தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், “எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!” என்றார்.
ஆம்!
தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே! நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.
அவர்களைப் பேணுங்கள்.
அவர்களின் ‘துஆ’வைப் பெறுங்கள்.
எவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.
ஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும், வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தான் ‘துஆ’ செய்வார்.
“உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். அவர்கள் உங்களுக்கு அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி” என மூன்று முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனது தாய் உயிருடன் இல்லையே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டதாக துணைவியர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றனர்.
“மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.” (அல்குர் ஆன் 31:14)
“உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ…‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும்.” (அல்குர் ஆன் 17:23)
எனவே பெற்றோரைப் பேணுவோம், அதிலும் குறிப்பாக நம் தாயை கண் போல் பாதுகாப்போம். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்.