்பாடும் செய்தார். சில ஆண்டுகள் வந்தன. வாசிக்கலாம் என்று பத்திரிகைகளைக் கையில் எடுத்தேன். நானும் அரபிக் கல்லூரியில் படித்தவன்; தாய்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றவன். அரபு நாட்டிலிருந்து வந்த பத்திரிகைகள் இரண்டும் எதுவுமே புரியவில்லை. அவை அழகான –நவீன அரபிமொழியில்- இலக்கணப் பிழைகள் இல்லாமல் வெளிவரும் இதழ்கள். திரும்பத் திரும்ப முயன்றேன். ஒன்றும் புரியவில்லை. இயலாமைதான் மிஞ்சியது.
என் நிலையை எண்ணி, என் அறியாமையை நினைத்து அழுகையே வந்துவிட்டது. என்ன துரதிருஷ்டம்! ஒரு அரபிப் பத்திரிகையை வாசிக்க இயலவில்லையே! என்று என்னை நானே நொந்துகொண்டேன். அப்போதுதான், எனக்குள் ஒரு வைராக்கியம் –அல்ல ஒரு வெறியே- பிறந்தது. என்ன பாடுபட்டாயினும் இப்புது மொழியைக் கற்காமல் விடப்போவதில்லை என்று முடிவெடுத்தேன். அங்கே கற்றுக்கொடுக்கும் சூழ்நிலை இல்லை. நாமே சுயமாகக் கற்றுக்கொள்ள உழைக்க வேண்டும்; அதற்குத் துணை அகராதிகள்தான்.
தற்கால அரபி அகராதி, ஆங்கில அகராதி, தமிழ் அகராதி ஆகிய வழிகாட்டிகளை வாங்கினேன். தெரியாத சொற்கள் வரும்போது அரபி அகராதியில் உள்ள ஆங்கிலப் பொருளை எடுத்துக்கொண்டு, ஆங்கில அகராதியில் உள்ள தமிழ் பொருளை அறிந்து, அதை அந்த இடத்திற்குப் பொருத்திப் பார்த்துக்கொள்வேன். பொருந்திவரும் பொருளைக் குறிப்பெடுத்துக்கொள்வேன். இப்படியே சொற்களையும் பொருள்களையும் திரட்டி, சுமார் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து ஓரளவுக்கு நவீன அரபியைக் கண்டுபிடித்தேன். மேலும் தொடர்ந்து வாசிக்க வாசிக்க அம்மொழி எனக்கு வசப்பட்டது; முக்கால்வாசி புரிந்துகொண்டேன்.
நவீன அரபியில் படித்துக் கருத்துகளையும் செய்திகளையும் உள்வாங்கிக்கொள்ளவும் அம்மொழியில் எழுதவும் அல்லாஹ்வின் பேரருளால் கற்றுக்கொண்டேன். பொதுவாக, எனக்கு ஒரு குணம் உண்டு. ஒன்றை நாம் அறிந்து தெளிந்துவிட்டால், எவ்வழியிலாவது அதைப் பிறருக்கும் சொல்லிவிட வேண்டும் என்ற தாகம்தான் அது. அதற்கேற்ப, மதரசாவில் என்னிடம் ஒரு பாடம் நடத்துகின்ற பொறுப்பு அளிக்கப்பட்டது. அரபிமொழியில் எழுதவும் பேசவும் கற்பிப்பதே அப்பாடம்.
இதற்கு الإنشاء العربيّ என்று பெயர்.
இவ்வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. பட்ட வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை அரபிமொழியில்தான் எழுத வேண்டும் என்ற விதியிருந்தது. அதற்கு வசதியாக, முந்தைய ஆண்டிலேயே எழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம். ஆனால், இதற்கு நவீன அரபி தேவையில்லை; பழைய மொழிப் பயிற்சியே போதும். என்றாலும், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, நவீன அரபியையே மாணவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினேன். இதற்காக ஒரு பாடப் புத்தகம் இருந்தால் உதவியாக இருக்குமே என்ற நிலை தோன்றியது. நானே ஒரு புத்தகத்தைத் தயார் செய்தேன்.
22 பாடங்களைக் கொண்ட இப்புத்தகம் அரபி இலக்கணப் பாடங்கள் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கண விதிகள் முதலில் இடம்பெறும். உதாரணங்கள், பயிற்சிகள், அரபியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து அரபிக்கும் மொழிபெயர்ப்புச் செய்வதற்கான முன்மாதிரிகள் என எல்லாவற்றையும் நவீன அரபியிலேயே தொகுத்துள்ளேன்.
புத்தகத்திற்கு ‘அல்இர்ஷாத்’ (வழிகாட்டி) என்று பெயர். அத்துடன், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வினைச்சொற்கள் பட்டியல், பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஏவல் வினைச் சொற்கள் பட்டியல், புதிய பொருள்களில் பழைய சொற்கள் பட்டியல், காலப் பெயர்கள் பட்டியல், அளவை பெயர்கள் பட்டியல் என 5 முக்கியமான பட்டியல்களைப் புத்தகத்தின் இறுதியில் இணைத்துள்ளேன். போக்குவரத்து தொடர்பான சொற்கள் பட்டியலும் கடைசியாக இடம்பெறுகிறது.
கையெழுத்துப் பிரதியாக உள்ள இப்புத்தகத்தை நகல் எடுத்தோ கைப்பட எழுதியோ மாணவர்கள் பயின்றார்கள். அரபிப் பத்திரிகை வாசித்தல், அரபியில் கட்டுரை எழுதுதல், உரையாற்றல், கலந்துரையாடல் ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மாணவர்கள் ஓரளவு நவீன அரபியைக் கற்றனர். கால அவகாசம் போதுமான அளவு இல்லாததால் முழுமைப்படுத்த இயலவில்லை. இன்னும் இந்தப் புத்தகம் கையெழுத்துப் பிரதியாகவே என்னிடம் இருக்கிறது. சில மதரசா மாணவர்கள் வாங்கிச்சென்று நகல் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வளவுதான்!
நவீன அரபி கற்பதால் பத்திரிகை வாசிப்பது மட்டுமே பலன் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். இஸ்லாம் தொடர்பான அரிய பல நூல்கள் நவீன அரபிமொழியில்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இஸ்லாமிய அரசியல், அறிவியல், பொருளியல், சமூகவியல், வாழ்வியல், ஒழுக்கவியல்… எனப் பல்வேறு இயல்களில் நூல்கள் வந்தவண்ணமுள்ளன; இணையத்திலும் பல நூல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், பெரு நிறுவனம் (கார்ப்பரேட்) ஆகிய மூன்று சக்திகளே இன்றைய உலகை ஆள்கின்றன. இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இஸ்லாத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு மார்க்க அறிஞர்களுக்கு உண்டு.
இதற்கு விஷயங்களும் விஷயங்களை முன்வைக்கும் வழிகளும் தெரிந்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனங்களில் அறிவியல் உண்மை ஒளிந்திருப்பது நிஜம்தான். ஆனால், ஒளிந்திருப்பதை சுட்டிக்காட்டினால்தானே உங்களுக்குத் தெரியும். சுட்டிக்காட்டும் நூல்கள், உரைகள், செய்திகள் எல்லாம் புது அரபியில் கிடைக்கும்போது, அம்மொழியைத் தெரிந்துகொள்ளாமலேயே இருந்தால் எப்படி?
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷைக் முஹம்மது ஃகஸ்ஸாலி அவர்கள் உலக அளவில் பிரபலமான இஸ்லாமிய அறிஞர். அன்னார் எழுதிய சில நூல்கள்: 1. كيف نتعامل مع القرآن ؟ 2. فقه السيرة 3. الأسرة المسلمة وتحدّيات العصر
அடுத்து துனூசியா ஷைக் ராஷித் அல்ஃகனூசி ஒரு பேரறிஞர். அவருடைய நூல்கள் சில:
1. الحرّيّة العامّة في الدّولة الإسلاميّة
2. المرأة بين القرآن والقانون
3. نحن والغرب
சிரியாவைச் சேர்ந்த ஷைக் அப்துல்லாஹ் நாஸிஹ்:
1. معالِم الحضارة في الإسلام وأثرها في النهضة الأوربيّة
2. حرّيّة الإعتقاد في الشّريعة الإسلاميّة
3. الإسلام شريعة الزّمان والمكان
ஷைகு சய்யித் குதுப் (எகிப்து) அவர்களின் الإسلام والسّلام العالَميّ,
டாக்டர் உஹ்பா அஸ்ஸஹைலீ (டமாஸ்கஸ்) அவர்களின் العلاقات الدّوليّة في الإسلام
ஷைக் ஆயிள் பின் அப்தில்லாஹ் (சஊதி) அவர்களின் لا تحزَن,
ஷைக் அபுல் ஹசன் அலீ நத்வி (இந்தியா) அவர்களின், رجال الفكر والدّعوة في الإسلام ஷைக் முஹம்மது தகீஉஸ்மானீ (இந்தியா) அவர்களின், تحديد النّسل في ضوء العقل والشّرع ஷைக் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அல்அரீஃபி (சஊதி) அவர்களின், إستمتِع بحياتك போன்ற நூல்கள் எல்லாம் கனமானவை; காலத்திற்கு வேண்டியவை. ஆனால், எல்லாம் நவீன அரபியில் எழுதப்பட்டவை.
எனவே, நவீன அரபிமொழியின் தேவையை முதலில் உணர வேண்டும்; அதன்மூலம், மார்க்க சேவை ஆற்ற முடியும் என்பதை விளங்க வேண்டும். மதமறுப்புக் கொள்கையும் இடதுசாரி சிந்தனைகளும் ஓரியண்டலிஸ்டுகளின் எழுத்துகளும் செல்வாக்குப் பெற்றுவரும் இன்றைய காலத்தில், சவால்களை எதிர்கொள்ளும் துணிவு அறிவை வளர்த்துக் கொள்வதால்தான் பிறக்கும்.
மதரசாவில் அரபிமொழி இலக்கணம், இலக்கியம், மொழியியல் படித்தவர்களுக்கு நவீன அரபியைக் கற்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டால் நிறைய வளர்ச்சி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், வழிகாட்டல் தேவை என்பதை மறுக்கமாட்டேன். அதற்காகவே ஒரு திட்டம் யோசனை அளவில் உள்ளது. நான் குறிப்பிட்ட அந்தப் பாடப் புத்தகத்தை (الإرشاد) அடிப்படையாக வைத்து இணையதளத்திலேயே வகுப்பைத் தொடங்கி, பயிற்சி அளித்தால் என்ன?
பாடங்களை எழுத்து வடிவத்திலேயே பதிவேற்றம் செய்து, பயிற்சிகளையும் கேள்விகளையும் கூடவே பதிவேற்றி, பயில்வோர் இணையத்திலேயே விடையும் அளிக்க வசதி செய்யலாம். அல்லது பாடங்களை நடத்தி, அதைப் படம் பிடித்து, வலைத்தளத்தில் வீடியோவாகக் கொடுக்கலாம்.
இதன்மூலம், நீங்களோ நானோ விடுப்பு எடுக்கத் தேவையில்லை. இடம்விட்டு இடம்பெயர அவசியமில்லை. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பயில முடியும். பாடத்திட்டம் நிறைவடைந்தபின், வலைத்தளத் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கவும் செய்யலாம். இச்சான்றிதழ் வேலைக்காக அல்ல. மன ஆறுதலுக்காகவும் தைரியம் பிறக்கவும்தான்.
இத்திட்டத்தில் ஆலிம்கள், மதரசா மாணவர்கள் மட்டுமன்றி, அரபியைப் பார்த்துப்படிக்க அறிந்திருக்கும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வமுள்ள பொதுமக்கள் என யாரும் சேரலாம்! நேரம் ஒதுக்குவதுதான் முக்கியம். முயற்சியும் தேவை!
இன்ஷா அல்லாஹ், உங்கள் வரவேற்பையும் ஆதரவையும் பொறுத்து பாடம் தொடங்கும் பணியும் விறுவிறுப்படையும் என்ற நம்பிக்கை உண்டு. எப்படியும் கற்றாக வேண்டும்; கற்பித்தாக வேண்டும்! அல்லாஹ் துணை நிற்பானாக!
source: http://khanbaqavi.blogspot.in/2015/03/modern-arabic.html